குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

நல்லிணக்க நாயகர்

நபிகள் நாயகத்தின் பொறுமை, மன்னிப்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேய போதனைகள் மிகவும் அவசியமானவை.

மிலாது நபி - பிரதிப் படம்

Published On :15 வினாடிகள் முன்பு

மண்ணில் தோன்றிய மார்க்கங்கள் அனைத்தும் உலகம் நல்ல வண்ணம் வாழத் தோன்றி சிறந்தவை. ஒவ்வொரு மதமும் மனிதன் செம்மையுற வழிகாட்டுகின்றன. அவற்றுள் இஸ்லாம் அமைதியையும், மனிதநேயத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கமாகத் திகழ்கிறது.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் மனிதர்களை நெறிப்படுத்தி திறம்படுத்த அனுப்பப்பட்டவர். இஸ்லாம் கூறும் அனைத்து நல்லறங்களையும் மனிதன் பின்பற்ற இறைவனால் அனுப்பப்பட்ட நற்சான்றாக நபிகள் பெருமானார் விளங்குகிறார். அவர் பிறந்து வாழ்ந்து 1,500 ஆண்டுகளுக்குப் பின்னரும் அதே உயிர்ப்புடனும், ஆன்ம ஒளியுடனும் அவர் பெயர் நிலைத்திருக்க, அவர் மேற்கொண்ட நற்செயல்களும் நன்முயற்சிகளுமே காரணமாக இருக்கின்றன.

மனிதகுல வரலாற்றில் மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர்களில் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் சிறப்பிடம் பெற்றவராகத் திகழ, அவரின் நற்குணங்களும் நல்ல எண்ணங்களுமே காரணமாகின்றன. அவர் ஓர் இறைத் தூதராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குச் சிறந்த வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டிய அற்புத வழிகாட்டியாகவும் திகழ்கிறார். அவர்களின் போதனைகள் தனிமனித வாழ்க்கைமுதல் குடும்பம், சமூகம், நீதி, மனிதநேயம் என அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுகின்றன.

நபிகள் நாயகம் அவர்கள் உண்மை, நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக வாழ்ந்தார். நபித்துவத்துக்கு முன்பே பெருமானாரை மக்கள் 'அல் அமீன்' என்று, அதாவது 'நம்பிக்கைக்குரியவர்' என்று அழைத்தனர்.

எந்த நிலையிலும் பொய் கூறாமலும், பிறரின் உரிமைகளைப் பறிக்காமலும் வாழ்ந்த அவரின் வாழ்க்கை, இன்றைய மனிதர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக உள்ளது. தமக்கு எதிராக இருந்தவர்களிடம்கூட அவர் பொய் பேசியதில்லை; அவர் சுய நன்மைக்காகப் பொய் பேசுவார் என்று அவரின் எதிரிகள்கூடக் கூறியதில்லை. நம்பகத்தன்மையே இஸ்லாத்துக்கும் தூதுத்துவத்துக்கும் அடிப்படை என்பதனால் அக்கொள்கையில் உறுதியாக இருந்தார்.

போரைத் தவிர்த்து அமைதியான முறையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே நபிகளாரின் அறுபத்து மூன்று ஆண்டுகால வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதற்கு சில உடன்படிக்கைகள் சான்றுகளாகின்றன.

இன்றைய சூழலில் நாடுகளுக்கு இடையே நடந்து வருகிற பல போர்களுக்குத் தீர்வுகள் எட்டப்படுவதில்லை; உலக மக்களைப் பதற்றப்படுத்தும் இந்தப் போர்களுக்கு இரு தரப்பும் அமர்ந்து பேசும் உடன்படிக்கைகளே சரியான தீர்வாக அமையும் என்பதை முன்கூட்டியே அறிந்தவர் அகிம்சை நாயகர் அண்ணலார்.

நபிகள் நாயகம் , மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின்னர்அங்கு வாழ்ந்த முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் பல்வேறு சமூகத்தினரிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக மதீனா உடன்படிக்கையை ஏற்படுத்தினார். ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, மதீனா நகரின் பாதுகாப்பில் அனைவருக்கும் பொறுப்பு, அநீதிக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுதல் போன்ற கொள்கைகள் அதில் இடம்பெற்றன. அது பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழ்வதற்கான சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.

அடுத்து முக்கியமானது ஹுதைபிய்யா உடன்படிக்கை. ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில் முஸ்லிம்களுக்கும் மக்காவின் குறைஷிகளுக்கும் இடையே ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டது. நபிகளார் உம்ரா செய்ய மக்காவை நோக்கிச் சென்றபோது ஏற்பட்ட சூழ்நிலையில் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில நிபந்தனைகள் முஸ்லிம்களுக்குச் சாதகமற்றதாகத் தோன்றினாலும், அண்ணலார் எதிர்கால அமைதியைக் கருத்தில் கொண்டு அவற்றை ஏற்றுக்கொண்டார்.

இந்த உடன்படிக்கையின்மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இரு தரப்பினருக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால், மக்கள் அச்சமின்றி ஒருவரையொருவர் சந்தித்து இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவானது. இதுபோன்ற சமாதான முயற்சிகளால் இஸ்லாம் வேகமாகப் பரவியது.

நஜ்ரான் மாகாண மக்களுடனான உடன்பாடு முக்கியமான ஒன்று. நபி பெருமானார் நஜ்ரானிலிருந்து வந்த கிறிஸ்தவ மக்களுடனும் அமைதியான முறையில் உரையாடி உடன்பாட்டை ஏற்படுத்தினார். அவர்களின் மத உரிமைகளையும், பாதுகாப்பையும் மதிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டதன்மூலம் வேறுபட்ட மதத்தினருடனும் மரியாதையுடனும் அமைதியுடனும் வாழ முடியும் என்பதை நபிகள் நாயகம் எடுத்துக்காட்டினார்.

நபிகளார் மேற்கொண்ட சமாதான உடன்படிக்கைகள், வெறும் போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தங்களாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, அவை நீதியையும் நம்பிக்கையையும் பரஸ்பர மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. எதிரிகளுடன்கூட பேச்சுவார்த்தைமூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை அவரின் நடைமுறை வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது.

இந்த உடன்படிக்கைகள் வழியாக உடனடியாகக் கிடைக்கும் வெற்றியைவிட நீண்டகால அமைதிக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் மிகப் பெரியது; நன்மை அளிப்பது என்பதை அறிய முடிகிறது.

ஒப்பந்தத்தை மதிப்பது, வாக்குறுதியைக் காப்பது, பிற மதத்தினரின் உரிமைகளை மதிப்பது உள்ளிட்ட உயர்ந்த பண்புகளையும் இது நமக்குக் கற்றுத் தருகிறது. ஒருவருடன் செய்த ஒப்பந்தத்தை மீறுவது இறைவனுக்குப் பிடிக்காத தீய செயல் என்று வன்மையாகக் கண்டிக்கிறது திருக்குர்ஆன்.

நபி பெருமானார் வாழ்ந்த காலத்தில் அரேபிய சமுதாயத்தில் பல்வேறு குழுக்களுக்கிடையே பகை, பழிவாங்குதல் மற்றும் மோதல்கள் நிலவிய சூழலில் அமைதி மற்றும் சமரசத்தின் வழியை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஒருவருடைய உயிர், உடைமை மற்றும் கண்ணியத்தை மற்றொருவர் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதைத் தமது வாழ்வின் மூலம் எடுத்துக்காட்டினார். அறியாமல் செய்த பாவங்களுக்குப் பரிகாரம், பிற உயிர்களின் மீது இரக்கமும், கருணையும் காட்ட வேண்டும் என்பதே என வலியுறுத்தி வாழ்ந்து காட்டியவர் அண்ணலார்.

மனிதகுல வரலாற்றில் அமைதி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்திய மகத்தான தலைவர்களில் நபிகள் நாயகம் முதலிடமும் சிறப்பிடமும் பெறுவதாக முன்மொழிகிறார் 'தி ஹண்ட்ரட்' (உலகின் செல்வாக்கு மிக்க நூறு ஆளுமைகள்) என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் மைக்கேல் ஹார்ட்.

மக்காவில் பல ஆண்டுகள் துன்புறுத்தப்பட்டபோதும், அதற்குப் பின்பு முஸ்லிம்களின் கைகளில் மக்கா வந்தபோதும் நபிகள் நாயகம் தம்மைத் துன்புறுத்தியவர்களுக்கு எதிராக வெறுப்பையும் பழிவாங்கும் எண்ணத்தையும் வளர்க்கவில்லை. மாறாக, பொறுமையையும் மன்னிப்பையும் கடைப்பிடித்தார். மதீனாவிலும் அங்கு வாழ்ந்த பல்வேறு சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றினார்.

மேலும், அண்டை வீட்டாரை மதித்தல், ஏழைகளுக்கு உதவுதல், அநாதைகளை விடுவித்தல், பெண்களை மதித்தல், விதவைகளுக்கு மறுமணம் மூலம் மறுவாழ்வு, அடிமைகளிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுதல், பிற மதத்தினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல நற்பண்புகளைப் போதித்தார்.

மனிதர்களின் உயர்வு அவர்களின் செல்வத்திலோ, சமூக நிலையிலோ அல்ல; அவர்களின் நற்குணங்களிலும் இறை நம்பிக்கையிலும் இருப்பதாகக் கற்றுக் கொடுத்தார். உன் அண்டை வீட்டாருக்குச் சிறந்தவன் உங்களில் சிறந்தவன் என்று கட்டியங்கூறுகிறார் சாந்த நபி.

நீதி செய்வதிலும் நபி பெருமானார் உயர்ந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். நண்பர், உறவினர், ஏழை, செல்வந்தர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். எதிரிகளிடமும்கூட அநியாயம் செய்யக் கூடாது என்ற உயர்ந்த கொள்கையைக் கற்றுக் கொடுத்தார். மன்னிக்கும் பண்பும் அவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக இடம்பெற்றது.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை ஆன்மிக வழிகாட்டுதலையும் உலகுக்கு வழங்குகிறது. மனிதனின் உண்மையான உயர்வு செல்வத்திலோ பதவியிலோ அல்ல; நல்ல குணத்திலும் இறை நம்பிக்கையிலும் இருப்பதை அண்ணலார் கற்றுக் கொடுத்தார்.

அதே வேளையில், குடும்பத்தில் அன்பு, பொறுமை, பரஸ்பர மரியாதை ஆகியவை நிலவ வேண்டும் என்பதற்குச் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அதுபோன்ற வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால் தனிமனிதனும் சமூகமும் வாழ அமைதியான சூழல் அமையும்.

இன்றைய உலகில் போர்கள், வெறுப்பு, வன்முறை மற்றும் பாகுபாடுகள் அதிகரித்துவரும் நிலையில், நபிகள் நாயகத்தின் பொறுமை, மன்னிப்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேய போதனைகள் மிகவும் அவசியமானவை. அவர் மூலமாக இறைவன் அருளிய திருமறையும் அவருடைய நற்போதனைகளாம் பொன்மொழிகளும் இஸ்லாத்தின் இரு கண்களாக ஒளிர்கின்றன.

அவர் வாழ்ந்து சிறந்த வாழ்க்கையைப் பின்பற்றுவது தனிமனித அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் நன்மை பயப்பதாக அமையும். அதனால்தான் அவரை 'அழகிய முன்மாதிரி' என்றும் 'நல்லிணக்க நாயகர்' என்றும் அவரது பிறந்த நாளை 'மீலாது நபி' என்றும் கொண்டாடி மகிழ்கிறோம்.

இன்று மீலாது நபி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.