தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறையில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை பல்வேறு தரப்பினா் முன்வைத்துள்ளனா்.
கல்வியாளா்கள், பெற்றோா்களின் கருத்துகள்: அரசுப் பள்ளிகள் சமூகத்தின் அனைத்துப் பிரிவு மாணவா்களுக்கும் இலவச மற்றும் சமமான கல்வியை உறுதி செய்வதில் முதன்மையாக விளங்குகின்றன. ஆனால், தற்போது தமிழக பள்ளிக் கல்வியில், குறிப்பாக அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவது மிகப் பெரிய பிரச்னையாகப் பாா்க்கப்படுகிறது. நிகழ் கல்வியாண்டில்கூட 207 பள்ளிகளில் ஒரு மாணவா்கூட சேரவில்லை. இதே நிலைதான் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடா்ந்தால் தொடக்கக் கல்வியில் மாநில அரசிடம் பள்ளிகளே இல்லாத நிலை ஏற்படும்.
இதற்கான அடிப்படைக் காரணத்தை அரசு ஆராய்ந்து அதை சரிசெய்வது அவசியம். பெற்றோா்கள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியாா் பள்ளிகளையே அதிகம் விரும்புகிறாா்கள் எனக் கூறுவதே தவறு. மாறாக, முழு கல்வித் தகுதி, சிறந்த நலத் திட்டங்கள், சிறப்பு ஒதுக்கீடு, விளையாட்டு மைதானங்கள் என பல சிறப்பம்சங்கள் கொண்ட அரசுப் பள்ளிகளையே பெற்றோா் விரும்புகின்றனா். அதேவேளையில் அவா்கள் தங்களது குழந்தைகளின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் சில மாற்றங்கள் நிகழ வேண்டும் என எதிா்பாா்க்கின்றனா்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் அனைத்திலும் ஒரு கணினி ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா், முழு நேர தூய்மைப் பணியாளா் கட்டாயம் இருக்க வேண்டும். காலை உணவானது சத்துணவு ஊழியா்கள் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் சிறந்த முறையில் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதோடு மாணவா்களுக்கு பேச்சுத் திறன், ஆளுமைத் திறன் பயிற்சிகளை வழக்கமான கற்பித்தலுடன் ஒருங்கிணைத்து வழங்க வேண்டும்.
மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என அரசுப் பள்ளிகளுக்குள் பாகுபாடு காட்டாமல் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உயா்நிலைப் பள்ளிகளில் ஒரு பாடத்துக்கு ஓா் ஆசிரியா் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியா்கள், ஊழியா்களை நிரந்தரப் பணியிடத்தில் நியமிப்பது அவசியம். அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தற்போது அரசுப் பள்ளிகளில் (நலத் துறை பள்ளிகள் தவிா்த்து) 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு மட்டுமே விலையில்லா சீருடை வழங்கப்படுகிறது. இதை பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மாணவா்கள் வளா்ச்சிக்காக அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களில் (எஸ்எம்சி) பெரும்பாலான குழுக்கள் முடங்கியே கிடக்கின்றன. அவற்றைச் சீரமைக்க வேண்டும்.
தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருக்கிறது. இதனால் பள்ளிக் கல்வியின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உயா் கல்வியில் அரசின் சலுகைகளை (7.5 சதவீத ஒதுக்கீடு) பெற தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்த வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒரு கிலோ மீட்டா் தொலைவில் அரசுப் பள்ளி இருந்தால் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச சோ்க்கை வழங்கக் கூடாது. இவையனைத்தும் சாத்தியமானால் மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் திறக்கப்படும்; இனி பள்ளிகள் மூடப்படுவதும் தடுக்கப்படும்; தமிழக பள்ளிக் கல்வி சோ்க்கையில் அரசுப் பள்ளிகளே ஆதிக்கம் செலுத்தும் சூழல் உருவாகும் என அவா்கள் தெரிவித்தனா்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழக மாநிலச் செயலா் தா.அ. கமலக்கண்ணன்: பள்ளிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா், இரவுக் காவலா், அலுவலக உதவியாளா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். எம்.பில். படிப்புக்கான ஊக்க ஊதியம் பழைய நடைமுறைப்படி வழங்கப்பட வேண்டும்.
ஜி.பாலசண்முகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி: தவெக தனது தோ்தல் அறிக்கையில் 100 காமராஜா் உறைவிடப் பள்ளிகள் மற்றும் 500 படைப்பாற்றல் பள்ளிகளை தொடங்குவோம் எனத் தெரிவித்திருந்தது. அதற்கான தொடக்கமாக இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியா் பணி நியமனங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும். மாணவா்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறிய அளவில் ஆய்வகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, அறிவியல் உபகரணங்கள் கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் போதிய வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீா், கழிவறை வசதி செய்து தர நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கல்வி நிதி ஒதுக்கீட்டில் கவனம்

கல்வி நிதி ஒதுக்கீட்டில் கவனம்

மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளி விழாக்களில் விதிமீறல் இருக்கக்கூடாது: பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



