ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டுமாம்!

News image

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Updated On :9 வினாடிகள் முன்பு

சென்ற இசுடாலின் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகளாகச் சேர்ந்து விட்ட சகதியைத் தூர் வார மூவாயிரம் கோடிக்குப் பொறியாளர்களால் திட்ட அறிக்கை அளிக்கப்பட்டது! அதனால் நீரின் இருப்பு கூடும்!

ஆனால், நிதி இல்லை என்று கடந்த அரசு அதைக் கிடப்பில் போட்டுவிட்டது! ஆனால், கல்லூரி மாணவனுக்கு "மாட்னி ஆட்டம்' பார்ப்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாயை இசுடாலின் வழங்கினார்! கைச் செலவுக்குப் பெற்றோர் பணம் தருவதில்லை என்னும் இளைஞர்களின் மனக் குறையைப் போக்க இசுடாலின் "அங்கிளின் பாக்கெட் மணித்' திட்டம் அது!

ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க நிறுவனம்! அமெரிக்காவுக்கு வந்து விடும்படியும், வரிச் சலுகை தருவதாகவும், தேசபக்தியோடு நடந்து கொள்ளும்படியும், எவ்வளவோ டிரம்ப் சொல்லியும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை விட்டுப் போக மறுத்து விட்டதே! அவ்வளவு குறைவான கூலிக்கு நம்மிடம் ஆள் கிடைக்கிறதே!

நம்முடைய நிதியமைச்சர் எல்லாவற்றையும் தனக்கு விவிலியம் கற்பித்திருக்கிறது என்கிறார்!

காலத்தை கி.பி., கி.மு. என்று இரண்டாகப் பகுத்த, மனிதகுல மீட்சிக்காகத் தன்னைச் சிலுவைப் படுத்திக் கொண்ட இறைமகன் ஏசு, ஒரு மாந்தனைப் பாவத்திலிருந்து மீட்டு, விண்ணரசில் சேர்க்க முடியும்!

ஆனால், நம்முடைய நிதிநிலை அறிக்கையை நிதிச் செயலாளர் எம்.ஏ. சித்திக்தானே தயாரிக்க முடியும்!

பழைய அரசுகளின் போக்குகளிலிருந்து எந்த வகையிலும் மாற்றமில்லை!

அதே ஐம்பதினாயிரம் கோடி பற்றாக்குறை! கடனின் அளவு இந்த ஆட்சி முடியும்போது இருபது இலட்சம் கோடியாக இருக்கும் என்கிறார்கள்!

நம்முடைய ஆற்றுமணலை முப்பத்திநான்காயிரம் கோடி அளவுக்குச் சுரண்டி விட்டதாக சாட்டிலைட் மூலம் அறிந்து, ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது!

இவ்வளவு பெருந்தொகை ஆற்றுமணலிலேயே வர முடியும்போது, கல்குவாரிகளில் வேறு வருமே! பதிவுத் துறையில் சொத்து மதிப்பு உரிய நிலையை அடைந்து பதிவுக் கட்டண வருவாய் பெரிய அளவுக்குக் கூடும்போது, பெரும் வருமானம் வர வழி இருக்கிறதா இல்லையா? இவற்றை நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கவில்லையே!

சீமைச் சாராய டாசு மாக்கையே மூடி விடலாமே? குடும்பங்களில் இரவுப் பொழுதில் பெண்களின் அழுகுரலுக்குப் பதிலாக இன்ப முனகல்கள் கேட்குமே! அதைச் செய்து விட்டுச் சாதனை பேசினால் நியாயம்!

ஒழுக்கம் உயரும்; குடும்பம் உயரும்! மிகவும் வறிய பிகாரிலே அத்தகைய ஒரு முடிவு எடுத்து, அறுபதினாயிரம் கோடி அரசுக்கு வருவாய் வந்ததை இழந்து, குடும்பங்களின் வருவாயைப் பெருக்கினாரே அந்த மாநில முதல்வராயிருந்த நிதீசு குமார்! அது சாதனை!

அது மாதிரி மக்களின் நலன் சார்ந்த ஊக்கமான எந்தப் புதிய நிலைப்பாடுகளும் இந்த அரசுக்கு இல்லையே! ஆனால் பற்றாக்குறையும் மாறவில்லையே! கடன் குறைவதற்கான வழியும் தெரியவில்லையே! உறிஞ்சிப் பருத்த உண்ணிகள் உதிர்ந்து விட்ட பிறகு, இரத்தம் சுரக்க வேண்டாமா?

கல்விக்கு ரூ. 53,000 கோடி ஒதுக்கீடு! ஆனால், நாற்பத்தைந்து விழுக்காடு, அதாவது ஏறத்தாழ பாதி மாணவர்கள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள்! அரசுப் பள்ளிகளில் தரமில்லை என்பதுதான்! புத்தகத்திலிருந்து உணவு வரை அளித்தும், கணினி அளித்தும், மிதி வண்டி அளித்தும், "இவையெல்லாம் வேண்டாம்; தரமான கல்வியே வேண்டும்' என்று பாதிப் பேர் படிப்புச் செலவினாலேயே கடன்காரர்களாகியும், அரசுப் பள்ளிகள் இருக்கும் தெருவில்கூட நடப்பதில்லையே!

பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்தான் என்னும் நிலை புதிய ஆட்சியிலும் மாறுவதாகத் தெரியவில்லையே!

பதினெட்டாயிரம் ஆசிரியர்கள் வெறும் பதினெட்டாயிரம் சம்பளத்தில், தற்காலிகமாக நாற்பது ஆண்டுகளாக வேலை பார்க்கிறார்களே?

இவன் நிரந்தரம் ஆகி விடுவான் என்று நம்பி இவனை மணந்து கொண்டவள், ஓய்வு பெறும் வயது வரை நிரந்தரம் ஆகாததால், கடவுளையும் விதியையும் நொந்து கொண்டு, காய்ந்த மிளகாயை வறுத்து வைத்துக் கொண்டு கஞ்சி குடிக்கும் நிலைக்கு உள்ளாகி விட்டாளே! அவளுக்கும் நரைத்து விட்டதே?

ஒரு மாநில அரசின் முழு முதற் கடமைகள் கல்வியும், மருத்துவமும்தான்!

கல்வியில் பாதி தனியாரிடம்; மருத்துவத்தில் முக்கால் தனியாரிடம்!

நெசவாளிகளிடம் சிறுநீரகம் வரையில் குறைந்த விலைக்கு அடித்து வாங்கிப் பல மடங்கு கூடுதலாக விற்கும் கொள்ளையர்கள் கையில் மருத்துவத் துறை?

மருத்துவத்திற்கு வெறும் இருபத்தி மூவாயிரம் கோடி மட்டுமே இந்த அரசிலும் ஒதுக்கீடு!

இரண்டு கோடி கொடுத்து, எட்டாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வுக்குத் தயாராகி மருத்துவனாக வருகின்றவனுக்கு, அடிப்படைச் சம்பளம் அரசு மருத்துவமனையில் வெறும் ஐம்பத்தி ஆறாயிரம் ரூபாய்!

புதுச்சேரி அரசு தமிழ்நாட்டைவிடக் கூடுதலாகக் கொடுக்கிறது!

தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகை ஏழரைக் கோடி! இதே மக்கள் தொகைதான் இங்கிலாந்திலும்! அங்கு தனியார் மருத்துவமனைகள் இல்லை! அங்கே ஒன்றே முக்கால் லட்சம் மருத்துவர்கள் அரசின் கீழ் பணிபுரிகிறார்கள்! அதே மக்கள்தொகைக்குத் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வெறும் பத்தொன்பதாயிரம் மருத்துவர்களே வேலை செய்கிறார்கள்!

பத்தொன்பது ஆண்டுகளாகப் பத்தொன்பதாயிரம் பேரே பணியாற்றுகிறார்கள்!

இங்கே தனியார் மருத்துவமனைகள் பதினான்கு மாடிக்கு இருக்கின்றன! பத்து ரூபாய் பங்கின் விலை பங்குச் சந்தையில் ஆயிரத்தி நூறுக்கு விற்கப்படுகிறது!

டிவிடெண்டு, மிகை ஊதியமாக ஒரு பங்குக்கு ஒரு பங்கு, அதை உடையவனுக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிறது!

நம்முடைய ராக்கன் வயிற்றுக் கட்டி என்று தனியாரிடம் போனபோது, அவனுடைய மனைவியின் காது கழுத்தில் இருந்தவைதான் போனசு பங்காக மாறுகிறது! மருத்துவத்தை விலை பேசி விற்கிற நாடு விளங்குமா?

தமிழ்நாடு முழுதுக்கும் அரசு மருத்துவமனைகள், சிறியது பெரிதெல்லாம் சேர்த்து வெறும் முந்நூற்றி முப்பதுதான். மொத்த மருத்துவர்கள் வெறும் பத்தொன்பதாயிரம்தான்!

பத்தொன்பதாயிரம் செவிலியர்களுக்குப் பதினைந்தாயிரத்தில் தற்காலிக வேலை! நிரந்தரப்படுத்தும் பழக்கமே நம்முடைய அரசுக்குக் கிடையாது.

இந்தப் புதிய அரசில் மருத்துவத் துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பணம் வெறும் இருபத்தி மூன்றாயிரம் கோடிதான்!

ஆற்றுமணலில் சுரண்டியதாகக் கலெக்டர்கள் மீதான வழக்கே முப்பத்தி நான்காயிரம் கோடிக்கு!

இப்போதுதான் சுரண்டல் இல்லை என்கிறீர்களே! அதை மருத்துவத் துறைக்கு ஒதுக்குவதற்கு என்ன கேடு?

அதை மருத்துவத் துறைக்கு ஒதுக்கினால், மொத்த ஒதுக்கீடு அறுபதாயிரம் கோடிக்கு வந்து இன்னும் இருபதினாயிரம் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கலாமே!

இவ்வளவு கொள்ளையில் திருமாவளவன் கட்சிக்காரர் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் ஒரு மகிழ்வுந்து வேண்டும் என்கிறார்! அதற்குப் பெட்ரோல், ஓட்டுநர் சம்பளம் இவையெல்லாம்!

கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மனையில் வை! இதுவன்றோ பொதுநலன் குறித்த சிந்தனை!

கல்வியில் பாதியையும் மருத்துவத்தில் முக்காலையும் தனியார்களிடம் விற்று விட்டு, முதலமைச்சர்கள் இருபத்தெட்டு கார்கள் முன்னும் பின்னும் வரப் பவனி வருகிறார்கள்!

பொதுப் பணி செய்யத் தொகுதி முழுவதும் போக வேண்டியதிருக்கிறதாம்! ஒரு எம்.எல்.ஏ சொல்கிறார்!

என்ன பொதுப்பணி? தொகுதி முழுவதும் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் செய்யும் பொதுப்பணி கலியாண வீட்டுக்கும் கருமாதி வீட்டுக்கும் போய், ஓட்டு வங்கியைப் பலப்படுத்தி வைத்துக் கொள்வதுதான்!

திருமாவளவன் கட்சியில் பூர்சுவா சிந்தனை முளைப்பது அவர்களின் "வளர்ச்சியை' காட்டுகிறது?

போதிய மருத்துவமனைகள் இல்லை; போதிய மருத்துவர்களில்லை; போதிய செவிலியர்களில்லை; அவர்களுக்குப் போதிய ஊதியமும் இல்லை; எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டுமாம்!

கடையாணிகள் கழன்று விட்டால், வண்டி கவிழ்ந்து விடாதா?

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.