அரவிந்தர் வாழ்வில் மூன்று பரிமாணங்கள் உண்டு. ஒன்று பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காக உழைத்த அவரின் அரசியல் வாழ்வு; இன்னொன்று, சிறையில் தவம் செய்து கண்ணனை நேரில் தரிசித்த அவரின் ஆன்மிக வாழ்வு.
உத்தர்பாரா என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் கேட்டோர் மெய்சிலிர்க்க தாம் கண்ணனை நேரில் கண்டதை அவர் அறிவித்தார். கண்ணனைக் கண்டதைத் தம் உள்மனக்காட்சி என அவர் கூறவில்லை. சக மனிதரைக் காண்பதுபோல் நேருக்கு நேர் கண்டதாகக் குறிப்பிட்டார்.
அரவிந்தரின் மூன்றாவது பரிமாணம், சாவித்திரி என்ற அற்புதமான ஆங்கிலக் காப்பியத்தைப் படைத்த அவரின் இலக்கிய வாழ்வு. மகாபாரதத்தில் 700 வரிகளில் இடம்பெறும் கிளைக்கதையை ஓர் உருவகக் கதையாகக் கண்டு 24,000 வரிகளில் அவர் படைத்த மகத்தான படைப்பு அது.
அவரது அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என்ற இந்த மூன்று தன்மைகள் காரணமாக சுதந்திரத் தியாகிகளாகவும் ஆன்மிக வாதிகளாகவும் இலக்கியவாதிகளாகவும் இருந்தோரின் மனங்கள் காந்தம் இரும்பை இழுப்பதுபோல் ஸ்ரீ அரவிந்தரால் கவரப்பட்டன.
அத்தகையவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் நோபல் பரிசு பெற்ற வங்கக் கவி தாகூர். இன்னொருவர், தமிழ் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட தங்கக்கவி மகாகவி பாரதியார்.
புதுவைக்கு வந்த அரவிந்தரை வரவேற்றுப் போற்றியது தமிழ் மகாகவியின் குணம். புதுவைக்கே அவரைத்தேடி வந்தது வங்க மகாகவியின் மனம்.
தாம் ஸ்ரீ அரவிந்தரை தரிசித்தது குறித்து தாகூர் பதிவு செய்திருக்கிறார். பழங்கால பாரத தேசத்து ரிஷிகளின் அத்தனை ஆன்மிக சக்திகளும் அரவிந்தராய் ஒன்று திரண்டிருப்பதாகப் போற்றியிருக்கிறார்.
”ஸ்ரீ அரவிந்தரின் தெய்விகப் பொளிவு நிறைந்த தோற்றத்தைப் பார்த்தேன். மோனம் நிறைந்த அருளாவேச சக்தியைத் தம்மில் அவர் திரட்டி வைத்திருக்கிறார். அவருடைய உள்ளொளி அவர் திருமுகத்தில் பிரகாசிக்கிறது. பழைய ரிஷிகளின் வாக்கு அவர் மூலமாக ஒலிக்கிறது!” என எழுதுகிறார் தாகூர்.
பாரதியார் சந்திரதாகூரிலிருந்து புதுச்சேரிக்கு ரகசியமாய்க் கப்பலில் வந்து சேர்ந்த அரவிந்தரை விவரமறிந்து நேரில் சென்று வரவேற்றவர். இன்று வீடுபேறு தரும் தெய்வமாய்ப் பலரால் தொழப்படும் ஸ்ரீ அரவிந்தருக்குத் தங்குவதற்குப் புதுச்சேரியில் தொடக்கத்தில் விடுபார்த்துத் தந்த பெருமையும் மகாகவி பாரதியுடையது.
பாரதி, ஸ்ரீ அரவிந்தர் இருவருமே கவிஞர்கள்; சுதந்திரத் தியாகிகள்; கண்ணன் அடியவர்கள். ஸ்ரீ அரவிந்தர் என்ற மகாஞானியின் தொடர்பால் மகாகவி பாரதிக்கு இந்து மதத் தத்துவங்களிலும் வேத விசாரணைகளிலும் ஆர்வம் வளர்ந்தது.
மகாகவி பாரதியார் ஸ்ரீ அரவிந்தரிடம் ரிக்வேதம் கற்றுக்கொண்டார். ஸ்ரீ அரவிந்தருக்கு பாரதியார் தமிழ் கற்றுத் தந்ததாய்ச் சொல்லப்படுகிறது. ஆண்டாள், குலசேகர ஆழ்வார் போன்றோரின் தமிழ்ப் பாசுரங்களை பாரதியார் பாடக் கேட்டு ஸ்ரீ அரவிந்தர் மகிழ்ந்ததுண்டு.
ஐம்பது ஆண்டுகள் அரவிந்த ஆசிரம நிர்வாகியாகப் பணியாற்றிய அமிர்தா ஸ்ரீ என்கிற அமுதன், ’அரவிந்த தரிசனம்’ என்ற தம் நூலில் அரவிந்தரைப் பற்றிச் சொல்வதுடன் மகாகவி பாரதியாரைப் பற்றியும் சொல்கிறார்:
பாரதியார் ஒவ்வொரு நாளும் மாலையில் கொஞ்சம் இருட்டிய பின்னே ஸ்ரீ அரவிந்தர் இல்லம் செல்வது வழக்கம். ஸ்ரீ அரவித்தர் இரவு சுமார் ஏழு மணிக்குப் பிறகே தம் அறையை விட்டு வெளியே வந்து நண்பர்களை வரவேற்பது வழக்கம்.
இவர்கள் இரவில் கூடித் தங்களுக்குள் பேசாத விஷயமே கிடையாதாம். இலக்கியம், சமூகம், அரசியல், பலவித கலைகள், கதை கேலி முதலிய.. முதலிய...
பாரதி முதலானோர் இரவு எட்டரை ஒன்பது மணிக்கு வீடு திரும்பும்போது ஏதோ திவ்ய சம்பத்தின் ஓர் அம்சத்தை அவரவர் தகுதிக்கேற்றவாறு தந்தம் உள்ளத்தில் கனிவுடன் ஏந்திச் சென்றதாகக் கேட்டிருக்கிறேன்.
இவர்கள் கண்ணுக்கு மறுநாள் காலையில் தங்கள் மாறுதலடைந்த உள்ளும் புறமும் போன்றே வெளி உலகும் மாறுதலடைந்து காணப்படுமாம், என்கிறார் அமுதன்.
பாரதியார், ஸ்ரீ அரவிந்தர் ஆகியோருடன் இணைந்து தியானம் பழகியவர் இன்னொருவர், ’குளத்தங்கரைகளில் அரசமரம்’ என்ற தமிழின் முன்னோடிச்சிறு கதையை எழுதிய எழுத்தாளரான வ.வே.சு. ஐயர். கம்ப ராமாயணத்தின் பெருமையை ஆங்கிலத்தில் எழுதி உலக அளவில் கம்பரை உயர்ந்த படைப்பாளி என நிலைநாட்டிய வரும், வாஞ்சிநாதனுக்குத் துப்பாக்கி சுடப் பயிற்சி அளித்தவரும் இவரே.
ஸ்ரீ அரவிந்தருடன் சிறிதுகாலம் அறிஞர் வ.ரா.வும் இணைத்திருந்தார். தமது ’மகாகவி பாரதியார்’ என்ற நூலில் பாரதியார், அரவிந்தர் இருவரையும் ஒப்பீட்டு எழுதியுள்ளார் வ.ரா.
பாரதியார் உயரத்தில் பெரியவர். அரவிந்தர் உருவத்தில் சிறியவர். பாரதியார் ஸங்கோசி. அரவிந்தரும் ஸங்கோசிதான்.
பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை. அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை. இருவருக்கும் புதிய புதிய கருத்துகளும் சித்திரச் சொற்களும் திடீர் திடீரென்று புதைவாணங்களைப் போலத் தோன்றும்.
வ.ரா.வைப் போலவே மணிக்கொடி எழுத்தாளர்களில் இன்னொருவரான கு.ப.ரா., ஸ்ரீஅரவிந்தர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். ஸ்ரீ அரவிந்த யோகி குறித்து அவர் ஒரு நூலும் எழுதியிருக்கிறார்.
நா. பார்த்தசாரதி, லட்சுமி ஆகியோரின் முதல் சிறுகதையை தமது பிரசண்ட விகடனில் வெளியிட்ட பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நாரண துரைக்கண்ணனும் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி நூல் எழுதியிருக்கிறார். அதில் நாரண துரைக்கண்ணன் - தெரிவிக்கும் தகவல் வியக்க வைப்பது.
ஸ்ரீஅரவிந்தரின் உடல் முழுவதும் தங்க நிறமுடையதாய் மாறி விட்டதாகவும் அவரது இரு பாதங்களில் ஒன்றில் மட்டும் ஒரு நரம்பு சற்றே கரிய நிறத்துடன் தென் படுவதாகவும் தொடர்ந்த தியானத்தால் அந்த நரம்பும் பொன்னிறம் பெறும்போது ஸ்ரீஅரவிந்தர் தங்கத்தால் செய்யப்பட்ட உற்சவமூர்த்தி போல் ஆகிவிடுவார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி அடைந்தபோது அவரைச் சுற்றி நூற்றுப் பதினோரு மணி நேரம் ஒரு பொன்னொளி பரவியிருந்தது என்ற தகவலும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி அடைந்து பல்லாண்டுகள் கடந்த பின்னரும் அரவிந்த தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்கள் பலர் இருந்தனர்; இருக்கின்றனர்.
அவ்விதம் ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவர் காலஞ்சென்ற ஜனகன். அரவிந்தர் குறித்து அவர் எழுதிய நூலில், அரவிந்தரது அவதார நோக்கம் குறித்து தெளிவுபடுத்துகிறார்:
’மனித மனத்திலிருந்து மிகவும் வேறுபட்டதாக, உயர்ந்ததாக சிறப்பானதாக புதியதோர் ஜீவ இனத்தைத் தோற்றுவிக்க இயற்கை முயன்று கொண்டிருக்கிறது. இந்தப் புதிய ஜீவ இனம் அஞ்ஞானத்துக்கு அடிமைப்பட்டிராமல் தெய்விக ஒளியுடன் கூடியதாக இருக்கும்.
இந்த உண்மையை மனிதர்களுக்கு எடுத்துச் சொல்லவே ஸ்ரீ அரவிந்தர் அவதரித்தார். அவர் புவியில் இருந்த நாளெல்லாம் அவர் அதிமனம் என்றழைத்த இந்த மெய்யுணர்வைத் தம்மில் நிலைநாட்டவும் தம்மை அண்டினோர் அனைவரும் அதை அடை யஷம் தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டார்...’
இதே கருத்தை மேலும் விரிவாக்கி எழுதுகிறார் எழுத்தாளரும் மொழி பெயர்ப்பாளருமான விஜயா சங்கரநாராயணன். ஸ்ரீ அரவிந்தர் ஸ்தூல தேகத்துடன் வாழ்ந்த காலத்திலேயே அரவிந்த தரிசனத்தால் அருள்கடாட்சம் பெற்றவர் இவர். ஸ்ரீ அன்னையிடம் ஆன்மிகக் கல்வி பெற்றவர். அன்னையின் சீடரான கபாலி சாஸ்திரியின் நேரடி சிஷ்யை.
அவர் அரவிந்தருடன் வாழ்ந்தவரும் அரவிந்தரின் மருத்துவருமான நீரத்பரன் ஆங்கிலத்தில் எழுதிய நூலை ’அது ஒரு பொற்காலம்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதன் முன்னுரையில் அவர் எழுதுகிறார்...
'மனிதனிலிருந்து அதிமனிதன் தோன்றப் போகிறான். பரிணாமத்தின் அடுத்தகட்டம் இதுதான். மனிதனிடம் உள்ள குறைபாடுகள் அதிமனிதனிடம் இருக்காது. மரணம் என்னும் விதி மாறிவிடும். பசி, தாகம், பாலுணர்வு ஆகியவவையும் மாறும். உடல் ஜடமயமாக இராமல் ஒளிமயமாக மாறும். இயற்கையின் இந்த எதிர்காலத் திட்டத்தை பகவான் ஸ்ரீ அரவிந்தர் யோக திருஷ்டியால் கண்டார். ஆனால், இது நிகழ கோடானு கோடி ஆண்டுகள் ஆகலாம். இதை துரிதப் படுத்துவதே ஸ்ரீ அரவிந்தரின் யோகமாகும்.
இதை எப்படித் துரிதப்படுத்துவது? அதற்கு அதிமனம் என்னும் சக்தியை பூமிக்குக் கொண்டு வரவேண்டும். இதைத் தான் தமது வாழ்நாளில் சாதித்தார் ஸ்ரீ அரவிந்தர்’.
ஆனால், ஸ்ரீ அரவிந்தர் ஸித்தி அடைந்து விட்டாரே? இனி அவர் கனவுகண்ட அதிமன யோகம் நடைபெறுமா? அதுபற்றியும் நீரத்பரன் நூலே விடை சொல்கிறது:
'ஸ்ரீ அரவிந்தரின் உடல் பெட்டியில் வைக்கப்பட்டது... சர்வீஸ் மரத்தின் அடியில் பெட்டி இறக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நண்பர் ஒருவருக்கு மனதில் திடீரென்று ஒரு பிரார்த்தனை உதித்ததாம். தாங்கள் விட்டுச் சென்ற பணி தொடர்ந்து நடக்கும் என்பதற்கு உறுதிமொழி கொடுங்கள் என்று அவர் பிரார்த்தித்தாராம். வங்க மொழியில் மிக உறுதியான குரலில் ஹபே ஹபே ஹபே (நடக்கும் நடக்கும் நடக் கும்) என்று ஸ்ரீ அரவிந்தர் கூறியதை அவர் கேட்டாராம்’.
ஸ்ரீ அரவிந்தரின் கனவுடன் அவரால் ஈர்க்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் கனவும் இணைந்திருக்கிறது. அரவிந்தரே ஓர் உன்னதமான எழுத்தாளர்தானே? ஸ்ரீ அரவிந்தர் உள்ளிட்ட அத்தனை எழுத்தாளர்களின் கனவும் நிறைவேறட்டும்.
நாளை (ஆக. 15) ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலைக்குச் செல்ல விருப்பமில்லை

‘நாடு வெற்றியடைய தலைவா்கள் தன்னலமற்றவா்களாக இருக்க வேண்டும்’

மகாகவியின் மாறாத ஆசை

மகாத்மாவின் ஏக்கம் தீர்ந்தது!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


