வேளாண் வருவாயில், கால்நடை வளர்ப்பு ஓர் அங்கமாக உள்ளது. வேலைவாய்ப்பு, உரம், உழவுத் தொழிலுக்கான உதவி ஆகியவற்றை இது வழங்குகிறது. பால் சேகரிப்பு, எடுத்துச் செல்லுதல், பதனப்படுத்துதல், விநியோகம் ஆகிய பணிகளை கூட்டுறவு முறையில் ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்துவதன் மூலம் பால் பண்ணைத் துறையில் வெற்றி காணப்பட்டுள்ளது.
மிகையான பாலை பால் பொருள்களாக மாற்றுவதன் வாயிலாக பருவ மாற்றத்தின் போது ஏற்படும் குறைபாட்டைச் சரி செய்வதற்கும் வழிவகுக்கிறது. இதனால் பெறப்படும் லாபம் விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டத்துக்கு வெண்மைப் புரட்சி என்று பெயர் சூட்டினர். இது. இந்தியாவின் தேசிய பால் பண்ணை மேம்பாட்டுக் கழகத்தால், 1970 -இல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டுத் திட்டமாகும்.
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் என்ற மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் பால் வளர்ச்சித் திட்டமானது முதன்முதலாக நிறுவப்பட்டு, மிகுந்த வெற்றியைப் பெற்றது. இந்தக் கூட்டுறவுச் சங்கங்களானது பால் உற்பத்தியாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. பால் உற்பத்தியை அதிகரிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டமானது வெள்ள நடவடிக்கை என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் மொத்த பால் உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு உத்தர பிரதேசம் (16.3%) இரண்டாவது ராஜஸ்தான் (12.6 %). அதுபோல, 1991 -ஆம் ஆண்டு தனிநபருக்கு நாள் ஒன்றுக்கு கிடைத்த பாலின் அளவு 176 கிராம். இது 2014 -2015 -ஆம் ஆண்டில் 322 கிராமாக அதிகரித்தது. இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாக பால் உற்பத்தியை அதிகரிக்க அயல்நாட்டு பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் ஒரு லட்சம் மேய்ச்சல் கால்நடைகளில் 80% வெளிநாட்டு இனங்களாகும். நம் நாட்டில் 37 தூய நாட்டுக் கால்நடைகள் வகைகள் உள்ளன. சாஹிவால், கிர், சிவப்பு சிந்து, தார்பார்கர் போன்ற பல்வேறு இனங்கள் பால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்றன. காங்ரேஜ், ஓங்கோல், மற்றும் ஹிரியானா ஆகிய இனங்கள் கறவை மற்றும் இழுவைக்கும், ஏர் உழுவதற்கும் ஏற்றவை. மீதமுள்ள இனங்கள் இழுவைக்கு மட்டும் ஏற்ற இனங்களாகும்.
பால் என்பது மனித வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உணவுப் பொருளாகும். குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் உடல் நலனுக்கும் தேவையான சத்துகளை வழங்கும் இயற்கை அருளான உணவாகக் கருதப்படுகிறது. தமிழர் வாழ்க்கை முறையிலும், இந்திய பாரம்பரியத்திலும், உலக கலாசாரங்களிலும் பால் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
பால் என்பது வெறும் பானம் அல்ல. அது மனித உடல் நலத்தின் அடித்தளம். குழந்தை வளர்ச்சியில் இருந்து முதியோரின் எலும்பு பாதுகாப்பு வரை பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. தினமும் உணவில் பாலைச் சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஒரு வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு தினமும் குறைந்தபட்சம் 100 மில்லி லிட்டர் பால் அவசியம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தினமும் 250 மில்லி லிட்டர் பால் பருக வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 200 மில்லி லிட்டர் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
அதேநேரத்தில் கலப்பட பால் உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, தரமான மற்றும் சுத்தமான பாலைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இயற்கை விவசாய முறைகளில், வளர்க்கப்படும் மாடுகளின் பால் உடலுக்கு மேலும் நன்மை தரும் என்று பலர் நம்புகின்றனர்.
மாடுகளுக்கு அடர் தீவனம் கொடுக்கும் போது, பரங்கிக்காய் 200 கிராம் முதல் 500 கிராம் வரையும், மாடுகளின் பால் உற்பத்தியைப் பொருத்து வெல்லம் 50 கிராம் முதல் 100 கிராம் வரையும், அடர் தீவனத்தில் காலை அல்லது மாலை ஒரு வேளை மட்டுமே கொடுக்க வேண்டும். இப்படி கொடுக்கும் போது மாடுகளுக்கு இயற்கையாகவே பால் சுரப்பு அதிகரிக்கும். இதை வாரத்துக்கு நான்கு நாள்கள் கொடுத்தால் போதுமானது. தானியங்களான மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, பாசிப் பயறு நான்கில் ஒரு பங்கை பச்சையாக 12 மணிநேரம் ஊறவைத்து அரைத்து மாடுகளுக்குக் கொடுக்கலாம்.
எளிதில் கிடைக்கக்கூடிய அசோலா பசுந்தீவனம் கொடுக்கும் போது, பாலில் புரதம், கொழுப்புச் சத்து அதிகரிக்கும். நாளொன்றுக்கு ஒரு கறவை மாட்டுக்கு 1.5 கிலோ கலப்புத் தீவனம் தேவைப்படும். தினமும் சுமார் 2.5 லிட்டர் பால் கொடுக்கும் கறவை பசுக்கு இது போதுமானது. அதற்கு மேல் பால் தரும் மாடுகளுக்கு, அதற்கு ஏற்றபடி தேவைப்பட்டால் கூடுதலாக வழங்க வேண்டும்.
சினை மாடுகளைப் பொருத்தவரை, அதன் கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக 7 மாத சினை முதல் உடல் பராமரிப்புக்கும், பால் உற்பத்திக்கும் கொடுக்கப்படும் தீவனக் கலவையுடன் ஒரு கிலோ முதல் 1.5 கிலோ தீவனம் கூடுதலாக கொடுக்க வேண்டும். தாதுச்சத்து கால்நடைகளின் உடல் வளர்ச்சிக்கும், பால் உற்பத்திக்கும், சினை காலத்தில் கன்று வளர்ச்சிக்கும் தேவைப்படுகிறது. கறவை மாடுகளுக்கு கன்று ஈன்ற 35 நாள் முதல் 45 நாள்களுக்குள் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்வதால், மாடுகள் நன்றாக தீவனம் சாப்பிடும் போது பால் அதிகம் சுரக்கும். இப்போது பல்வேறு நாடுகளில் பால் உற்பத்தி ஒரு பெரும் தொழிலாக நடத்தப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் மிக அதிகமாக உண்ணப்படும் உணவு பால். சுருக்கமாகச் சொல்வதானால் உலகின் சத்துணவு பால் என்றால் மிகையில்லை. ஐ.நா. சபைகளின் அறிவுறுத்தலின் படி, ஆண்டுதோறும் ஜூன் 1 -ஆம் தேதி உலக பால் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2-வது முறை உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

எதனால் ‘எத்தனால்’?
ஜிகர்தண்டா
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



