தேசியமும் தர்மமும் காக்க...

தேசியமும் தர்மமும் காக்க...
Updated on
3 min read

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, "பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட. அந்நியரின் ஆதிக்கத்தைக் கண்டு பாரதி கொதித்துப் போனார், அவர்களை நம் நாட்டிலிருந்து விரட்ட நினைத்தார் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அவருடைய லட்சியம் அதுவல்ல. உலகத்தின் கண்முன் நம் நாட்டின் மதிப்பை உயர்த்துவதும், ஆணும் பெண்ணும் அனைவருமான ஒரு புதுவகை மனிதர்களால் ஆன ஒரு நாட்டை அவர் கட்டியெழுப்ப நினைத்ததும்தான்' என்று எழுதினார்.

தனிப் பெரும் ஆளுமையான மகாகவி பாரதி தமிழர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். பாமரர்களும் அறிந்த பண்டிதர். தேசத்தின் மீது அவருக்கு இருந்த பக்தியும், இந்த மண்ணில் பின்பற்றப்பட்ட தர்மத்தின் மீதான பற்றுதலும் அவரது அடையாளமாக இருக்கின்றன.

பாரதியின் கவிதைகள், இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. தேசபக்திப் பாடல்கள், தெய்விகமும் வேதாந்தமும் போற்றும் பாடல்கள், தேசபக்திப் பாடல்களுக்குள் அறமும், தெய்விகத்துக்குள் தேச சிந்தனையும்கூட இழையோடியிருக்கும். "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' இது எங்கள் மூதாதையர் வாழ்ந்த மண் என்று உரிமை கொண்டாடும் போதே, "துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும் இந்நாடே' என்பார்.

இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ?' என்று நமது அடையாளம் ஆன்மிகமும் வேதங்களும் என்பதில் பாரதி மாறுபட்டதே இல்லை.

தமிழ், தேச விடுதலை, பெண் விடுதலை, சமூகநீதி என்று சமூகத்தைச் சீரமைக்க முயன்றவர் பாரதி.

புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதைவிட நமது பெருமைமிகு வரலாற்றை மீண்டும் நனவாக்க வேண்டும் என்ற விருப்பமே அவருக்கு நிறைந்திருந்தது. அதை "புதுமைப்பெண்' கவிதையில் குறிப்பிடுகிறார்.

பேராற்றல் கொண்ட பெண்கள் உலகையே வளர்ச்சிப் பாதையில் வழிநடத்த வல்லவர்கள் என்று சொல்ல வந்தவர். அப்போதும், இந்த தர்மத்தின் மீதான பற்றினை,

"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்

பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்

சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்

தன்னிலே பொதுவான வழக்கமாம்'

என்கிறார்.

புதுமைப் பெண்கள் மூடக்கட்டுகள் யாவும் தகர்ப்பராம் என்றவர், அப்படித்தான் என் தேசத்தின் பெண்கள் சிறப்பாக வேதங்கள் விளங்கிய நாளில் வாழ்ந்தார்கள் என்றும் நினைவூட்டுகிறார்.

பாரதியை நாம் புரிந்து கொள்வதற்கு பாரதியியலில் தோய்ந்த அறிஞர்கள் வழிகாட்டுகிறார்கள். பேராசிரியர் ரா.பி சேதுப்பிள்ளை போன்றோர் அவரது எழுத்துகளை முழுமையாக உணர்ந்தவர்கள். இந்த மண்ணின் மீதும் மக்கள் மீதும் பாரதி கொண்டிருந்த அன்பைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

பாரதி திருவல்லிக்கேணியில் ஆற்றிய உரையை ரா.பி.சேதுப்பிள்ளை தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அதில் தமிழை அன்னையெனக் கொண்டாடுகிறார் பாரதி.

"தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகிறது.

அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகிறாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; "திரிப்பளிக்கே'னாகத் திரிந்துவிட்டாய்!"

இப்படி, திருவல்லிக்கேணியின் தொன்மையோடு தொடங்குகிறவர், தமிழ் அடைந்திருந்த நிலைக்கு வருந்துகிறார். அதோடு நிற்கவில்லை. சுதந்திர தாகத்தை மக்கள் மனதில் விதைக்கிறார். சுதந்திர உணர்வு பற்றிப் பேசுமிடத்தும் கூடியிருந்தோரைப் பார்த்து அறப்பெருங்கடலே என்று அழைக்கிறார்.

அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது.

வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத்தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம்; ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை விரட்டியே தீரும்!

சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே

துஞ்சிடோம்-இனி அஞ்சிடோம்

பாரதியின் உரை மண்ணின் மீதும் பின்பற்றி வந்த அறத்தின் மீதும் கொண்டிருந்த அன்பைப் புலப்படுத்துகிறது. அறிஞர் அண்ணாவின் கூற்றும் இதில் ஒத்திருக்கிறது.

ரா.பி. சேதுப்பிள்ளை தமிழின்பம் நூலில் "பாரதியார் பாட்டின்பம்' என்ற தலைப்பில் செந்தமிழ் நாடு, முப்பெரும் கவிஞர், கலையின் விளக்கம், பண்டாரப் பாட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து என பாரதியின் கவிதைகள் குறித்து 5 கட்டுரைகள் தந்திருக்கிறார். அதிலே பாரதி குறித்து எழுதியிருக்கும் கருத்துகளை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே'

என்று கவிஞர் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகிறது. தாயின் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகிறது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்துக்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத்தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே அன்றோ?

இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் போது, அந்தத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்போது வீரம் கிளம்புகிறது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய்நாடு என்று நினைக்கும் போது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு என்று கருதும்போது, ஆண்மையால் வீரம் பிறக்கும். இவ் வுண்மையை உணர்த்தக் கருதிய பாரதியார், முதலில் தாயன்பை அமைத்து, பின்பு தந்தையின் வீரத்தைப் பேசும் முறை அறிந்து போற்றுதற்குரியதாகும்.

பாரதியார், தமிழ் மரபைப் போற்றிய விதத்தினைப் பாராட்டுகிற பான்மையை நமது இளைய தலைமுறை அறிந்துகொள்ள பாடத்திட்டத்தில் அது இடம்பெற வேண்டும். அரசுகள் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிப் பருவத்தில் கற்பவை மனதில் எளிதிலும் ஆழமாகவும் பதியும். உலகுக்குத் தமிழை எடுத்துச் செல்லவும், உலக மொழிகளில் இடம்பெற்றிருக்கும் நல்ல கருத்துக்களைத் தமிழுக்குக் கொண்டுவரவும் நல்லறிஞர் சாத்திரங்களை மொழிபெயர்க்க வேண்டும் என்ற பாரதிக்கு அதுவே நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.

பாரதியை விமர்சனம் செய்வதற்கும் தகுதி வேண்டும். அவரது எழுத்துகளில் தோய்ந்துள்ள கவித்துவம் தாண்டி அவை இந்தத் தமிழ்நாட்டுக்கும் பாரதத்துக்கும் எத்தகைய பொக்கிஷமாக இருக்கின்றன என்பதை உணர பாரதியின் படைப்புகளை முழுமையாகப் படித்து உணர வேண்டும்.

இன்றைக்கு நாம் நம்பும் சித்தாந்தத்துக்குள் புகுத்த முடியவில்லை என்பதற்காக இந்த மண்ணில் தோன்றிய மாமனிதர்களையும் அவர்தம் சொற்களையும் புறக்கணிக்க முடியாது. சித்தாந்தங்கள் காலத்துக்கேற்ப மாற்றம் காணலாம். ஆனால், தேசத்தின் மீதான பக்தி எந்த நாளிலும் மாறாது, மாறக் கூடாது.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ்த் தேசியத்தை ஏற்றவர். அவரைப்போல பாரதியை வேறு யார் கொண்டாட முடியும்? தன்னையே பாரதிக்கு அடிமை என பறைசாற்றிக்கொண்டு பாரதிதாசன் என தனது அடையாளத்தை அமைத்துக் கொண்டவர். அவர் பாரதியை முழுமையாக அறிந்திருந்தால் அவரைக் கொண்டாடியிருக்க மாட்டார் என்று விமர்சிக்கிறார்கள்.

இது பாரதிக்கு மட்டுமல்ல, அவரை பல ஆண்டுகள் உடனிருந்து பார்த்துப் பழகி அவரது இயல்பை, சிந்தனையை, விருப்பத்தை, ஞானத்தைக் கண்டு வியந்து அவரை ஏற்ற பாரதிதாசனுக்கும் செய்யும் அநீதியாகும்.

"குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்று சமூகநீதி கண்ட பெரும் உள்ளம் கொண்டவரை ஜாதியின் பெயரால் குறிப்பிடுவதும் விமர்சிப்பதும் பாரதிக்குக் குறைவாகாது; அது நமது அறியாமையை வெளிப்படுத்திக் கொள்வதாகும்.

பாரதியின் உயர்ந்த நோக்கங்களை இளைய தலைமுறை அறியாமல் இருப்பதோ குறைவாக நினைப்பதோ அவர்கள் பிழை அல்ல, "நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழ் அறிஞர்களுக்கும் பாரதி அன்பர்களுக்கும் இருக்கிறது.

பாரதி அன்பர்களே, சமத்துவ சமூகம் மலரவும், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படவும் அரசியல் தாண்டி தேசத்தின் மீது இளைஞர்கள் பற்றுக் கொள்ளவும் பாரதியின் தேச பக்தியை, அறம் சார்ந்த பார்வையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல "சென்றிடுவீர் எட்டுத்திக்கும்' என்பதே வேண்டுகோள்.

கட்டுரையாளர்:

ஊடகவியலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com