முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

நிதி ஆணையப் பகிர்வில் மாற்றம்

ஜிடிபி வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்பையும் அடிப்படையாக வைத்து நிதிப் பகிர்வை மேற்கொள்ளும் புதிய அளவுகோலை 16-ஆவது நிதி ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

நிதி ஆணையம்

Updated On :7 ஜூலை 2026, 5:30 am IST

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வரிகளையும் உதவி மானியங்களையும் மாநிலங்களுக்குப் பிரித்து அளிக்க வேண்டும். டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 16-ஆவது நிதி ஆணையம் (2026 -31) நிகர வரி வருமானத்தில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்துள்ளது. மேலும், மாநிலங்களுக்கான பங்கைத் தீர்மானிக்கும் காரணிகளையும் பரிந்துரைத்துள்ளது.

ஓராண்டில் மாநிலத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் - சேவைகளின் மொத்த பண மதிப்பை மாநிலத்தின் மக்கள்தொகையால் வகுத்துக் கிடைப்பது தனிநபர் ஜிஎஸ்டிபி (தனி நபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி) ஆகும்.

2018-19 முதல் 2023-24 வரை (கொவைட் ஆண்டு 2020-21 தவிர்த்து) ஐந்து ஆண்டுகளுக்கான ஒவ்வொரு மாநிலத்தின் தனிநபர் ஜிஎஸ்டிபி சராசரி எடுக்கப்படும். அந்த ஐந்து ஆண்டு சராசரியில் தனி நபர் ஜிஎஸ்டிபி அதிகமாக உள்ள முதல் மூன்று பெரிய மாநிலங்கள் தேர்வு செய்யப்படும். இந்த மூன்று மாநில சராசரிகளின் சராசரி (மூன்று மாநிலங்களின் தனி நபர் ஜிஎஸ்டிபி சராசரிகள் கூட்டப்பட்டு அதை மூன்றால் வகுத்துக் கிடைப்பது) எடுக்கப்பட்டு மற்ற மாநிலங்களின் தனிநபர் ஜிஎஸ்டிபி சராசரியுடன் ஒப்பிடப்பட்டு வருமான இடைவெளி கணக்கிடப்படும்.

வருமான இடைவெளி வித்தியாசம் அதிகமாக இருக்கும் மாநிலங்களுக்கு அதிக பங்கும், குறைந்த இடைவெளியில் உள்ள மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் குறைவான பங்கும் வழங்கப்படும். இந்த அளவுகோலுக்கு ஏற்கெனவே இருந்த 42.5% வெயிட்டேஜை 16-ஆவது நிதி ஆணையமும் தற்போதைய நிதிப் பகிர்வில் தொடர பரிந்துரைத்துள்ளது.

மக்கள் சேவைகளுக்கான செலவுகளுக்கு 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு வரி வருவாய்ப் பகிர்வில் 17.5% வெயிட்டேஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு கூடுதல் ஆதாயம் கிடைக்கும். தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை குறைவாக இருப்பதால் வரி வருவாய் பகிர்வுப் பலன்கள் குறைவாகவே இருக்கும்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் 1971 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வில் 10% வெயிட்டேஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காடுகள், வனச் சூழலியல் வளர்ச்சி மேம்பாட்டுக்காக நிதிப் பகிர்வில் 10% வெயிட்டேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த காடுகள் பரப்பளவில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கு மற்றும் 2015 -2023-ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரித்துள்ள காடுகளின் பரப்பளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 80:20 விகிதத்தில் நிதிப் பகிர்வு தீர்மானிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் பரப்பளவு எல்லைகளின் அடிப்படையில் நிதிப் பகிர்வதற்கு 10% வெயிட்டேஜ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பரப்பளவில் பெரிதாக உள்ள மாநிலங்களுக்கு ஏற்படும் பராமரிப்பு, நிர்வாகச் செலவுகளுக்காக நிதிப் பகிர்வில் கூடுதல் பங்கு வழங்கப்படும்.

ஜிடிபி வளர்ச்சிக்கு ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்பையும் அடிப்படையாக வைத்து நிதிப் பகிர்வை மேற்கொள்ளும் புதிய அளவுகோலை 16-ஆவது நிதி ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நிதிப் பகிர்வில் இதற்கு 10% வெயிட்டேஜ் வழங்கப்பட்டுள்ளது. ஜிடிபி வளர்ச்சிக்கு அதிகமாகப் பங்களிக்கும் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்கள் பலனடையும்.

அதே நேரத்தில் வளர்ச்சி நிதி அதிகம் தேவைப்படும் பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் இந்தப் பரிந்துரையால் குறைவான பலன்களையே பெறும். வளர்ந்த மாநிலங்களை மேலும் ஊக்கப்படுத்துதல், மாநிலங்களுக்கிடையே வளர்ச்சிக்கான போட்டிகளை உருவாக்குதல் ஆகியவை இந்தப் புதிய அளவுகோலின் நோக்கங்கள் ஆகும்.

எல்லா மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையையும் கூட்டி ஜிடிபியில் 0.3% மட்டுமே என்ற சராசரி கணக்கைக் காட்டி, மாநிலங்களுக்கான மானியங்களை நிதி ஆணையம் மறுப்பது, மாநிலங்களின் உண்மையான நிதிப் பற்றாக்குறையையும், பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களின் கல்வி, வீடு, மருத்துவ உதவித் திட்டங்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.

செஸ் மற்றும் சர்சார்ஜ்களை மத்திய அரசு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால், மாநிலங்களுடன் பகிரக்கூடிய நிகர வரி வருவாய் குறைகிறது.மொத்த வருவாயில் செஸ் மற்றும் சர்சார்ஜ்களின் பங்கு 28%. இது மாநிலங்களுக்கு பிரித்தளிக்கப்பட மாட்டாது. கல்வி, சுகாதாரம் மாநிலப் பட்டியலில் உள்ள துறைகள். ஆனால், அதற்கான செஸ்ஸை மத்திய அரசு வைத்துக்கொண்டு, மாநிலங்களுக்கு "திட்ட நிதி' என்ற பெயரில் நிபந்தனையுடன் தருகிறது.

செஸ் மற்றும் சர்சார்ஜ்கள் வசூலிப்பதில் வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் பட்ஜெட்டில் 2026-27-ஆம் ஆண்டில் மாநிலங்களின் பங்காக 41 சதவீதத்துக்குப் பதிலாக 32.7% மட்டுமே கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறையை ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த வலியுறுத்துவது மாநிலங்களின் வளர்ச்சிக்கான செலவினங்களைப் பாதிக்கும்.

சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கிடைக்கும் உதவிகள் குறையாமல் பார்த்துக் கொள்வதுடன், வழங்கப்படும் நிதியை பின்தங்கிய மாநிலங்கள் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேறி இருக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.