தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கைகளை மாணவர்களிடமும் மக்களிடமும் பரவலாகக் கொண்டு சேர்க்க அறிஞர் அண்ணா ஏற்படுத்திய அமைப்புதான் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் - தி.மா.மு.க. என்று சுருக்கமாக அழைக்கப்படும் திமுகவின் துணை அமைப்பு. ஆனால், அந்தக் கட்சிக்கு வலுசேர்த்த அமைப்பும் அதுதான். எல்லா கல்லூரிகளிலும் தி.மா.மு.க. ஒரு வலுவான அமைப்பாக இருந்தது.
எஸ்.டி. சோமசுந்தரம், துரைமுருகன், ரகுமான்கான், எல். கணேசன், முரசொலி செல்வம், பில்லப்பன், நாவளவன் மற்றும் பெ. சீனிவாசன் ஆகியோருடன் நானும் அந்த அமைப்பின் பொறுப்பில் இருந்தேன். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தி.மா.மு.க.வின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இந்த மாணவர் அமைப்பு பல மாநாடுகளையும் நடத்தியிருக்கிறது.
சட்டக் கல்லூரியில் படித்தபோது நான் தி.மா.மு.க. செயலாளராக இருந்தேன். சட்டம் படித்த பிறகு வேலூரில் மூத்த வழக்குரைஞர் வி.சி. ராஜகோபாலாச்சாரிடம் (வி.சி.ஆர்.) வழக்குரைஞராகப் பணியாற்றினேன். அதே சமயம் 1962-இல் மத்திய அரசின் முதன்மைத் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு திரிபுரா- மணிப்பூர் ஒதுக்கப்பட்டதால், நான் பணியில் சேரவில்லை.
1967-இல் எனது 26 வயதில் நாடாளுமன்ற வேட்பாளராக அண்ணா என்னை அறிவித்தார். நான் மட்டும் அல்ல, அந்தத் தேர்தலில் சுமார் 25 இளைஞர்களுக்கு நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தா. கிருட்டிணன், அன்புச் செழியன் மற்றும் தெய்வீகன்; சட்டப்பேரவைத் தேர்தலில், பெ.சீனிவாசன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஓ.பி. ராமன், எல். கணேசன், ஏ.எல். சுப்பிரமணியன், எம்.சி. பாலன் போன்ற படித்த இளைஞர்களுக்குத் தேர்தல் வாய்ப்பு வழங்கினார் அண்ணா.
1949-இல் அண்ணா, திமுகவை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 40. அவர்களில் இரா.நெடுஞ்செழியன், இரா. செழியன், க. அன்பழகன், மு.கருணாநிதி, ஈ.வி.கே. சம்பத், சத்தியவாணி முத்து, மதியழகன் ஆகிய அனைவரும் 23 முதல் 29 வயது இளையோர். நாடாளுமன்ற, சட்டப்பேரவைக் கதவுகளை இளைஞர்களுக்கு அகலமாகத் திறந்து வைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தலைவர் அண்ணாதான்.
அண்ணா என்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததுகூட ஒரு சுவையான கதை. 1965-இல் நான் வழக்குரைஞர் பணியுடன் திமுக பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தேன். குடியாத்தத்தில் சிறப்புக் கூட்டம் ஒன்றை திமுக நடத்தியது. அந்தக் கூட்டத்தில் சிறப்புப் பேச்சாளர் அறிஞர் அண்ணா. அவர் முன்னிலையில் நான் 10 நிமிஷம் பேசினேன்.
அதுதான் எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டிலும் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. என் பேச்சைக் கூர்ந்து கவனித்த அண்ணா, அப்போதே என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஆனால் அது எனக்குத் தெரியாது. சில வாரங்களுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அண்ணா சென்றார்.
அப்போது அண்ணா, 'குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஒரு பையன் பேசினான். வக்கீலுக்குப் படித்திருக்கிறான். அவனை நாடாளுமன்றத்துக்கு அனுப்பலாம்' என்று சொன்னார். அண்ணா இப்படிச் சொல்லும் போது அங்கு இருந்த மைனர் மோசஸ், 'அவன் பெயர் விசுவநாதன், நானும் அவனும் சட்டக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம்' என்றார். அண்ணா இப்படி என்னைப் பற்றிப் பெருமையாகச் சொன்னதை சில தினங்களுக்குப் பிறகு மைனர் மோசஸ் என்னிடம் சொல்லி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தனித் தொகுதி. பக்கத்துத் தொகுதி வந்தவாசி, திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எங்கள் எல்லோருக்கும் மூத்தவரும் வழிகாட்டியாகவும் இருப்பவர் மாவட்டச் செயலாளர் இரா. தர்மலிங்கம்.
1957-இல் திமுக முதல் முதலில் தேர்தல் அரசியலில் இறங்கிப் போட்டியிட்ட போது நாடாளுமன்றத்துக்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்; ஒருவர் ஈ.வி.கே. சம்பத், இன்னொருவர் இரா. தர்மலிங்கம். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அண்ணா அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை, 'அவ்வளவு பெரிய வீடு எனக்கு எதற்கு?' என்று மறுத்துவிட்டு இரா. தர்மலிங்கத்தின் வீட்டில்தான் தில்லியில் தங்கி இருந்தார். அவ்வளவு நெருக்கமான இரா. தர்மலிங்கத்துக்குப் பதிலாக எனக்கு தேர்தல் வாய்ப்பு வழங்கப்பட்டது சற்றும் எதிர்பாராதது. அறிஞர் அண்ணாதான் திமுக தலைவர் என்றாலும், அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க மாட்டார்; எடுக்கவும் முடியாது. உள்கட்சி ஜனநாயகம் திமுகவில் அப்போது நிரம்பவே இருந்ததுதான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம்.
துரைமுருகன், மைனர் மோசஸ், எல். கணேசன், முரசொலி செல்வம் போன்ற நண்பர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, 1967-இல் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தபோது நான் வந்தவாசி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தந்தேன். அப்போது ஒவ்வொரு தொகுதிக்கும் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்தார் அண்ணா.
வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதிக்கான ஆய்வுக் குழு உறுப்பினர்கள் கே.ஏ. மதியழகன், சக்திவாணி முத்து, ஏ. கோவிந்தசாமி என்ற மூன்று மூத்த உறுப்பினர்கள். ஆய்வுக் குழு தனித்தனியாகவும், குழுக்களாகவும், பலதரப்பட்ட கட்சித் தொண்டர்களிடம் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று கருத்துக் கேட்டனர். அதில் 75 சதவீதம் பேர் என் பெயரைப் பரிந்துரை செய்தார்கள். இதற்குக் காரணம் நான் கட்சி நிர்வாகிகளுடனும், கட்சித் தொண்டர்களுடனும் நெருங்கிப் பழகுவேன் என்பதுதான்.
1966-ஆம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31 மற்றும் 1967 ஜனவரி முதல் தேதி என நான்கு நாள்கள் நடைபெற்ற விருகம்பாக்கம் திமுக மாநாட்டில் ஜனவரி முதல் தேதி வேட்பாளர் பட்டியலை அண்ணா வெளியிட்டார். ஆனால், வந்தவாசி தொகுதி வேட்பாளர் யார் என்பது மட்டும் அறிவிக்கப்படவில்லை. நான் சோர்ந்து போய் வீட்டில் படுத்துவிட்டேன். ஆனால், என் நண்பர்கள் தோப்பூர் திருவேங்கடம், துரைமுருகன், எல். கணேசன் ஆகியோர் 'மனம் தளர வேண்டாம், நம்பிக்கை இழக்க வேண்டாம், நாம் அண்ணாவை போய் பார்க்கலாம்' என்றனர்.
அவர்களது உற்சாக வார்த்தைகள் எனக்கு நம்பிக்கை தரவே நாங்கள் அண்ணாவை போய் பார்த்தோம். 'ப.உ. சண்முகத்தை நீ பார்த்தாயா?' என்று அண்ணா கேட்டார். ப.உ. சண்முகம் மூத்த திமுக உறுப்பினர், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். அவரது பக்கத்துத் தொகுதி வந்தவாசி. இருந்தாலும் நான் போய் அவரைப் பார்க்கவில்லை. எனவே, 'நான் ப.உ.ச.-வைப் பார்க்கவில்லை' என்றேன். 'நீ போய் அவரைப் பார்த்துவிட்டு வா' என்று சொல்லி அனுப்பினார்.
பழைய சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த ப.உ.ச.-வைச் சந்திக்க நான் துரைமுருகன், எல். கணேசன் மூவரும் போனோம். நான் வந்தவாசி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருப்பதைச் சொல்லி, இது சம்பந்தமாக அண்ணாவை போய் சந்தித்தேன், அவர் உங்களைப் பார்க்கச் சொன்னார் என்றேன்.
'பார்த்துட்டே இல்லே, நீ கிளம்பு!' என்றார். நான் அதன் பிறகு எதுவும் பேசாமல் மீண்டும் அண்ணாவைச் சந்தித்து ப.உ.ச. சொன்னதை அப்படியே சொன்னேன். அதைப் பற்றி அண்ணா பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னிடம் ஆங்கிலத்தில், 'கிவ் மீ சம் டைம், ஐ ஹேவ் டு கன்சோல் தர்மலிங்கம்' என்றார்.
ஒரு வாரம் சென்ற பிறகு வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்தார் அண்ணா. நான்தான் வேட்பாளர் என்று அண்ணா முடிவு செய்தாலும், யாருடைய மனமும் கோணாமல், யாருக்கும் விரோதம் வரக்கூடாது என்பதிலும், தன்னிச்சையாகத் தான் முடிவு செய்தேன் என்று எவரும் நினைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்தார் அண்ணா. அப்போது, நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்கள் பல பேர் 26 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர்; இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராஜ், டாக்டர் கரண் சிங், அசோக் மேத்தா, ஒய்.பி.சவாண், சித்தார்த்த சங்கர் ரே, மோகன் குமாரமங்கலம் முதலானோர் ஆளுங்கட்சி வரிசையில்; எதிர்க்கட்சி வரிசையில் வாஜ்பாய், ஆச்சார்ய கிருபளானி, ராம் மனோகர் லோகியா, இந்திரஜித் குப்தா, ஏ.கே. கோபாலன், என்.ஜி.ரங்கா, பிலுமோடி, மது லிமயே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், எஸ்.ஏ.டாங்கே மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் என்று பலர். ஆனால், திமுகவின் இளைஞர் பட்டாளம் நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் தமிழக உரிமைக்காகவும் குரல் கொடுத்தது.
இப்போதுகூட நீட் தேர்வு மோசடி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இது மாணவர்களுக்குக் கிடைத்த வெற்றி, இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்கிறார்கள். அவர்களால் இந்த வெற்றியை உரிமை கொண்டாட முடியவில்லை. காரணம் மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சியால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைத்தது. இதுதான் அண்ணா காட்டிய வழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







