

சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான "பரிபாடல்' தை நீராடல் குறித்து சிறப்பாகப் பேசுகிறது. அதனால், எட்டுத் தொகையில் ஒன்றான அந்த நூலுக்குச் சிறப்புக் கொடுத்து, "ஓங்கு பரிபாடல்' என அழைக்கின்றனர். இளங்கோவடிகள் தை நீராடுதலுக்கு முதன்மை தருவதற்காகவே, இந்திர விழாவை அடுத்து, கடலாடு காதையை இடம் பெறச் செய்தார்.
"மகாலிங்கப் பெருமான்' வீற்றிருக்கின்ற திருவிடைமருதூரில் தைப்பூசம் இன்றைக்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதை, "வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்து ஈண்டிபொருந்திய தைப்பூசமாடி' எனப் பாடிச் சென்றுள்ளார் திருஞானசம்பந்தர். அவரைப் போலவே, திருநாவுக்கரசரும், "ஈசன் எம்பெருமான் இடை மருதினிலே (திருவிடைமருதூர்)பூசம் நாள் புகுதும் புனலாடவே' எனத் தைப்பூசத்தைச் சிறப்பித்துப் பாடுகின்றார்.
தைப்பூசத்தின் சிறப்பு என்னவென்றால், அந்நாள் சிவன் கோயில், பெருமாள் கோயில், முருகன் கோயில், மாரியம்மன் கோயில் ஆகிய நான்கு திருத்தலங்களிலும் கொண்டாடப்படுகிறது என்பதாகும்.
திரு மயிலாப்பூரில் வெகு சிறப்பாகத் தைப்பூசம் கொண்டாடப்படுவதைத் திருஞானசம்பந்தர், "நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' என்றும், "பொருந்திய தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த' என்றும் பாடியிருக்கிறார்.
தென் மாவட்டங்களில் தைப்பூசத் திருவிழா, இன்றும் நீர்த்துறைகளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் ஆற்றங்கரைகளில் தைப்பூச மண்டபங்கள் கட்டப்பட்டிருப்பதும், தைப்பூச விழாவின் செல்வாக்கினைக் குறிக்கும் சான்றுகளாகும்.
தைப்பூசத்தன்றுதான், உலகம் தோன்றியதாக ஓர் ஐதீகம் உண்டு. சிவபெருமான் தமது உமாதேவியுடன் சிதம்பரம் ஞான சபையில் ஆனந்த நடனம் ஆடித் தரிசனம் தந்த புனிதநாள், தைப்பூசம் ஆகும்.
தைப்பூசத்தில்தான் யாழ்ப்பாண மக்கள் "புதிர்' எடுப்பர். அங்கும் தைப்பூசந்தான் முருகனுக்குரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தினத்தில் அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்வது பெண்கள் கடமை! ஆண்கள் நெல்லறுக்கும் கதிர் அரிவாள், தேங்காய், கற்பூரம் ஏந்தி, வயலுக்குச் சென்று, கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி, நெற்கதிர்களை அறுத்து வீட்டுக்குக் கொண்டு வந்து, பொங்கல் வைப்பர்.
மலேசியாவில் தைப்பூசம் தேசியத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அந்த நாட்டின் இசுலாமிய மன்னர், பத்துமலைக் கோயிலுக்கு தரிசனத்துக்காக வருவார். அன்று அரசே முழு விடுமுறை நாளாக அறிவிக்கிறது. இந்தியர்களுடன், சீனர்களும், அந்த மண்ணின் மைந்தர்களும் காவடி எடுத்து, அலகு குத்திக் கொண்டு பேதம் எதுவும் இல்லாமல், தைப்பூசத்தைக் கொண்டாடுவர்.
மலேசியாவில் பத்துமலைமுருகன் கோயில் தமிழர்களிடையே புகழ்பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்துமலை, கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது. இது ஒரு மலைக்கோயில். சுண்ணாம்புப் பாறைகளாலான மலை இது. வரிசையாக அமைந்த குகை அல்லது குகைக் கோயில்களை இங்கு காணலாம்.
மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து மலை கோயில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிலிருந்து, பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். இதற்கு எட்டு மணி நேரமாகும்.
நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோயிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் மாநகர் அருகில் உள்ள தண்ணீர் மலைக் கோயிலில், பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலைக் கோயில், இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமன்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இந்தத் தைப் பூசத் திருநாள் மூன்று நாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளைப் பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசியாவில் ஈப்போ அருகில் "குனோங் சீரோ' என்னுமிடத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்துக்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோயிலில் வேல்தான் மூலவர். இவருக்குப் பாலபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோயில் வரை, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மாலை தேர்த் திரும்ப முருகன் கோயிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாகத் தேரை இழுத்துச் செல்கிறார்கள். அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவோர், பூசத்தன்று, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள்கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
சுப்பிரமணியருக்கு மோரீஷஸில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்கள் இங்கும் உண்டு. இரேயூனியன் - ரீயூனியனில் தைப்பூசம் காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.
தென்னாப்பிரிக்கா தைப்பூசம், தைப்பூசத் திருவிழா காவடி விழா டர்பன் (கிளேர்வுட் ஸ்ரீ சிவா சுப்ரமணியர் கோயில்) மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரங்களில் கொண்டாடப்படுகிறது. பிஜியில், "நாடி' என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா சுப்ரமண்ய சுவாமி கோயிலில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
சிவபெருமான் அனைத்து வரங்களையும் சூரபன்மனுக்கு வழங்கிவிட்டதால், சூரனை வதைக்க முடியவில்லை. சிவனுக்குரிய ஐந்து முகங்களோடு, ஆறாவது முகத்தையும் தோற்றுவித்ததால், சிவாலயங்களிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கையிலுள்ள கேதீஸ்வரத்தில் வெகு சிறப்பாகத் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
எண்ணரிய திறல்பெற்ற சூரனையும், தாருகனையும் வதைப்பதற்குப் பார்வதி தேவி வேலாயுதத்தைக் கொடுத்ததால் மாரியம்மன் கோயில்களிலும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கையிலுள்ள மாத்தளை மாரியம்மன் கோயிலில் தமிழர்களும் சிங்களப் பெண்களும் சேர்ந்தே தைப்பூசத்தைக் கொண்டாடுகின்றனர்.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி முருகன் கோயிலில், புலம்பெயர்ந்த தமிழர்களும், அந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களும் கலந்தே தைப்பூசத்தைச் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
வைணவத்தில் "சேனைத்தலைவர்' என்பவர் பெருமாளுக்கு முப்படைத் தளபதி. அந்தச் சேனைத்தலைவர் எனும் வைஸ்ணவராதி, தைப்பூசத்தன்று அறுவடை செய்த நெற்கதிர்களைப் பெருமாள் முன் படைத்துத் தைப்பூசத்தைக் கொண்டாடி வருகின்றனர். திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோயிலில் (வைணவத்தலம்) தைப்பூசம் வழிபாட்டின் உச்சமாகக் கொண்டாடப்படுகிறது.
வள்ளலார் சித்தி அடைவதற்கு முதல்நாள், தைப்பூசத்தின் சிறப்பை எடுத்து மொழிந்ததால், வள்ளலாரின் திருமடங்கள் அனைத்திலும் பூச நட்சத்திரம் வெகுவாகப் போற்றி வழிபடப்படுகிறது.
முருகப்பெருமான் ஞானப்பழம் கிடைக்காமல் வெகுண்டு, கயிலாயத்திலிருந்து பழநிமலைக்கு வந்து கொலுவீற்றிருப்பதால், பழநிமலை வட்டாரத்தில் வாழும் பக்தர்கள், தைப்பூசத்தை ஞானத் திரு நாளாகக் கருதி, வழிபட்டு வருகின்றனர்.
சங்க காலத்திலேயே தைந்நீராடல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டமைக்கு, "தாயருகே நின்று தவத் தைநீராடுதல்நீயறிதி வையை நதி' என்று பரிபாடல் சான்று தருகிறது.
ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை நோன்பு, மார்கழித் திங்கள் முதல்நாளில் தொடங்கவில்லை; மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளிலேயே தொடங்கி, தை மாதம் நிறைமதி நாள் வரை கொண்டாடப்படுகிறது. எனவே, பூசத்தில் தொடங்கிப் பூசத்தில் நிறைவடைகிறது எனலாம்.
"அருட்பெருஞ்சோதி - தனிப்பெருங்கருணை எனும் மகாமந்திரத்தை உலகுக்குத் தந்த வள்ளல் பெருமான் இராமலிங்க சுவாமிகள், ஆன்மிக உண்மையை உலகுக்கு உணர்த்தி, ஒரு தை மாத வெள்ளிக்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தன்றுதான், பூதவுடல் அடங்கி, ஒளியுடம்பு எய்தினார். இதைக் குறிக்கும் விதமாக, அவர்
சித்தியடைந்த வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கான அன்பர்கள் கூடி,வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்."உண்மை அன்பால் கடவுளை வழிபாடு செய்து, கடவுள் ஒளியை நமக்குள் காண வேண்டும்' என்பதே, வள்ளலார் உரைத்த சத்திய வாக்கு. தெய்வத்திருநாளாகத் தோன்றிய தைப்பூசம், இன்று பல சமயத்தவரையும் பல மொழியினரையும் இணைக்கும் சர்வதேசத் திருநாளாக மலர்ந்திருக்கிறது.
நாளை (பிப்.1) தைப்பூசம்
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.