மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடல், ராஜதந்திரம், மன்னிப்பு போன்ற மிகவும் பயனுள்ள மற்றும் திறமையான கருவிகளை மனிதகுலம் கொண்டுள்ளது என்று திருத்தந்தை (போப்) பதினான்காம் லியோ உலக நாடுகளுக்கு அண்மையில் விடுத்த வேண்டுகோள் எந்த அளவுக்கு நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களைச் சென்றடைந்திருக்கிறது என்று தெரியவில்லை. செயற்கை நுண்ணறிவின் காலத்தில் மனிதர்களைப் பாதுகாப்பது குறித்து மனிதநேயத்தின் மகத்துவம் என்ற தலைப்பில் திருத்தந்தை லியோவால் மே 15-ஆம் தேதி அளிக்கப்பட்டு, கடந்த 25-ஆம் தேதி 245 பொருள்களுடன் 5 அத்தியாயங்களாக வெளியான சுற்றறிக்கை காற்றில் கரைந்த கற்பூரமாக யாருக்கும் பயனற்றுப் போய்விடலாகாது.
இன்று மனிதகுலத்தைப் பாதிக்கும் அல்லது வழிநடத்தும் ஒவ்வொரு துறை குறித்தும் அவர் கொண்டுள்ள கவலை, அக்கறை, மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகள் உலகத் தலைவர்கள் அனைவராலும் கவனிக்கப்படவேண்டியவை. நமது சகோதர, சகோதரிகளின் கண்ணியம் மீறப்படும்போது, அரசியல் மனித குலத்தின் துயரங்களைச் சமாளிக்கத் தவறும்போது, பொருளாதாரம் மனிதருக்கு எதிராக மாறும்போது அல்லது அறிவியல் தன் திறனில் எல்லைகளை மீறும்போது திருச்சபை, பிற மதங்களைச் சேர்ந்த விசுவாசிகளுடன் சேர்ந்து ஒருமைப்பாட்டை ஊக்குவிக்க முயலும் என்ற போப் லியோவின் அக்கறை நிறைந்த வார்த்தைகள் இன்றைய அவசியத் தேவை.
திருத்தந்தையின் கவலையின் பெரும்பகுதி எண்ம உலகைப் பற்றியதாகவே உள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்பட தொழில்நுட்பப் புதுமைகள் அனைத்தும் நடுநிலையானவை அல்ல. அவை சமத்துவமின்மை, கட்டுப்பாடு மற்றும் புறக்கணிப்பை அதிகரிக்கக்கூடும். மிகவும் அசாதாரணமான அறிவியல் முன்னேற்றம், மிக வியப்பூட்டும் தொழில்நுட்ப சாதனைகள், மிக அதிக பொருளாதார வளர்ச்சி ஆகியவை சமூக முன்னேற்றத்துடன் இணைக்கப்படாவிட்டால், அவை மனிதனுக்கு எதிராகவே திரும்பும் என்ற அவரது எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.
எண்ம தளங்கள், உள்கட்டமைப்பு, தரவு மற்றும் கணினித் திறன் ஆகியவற்றின் கட்டுப்பாடு அரசுகளின் கைகளில் இல்லாமல், பெரிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கதாநாயகர்களின் கையில் உள்ளது. இத்தகைய அதிகாரம் சிலரின் கைகளில் அதிகமாகக் குவிந்தால், அது பொதுப் பார்வையிலிருந்து மறைந்து கண்காணிப்பைத் தவிர்க்கும் தன்மை உடையதாக மாறுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொடர்பானவை உருவாகும் வேகத்தைக் கருத்தில் கொண்டால், விரைவில் அவை பழைமையானதாகிவிடும் அபாயம் உள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கு நெறிமுறைச் சிந்தனை இல்லை, விளைவுகளுக்கு பொறுப்பேற்பதில்லை என்பதால், அவற்றை "நிராயுதப்படுத்த வேண்டும்' என்கிறார் போப் லியோ.
"நிராயுதப்படுத்துதல்' என்பது தொழில்நுட்பத்தை மறுப்பது அல்ல; மாறாக, அது மனிதகுலத்தை ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதைக் குறிக்கிறது என்கிறார்.
கல்வியின் கணிசமான பகுதி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும்போது, கல்விக்கான அணுகல் குடும்பங்களின் நிதி வசதியை மட்டுமே சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படக்கூடும். தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றம், வேறு ஒரு காலகட்டத்துக்காக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டங்களை வேகமாகப் பயனற்றதாக்கி வருகின்றன.
அறிவு மேலும் மேலும் துண்டுத் துண்டாகப் பிரிவதால், எதார்த்தத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதும், ஆழமான கேள்விகளைக் கேட்பதும் அல்லது விமர்சனபூர்வமான மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்ப்பதும் கடினமாகிறது என்ற அவரது கவலை, இன்றைய பெற்றோர்களின் கவலையை அப்படியே பிரதிபலிக்கிறது.
காலனித்துவம் புதிய வடிவங்களை எடுக்கிறது. அது இனி உடல்களை மட்டும் ஆதிக்கம் செலுத்துவதில்லை. மாறாக, தரவுகளை அபகரித்து தனிப்பட்ட வாழ்க்கையைச் சுரண்டக் கூடிய தகவல்களாக மாற்றுகிறது. குறிப்பாக, சுகாதாரத் தரவுகள், நோய்ப் பரவல் விவரங்கள், மரபணு வரைபடங்கள் மற்றும் மக்கள்தொகை தகவல்கள் அதிகாரத்தின் புதிய அரிய ஆதாரங்களாக மாறியுள்ளன.
ஒட்டுமொத்த மக்களின் சுகாதாரத் தரவுகளை கட்டுப்படுத்துபவர்கள் எதிர்காலத்தின் மீது ஒரு கட்டமைப்பு ரீதியான செல்வாக்கைக் கொண்டுள்ளனர். நமது காலத்தின் மிக அவசரமான தார்மிக சவால்களில் ஒன்று இங்கேதான் உள்ளது என்ற அவரது எச்சரிக்கை இதற்கு முன்பே அது கைமீறிப் போய்விட்டதாகவே உள்ளது.
தனிநபர்களைப் பற்றிய தரவுகள் மட்டுமல்ல, பிற எல்லா தரவுகளும் எவ்வாறு, யாரால், யாருடைய நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் திறனை மக்களுக்கு மீட்டளிக்க வேண்டும். இல்லையெனில், இந்த எண்ம யுகம் காலனித்துவத்துக்குப் பிந்தையதாக இருக்காது. மாறாக, வேறு ஒரு வடிவத்தில் காலனித்துவமாகவே இருக்கும்.
சர்வதேச அமைப்புகள், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, அன்பின் நாகரிகத்தை மேம்படுத்துவதற்கான இன்றியமையாத கருவிகளாகும். அதேநேரத்தில், ஐ.நா. மற்றும் சர்வதேச அரசியல் அமைப்பின் தற்போதைய பலவீனங்கள் ஆழமான சீர்திருத்தங்களின் தேவையை வெளிப்படுத்துகின்றன என்ற போப் பதினான்காம் லியோவின் சுற்றறிக்கை வல்லரசு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அறிவுரையாகவும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும். இல்லையென்றால், அது விழலுக்கு இரைத்த நீராகவோ அல்லது தரிசு நிலத்தில் பெய்த மழையாகவோ போய்விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









