
நலிந்திருந்த பள்ளிகள் நம்பிக்கைத் தலங்களானது எப்படி?
பட்டியல் ஜாதிகள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெருமளவுக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் - கோப்புப் படம்
இந்தியா விடுதலை பெற்று மத்திய-மாநில அரசுகள் பல சட்டங்கள் இயற்றி திட்டங்களைச் செயல்படுத்தியதால், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், பட்டியல் ஜாதிகள், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பெருமளவுக்குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன வாயினும் புண்ணியங்கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
என்று ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி கொடுக்க பாடினான் மகாகவி பாரதி.
நாடு தழுவிய அளவிலுள்ள அரசுப் பள்ளிகளில் ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளே பெரும்பான்மையாக கல்வி பயின்று வருகின்றனர். அந்தப் பள்ளிகள் மூடப்பட்டால் அவர்கள் எங்கே போவார்கள்?
நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய கல்வி அமைச்சர், கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய அவல நிலைமையினால் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 2.26 கோடி சரிவு ஏற்பட்டுள்ளது. தேசம் முழுவதும் மாணவர் எண்ணிக்கையில் அரசுப் பள்ளிகளின் பங்கு 2005-இல் 71 சதவீதமாக இருந்த நிலை மாறி, 2024-25-ஆம் ஆண்டில் 49.24 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து மக்களவையில் பதிலளித்த அமைச்சர், கல்வி என்பது "பொதுப் பட்டியலில்' உள்ள ஒரு துறை என்றும், இப்போக்கிற்கான முழுப் பொறுப்பும் மாநிலங்களையே சாரும் என்றும் தெரிவித்தார்; இது ஏற்கத்தக்கதல்ல. "கல்வி உரிமைச் சட்டம்' ஒரு மத்திய சட்டமாகும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் மத்திய அரசுக்குப் பொறுப்பு உள்ளது.
2010-இல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகிறபோது நிதி ஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு மொத்த செலவில்
65 சதவீதம் மத்திய அரசும், 35 சதவீதம் மாநில அரசுகளும் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைத்தது. மேலும், இந்தச் சட்டத்தின் பிரிவு 7-இல் சட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு இன்று தனது பள்ளிக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்த மறுத்திடும் மாநில அரசுகளுக்கு உரிய நிதிப் பங்கீட்டை அளிக்க மறுக்கிறது.
ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது மிகவும் குறைவாகவே இருக்கிறது என்றாலும் இங்கேயும் சில மாவட்டங்களில் சில அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பகுதி அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து ஈராசிரியர், ஓராசிரியர் பள்ளிகளாக மாறியுள்ளன.
நாளடைவில் இந்தப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக ஒரு மாணவர்கூடச் சேரவில்லை என்றும் இவற்றில் 20 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை எனவும் தொடர்புடைய துறை அதிகாரியே தகவல் அளித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் 44 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 10 குழந்தைகளுக்கும் குறைவாகச் சேர்ந்துள்ளனர். இது போன்ற நிலை மற்ற மாவட்டங்களிலும் சிறு சிறு வேறுபாடுகளுடன் இருக்கக் கூடும்.
அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் பொறுப்புள்ளது. இதில் அரசுகளுக்குத்தான் கூடுதல் பொறுப்பு. தமிழகத்தில் மூடப்படும் நிலைக்குச் சென்ற பல பள்ளிகளை ஆசிரியர்கள் முன்முயற்சி எடுத்துத் தடுத்த பல முன்னுதாரணங்கள் உள்ளன. அந்தப் பள்ளிகள் தூக்கி நிறுத்தப்பட்டதில் உள்ளூர் மக்கள் அளித்த ஆதரவுக்கும் முக்கியப் பங்குண்டு.
எடுத்துக்காட்டாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், நடுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அனுபவத்தைப் பார்ப்போம்.
2018-ஆம் ஆண்டில் இந்தப் பள்ளியில் சேர்ந்திருந்த மாணவர்கள் எண்ணிக்கை வெறும் இரண்டுதான். பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்திவேல் அயர்ந்துவிடாமல், கிராம மக்களைச் சந்தித்தார். உங்கள் பிள்ளைகளை ஏன் நம் ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்க்கவில்லை என்று கேட்டு உரையாடினார்.
அவர்கள் கூறிய காரணங்களையும் வேண்டுகோள்களையும் பள்ளிக் கல்வி அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். அவர்களது உதவியுடன் பள்ளி மேம்படுத்தப்பட்டது. ஆங்கிலம் கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வாரத்துக்கு ஒரு நாள் ஓவியம் உள்ளிட்ட
குழந்தைகளுடைய படைப்பாற்றலையும் கற்றல் திறனையும் உயர்த்திடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இன்று இந்தப் பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 90. சென்னை மாநகரில் 1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முகப்பேர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி. இதில் 2009-இல் மாணவர்கள் எண்ணிக்கை 35 மட்டுமே. தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி பொறுப்பேற்று பல முயற்சிகளை செய்து தற்போது மாணவர்கள் எண்ணிக்கை
205-ஆக உயர்ந்திருக்கிறது. இந்தப் பள்ளியில் தற்போது ஆட்டிசம் (அறிவுத் திறன் பாதிப்பு) பாதிப்புள்ள 27 குழந்தைகள் பயின்று வருகின்றனர் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
2009-இல் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே என்றிருந்த நிலை மாறி, தற்போது ஆறு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளூர் மக்களின் ஆதரவோடு ஆசிரியர்களின் முயற்சியினால் அடிப்படைக் கட்டமைப்பில் மேம்பாடு ஏற்பட்டதுமகடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 1926-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
நகராட்சி முஸ்லிம் உருது தொடக்கப் பள்ளியில் 2014-இல், 5 மாணவர்கள்தான் பயின்றனர். தலைமையாசிரியராகப் பொறுப்பேற்ற பிரேமலதா பல அடுக்கு முயற்சிகளை சக ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் உள்ளூர் மக்கள் ஆதரவுடன் மேற்கொண்டார். தற்போது இந்தப் பள்ளியின் மழலையர் வகுப்புகளில் 60 குழந்தைகளும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 140 குழந்தைகளும் பயில்கின்றனர். பணியில் உள்ள ஆசிரியர்கள் 5 பேர்.
சென்னை திருவொற்றியூரில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையாசிரியராக முத்துச்செல்வி 2013-இல் பொறுப்பேற்றார். அப்போது 8 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். மாணவர்களின் எண்ணிக்கை 130-ஆக இருந்தது. தற்போது இந்தப் பள்ளியில் 567 மாணவர்கள் பயில்கின்றனர். 11 ஆசிரியர்களும், அவர்களோடு பள்ளி மேலாண்மைக் குழுவால் நியமிக்கப்பட்ட 10 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டிலும், மாநகராட்சி நிதி ஒதுக்கீட்டிலும் கட்டப்பட்ட இரண்டு புதிய கட்டடங்களில் இந்தப் பள்ளி செயல்படுகிறது. பள்ளியின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதுடன் ஆசிரியர்களின் மேம்பட்ட பணிக் கலாசாரத்தினாலும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், வல்லம்பக்காடு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2013-14-ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 21 பேர். தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்றவர்களை அரசுப் பள்ளிக்கு ஈர்ப்பதில் ஈடுபட்ட
ஆசிரியர்கள் ஊர் மக்களிடமிருந்து 5.50 லட்சம் ரூபாய் நிதி திரட்டி, இரண்டு புதிய வகுப்பறைகளைக் கட்டினார்கள்.அங்கன்வாடி மையத்தில் இட வசதிகுறைவாக இருந்ததால் பள்ளிக்கு அருகிலேயே ஒரு புதிய கட்டடத்தைக் கட்டினர். அங்கன்வாடி குழந்தைகள்
உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினர். எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் 20 குழந்தைகளும் பள்ளியில் 53 மாணவர்களும் பயில்கின்றனர். மழலையர் வகுப்புகள் குழந்தைகளின் தொடர் பள்ளிக் கல்விக்கான நுழைவாயிலாக உள்ளன. தனியார் பள்ளிகளின் மழலையர் வகுப்புகளில் சேரும் குழந்தைகளைப் பெற்றோர்கள் முதல் வகுப்பில் சேர்ப்பதற்காக அரசுப் பள்ளிகளுக்குக் கொண்டுவர மாட்டார்கள். தனியார் பள்ளிகளிலேயே தொடர்வார்கள். இதைப் புரிந்துகொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளைத் தொடங்குவது மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவும். மாநிலத்தில் இப்போது பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு மழலையர் வகுப்புகளை தொடங்கியதும் ஓர் அடிப்படைக் காரணம்.
அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை அரசு முறையான ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். அடிப்படைக் கட்டமைப்புகள் எப்படி இருக்கின்றன?, போதிய வகுப்பறைகள் உள்ளனவா?, கழிப்பறை வசதிகளின் நிலை என்ன?, ஆசிரியர்கள் பற்றாக்குறையா?, ஆசிரியர்களின் பணிக் கலாசாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? இவை உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து அரசுப் பள்ளிகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளையும் பாதுகாக்க நடவடிக்கைகள் மேற்கொள்வது தமிழக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய தவெக அரசின் ஒரு தலையாய பொறுப்பு.
கட்டுரையாளர்:
தலைவர், அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழு,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




