நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

மகளிர் நலனில் மானுட கடமை

ஆதியில் மனிதனுக்கு அறிவு தோன்றிய காலத்திலிருந்து பெண்ணானவள் தெய்வத்துக்கு இணையாக வைத்துப் போற்றப் பெறுகிறாள் என்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஜூலை 2026, 7:21 am IST

ஆதியில் மனிதனுக்கு அறிவு தோன்றிய காலத்திலிருந்து பெண்ணானவள் தெய்வத்துக்கு இணையாக வைத்துப் போற்றப் பெறுகிறாள் என்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. பழங்காலத் தாய்வழி இனக்குழுச் சமுதாயத்தில் பெண்ணே முதலிடம் பெற்றுத் தலைமையேற்று வழிகாட்டியிருக்கிறாள். பெண்மையின் சிறப்பையும் பெருமையையும் போற்றும் விதமாகத்தான் நம்முடைய மொழிக்குத் தாய்மொழி என்றும், நாட்டுக்குத் தாய்நாடு என்றும், தாய்வழியான உரிமையை முன்னிறுத்தி அழைக்கிறோம்.

தாயாய், தமக்கையாய், காதலியாய், மனையாளாய், மகளாய்ப் பல உறவுப் பெயர்களில் நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்மையை நாமும் உவந்து போற்றத்தான் செய்கிறோம் என்றாலும் பெண்களை இழிவுபடுத்தும் மடமை குணம் எல்லாருக்குள்ளும் ஒளிந்திருப்பது காலத்தின் சதியென்பதா? அல்லது மனிதர்கள் வகுத்து வைத்த விதி என்பதா எனத் தெரியவில்லை.

ஆணாதிக்க வெறிகொண்டு தங்களுடைய ஏகபோக எதேச்சதிகாரத்தால் தலைகனத்து ஆடுகிற ஆடவர்கள் பெண்களைப் பழிப்பதையும் இழிவுபடுத்துவதையும் தரக்குறைவாக்குவதையும் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஆனால், பெண்ணுக்குப் பெண்ணே பெண்மையின் வளர்ச்சிக்கும் விடுதலை உணர்ச்சிக்கும் எதிரியாக இருப்பதுடன் அவளைத் தாழ்த்தி இழிவு செய்யும் மடமையைக் காலந்தோறும் தொடர்ந்து செய்கிறார்கள் என்றால் அது எத்தனை பெரிய கொடுமை?

ஒருபுறம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற பெண் நலத்தை இந்தச் சமுதாயம் மற்றொரு புறத்தில் மிகக் கேவலமாகக் காலில் இட்டு மிதிப்பது வினோத முரணாக இருக்கிறது.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து போர் அல்லது போராட்டம் என்று ஒன்று தோன்றி விட்டால் அதில் முதலாவதாகக் களப்பலி ஆகின்றவர்கள் பெண்களும், அவர்களை நம்பியிருக்கிற குழந்தைகளும்தான். மனிதனுக்குள் இருக்கிற வேட்டை மிருகவெறிக் குணம் முதலில் பெண்களையும், பின்னர் குழந்தைகளையும் கடித்துக் குதறிவிட்டுத்தான் தன்னைத் திருப்தி செய்து கொள்கிறது போலும்.

இந்த வேட்டைக்குணத்துக்கு வடிகால்களாகக் களங்கள் கிடைக்காத காரணத்தினாலேயே சமுதாய வாழ்க்கையிலும் அவை தங்கள் தாக்குதல்களைப் பாலியல் வழியாகத் தொடர்ந்து பெண் நலத்தைச் சிதைத்து நம்மைப் பதைக்க வைக்கின்றன. பெண்களுக்கான மதிப்பைக் குறைக்கவும், அவர்களை உடல் ரீதியாக பலவீனப்படுத்தவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தவும் சில மொழியாடல்களையும், உடல்மொழிகளையும் இந்தச் சமுதாயம் தலைமுறைதோறும் கற்பித்து வருகிறது.

உடல் சார்ந்தும், உறுப்புகள் சார்ந்தும் உளவியல் ரீதியாகப் பெண்களைக் குறிவைத்துத் தாக்கும் எத்தனை கூரிய கற்சொற்கள் நம்முடைய மொழிகளில் நிலைகொண்டிருக்கின்றன. சமுதாய வெளியில் இரண்டு ஆடவர் ஆத்திரமுறும்போது தொடங்கி கட்டிப்புரண்டு சண்டைபோடும்போதுகூடப் பெண்களை இழிவுபடுத்திய வசைச்சொற்கள்தான் அங்கு முன்னிற்கின்றன.

கவிதையில் பெண்ணை ஓவியமாக, காவியமாக வடித்துக் காட்டுகிற நமது மொழிப் புலமைதான் வரம்பு கடந்து பெண்ணைப் போகப் பொருளாக்கி, அவளது அங்கங்களை வருணிக்கத் தொடங்கி விடுகிறது. பின்னர், அந்த எல்லையையும் கடந்து எழுதுகிறவரின் வெறுப்புக்கேற்ப எதிராளியைச் சாடுவதற்குப் பெண்மையே அங்கு பலியிடப்படுகிறது.

பெண்களைப் பழிக்கும் அத்தகு தீய சொற்கள் எத்தனை எத்தனை என்று ஆராய்ந்தால் எரிச்சல்தான் வருகிறது. மனைவி என்ற பெண்பாற் பெயருக்கு, கணவன் என்ற ஆண்பாற் பெயர் அமைவது போல அச்சொற்கள் இருப்பதில்லை. அச்சொற்கள் முழுக்க முழுக்கப் பெண்மையை மட்டுமே குறிவைத்து இழிவு செய்யும் குரூரம் கொண்டவை. நிறையப் பேசினால், வாய்விட்டுச் சிரித்தால், ஆடினால், பாடினால், ஓடினால், எதுவுமே இல்லாமல் அமைதியாக இருந்தால், நின்றால், நடந்தால், செத்தாலும்கூட அவளுக்கு ஒரு பெயரை இந்தச் சமுதாயம் சூட்டித்தான் பார்க்கிறது. அது மலர்க்கிரீடம் என்றாலும் முட்கிரீடம் என்றாலும் அதை அவள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

இந்த மனநிலை காலங்காலமாகவே கடத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஆண்களை விடவும் பெண்களே இதைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதைத்தான் மகாகவி பாரதியார்,"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை' என்று சுட்டிக்காட்டி அதைக் "கொளுத்துவோம்' என்றார்.

இந்த மடமை இலக்கியச் சுவடுகளிலும் படிந்து கிடக்கிறது. பாரதப் பெருநாட்டின் இரு பெரும் இதிகாசங்களாக விளங்கிய இராமாயணக் காலத்திலும் மகாபாரதக் காலத்திலும் இருந்திருக்கிறது.

சீதையைக் கடத்திச் சென்று சிறைவைத்த கொடுமைக்கு இணையானது சூர்ப்பனகைக்கு நேர்ந்த அவலமும். அரக்கியென்றாலும் அவளும் பெண்தானே. இவை எல்லாவற்றுக்கும் பின்னால் கைகேயியும் அவளைத் தூண்டிவிட்ட மந்தரையும் மடமைப் பெண்களாக இருக்கிறார்கள். அகலிகை என்ன பாவம் செய்தாள்? கற்காலம் தொடங்கிக் கல்லாகிப் போனது பெண்மை என்று உணர்த்தத்தானோ?

மகாபாரதத்திலே ஆண்களுக்கு இடையில் அதிகார மமதை துளிர்க்கிறது. போர்க்களத்தில் வேட்டையாடுவதற்கு முன்னதாக பகடைக் காய்களின் மூலமாகப் பழிதீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள். பொன்னும், பொருளும், படைகளும், நகரங்களும் என எல்லாம் பகடைகளின் சூதாட்டப் பசிக்குப் பலியாகின்றன. அந்தப் பலியெல்லாம் போதாது என்பதைப் போலப் பல்லிளித்துக் கூவுகிறார்கள் பெண்நல எதிரிகள். சூதில் பணயம் என்று மனைவியை வைத்து இழந்தது ஒரு கொடுமை என்றால், அடிமைப்பட்ட அந்தப் பெண்ணை அவைக்கு அழைத்துவா என்று தேர்ப்பாகனை அனுப்பி இழுத்து வர ஆணையிட்டது இன்னும் பெருங்கொடுமை.

தேர்ப்பாகனை விடுத்து விட்டுத் துச்சாதனனையே அனுப்பி இழுத்து வரச் செய்கிறபோது கொடுமையின் உச்சம் இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் விஞ்சிய கொடுமை, மாதர் தமக்கு மாதராலேயே நிகழ்கிற கொடுமை. தனித்திருக்கிற திரெளபதியை இழுத்துச் செல்லத் துச்சாதனன் வந்து நிற்க அவனைப் பெற்ற தாய், திரெüபதிக்கு அரணாக இருந்து காக்க வேண்டிய காந்தாரி பாவிகளாகிய தன் பிள்ளைகளின் கொடூரத்தை அறியாமலா, "அவர்கள் நம் பகைவர்கள் அல்லர். ஆதலால் அஞ்சாது போய்வா' என்று அனுப்பியிருப்பாள். இதைத்தான் மகாகவி பாரதியார் மடமை என்று சுட்டினாரோ?

இதாவது மாமியார் - மருமகள் சண்டை என்று விட்டு விடலாம். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்று நகர்ந்து விடலாம். பெற்ற தாய்க்குத் தன் பிள்ளையே எதிரியாவதும் உண்டா? இதிகாச காலங்களுக்கும் முன்பே இப்படி ஒரு நிகழ்வு உண்டு.

குடும்பத் தலைவி நிஷா, பலமுறை வேட்டைகளில் தன் மகள் லேக்காவினுடைய சாதுர்யத்தையும், பலத்தையும் பார்த்திருக்கிறாள். மலைகளின் மீது மான்களைப் போன்று அவளால் ஏறமுடியும்! ஒரு சமயம் தேன் குடிக்கும் கரடிகள் கூட ஏற முடியாத அவ்வளவு உயரமான ஒரு மலை உச்சியில் ஒரு பெரிய தேன்கூடு தென்பட்டது. இதைப் பார்த்த லேக்கா மரங்களோடு மரங்களைச் சேர்த்துக் கட்டி ஓர் இரவில், அவற்றின்மீது பல்லியைப் போன்று ஊர்ந்து ஊர்ந்து உச்சியை அடைந்து, நெருப்பினால் அந்தத் தேனீக்களைத் துரத்திவிட்டுத் தேன்கூட்டில் பெரிய துவாரத்தையும் போட்டுவிட்டாள்.

கீழே சொட்டிய தேனை ஒரு தோல் பாத்திரத்தில் பிடிக்க, அது உத்தேசம் இருபது படிக்குக் குறைச்சல் இல்லை. லேக்காவினுடைய துணிச்சலான இச்செய்கையானது, நிஷா குடும்பம் மட்டுமல்லாமல், அடுத்த பரிவாரங்களும் அவளைப் புகழும்படிச் செய்துவிட்டது. ஆனால், நிஷாவுக்கு இது சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. ஏனெனில், நிஷாவின் யௌவனப் புத்திரர்கள் லேக்காவினுடைய ஆணையைச்

சிரமேற் கொள்ளத் துடித்துக் கொண்டிருப்பதையும், நிஷாவின் வேண்டுகோள்களைக்கூட உதாசீனம் செய்வதையும், நாளடைவில் நிஷா கவனித்து வந்தாள்.

தன்னை வெளிப்படையாக எதிர்ப்பதற்கு, தன் மகளுக்கு துணிச்சல் ஏற்படாதிருப்பதையும் நிஷா தெரிந்திருக்கிறாள். தன்னுடைய வழியில் பெரிய முட்டுக்கட்டையாய் இருக்கும் லேக்காவை ஒழித்து விடுவதற்கு நிஷா பல வழிகளைப்பற்றி யோசித்தாள். "நித்திரையில் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றுவிட்டால் என்ன?' என்றுகூட அவளுக்கு ஒரு சமயம் தோன்றிற்று என்று ஆதிகாலத்திலேயே பெண்ணுக்குப் பெண்செய்யும் பெருங்கொடுமை தோன்றி விட்டதை "வால்காவிலிருந்து கங்கை வரை' என்னும் தனது நூலில் பதிவிட்டிருக்கிறார் ராகுல சாங்கிருத்தியாயன்.

இன்றைய நவீன யுகத்திலும் அறிவிலும் அறிவியலிலும் வானுயர வளர்ந்திருக்கிற மனிதர்களாகிய நாம் இன்னும் பெண் நலத்தைப் பேணாமல் இருப்பது உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டும் வாழ்வுக்கு ஒப்பானதாகத்தான் இருக்கிறது. குறிப்பாக, பெண் விடுதலை பேசுகிற பெண்களுக்கு மத்தியில் பெண்ணடிமை பேணுகிற பெண்களும், அவர்கள் வளர்க்கிற ஆண்களும் நிறைந்தால் சமூகம் எவ்வாறு சமநிலை அடையும்? "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று ஒüவையார் சுட்டியதும் பொருந்துகிறது. பெண் நலனைப் பேணுவது மானுடத்தின் கடமை என்பதை எப்போது உணரப் போகிறோம்?

கட்டுரையாளர்:

எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.