நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்திலும், திமுக இரண்டாம் இடத்திலும், அதிமுக மூன்றாம் இடத்திலும் இருந்தன. தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக அணியின் கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பொறுப்புகளை அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து, நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் கட்சியில் இணைந்தனர்.
எனினும், அதிமுகவிலிருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் விலகி, த.வெ.க.வில் சேர்ந்தனர். விலகிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மாணவப் பருவத்திலிருந்து இத்தனை ஆண்டுகளாக இந்தக் கட்சிக்காக உழைத்து வந்துள்ளோம். இப்போது மனவலியுடன் விலகுகிறோம். எங்கள் அரசியல் பயணம் தொடரும்' என்று கூறியுள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததில் குதிரை பேரம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுவதால் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கடந்த மே 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிமுக சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
இது நிலுவையில் இருந்த நிலையில், மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை விட்டு விலகி த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
இவர்களுக்கு த.வெ.க. உறுப்பினர் அட்டையும் தலைமைச் செயலகத்திலேயே வழங்கப்பட்டது. இடைத்தேர்தலில் அவர்கள் 4 பேரும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அரசியல் லாப நோக்குடன் 4 எம்.எல்.ஏ.க்களும் த.வெ.க.வில் இணைந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். இந்த நால்வரும் ராஜிநாமா செய்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதால் அரசுக்கு ரூ.100 கோடி வரை செலவு ஏற்படும்.
எனவே, கட்சி மாறிய இந்த நால்வரும் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆதாரங்கள் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர்.
'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்று முன்மொழிந்து ஆதரவு தந்த கட்சியினரை அமைச்சர்களாக்கி அதிகாரத்தில் பங்கு தந்திருக்கிறது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு. இடதுசாரி கட்சிகள் மட்டும் வெளியிலிருந்தே ஆதரவு தருவோம் என அறிவித்து விட்டனர்.
கடந்த தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்தே போட்டியிட்டன. கூட்டணி இல்லாத தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத முறையில் வெற்றி பெற்றது.
எனினும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை. எனினும் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைந்துள்ளது.
த.வெ.க. ஆட்சியைத் தக்க வைப்பதற்கு இன்னும் பெரும்பான்மை தேவைப்படுகிறது. மேலும், இரு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துவீட்டு, கட்சியை விட்டு விலகி ஆளும் த.வெ.கவுடன் இணைந்துள்ளனர். இடைத்தேர்தல் வருமானால் அவற்றில் நின்று வெற்றி பெற்று, பெரும்பான்மை பெற்று விடலாம் எனத் திட்டமிடுகின்றனர்.
'தீயசக்தி' என்றும், 'தூய சக்தி' என்றும் தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்தவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அனைத்தையும் மறந்து விடுகின்றனர். தி.மு.க.வும், அதிமுகவும் ஊழல் கட்சிகள் என்றால், அங்குள்ள எம்.எல்.ஏ.க்களும் தங்கள் கட்சியில் சேர்ந்ததும் புனிதமடைந்து விடுவது எப்படி என்பதை அவர்கள்தாம் விளக்க வேண்டும்.
அண்மைக்காலமாக அரசியல் கட்சிகள் தமது கொள்கைகள் குறித்துக் கவலைப்படுவது இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக தலைவர்களே அறியாதபோது, தொண்டர்கள் எப்படி அறிவார்கள்? மு.க. ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 8 அமைச்சர்கள் முன்னாள் அதிமுகவினர். இவர்களில் பலர் எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள்.
ஒரு பக்கம் ஆளும் கட்சியினர் பெரும்பான்மை பெற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பேரம் பேசி இழுப்பதாகவும், மறுபக்கம் எதிர்க்கட்சியினர் அரசைக் கவிழ்ப்பதற்காக ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி இழுப்பதாகவும் ஒருவருக்கொருவர் புகார் மனு அளிப்பதால் தமிழக அரசியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளில் எல்லாமே உண்மையென எடுத்துக் கொள்ள முடியாது.
'தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரலாம்' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக் குமாரும் இந்தச் சதித் திட்டத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தவும் தனிப்படைக் காவலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், த.வெ.க. அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகரிடம் திமுக, அதிமுக, பாஜக சார்பில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் முரண்பட்டு நிற்கும் இந்த மூன்று கட்சிகளும் ஆளும் கட்சியின் குதிரை பேரத்தை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் நெருக்கடி என்பது எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் 1952-ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த சென்னை ராஜதானியில் 375 தொகுதிகள் இருந்தன. அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 152 இடங்களை வென்று ஆட்சி அமைக்க முடியாமல் திணறியது. பிற கட்சிகளை உடைத்து பெரும்பான்மையைப் பெற்று ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சுயநலத்துக்காக தங்கள் கட்சியை மாற்றுவது மக்களாட்சிக்கு எதிரானதாகும். இதுபோல இந்திய நாட்டின் பல மாநிலங்களிலும், மத்திய அரசிலும் நடைபெற்றுள்ளது. இவையெல்லாம் மக்களாட்சியின் தேவைக்கேற்ப சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றையெல்லாம் நீதிமன்றங்களும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன.
உலகத்தில் எத்தனையோ ஆட்சிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், மக்களாட்சி முறையே சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்சி முறையிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை; இருக்கிறது. என்றாலும், குறைபாடான ஆட்சியை அகற்றும் அதிகாரமும் மக்களிடம் இருக்கிறது.
மக்களாட்சி என்பது பிற்காலத்தில் பிறந்ததாக எண்ண வேண்டாம். பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சிக் கொள்கைதான் பின்பற்றப்பட்டது. மக்களாட்சி என்பது ஏதென்ஸ் பாரம்பரிய நகரத்தில் உள்ள தத்துவார்த்த சிந்தனையைக் குறிக்கப் பயன்பட்டது. ஏதென்ஸ் நகர மக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் தகுதியும், உரிமையும் இருந்தது.
நமது அரசியல்வாதிகளின் தலைக்கு மேல் கத்தியாகத் 'தேர்தல்' நடைமுறை தொங்கிக் கொண்டே யிருக்கிறது. இதை ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும். அரசியல் கட்சியினரின் எல்லா பேரங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்; தேவையானபோது தண்டனை தருவார்கள்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வரைச் சந்திக்க முடியவில்லையே! சின்னதிரை நிர்வாகிகளின் ஆதங்கம்!

திமுக - அதிமுக ஒன்றிணையுமா? அரசியல் சூழல் முடிவு செய்யும்! - TTV Dhinakaran

திமுக, அதிமுக கூட்டணி முயற்சி உண்மையெனில் இதைவிட பெரிய அரசியல் மோசடி இருக்க முடியாது: வைகோ
தமிழக முதல்வா் விஜய் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



