அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்டபோது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
Updated on
3 min read

அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்டபோது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!

ஓரிரு வாரங்கள் படம் வெளியாவது தள்ளிப் போகுமே ஒழிய அதனால் கேடு ஒன்றுமில்லை! அந்தப் படம் சக்கையாக இருந்தாலொழிய, தணிக்கைக் குழு அந்தப் படத்தை ஓடவிடாமல் தடுத்து விட முடியாது!

தணிக்கைக் குழு என ஒன்று எந்தக் காலத்திலும் இருப்பதால், அதை மனத்தில் கொண்டுதான் படம் எடுக்க முடியும்!

அந்தப் படம் அடுத்த நிலை ஆய்வுக்காக ஏன் நிறுத்திவைக்கப்பட்டது என்று புரியாமலேயே, இசுடாலின் நடிகர் விசய்க்கு நேரக் கூடாதது நேர்ந்துவிட்டது போலவும், மைய அரசு மாற்றாரை வீழ்த்துவதற்கு சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை எனப் பல ஆயுதங்களை வைத்திருப்பதில், இப்போது தணிக்கைக் குழுவும் சேர்ந்திருக்கிறது என்று விசயின் மீது பரிவு மொழிகளைச் சொரிந்திருக்கிறார்! ஆடுகள் நனைகின்றன என்று ஓநாய்கள் அழுகின்றன!

இதுபோன்ற சலிப்புகளும், எரிச்சல்களும் முதலமைச்சர் தொடங்கி எளிய மனிதன் வரை எல்லாருக்கும் ஏற்படுபவைதான்!

மாநில அரசின் கீழ் தலைமைப் பதவியைப் பெறும் டிஜிபியால் குற்றம் தெளிவாகக் கண்டறியப்பட்ட நிலையில்கூட வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றால், "வழுவில்லாச் செயல்பாட்டுக்கு உரியதாக நம்முடைய அரசியல் சாசன உருவாக்கம் இல்லை என்பதுதான் பொருள்!

அறிவு குறைந்த திருடர்கள் சங்கிலி அறுக்கவும், வீடேறிக் குதிக்கவும் போகிறார்கள்! சாமர்த்தியத்தில், சூழ்ச்சியில் கூடிய திருடர்கள் அரசியல்வாதியாகி அமைச்சர்களாகி விடுகிறார்கள்!

அந்தத் திருடர்கள் சட்டத்தின் பிடியில் மாட்டுகிறார்கள்! இந்தத் திருடர்கள் கையில்தான் சட்டமே இருக்கிறது!

மக்களுக்குத் தெளிவை உண்டாக்குவது அரசியல் கட்சிகளின் கடமை! மக்கள் சராசரி வாழ்க்கையில், பாடுகளோடு வாழ்ந்து களைத்துப் போகிறவர்கள்!

குடியாட்சியின் சிறப்பே எதிர் அரசியலுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம்தான்!

ஆனால் நண்டு, சிண்டு உட்படப் பத்துப் பன்னிரண்டு கட்சிகள் ஆளும் கட்சிக்குக் கூட்டணி என்னும் நிலையில், "ஆயுள் கைதிகளாக' மாறிவிடுகிறார்களே!

சவாரி முடிந்தால் குதிரை, இலாயத்திற்குப் போக வேண்டும்! தேர்தல் முடிந்தால் கூட்டணிக் கட்சிகள் தன் கட்சி அரசியலுக்குத் திரும்ப வேண்டும்!

தங்களின் தனி அரசியலையும், தனிக் கொள்கையையும் மறந்து ஆளுங்கட்சிக்குப் "புறம் புறம் திரிகின்ற காரணத்தால்' அந்தக் கட்சிகள் காலத்தால், மரமரத்துப் போய்விடுகின்றன! மேலும், ஒரு விழுக்காடு இரண்டு விழுக்காடு என்று அவர்களின் வாக்கு வங்கிகள் தேய்ந்துவிடுகின்றன.

கூட்டணி முறையைக் கண்டறிந்து சொன்ன இராசாசி, அது தேர்தல் காலத்துக்கு மட்டும் உரியதாகவும், இடப் பகிர்வை மட்டும் நோக்கமாகக் கொண்டதாகவும் சொன்னாரே ஒழிய, "கூட்டணி தருமம்' என்று எதையுமே உருவாக்கவில்லை!

மூன்றாவது மாதத்தில், "அண்ணாவோடு என்னுடைய தேனிலவு முடிந்தது' என்று எதிர் அரசியலில் ஈடுபட்டார்!

தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் ஆளுங் கட்சிக்கு முதுகு தேய்த்து விடுவதற்குத் தனிக் கொடி எதற்கு?

1952-இல் காங்கிரசுக்கு மாற்றுக்கட்சியாக இருந்த பொதுவுடைமைக் கட்சி, இன்று திமுகவுக்கு ஒரு துணைக் கட்சியாக சுருங்கிவிட்டது! தனி அரசியலை விட்டு விட்டதே காரணம்!

பிற கட்சிகளின் அரசியல் எப்படி இருந்தாலும், அதிகார வர்க்கத்தை நம்முடைய அரசியல் சாசனம் ஆட்சியாளர்களுக்கு இணையான இடத்தில்தான் வைத்திருக்கிறது!

குடியாட்சியின் ஓர் உடன்பிறந்த குறைபாடு சாதி, மதம் எனப் பல போக்குகள் இருப்பதாலும், பணம் சக்தி வாய்ந்ததாக இருப்பதாலும் மிக மட்டமானவர்கள் எளிதாக ஆட்சிக் கட்டிலில் ஏறிவிடுவார்கள்!

நேரு, படேல், இராசாசி, காமராசர் போன்ற உலகத் தரத்துக்கான ஆட்சிகளும், சிந்தனைகளும், நேர்மையும் இதற்கு விதிவிலக்கு!

கொள்கை மட்டுமே ஆளுங் கட்சியின் பொறுப்பே தவிர அவற்றிற்கான செயல்கள், திட்டங்கள், நிருவாகம் அனைத்துக்குமே ஐஏஎஸ் அதிகார வர்க்கமே பொறுப்பு!

வேலையை விட்டு ஐஏஎஸ் அதிகாரிகளை நீக்க முடியாது என்னும் உத்தரவாதத்தை அரசியல் சட்டம் தந்திருப்பதன் நோக்கமே, அவர்கள் அரசுக்கு மிதியடி துடைக்கின்றவர்களாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான்!

அரசியல் சாசனம் தந்த வேலைப் பாதுகாப்புக்கிடையே, ஏவல் கேட்கின்ற நிலைக்கு ஐஏஎஸ் அதிகார வர்க்கம் ஆளாகிவிட்டதைத்தான் இது காட்டுகிறது! டபேதார் நிலைக்கு கலெக்டர் இறங்கிவிட்டால், சாசனப் பாதுகாப்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதற்கு?

இந்தியக் குடியாட்சி முறை இற்றுப் போய்க் கொண்டிருப்பதற்குக் காரணம் தங்களின் பெருமையை உணராமல், "தன்னை விற்றுக்கொள் தக்க துடைத்து' என்று குறள் கூறும் நிலைக்கு அதிகாரிகள் வர்க்கம் ஆளாகிவிடுவதுதான்!

ஓர் அரசில் ஒருவர் அமைச்சராக இருந்து எடுக்கும் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவது, அதற்கான திட்டங்களைத் தயார் செய்வது என்று எல்லாமே அந்தத் துறையின் செயலர்தான்!

பி.ஏ.சி. எனப்படும் பப்ளிக் அக்கௌண்ட் கமிட்டி! அந்தத் துறையின் செயலரைத்தான் எந்தத் தப்புக்கும் அழைத்து விசாரிக்கும்!

ஆகவே, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அதனால் ஏற்படும் இழப்புகள், அந்தத் திட்டத்தின் பயனின்மை, இவற்றை எல்லாம் கடுமையாகச் சுட்டிக் காட்டிக் கோப்பில் எழுதி, அதை மந்திரிக்கு அனுப்பும் உரிமை செயலருக்கு உண்டு! அதற்கு மேல் பெரும்பான்மையை வைத்திருக்கும் மந்திரி செயல்பட முடியும் என்பது வேறு!

தனியொருவன் வீட்டில் திருடினால், குய்யோ முறையோ என்று கத்துவார்கள்! ஊர்ப்பணம் என்றால் உறைக்காது.

எல்லாருக்கும் சொந்தம் என்றால், யாருக்கும் சொந்தமில்லை!

25 வயதான யாரும் ஆட்சியாளராக வரலாம் என்பதைக் குடியாட்சி அனுமதிக்கும்போது, ஆட்சியாளராக வருவதற்குத் தராதரம் எதுவும் விதிக்கப்படாத போது, தவறானவர்கள் ஆட்சிக்கு வரும்போது, தங்கள் அதிகாரத்தைக் கொண்டு சட்டம் செயல்படாமல் முடக்கிவிடுகிற காரணத்தால், சட்டத்தின் ஆட்சி என்பது கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது! சாசனம் உருவாக்கப்பட்ட காலத்தில் இது கருத்தில் கொள்ளப்படவில்லை!

மேலும் கட்சியின் கட்டுமானம், தேர்தல் வெற்றிக்கு அடிப்படைக் காரணம்!

கொள்ளையின் பங்கு கட்சியில் அவரவரின் தரத்திற்கேற்பப் பங்கிடப்படுகிறது என்பதால், கட்டுமானம் குலைவதில்லை!

போலீசுக்காரனே திருடனாவான் என்பதை அரசியல் சாசனம் கற்பனை செய்யவில்லை! ஆகவே, இதற்கு checks and balances இல்லை. நீதி அமைப்பு வழுவழுத்தது. எந்த நீதிக்கும் முப்பதாண்டு வேண்டும்! ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடிக்கான, காங்கிரசு ஆட்சிக்கே முற்றுப்புள்ளி வைத்த 2 ஜி வழக்கு இன்னும் இரண்டாவது நீதிமன்றத்தையே தாண்டவில்லையே!

ஊழல்வாதிகளே மீண்டும் ஆட்சிக்கு வர முடிவதற்குப் பல்வேறு காரணங்கள்! நம்முடைய அரசியல் சாசனத்தின் அடிப்படைத் தவறு இருபத்தைந்து வயதான யாரும் தேர்தலில் நிற்கலாம் என்பது!

நேரியவனா, கூரிய எதிர்நோக்குடையவனா, நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பார்வையுடையவனா என்றெல்லாம் பாகுபடுத்தி அறியும் பொறுப்பை வாக்காளனிடம் நம்முடைய அரசியல் சாசனம் விட்டுவிட்டது!

நம்முடைய வாக்காளர்களின் தேர்வுதான் இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள்!

சோழர்கள் ஆட்சியில் அடிமட்டக் கிராம நிலையில் குடியாட்சி முறை இருந்தது!

யோக்கியனா?, அயோக்கியனா? யாரைத் தேர்வு செய்வது என்னும் பொறுப்பை வாக்காளனிடம் விடாமல், அயோக்கியன் தேர்தல் வட்டத்திற்குள் வராதபடி, சோழ ஆட்சியில் காப்புச் செய்யப்பட்டது!

குற்ற வழக்குத் தொடர்புடையவன், நேரியவன் அல்லாதவன் உள்ளே வரமுடியாது என்பதால், நம் காலச் சிக்கல்கள் சோழ ஆட்சி முறைக் குடியாட்சியில் இல்லை! சோழ முறை எவ்வளவோ சிறந்தது!

கிரேக்கம்தான் குடியாட்சியின் தொட்டில்! அதனுடைய வளர்ச்சி ரோமாபுரியின் செனட்! அதனுடைய வளர்ச்சி ஐரோப்பிய அரசியல் சாசன வழி ஆட்சி முறை! அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட அரசியல் சாசன முறை அளித்த கொடைதான் இன்றைய திராவிட மாடல்!

சுருட்டுகிறவன் கைக்கே ஆட்சி போகாமல் தடுக்க வழியில்லை;

அவனை அவனுடைய ஆயுள் காலத்திற்குள் தண்டிக்கவும் வழியில்லை;

குற்றங்கள் இழைத்துச் சிறைக்குப் போனவன் பிணையில் வந்து மந்திரி ஆகும் அசிங்கத்தையும் தடுக்க வழியில்லை!

திராவிட மாடல் பெருமைகள் இவைதாம் என்பது கிடக்கட்டும்!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை!

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com