ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

வந்தே மாதரம் என்போம்!

லட்சக்கணக்கான வீரர்களின் ரத்தத்தாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் சுதந்திரம் கிடைத்தது.

News image

வந்தே மாதரம் பாடலின் 150-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் - கோப்புப் படம்

Updated On :6 வினாடிகள் முன்பு

வரலாற்றின் பக்கங்களில் இனிய நினைவுகளை போலவே கொடிய நிகழ்வுகளும் இடம் பெற்றிருக்கும். பாரதத்தைப் பொருத்தவரை பல நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டிருந்த நிலையில் கொடுமைகளும் துன்பங்களும் அடக்கு முறைகளும் கணக்கில் அடங்காதவை.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து தேசம் விடுதலை அடைவதற்கு சுமார் 200 ஆண்டு கால போராட்டம் அவசியமாக இருந்தது. வேறுபாடுகள் மறந்து மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடப் போராடினர். பலர் உயிர்த் தியாகம் செய்தனர். லட்சக்கணக்கான வீரர்களின் ரத்தத்தாலும், தியாகத்தாலும், உழைப்பாலும் சுதந்திரம் கிடைத்தது.

பாலகங்காதர திலகர், பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்கள் தங்கள் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன் போன்றோரின் தியாகமும் வீரமும் அளப்பரியது.

அகிம்சை, அறவழிப் போராட்டம், ஆயுதப் புரட்சி எனப் பல வழிகளில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியதன் விளைவாக 1947ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நாடு விடுதலை அடைந்தது. ஆண்டுதோறும் சுதந்திர தினம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்தக் கொண்டாட்டங்கள் நம் முன்னோரின் இணையற்ற தியாகத்தை நன்றியுடன் நினைவுகூரும் வகையில் அமைய வேண்டும். ஆண்டுகள் கடந்தாலும் நமது நல்வாழ்வுக்கு எத்தனையோ வீரர்கள் தன்னலம் மறந்து போராடினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே' என்று மகாகவி பாரதியார் பாடினார். "வந்தே மாதரம்' என்று வங்கத்திலிருந்து ஒரு வீரர் குரல் கொடுத்தார். அன்னை பூமியைக் காக்க வேண்டுமென வீறு கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் "வந்தே மாதரம்' என்ற முழக்கம் மந்திரமாக ஒலித்தது.

வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி வந்தே மாதரம் பாடலை எழுதினார். அதன் வீரியம் நாடு முழுவதும் உணரப்பட்டது. மகாகவி பாரதியாருக்கு அந்தப் பாடல் மீது தீராக் காதல் ஏற்பட்டது. அதை தமிழுக்குக் கொண்டுவர விரும்பினார். அப்படியே பொருள் மாறாமல் மொழிபெயர்த்து பத்திரிகையில் வெளியிட்டார். அத்துடன் மனம் அமைதி அடைந்திருந்தால் சாதாரணமாகக் கடந்து போய்விடலாம். ஆனால், பாரதி இரண்டாம் முறை அதே பாடலை

மீண்டும் மொழிபெயர்த்தார். அதையும் பத்திரிகையில் பிரசுரித்தார். வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு தமிழரையும் சென்றடைய வேண்டும் என்று மகாகவி பாரதியார் விரும்பினார் என்பதை இதனால் அறிந்து கொள்ளலாம். பாரதியை நேசிப்பவர்கள் அவர் நேசித்த "வந்தே மாதரம்' பாடலை எப்படிப் புறந்தள்ள முடியும்? எங்கோ வங்கத்தில் பாடிய கவிஞனின் கவிதை தமிழகத்தில் அக்னிக்குஞ்சாகத் திகழ்ந்த பாரதியை ஈர்த்துள்ளது.

பாரத அன்னையின் புகழ் ஒங்க வேண்டும்; அவள் புதல்வர்கள் உன்னதமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனக் கனவு கண்ட பாரதி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களைப் பெருமையுடன் நோக்கினார். தாயின் மணிக்கொடி பாரீர் பாடலில், "காணரும் வீரர் பெருந்திருக்கூட்டம் நம்பற்குரியர் அவ்வீரர் தங்கள் நல்லுயிர்ஈந்தும் கொடியைக் காப்பார்' என்று பாடினார்.

மகாகவி பாரதியாரின் இந்த வரிகளுக்கு எடுத்துக்காட்டாக திருப்பூர் குமரன் மட்டுமல்ல, வடகிழக்கு மாநிலத்தில் ஒரு பெண்ணும் திகழ்ந்திருக்கிறார்.

1924 டிசம்பர் 22-ஆம் தேதி அஸ்ஸôம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டம், பரங்கபாரி கிராமத்தில், கிருஷ்ண காந்தா பருவா கோர்ணேஸ்வரி தம்பதியருக்கு கனகலதா பருவா தவப்புதல்வியாகப் பிறந்தார். ஐந்து வயதில் தாயையும் 13}ஆவது வயதில் தந்தையையும் இழந்தார். இளைய சகோதர, சகோதரிகளைப் பராமரிப்பதற்காக மூன்றாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை விட்டார். தனக்கென வாழாத தகைமை இளமையிலேயே கனகலதாவுக்கு வந்துவிட்டது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட கனகலதா, 17-ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்தார். நேதாஜியின் போர்ப்படையில் சேர விரும்பினார். வயது குறைவாக இருந்ததால் இணைய இயலவில்லை. அதற்காக உள்ளே மூண்டிருக்கும் தேசபக்தக் கனல் அணைந்து விடுமா என்ன? 18 வயதை அடைவதற்கு முன்பே, "மிர்த்யு பாஹினி' அமைப்பில் இணைந்தார். தனது அர்ப்பணிப்பாலும் துணிச்சலாலும் "மிர்த்யு பாஹினி' அமைப்பில் பெண்கள் பிரிவின் தலைவராக உயர்ந்தார்.

1942-இல் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. மகாத்மா காந்தி "செய் அல்லது செத்துமடி' என்ற முழக்கத்துடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். அதன் தாக்கம் அஸ்ஸாமிலும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

மிர்த்யு பாஹினி அமைப்பு, 1942 செப்டம்பர் 20 அன்று பேரணியாகச் சென்று கோஹ்பூர் காவல் நிலையத்தில் தேசியக் கொடியை ஏற்றத் தீர்மானித்தது. தலைமை வகிக்க இருந்த தலைவர்கள் எல்லாரையும் கைது செய்துவிட்டால் பேரணியையும் அதனால் தோன்றும் எழுச்சியையும் கட்டுப்படுத்திவிடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசு. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுதந்திரத்துக்கான போராட்டம் எந்தக் காரணத்தாலும் தொய்வடையக் கூடாது என எண்ணிய கனகலதா தேசியக் கொடியை கையில் ஏந்தி "மிர்த்யு பாஹினி' உறுப்பினர்களுக்குத் தலைமை வகித்து பேரணியை நடத்தினார். அங்கும் அவர்கள் முழங்கியது "வந்தே மாதரம்' என்ற தாரக மந்திரத்தைத்தான்.

"கலைந்து செல்லாவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்' என்று காவல் துறையினர் எச்சரித்தனர். தலைமை ஏற்று முன்னணியில் நடந்த கனகலதா,

"அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம்

எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே'

என்று மகாகவி பாரதி பாடிய பாடலின் பொருளாய் விளங்கினார்.

கனகலதா, "நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; நான் என் கடமையைச் செய்கிறேன்' என்று பதிலளித்தபடி அஞ்சாமல் முன்னேறினார். காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தேசியக் கொடியைக் கையில் ஏந்தியிருந்த கனகலதா துப்பாக்கிக் குண்டுகளைத் தன் நெஞ்சில் ஏந்தினாள். உயிர் பிரியும் தருவாயிலும், தேசியக் கொடி தரையில் விழாமல் உறுதியாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

மரணமே நேரினும் கொடியை ஏற்றாமல் விடமாட்டோம் என சூளுரைத்துக் கொண்டு களம்புகுந்த வீரர்கள் அல்லவா கனகலதா பருவாவுடன் இருந்த இளம் வீரர்கள். காவல் துறையினர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்; ஆனால், இந்த இளம் வீரர்கள் ஒருவர் விழவும் அடுத்தவர் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முன்னேறினர்.

கண்முன் மரணம் இருக்கிறது என்று தெரிந்தும் அவர்கள் அச்சம் கொள்ளவில்லை. தேசத்தின் பணியில் உயிர் போய் நாம் வீழ்ந்தாலும் பரவாயில்லை நமது கொடி உயர வேண்டும் என்ற ஒற்றைச் சிந்தனையில் அவர்கள் தொடர்ந்தார்கள். ஒருவர் பின் ஒருவராக முன்னேறி தேசியக் கொடியை காவல் நிலையத்தில் ஏற்றினர்.

பாரதத்தின் தென்கோடியில் திருப்பூரில் குமரன் கொடி காக்கத் தனது உயிரைத் தியாகம் செய்தார். வடகிழக்கு மூலையில் அஸ்ஸாமின் குக்கிராமத்தில் அதே உணர்வுடன் கனகலதா தனது உயிரை தேசியக் கொடிக்கு அர்ப்பணித்தார்.

எட்டுத் திக்குகளிலும் எழுந்த வந்தே மாதரம் என்ற உணர்வு இன்றைக்கு நம்மை வளமுடன் வாழ வைத்திருக்கிறது. எந்த திசையில் பிறந்தார்கள், என்ன மொழி பேசினார்கள் என்பதை தாண்டி எல்லாரும் ஒரே உணர்வில் நின்றார்கள்; அதனால்தான் மாபெரும் சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்ள முடிந்தது.

இந்த வரலாறுகளை நினைவுகூர்வது அவர்களுக்கான மரியாதை செலுத்துவதற்கு என்பதைத் தாண்டி நாம் அதிலிருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

"முப்பது கோடி முகமுடையாள்- உயிர்

மொய்ம்புற ஒன்றுடையாள்- இவள்

செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்'

என்று மகாகவி பாரதியார் அன்றைக்கே தமிழ் மக்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்ட ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

லட்சோபலட்சம் மக்களின் உழைப்பு நம்மை வாழவைத்திருக்கிறது. அடுத்த தலைமுறை வாழ இன்றைய தலைமுறையினரும் இதே ஒற்றை சிந்தனையில் உழைக்க வேண்டும். அதுவே சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் ஜனநாயக வாழ்வை வாழவும் வழிகாட்டிய அந்தத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று, சுதந்திரத்தை கற்பனை செய்த மகாகவி பாரதியார், "நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு' என்றார், அத்தகைய சமத்துவ சமூகம் உருவாக வழி, "விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம்; வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்' என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். உழைப்பே உயர்வைத் தரும். தேசத்துக்கு உயர்வைத் தரும் உழைப்பை முன்னெடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.