தமிழானவன், தி.நந்தகுமார்
'கிராம மாணவர்களுக்கும், நகர மாணவர்களுக்கும் தரமான கல்வியும், தேசிய அளவிலான வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும்' என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே 'ஜவஹர் நவோதயா வித்யாலயா' பள்ளிகள். 1986-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியால் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வித் திறனுடன், அவர்களின் தனித்திறமை, சமூகப் பொறுப்பு, தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில் இந்தப் பள்ளிகள் செயல்படுகின்றன.
மத்திய அரசின் கேந்திர வித்யாலயாவில் மத்திய அரசுத் துறைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு உண்டு. ஆனால், நவோதயா பள்ளிகளில் முழுக்க முழுக்க சாமானிய மக்களின் குழந்தைகளுக்கானது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் கல்வி, முழுநேர குடியிருப்பு வசதி, உணவு, சீருடை, கல்வி உபகரண உதவிகள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி வசதிகள், விளையாட்டு, யோகா, கலை மற்றும் கலாசாரப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
சேர்வது எப்படி?
நவோதயா அனுமதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒவ்வொரு பள்ளிகள் செயல்படும். தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டால் ஏறக்குறைய 420 பள்ளிகள் செயல்பட வாய்ப்புண்டு. நவோதயா பள்ளிகளில் சேருவதற்கு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜவஹர் நவோதயா தேர்வை எழுத வேண்டும். மனத்திறன், கணித அறிவு, மொழித் திறன் ஆகியன மதிப்பீடு செய்யப்பட்டு, திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
'நவோதயா வித்யாலயா சமிதி' என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், மாணவர் புகைப்படம், பெற்றோர் கையொப்பம், ஆதார் விவரம், சாதிச் சான்றிதழ் , மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவைப்பட்டால்) உள்ளிட்டவற்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆறாம் வகுப்பில் சேர தேர்வின் அடிப்படையிலும், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் நுழைவுத் தேர்வையும் அடிப்படையாகக் கொண்டு பிளஸ் 1 சேர்க்கையும் அளிக்கப்படுகிறது. மற்ற வகுப்புகளுக்கும் காலியிடங்களுக்கு ஆண்டுதோறும் சேர்க்கை நடைபெறும்.
தமிழ்நாட்டில் ஆதரவும், எதிர்ப்பும்!
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் இந்தப் பள்ளிகளை அனுமதிக்க மாநில அரசு அனுமதிக்கவில்லை.
'நவோதயா பள்ளிகள் வந்தால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தேசிய தரத்தில் கல்வி கிடைக்கும். மருத்துவம், பொறியியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் முன்னேறுவதற்கு இது உதவியாக இருக்கும்'' என்பது நவோதயா பள்ளிகளை ஆதரிப்போர் கூறும் கருத்துகள்.
அதேசமயம், 'கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம். ஆனால், தமிழ் மொழி, தமிழ்நாட்டின் இருமொழிக் கல்விக் கொள்கை, மாநில உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்'' என்று எதிர்ப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
1980-களில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தன. ஆனால், இன்றோ புற்றீசல் போல் பெருகிவிட்டன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.
420 நவோதயா பள்ளிகளில், ஆறாம் வகுப்பில் ஒரு பள்ளியில் 100 மாணவர்கள் என்றால், 42 ஆயிரம் மாணவர்கள் படிப்பார்கள். இதுபோல், பிளஸ் 2 வரை கணக்கிட்டால், சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவர்கள் செலுத்தும் கல்விக்கட்டணமும் மிகக் குறைவே என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு மாணவன், மாணவி தனியார் மெட்ரிக். பள்ளிகளில் 6-12-ஆம் வகுப்பு படிக்க குறைந்தது ரூ.4 லட்சம் செலவிடுகின்றனர். நவோதயா பள்ளிகள் பெற்றோர் செலவிடும் தொகை சில ஆயிரங்கள் மட்டுமே.
புதுச்சேரியில் நவோதயா பள்ளிகள்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பாகச் செயல்படும் இந்தப் பள்ளியில் 6 -ஆம் வகுப்பில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அடுத்த ஆண்டுக்கான சேர்க்கை இப்போதே தொடங்கி விட்டது. 12- ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயில்கின்றனர்.
புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளியில் மும்மொழிப் பாடம் அமல்படுத்தப்படுகிறது. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம். தமிழ்நாட்டு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாடப் புத்தகம்தான் இங்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
இதைத் தவிர ஆங்கிலம் கட்டாயம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர 6-ஆம் வகுப்பில் இருந்து 9 -ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம். 10 வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை ஹிந்தி விருப்பப் பாடம். ஹிந்தி மொழியை விருப்பப் பட்டால் படிக்கலாம். இல்லையென்றால் விட்டு விடலாம்.
பள்ளி நேரம்
அதிகாலை 5 மணிக்கு மாணவர்கள் எழுந்திருக்க வேண்டும். காலை 5.30 முதல் 6 வரை விளையாட்டு. வளாகத்தில் எல்லா வகையான விளையாட்டுக்கும் திடல் இருக்கிறது. விரும்பும் விளையாட்டில் சேரலாம். விளையாட்டு கட்டாயம். காலை 7.30 மணிக்கு இறைவணக்கம். பிறகு வகுப்புகள் ஆரம்பம்.
கட்டணம்
உண்டு உறைவிடப் பள்ளியாக இது இருக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்களுக்குப் பெரும்பாலும் இலவசக் கல்வி கிடைக்கிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள எல்லா வகுப்பு மாணவ, மாணவிகளும் பள்ளி வளர்ச்சி கட்டணமாக மாதம் ரூ.600 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு விதிவிலக்கு.
பெயர் மாற்றம்
இப்போது இந்தப் பள்ளியின் பெயர் பிஎம்ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு பள்ளி வளர்ச்சி நிதியாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்படுகிறது. இதில் கற்றல், கற்பித்தல் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
6 -ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக லேப் வசதியும் இருக்கிறது. ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
தனித்திறனில் கவனம்
'வகுப்புகளின் செயல்பாடுகளை முதல்வர் அலுவலக அறையில் இருந்து பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொரு வகுப்பின் செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்ட பெரிய டி.வி. திரை உள்ளது'' என்கிறார் புதுச்சேரி பள்ளியின் முதல்வர் பி. கண்ணதாசன்.
அவர் மேலும் கூறியது:
'எங்கள் பள்ளியில் 613 மாணவர்கள் பயில்கின்றனர். இதில், 350 பேர் மாணவியர். எங்கள் பள்ளி முக்கியத்துவம் வாய்ந்த மையமாக விளங்குகிறது. அதனால் புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இங்கு ஜே.இ.இ. சிறப்புப் பயிற்சி வகுப்பு காலை முதல் தினம்தோறும் நடக்கிறது. இதில் 80 மாணவியர் படிக்கின்றனர். இந்த மாணவிகளுக்குத் தனி ஆசிரியர்களைக் கொண்டு தனி வகுப்பு நாள்தோறும் நடக்கின்றன. இந்த ஆசிரியர்களே 11- ஆம் வகுப்புக்கான பாடத் திட்டத்தையும் முடித்து விடுவார்கள்'' என்கிறார்.
புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி
ஏ. பிரித்திகாவின் தாய் தணிகை முத்து:
'என்னுடைய மகள் ஏற்கெனவே எங்கள் வீடு அருகேயுள்ள ஓர் அரசு நிதியுதவி பள்ளியில் படித்து வந்தாள். அது தமிழ்நாடு பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளி. நவோதயா பள்ளி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளி. என் மகளுக்குப் பாட்டு மிகவும் பிடிக்கும். இந்தப் பள்ளியில் பள்ளி இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே போன்று ஹிந்தியும் இப்போது என் மகள் படிக்கிறார். எல்லா குழந்தைகளும் அவர்கள் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இங்கு படிக்கும் குழந்தைகள் தைரியமாக வளருவார்கள். மாணவிகளுக்கு இங்கு பாதுகாப்பும் அதிகம்'' என்றார்.
தமிழானவன், தி.நந்தகுமார்.
படங்கள் கி. ரமேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் வருவதைத் தடுக்காதீர்கள்: உச்ச நீதிமன்றம்

மேலும் சிறக்க வேண்டும் அரசுப் பள்ளிகள்!
அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவனுக்குக் கத்திக்குத்து!

சென்னை ஐஐடியில் பள்ளி மாணவா்களுக்கான ஒமேகாபால் விளையாட்டுப் போட்டி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



