இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

காலநிலை மாற்றத்துக்கு மாற்று!

நகர மாசுபாடு மற்றும் நகர வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் புதுமையான சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

News image

சென்னை புறநகரில் உள்ள மரம் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 6:00 am IST

-முனைவர் பி. ரவிச்சந்திரன்

உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன. நகரமயமாதல், தொழிற்சாலைகள் பெருக்கம், அதிகரித்துவரும் வாகனப் பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றம் காரணமாக உலக நாடுகள் கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. வெப்ப அலைகள், திடீர் வெள்ளப்பெருக்கு, வறட்சி, குடிநீர் பற்றாக்குறை மற்றும் சுவாச நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியது.

ஐ.நா. சபை மற்றும் உலக சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனங்கள் தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகள், உலக நாடுகள் உடனடியாக கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, நிலையான வளர்ச்சி மற்றும் பசுமைத் தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன. குறிப்பாக, நகர மாசுபாடு மற்றும் நகர வெப்பத் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் புதுமையான சுற்றுச்சூழல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், இயற்கையைப் பாதுகாக்கும் பாரம்பரிய முயற்சிகளுடன் அறிவியல் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களையும் இணைக்கும் காலம் வந்துவிட்டது. அந்த வகையில், சுவாமி விவேகானந்தா பூங்கா அமைந்துள்ள போபால் நகரில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் "ஆல்கே மரம்' சுற்றுச்சூழல் துறையில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சி மஸ்ரூம் வேல்டு குரூப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

"ஆல்கே மரம்' என்பது இயற்கை மரத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல; மாறாக, நகர்ப்புறங்களில் மரநடுகைக்கு இடவசதி குறைவாக உள்ள பகுதிகளில் துணை சுற்றுச்சூழல் தொழில்நுட்பமாக பயன்படுத்தப்படும் ஒரு நவீன அமைப்பாகும். இது நுண்ணாழி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரியல் காற்று தூய்மைப்படுத்தும் அமைப்பாகும். சூரிய ஆற்றலின் உதவியுடன் இயங்கும் இந்த அமைப்பு, வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி பிராணவாயுவை வெளியிடுகிறது. ஓர் "ஆல்கே மரம்' சுமார் 20 முதல் 25 வளர்ந்த மரங்களுக்கு இணையான அளவு கார்பனை உறிஞ்சும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிஎம் 2.5 போன்ற நுண்துகள்களைக் குறைக்கும் திறனும் இதற்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் "ஆல்கே' தொழில்நுட்பம் புதியதல்ல. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சில முன்னேற்ற நாடுகளில் பல ஆண்டுகளாக நுண்ணாழி அடிப்படையிலான கார்பன் பிடிப்பு மற்றும் காற்று

தூய்மைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நகர மாசுபாடு அதிகமாக உள்ள பகுதிகளில், "பயோரியாக்டர் மற்றும் அல்கா பஃகேட்' போன்ற தொழில்நுட்பங்கள் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலக

அளவில் அதிகரித்து வரும் காலநிலை மாற்ற சவால்களுக்கு அறிவியல் சார்ந்த தீர்வுகளைத் தேடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இத்தகைய அமைப்புகள் பார்க்கப்படுகின்றன.தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வரும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற நகரங் களில் காற்று மாசுபாடு மற்றும் நகர வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாகனப் புகை, தொழிற்சாலை வெளியேற்றங்கள், தூசுத் துகள்கள் மற்றும் குறைந்து வரும் பசுமை வளங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் வெள்ளம், வறட்சி மற்றும் கடும் வெப்பம் போன்ற இயற்கைச் சவால்களும் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டின் புதிய அரசு நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்ற கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. பாரம்பரிய மரநடுகை திட்டங்களுடன் இணைந்து அறிவியல் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் மையத் தடுப்புகள், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகர சாலைகள், தொழிற்பேட்டைகள் மற்றும் மாசுபாடு அதிகமான பகுதிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், கல்வி நிறுவன வளாகங்கள், நகரப் பூங்காக்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்கள் போன்ற பகுதிகளில் "ஆல்கே மரங்களை' முன்னோடித் திட்டங்களாக நிறுவலாம்.

நெடுஞ்சாலை மையத் தடுப்புகளில் இத்தகைய அமைப்புகளை நிறுவுவது, வாகனங்களால் வெளியிடப்படும் கார்பன் வாயுக்களைக் குறைப்பதுடன், சாலைப் பகுதிகளில் பசுமைச் சூழலையும் மேம்படுத்தும். இடவசதி குறைவாக உள்ள நகரப் பகுதிகளில் இது ஒரு மாற்று சுற்றுச்சூழல் தீர்வாக அமையக்கூடும். இருப்பினும், "ஆல்கே மரங்கள்' இயற்கை மரங்களுக்கு மாற்று அல்ல; அவை நகர்ப்புறங்களில் கூடுதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருவியாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இனி விழிப்புணர்வு வாசகமாக மட்டும் இருக்க முடியாது; அது மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்.

தூய்மையான காற்று, பசுமையான நகரங்கள் மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சிகளில் தாமதம் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.