- முனைவர் இளங்கோ கட்டிமுத்து
வானம் எல்லை அல்ல; அது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய சாதனைகளில் முக்கியமானது சந்திரயான்-3 திட்டமாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2023-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்கும் இந்தத் திட்டம் உலக விண்வெளி வரலாற்றில் இந்தியாவுக்கு தனித்துவமான இடத்தைப் பெற்றுத் தந்தது. 1999-இல் 'இந்திய அறிவியல் அகாதெமி' மற்றும் 2000-இல் 'இந்திய விண்வெளிப் பயணச் சங்கம்' ஆகியவை முன்வைத்த பரிந்துரைகளைத் தொடர்ந்து, சாத்தியக்கூறு ஆய்வை இஸ்ரோ மற்றும் நாடு முழுவதிலும் உள்ள முன்னணி இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடங்கினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 விஞ்ஞானிகளைக் கொண்ட நிபுணர் குழுவால் இந்த ஆய்வு அறிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு, இந்தத் திட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்று அதைச் செயல்படுத்தும் பணிகளை இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.
ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமே விண்வெளி மற்றும் நிலவு ஆராய்ச்சியில் முன்னோடியாக இருந்து பல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தன. இந்த நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் முனைப்பில் இந்தியா திட்டங்களைச் செயல்படுத்த தொடங்கியது. அப்படி முதலில் தொடங்கப்பட்ட திட்டம் சந்திரயான். அதைத் தொடர்ந்து, 2003-ஆம் ஆண்டு நாட்டின் 56-ஆவது சுதந்திர தினத்தன்று அப்போதைய பிரதமர் வாஜ்பாய், நிலவை ஆய்வு செய்ய, நிலவுப் பயணத்தில் இந்தியாவின் முதல் முயற்சியாக 'சந்திரயான்' திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அறிவித்தார். 'சந்திரயான்' என்ற பெயர், சம்ஸ்கிருத மொழியில் 'நிலவு வாகனம்' என்று பொருள்படும் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
'சந்திரயான்-1' என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் நிலவு விண்வெளித் திட்டமாகும். இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி முயற்சி 2008-ஆம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-1 மூலம் தொடங்கியது. இது 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்திலிருந்து இஸ்ரோவால் சந்திரயான்-1 ஏவப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் நீர்மூலக் கூறுகள் இருப்பதைக் கண்டறிந்து உலக விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு 'சந்திரயான்-2' திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஆர்பிட்டர் வெற்றிகரமாகச் செயல்பட்ட போதிலும், விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இறுதித் தருணங்களில் தொடர்பை இழந்தது. அந்தத் தோல்வி இந்திய விஞ்ஞானிகளை மனம் தளரச் செய்யவில்லை. மாறாக, அதிலிருந்து பாடம் கற்று மேலும் வலிமையுடன் மீண்டும் முயற்சி செய்யும் உறுதியை உருவாக்கியது. அந்த உறுதியின் விளைவாகவே 'சந்திரயான்-3' உருவானது. 2023-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுதல் இந்திய மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் நிலவின் தென் துருவப் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதாகும்.
நிலவின் தென் துருவப் பகுதி உலக விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த பகுதியாகும். அங்கு சூரிய ஒளி எப்போதும் நேரடியாகப் படாத பள்ளங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் பனிக்கட்டிகளாக நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் குடியேற வேண்டுமானால், நீர் மற்றும் பிற வளங்கள் மிகவும் அவசியம். எனவே, தென் துருவத்தை ஆராய்வது எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
41 நாள்கள் பயணத்துக்குப் பிறகு, சந்திரயான்-3 தனது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கியது. விண்கலத்துடன் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தச் சாதனையின் மூலம் நிலவில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடாக இந்தியா மாறியது. நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய உலகின் முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்தது.
இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு விக்ரம் லேண்டர் முக்கியக் காரணமாக இருந்தது. சந்திரயான்-2-இல் ஏற்பட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் இதில் செய்யப்பட்டிருந்தன. அதாவது, நிலவின் வெப்பநிலையை விக்ரம் லேண்டர் அளந்தது. நில அதிர்வுகளை ஆய்வு செய்தது. நிலவின் மண் மற்றும் பிளாஸ்மா தொடர்பான தகவல்களைச் சேகரித்தது. பல்வேறு அறிவியல் கருவிகள் மூலம் தரவுகளை அனுப்பியது. விக்ரம் லேண்டரிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்
பரப்பில் பயணம் செய்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் மூலம் கந்தகம் (சல்பர்) இருப்பதை உறுதிப்படுத்தியது. அலுமினியம், கால்சியம், இரும்பு, சிலிக்கான் போன்ற தனிமங்களைக் கண்டறிந்தது. நிலவின் மண் அமைப்பைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்கியது. இந்த ஆய்வுகள் எதிர்கால நிலவு ஆராய்ச்சிகளுக்கு மதிப்புமிக்க பங்களிப்பாக அமைந்தன. இந்திய விண்வெளி சாதனைகளில் மற்றொரு மைல்கல்லான இந்த நிகழ்வை, நாட்டின் 140 கோடி மக்களும் நேரலையில் பார்த்து ஆனந்த கண்ணீருடன் பெருமிதம் அடைந்தனர்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தன. விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவின் சாதனையைப் பாராட்டின. இந்த வெற்றி இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய சக்தியாக உலகம் அங்கீகரிக்க வழிவகுத்தது. மொத்தம் ரூ. 600 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 திட்டத்தால் சந்திரனைத் தொட்டுள்ளோம். இந்திய விண்வெளி சாதனைகளின் மகுடம் இது.
சந்திரயான்-3 வெற்றி அறிவியல், கணிதம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆர்வம் அதிகரிக்க பெரிதும் உதவியது. நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியல் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சாதனை எடுத்துக்காட்டுகிறது. சந்திரயான்-3 வெற்றிக்குப் பிறகு, ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம், சந்திரயான்-4 (நிலவின் மாதிரிகளை கொண்டு வருதல்), சுக்ரயான் (வெள்ளி கிரக ஆய்வு), ஆதித்யா எல் 1 சூரிய ஆய்வு, ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம்,
மேம்பட்ட செயற்கைக்கோள் திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது. வரும் ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஏவுதலின் மூன்றாம் ஆண்டு நிறைவடையும் நாள் என்பது ஒரு விண்கலம் விண்ணில் புறப்பட்ட நாளை மட்டும் நினைவுகூர்வதல்ல. அது இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தேசிய பெருமையை நினைவூட்டும் நாளாகும். 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் 1962-இல் தொடங்கப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் முதல் ராக்கெட் செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் பாகங்கள் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டன. அதை உலக நாடுகள் கேலி செய்தன. தற்போது ராக்கெட் அனுப்புவது, சைக்கிளில் செல்வது போன்று மிகவும் சுலபமானது என்பதை நம் விஞ்ஞானிகள் உலக நாடுகளுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
சந்திரயான்-3 என்பது ஒரு விண்வெளித் திட்டம் மட்டுமல்ல; அது இந்தியாவின் தன்னம்பிக்கை, அறிவாற்றல் மற்றும் விடாமுயற்சியின் சின்னமாகும். அதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாளைக் கொண்டாடும் நாம், அந்த வெற்றியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு நன்றியையும் மரியாதையையும் செலுத்த வேண்டும்.
'நிலவை அடைந்தது ஒரு விண்கலம் அல்ல; இந்தியாவின் விடாமுயற்சியே'. நிலவை வென்ற இந்தியா, நாளை செவ்வாயையும் அதற்கு அப்பாற்பட்ட விண்வெளியையும் வெல்லும் திறன் கொண்ட நாடாக உயர்ந்து நிற்கிறது. சந்திரயான்-3 வெற்றி, இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு ஒளிவிளக்காக என்றும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். வானத்தை நோக்கிக் கனவு கண்ட தலைமுறை, நிலவைத் தொட்ட தலைமுறையாக மாறியது.
கட்டுரையாளர்: இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










