தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

எச்சரிக்கையுடன் தவிர்ப்போம்!

தற்போது பெய்யத் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நிறைவு பெறும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மழை - பிரதிப் படம்

Updated On :

தற்போது பெய்யத் தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நிறைவு பெறும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பெய்த வடகிழக்குப் பருவமழையின் அளவைவிட நிகழாண்டு அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், நீர்நிலைகளில் அவற்றின் முழு கொள்ளளவுக்கு அதிகமாக நீர் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அண்மைக்காலங்களில், பெற்றோருடனோ, தனித்தோ ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளுக்குச் செல்லும் சிறார்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. அண்மையில் சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் என 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை ஆவடி திருமுல்லைவாயிலைச் சேர்ந்த 2 சிறுவர்கள் புழல் ஏரியில் குளிக்கச் சென்று உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெரும்பாலான நகர்ப்புற சிறுவர், சிறுமியர் நீச்சல் தெரியாதவர்கள் என்பதால், இத்தகைய உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. பெற்றோர் தம் பிள்ளைகளை கூடுதல் விழிப்புணர்வுடன் கண்காணித்தால் மட்டுமே இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.

பலத்த மழை, அதி பலத்த மழை பெய்யும் நாள்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது, மாணவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தானேயன்றி அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பது, மீன் பிடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்குவதற்கு அல்ல என்பதை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

பலத்த மழை பெய்தால் இடிந்துவிடக்கூடிய பழைமையான வீடுகளில் வசிப்பதைத் தவிர்ப்பதும், வீடுகளின் சுவர்களில் ஈரத்தன்மையால் மின்சாரக் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மின் சாதனப் பொருள்களை இயக்கும்போது அவற்றை இரட்டிப்பு கவனத்துடன் இயக்குவதும் நல்லது.

பருவமழைக் காலங்களில் அணைக்கட்டுகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்படும்போது அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் ஆறுகளில், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது. இச்சமயங்களில், ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களுக்கு உரிய எச்சரிக்கை தரப்பட்டாலும் அவற்றை உதாசீனப்படுத்தும் போக்கால் சிலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.

புயல்-மழைக் காலங்களில் பலத்த காற்று வீசுவதால் மரங்கள் வேருடன் சாய்வது, மரக் கிளைகள் முறிந்து விழுவது, மின் கம்பிகள் அறுந்து கிடப்பது போன்றவற்றால் கால்நடைகளும், மனிதர்களும் உயிரிழக்கின்றனர். போதிய விழிப்புணர்வுடன் மட்டுமே இத்தகைய உயிரிழப்புச் சம்பவங்களை நாம் தவிர்க்க இயலும்.

மழைக் காலங்களில் சாலைகள் சேதம் அடைவதால் ஏற்படும் பள்ளங்களில் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. வேகக் கட்டுப்பாட்டை மழைக்காலங்களில் முழுமையாகக் கடைப்பிடிப்பதன்மூலம் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

பருவமழைக் காலங்களில் ஏற்படும் இடி, மின்னல்களால் மனித உயிரிழப்புகள் ஏற்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 24,000 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர்; இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 2,500 முதல் 3,000 பேர் உயிரிழக்கின்றனர். இயற்கைப் பேரிடரால் ஏற்படும் மரணங்களில் 50 சதவீதம் இடி, மின்னல் தாக்கி ஏற்படும் மரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இடி, மின்னல் ஏற்படும்போது வீட்டின் மொட்டைமாடியில் நிற்பது, மரங்களின் கீழ் ஒதுங்குவதைத் தவிர்த்தல் வேண்டும்.

மலைப் பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதை தொடர்புடைய மாவட்ட நிர்வாகங்கள் உணர்ந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் உரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.மேலும், மழைக்காலங்களில் பொதுமக்கள் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது நல்லது அல்ல.

மழைக் காலங்களில் குடிநீருடன், கழிவு நீர் கலக்கும் அபாயம் உள்ளதால் காய்ச்சி, வடிகட்டிய நீரைக் குடிப்பதே உடல் நலனுக்கு உகந்தது. டெங்கு, மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் மழைக்காலங்களில் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. வீட்டைச் சுற்றிலும் குறிப்பாக மொட்டை மாடிகளில் வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பாத்திரங்கள், சிறிய தொட்டிகள், டயர், ஆட்டுக்கல், பயன்படுத்தாத பூந்தொட்டி ஆகியவற்றில் மழைநீர் தேங்குவதைத் தவிர்ப்பது நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும்.

நகர்ப்புறங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கி இருக்கும் மழை நீர், திறந்து கிடக்கும் புதை சாக்கடைகள், மழைநீர் வடிகால் கால்வாய்கள் ஆகியவற்றாலும் மனித உயிர்கள் பரிதாபமாக பறிபோகின்றன.

மழைக்காலங்களில் பாம்பு போன்ற விஷப்பூச்சிகள் இருக்கும் இடங்களில் தண்ணீர் புகுவதால், சில நேரங்களில் இவை மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் நுழைகின்றன. இவ்வாறு பாம்புகள் வீடுகளுக்குள் நுழையும்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாறாக, பொதுமக்களே அவற்றைப் பிடிக்கவோ அடிக்கவோ முயலும்போது அவற்றால் தீண்டப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

பருவமழைக் காலங்களில், மக்கள் உரிய விழிப்புணர்வுடன் செயல்படுவதுடன், அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்கினால், மழைக்காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளையும், பொருள்சேதத்தையும் பெருமளவு தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.