நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

தேர்வறைகளில் தேசத்தின் எதிர்காலம்!

'தேர்வு' என்ற அளவுகோல் தனது உண்மையான நோக்கத்தை இழந்து, எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறுகிய இலக்காக மாறிவிட்டதோ? என்பதைப் பற்றி...

News image

தேர்வறைகளில் தேசத்தின் எதிர்காலம்!

Updated On :13 ஜூலை 2026, 3:45 am IST

ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் உருவாகிறது; ஆனால், அதன் தரமும் திசையும் தேர்வறைகளில்தான் தீர்மானிக்கப்படுகின்றன. கல்வி என்பது தகவல்களை மனப்பாடம் செய்வதற்கான கருவி அல்ல; மனிதனைப் பொறுப்புணர்வும் நேர்மையும் கொண்ட ஆளுமையாக வடிவமைக்கும் செயல்முறையாகும். எனவே, தேர்வறையில் பெறப்படும் மதிப்பெண் மாணவரின் அறிவை மட்டுமல்ல, அவரது நேர்மையையும் குணநலனையும் பிரதிபலிக்கின்றன.

கற்றதை உள்வாங்கியுள்ளார்களா எனச் சுயபரிசோதனை செய்யவும், தகுதியை நிலைநிறுத்தவுமே தேர்வுகள் நடக்கின்றன. ஆனால், இன்றைய காலகட்டத்தில் 'தேர்வு' என்ற அளவுகோல் தனது உண்மையான நோக்கத்தை இழந்து, எப்படியாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற குறுகிய இலக்காக மாறிவிட்டதோ என்ற கவலை கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது. போட்டி மிகுந்த இன்றைய கல்விச் சூழலில், உயர் கல்வி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் எழும் குற்றச்சாட்டுகள், தேர்வு நேர்மையின் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. தேர்வுகளை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவது பெரும் நிர்வாகச் சவாலாக மாறியுள்ளது. வினாத்தாள் பாதுகாப்பு, ஆள்மாறாட்டத் தடுப்பு, மின்னணுச் சாதனங்களைக் கட்டுப்படுத்துதல் எனப் பல்வேறு பொறுப்புகளை தேர்வு நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்க வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தேர்வு அறைகளுக்கெனக் கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளன. விடைத்தாளில் கருணை மதிப்பெண் கோருவது, தேவையற்ற குறியீடுகளை இடுவது, சக மாணவர்களிடம் பேசுவது போன்றவற்றுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இது வெறும் அபராத நடைமுறையல்ல; தேர்வின் ரகசியத் தன்மையையும், மதிப்பீட்டாளருடனான நடுநிலையான உறவையும் பாதுகாக்கும் அரண். தேர்வு நேர்மை தனிநபர் ஒழுக்கத்தைத் தாண்டி, சமூக நீதியின் முக்கிய வடிவமாகக் கருதப்பட வேண்டும். நேர்மையாக உழைத்தவருக்கும் குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தவருக்கும் ஒரே பலன் கிடைக்கும் சூழல் உருவானால், கல்வியின் மீதான நம்பிக்கை பாதிக்கப்படும்.

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்ஃபோன் எனத் தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்தக் காலத்தில், கல்வி நிறுவனங்கள் நவீனத் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தித் தேர்வு நேர்மையைப் பாதுகாக்கின்றன. முறைகேட்டில் ஈடுபடும்போது, துண்டுச் சீட்டுகளின் (பிட் பேப்பர்) அளவைப் பொருத்து ஒரு பாடத்தின் தேர்வு ரத்தாவதிலிருந்து, பருவம் முழுவதுமே ரத்தாகும் அளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கையின் தோல்வியல்ல; மாறாக, அது புதிய வாய்ப்புகளுக்கான தொடக்கம் என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். பல நேரங்களில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவதற்குக் காரணம், அறிவுக் குறைபாடு அல்ல; தோல்வி குறித்த அச்சமே ஆகும். அந்த அச்சத்தை நீக்காமல் முறைகேட்டை முழுமையாக ஒழிக்க முடியாது. இத்தகைய நேர்மறையான புரிதல், கல்வி நிலையங்களில் ஆழமாக விதைக்கப்பட வேண்டும்.

தேர்வு நேரங்களில் மட்டும் விதிகளையும் தண்டனைகளையும் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, கல்வியின் நோக்கத்தையும் நேர்மையின் அவசியத்தையும் அன்றாட வகுப்பறைகளில் உளவியல் ரீதியாக விளக்க கல்வி நிறுவனங்கள் செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும். இந்த மாற்றமே மாணவர்களை மன அழுத்தமின்றி நேர்மையாகத் தேர்வு எழுதத் தூண்டும்.

ஒரு தேர்வை நடத்துவது மாணவர்களை அறையில் அமர வைத்து வினாத்தாள் வழங்குவதுடன் முடிவதில்லை. தேர்வுத் துறையினர் வருகைப் பட்டியல் தயாரித்தல், இருக்கை ஒதுக்கீடு (சீட்டிங் பிளான்), விடைத்தாள்களைப் பாதுகாப்பாக விநியோகித்தல் எனப் பல சுமையான பணிகளைச் செய்கின்றனர்.

முதன்மைக் கண்காணிப்பாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தேர்வு ஊழியர்கள் (எக்ஸாம் செல்), பறக்கும் படை எனப் பலரின் உழைப்பு இதில் அடங்கியுள்ளது. இத்தகைய பணிச் சுமைகளுக்கிடையில், தேர்வு நேர்மையைப் பாதுகாப்பது நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல; மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து ஏற்க வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும். சுமுகமான தேர்வு முறையை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது.

தேர்வறைக் கண்காணிப்பு என்பது வெறும் நிர்வாகப் பணி மட்டுமல்ல; அது ஆசிரியரின் ஆளுமை சார்ந்த அறநெறிப் பொறுப்பாகும். முறைகேடுகளைப் பிடிப்பது மட்டுமே கண்காணிப்பாளரின் வெற்றி அல்ல; முறைகேடு நடைபெறாத சூழலை உருவாக்குவதே அவரது உண்மையான வெற்றி. தேர்வுக் காலங்களில் மாணவர்கள் மீது நேர்மறையான எதிர்பார்ப்புகளை விதைப்பது பெற்றோரின் முக்கியக் கடமையாகும்.

மதிப்பெண்களைவிட நேர்மையான முயற்சியே வாழ்நாள் முழுவதும் பயன்படும் சிறந்த முதலீடு என்பதை மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஒற்றை இறுதித் தேர்வை வைத்துத் திறமையை எடை போடுவதைக் காட்டிலும், ஆண்டு முழுவதும் நடைபெறும் தொடர் மதிப்பீட்டு முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது மாணவர்களின் அழுத்தத்தைக் குறைக்கும்.

ஒவ்வொரு மாணவரும் தனித்துவம் கொண்டவர் என்பதையும், அவர்களின் நேர்மையான உழைப்பு ஒருபோதும் வீண்போகாது என்பதையும் கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நேர்மையான தேசத்தின் எதிர்காலம், தூய்மையான தேர்வு அறைகளிலிருந்து தொடங்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.