

ஐக்கிய நாடுகள் சபையில் 2015-ஆம் ஆண்டு ஒரு முக்கியமான திட்டம் உருவாக்கப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த உலகில் நிலையான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உலகத்துக்கான பதினேழு நிலையான வளர்ச்சி இலக்குகள் (சஸ்டெயினபிள் டெவலப்மென்ட் கோல்ஸ் - எஸ்.டி.ஜி.) உருவாக்கப்பட்டன. இந்த பூமியும், பூமியிலிருக்கும் எல்லா உயிரினங்களும் செழித்திருக்கவும், அமைதியாக வாழவும் இந்த இலக்குகள் உருவாக்கப்பட்டன.
இதில் முக்கியமானதாகக் கருதப்படும் ஐந்தாவது இலக்கான பாலின சமத்துவம் (ஆண் - பெண் சமத்துவம்) மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் குழந்தை திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா உறுதியளித்திருந்தது. பன்முகத்தன்மை கொண்ட, 146 கோடி மக்கள் வாழும் இந்தியாவில், அந்தந்த மாநிலங்களில் காணப்படும் சமூக, அரசியல், பொருளாதார கலாசார விழுமியங்களுக்கேற்ப மக்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம், பொருளாதார மேம்பாடு மாறுபட்டதாகவும், சீரற்றதாகவும் உள்ளது. எனினும், இந்த முயற்சியில், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
"பெண்கள் மணப்பெண்கள் அல்ல' என்ற உலக நாடுகளின் ஒருமித்த குரல், குழந்தைத் திருமணங்களைத் தடுக்காவிட்டால், அது ஐக்கிய நாடுகள் சபையின் மற்ற நிலையான வளர்ச்சி இலக்குகளையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளது. "குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையாவிட்டால், வறுமை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, பாலின சமத்துவம், பொருளாதார வளர்ச்சி, காலநிலை நடவடிக்கை, அமைதி மற்றும் நீதி போன்ற ஒன்பது இலக்குகளில் தொய்வு ஏற்படும்' என ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலக அளவில், 2023-ஆம் ஆண்டில், 64 கோடி பெண்கள் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து கொண்டதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) மதிப்பிட்டுள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் மட்டுமே என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா-வின் இலக்கை அடைய இந்தியா இன்னும் வெகுதொலைவு, இருபது மடங்கு வேகமாகப் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவில் நிலவும் பல்வேறு சமுதாயப் பிரச்னைகளில் ஒன்று குழந்தைத் திருமணம். குழந்தைத் திருமணங்களுக்கு முதன்மைக் காரணமாக சொல்லப்படுவது குடும்பத்தில் நிலவும் வறுமை, கல்வியின்மை, பெற்றோரின் பொறுப்பற்ற செயல்பாடுகள்- இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போதிய விழிப்புணர்வு, புரிதல் இன்மை ஆகியன காரணிகளாக சொல்லப்படுகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு குழந்தைத் திருமணமும் ஒரு காரணம்.
இந்தியாவில், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பிகார், திரிபுரா போன்ற மாநிலங்கள் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் சிலவாக இருந்தாலும், நாடு முழுவதும் அவ்வப்போது குழந்தைத் திருமண நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பின் (நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே) தரவின்படி, குழந்தைத் திருமணங்கள் 2005-2006-ஆம் ஆண்டில் 47.4 சதவீதமாக இருந்தது, 2019-2021-ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் கடந்த காலங்களைவிட தற்போது குறைந்து வந்தாலும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
"குழந்தைத் திருமணம்' என்பது, பெண் 18 வயதுக்குட்பட்டவராகவும், ஆண் 21 வயதுக்குட்பட்டவராகவும் இருந்து திருமணம் நடந்தால், அது "குழந்தைத் திருமணம்' எனச் சட்டம் வரையறை செய்கிறது. பாரதிய நியாய சன்ஹிதா, 2023-இன்படி, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012-இன் கீழ் (போக்ஸோ 2012) இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று நம் நாட்டின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
குழந்தைத் திருமண தடைச் சட்டம், 2006-இன்படி, குழந்தைத் திருமணத்தை முன்னின்று நடத்தியவர்கள், நிச்சயித்த நபர்கள், பங்கேற்ற உறவினர்கள், நண்பர்கள் குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படுவர். தவறு புரிந்தவர்களுக்கு, இரண்டு ஆண்டு ஜாமீனில் வெளியில் வர முடியாத கடுங்காவல் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒன்றோ அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். மேலும், குழந்தைத் திருமணம் ரத்து செய்யப்பட்டு, சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட மொத்தம் 3,563 வழக்குகளில், வெறும் 181 வழக்குகள் மட்டுமே விசாரணை முடிவில், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. தற்போதைய தீர்வு விகிதத்தில் நிலுவை வழக்குகளில் தீர்ப்பு வெளியாக 19 ஆண்டுகள் ஆகலாம் என்று குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13 முதல் 19 வயது வரையிலான பெண்கள் மகப்பேறு அடைவது பதின்ம மகப்பேறு என அழைக்கப்படுகிறது. இந்த வயதில் மகப்பேறு அடைவது மிகவும்
கவலை தரும் விஷயம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால், தாய்-சேய் உடல் நலன் பாதிக்கப்படும். சிறுமிகளின் கல்வி முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது. புத்தகப் பையை சுமக்க வேண்டிய சிறுமிகள், கருவைச் சுமக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதனால், சிறுமிகள் இளம் வயதில் அனுபவிக்க வேண்டிய மகிழ்ச்சியை இழந்து, சிறு வயதிலேயே குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள்.
பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்கு சிறுமிகள் தள்ளப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இழந்து இருள் சூழ்ந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மத்திய அரசு, "பால் விவா முக்த் பாரத் அபியான்' மூலம் நிகழாண்டுக்குள் குழந்தைத் திருமணத்தின் பரவலை 10 சதவீதம் குறைத்து 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தைத் திருமணம் இல்லாத நாடாக மாற்ற முயன்று வருகிறது. அண்மையில் அந்த இயக்கம், தனது முதலாமாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, குழந்தைத் திருமணம் இல்லாத நாட்டுக்கான 100 நாள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது. "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' பிரசாரமும் முன்னெடுக்கப்படுகிறது.
2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் "குழந்தை திருமணம்' இல்லாத மாவட்டமாக, சத்தீஸ்கரிலுள்ள பலோட் மாவட்டம் மாறி மைல்கல்லை எட்டியது. தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க, குழந்தைத் திருமண தடைச் சட்டம் குறித்து சமூக நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளைக் காக்க பல்வேறு நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. "முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்',
"புதுமைப் பெண் திட்டம்' போன்றவை மூலம் பெண் குழந்தைகளின் நலன்கள் காக்கப்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு அதிக அளவில் பிரசவம் நடப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூலை வரை, தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைவிட 56 சதவீதம் அதிகரித்துள்ளது. சிறுமிகள் கர்ப்பமாகி மருத்துவமனைக்கு வரும்போதுதான் சட்ட விரோதமாக குழந்தைத் திருமணம் நடந்திருப்பது தெரிய வருகிறது. கடந்த 2025-ஆண்டு ஏப்ரலில் "தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மற்றும் ஆராய்ச்சி' இதழில், 10 முதல் 19 வயதிலான பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அதிக அபாயங்களைச் சந்திப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் வேலூரில் மட்டும் 59 குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. அத்துடன் 18 வயதுக்குட்பட்ட 415 சிறுமிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது என அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது குழந்தைகளையும் உள்ளடக்கியது. இந்தக் கால குழந்தைகள் அளவற்ற அறிவும், ஆற்றலும், சக்தியும் உடையவர்களாக விளக்குப் போல ஒளியுடன் இருக்கிறார்கள். எனினும், குழந்தைத் திருமணம் என்பது சமுதாயத்தில் புரையோடிப் போன ஒரு நோய் போன்றது. சமூக மக்களிடையே ஏற்படும் விழிப்புணர்வு, ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலமே இந்த நோயைக் காணாமல் போகச் செய்ய முடியும். மலர் போன்ற மென்மைத் தன்மை கொண்ட பெண்கள், தனக்கு எதிராக நடத்தப்படும் கொடுமை
களையும், வேதனைகளையும் மிக அழகாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்கள். அன்றலர்ந்த மலர்களைப் போலத் தான் பெண்களும், வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொண்டு உலகில் மலர்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.