எஸ்ஐஆர் குறித்த போலிப் பரப்புரைகள்...
வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதை எதிர்ப்பவர்கள், கள்ள வாக்குகள் மூலம் தங்களது அரசியல் வெற்றியைக் கட்டமைத்தவர்களா என்பதைப் பற்றி...
எஸ்ஐஆர் குறித்த போலிப் பரப்புரைகள்...
ஜனநாயகம் என்பது மக்கள் தங்களது பிரதிநிதிகளைச் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்ந்தெடுக்கும் உரிமையின் அடிப்படையில் அமைந்தது. அந்த உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமானால், வாக்காளர் பட்டியல் உண்மையான வாக்காளர்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். வாக்காளர் பதிவுகளைச் சரிபார்த்து, காலாவதியான மற்றும் இரட்டைப் பதிவுகளைக் கண்டறிந்து, தகுதியுள்ள குடிமக்கள் தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கான முக்கியமான நடைமுறையே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் வேலைவாய்ப்பு, கல்வி, திருமணம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் குடிபெயர்கின்றனர்; இயற்கை நியதியால் இறந்துவிடுகின்றனர்; சிலர் நிரந்தரமாக வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்; புதிய இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுகின்றனர். இத்தகைய மாற்றங்கள் முறையாகப் பதிவு செய்யப்படாவிட்டால், பழைய பதிவுகள் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறலாம்.
ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருக்கலாம். இத்தகைய முரண்பாடுகள் தவறாகப் பயன்படுத்தப்படும்போதுதான், ஆள்மாறாட்டம், இரட்டைப் பதிவு மூலம் வாக்களித்தல் உள்ளிட்ட தேர்தல் முறைகேடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. ஜனநாயகத்தின் புனிதத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் உண்மையான வாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும்; ஒருவர் தனது வசிப்பிடத்தை மாற்றியிருந்தால், சட்டப்படி வாக்களிக்கத் தகுதியுள்ள தொகுதியில் தனது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். இல்லாத வாக்காளர்கள் அகற்றப்படுவதும், போலி வாக்காளர்கள் தவிர்க்கப்படுவதும் அவசியம். வாக்காளர் பதிவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைக்கப்பட வேண்டும்.
ஒருவர் நிரந்தரமாக வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தால், அவரது வாக்காளர் பதிவு உரிய நடைமுறைகளின்படி புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அவர் தற்போது வசிக்கும் இடத்தில் வாக்களிப்பதில் சிரமம் ஏற்படலாம். அதேபோல், இரட்டைப் பதிவுகள் இருந்தால் அவை சரிபார்க்கப்பட்டு சட்டப்படி திருத்தப்பட வேண்டும். பெயர்களைச் சரிபார்ப்பது, விவரங்களைத் திருத்துவது, தகுதியற்ற பதிவுகளை நீக்குவது, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது ஆகியவற்றுக்கான முறையான நடைமுறையை எஸ்ஐஆர் வழங்குகிறது.
இதன் அடிப்படைக் கொள்கை தெளிவானது- துல்லியமான பதிவுகள், உண்மையான வாக்காளர்கள், தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு! நாடு முழுவதும் எஸ்ஐஆர் தொடர்பாகப் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்று, 13.39 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் எண்ணிக்கையாகும். தேர்தல் ஆணையத்தின் தகவல்களின்படி, மூன்று கட்டங்களாக சுமார் 95.40 கோடி வாக்காளர்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
அவற்றில் 13.39 கோடி பதிவுகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்- 6.30 கோடி; இல்லாதவர்கள் அல்லது கண்டறிய முடியாதவர்கள்- 3.01 கோடி; இறந்தவர்கள்- 2.80 கோடி; இரட்டைப் பதிவுகள்- 1.02 கோடி; பிற பிரிவுகள்- 0.26 கோடி- மொத்தம் வகைப்படுத்தப்பட்ட பதிவுகள்- 13.39 கோடி. அக்டோபர் மாதம் வெளியான தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் குறித்த செய்திகள் மேற்கண்ட தகவலை உறுதிப்படுத்துகின்றன.
இந்த எண்ணிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்வது அவசியம். இவை சீராய்வின்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பதிவுகளைக் குறிக்கின்றன. தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதியாக நீக்கப்பட்ட எண்ணிக்கையாக இவற்றைக் கருத முடியாது. வரைவு நிலையிலான வகைப்பாடுகளின் இறுதி நிலை, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் ஆட்சேபணை நடைமுறைகள் உள்ளிட்ட உரிய வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே, 13.39 கோடி என்ற எண்ணிக்கையை அதற்குரிய வகைப்பாடுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டும். அதே எண்ணிக்கையிலான தகுதியுள்ள குடிமக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுவிட்டது என்பதற்கான ஆதாரமாக இதை முன்வைக்க முடியாது. வாக்காளர் பட்டியல் சீராய்வில் அரசியல் கட்சிகளுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமித்து, வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கவும், முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டவும் முடியும்.
நாடு முழுவதும் நடைபெற்ற எஸ்ஐஆர் நடைமுறையில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டதாகவும், வகைபடுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியல்கள் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்குச் சரிபார்ப்புக்காகப் பகிரப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அரசியல் கட்சிகள் சரிபார்ப்பு நடைமுறையில் பங்கேற்கவும், இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள் மற்றும் சந்தேகத்துக்குரிய பதிவுகள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்யவும் வாய்ப்பு கிடைக்கிறது.
தகுதியுள்ள வாக்காளர் ஒருவர் தவறாக விடுபட்டிருந்தால், அதற்கான குறிப்பிட்ட விவரங்களை அளித்து உரிய திருத்தம் அல்லது மேல்முறையீட்டு நடைமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் வெளிப்படையான உரிமையை அளிக்கிறது. சீராய்வு தங்களது தேர்தல் வாய்ப்பைப் பாதித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் கூறினால், அந்தக் கூற்றுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். இளைஞர்களின் பெயர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினால், பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் யார், எந்தத் தொகுதிகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது, பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதற்கான விவரங்கள் முன்வைக்கப்பட வேண்டும்.
எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் என்று கூறுவது, நம்பகமான ஆதாரங்களால் நிரூபிக்கப்படாதவரை ஓர் அரசியல் ஊகமே... எடுத்துக்காட்டாக, விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதால்தான் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோற்றுப் போனார் என்கிறார். திமுக ஆட்சியில், திமுக தலைமையிலான சென்னை மாநகராட்சியின் மேற்பார்வையில்தான் எஸ்ஐஆர் நடைபெற்றது.
திமுகவுக்கு வலுவான வாக்குச்சாவடி முகவர்கள் இருந்தார்கள். அவர்கள் அந்தப் பட்டியலில் எந்தக் குறையையும் தேர்தலுக்கு முன்பு சொல்லவில்லையே ஏன்? எதிர்க்கட்சியினர் சொல்வதைப்போல நீக்கப்பட்ட ஒரு லட்சத்தில் 10% வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறாக நீக்கப்பட்டது என்று தெருவுக்கு வந்து போராடினால்கூட எஸ்ஐஆர் தவறு என்று சொல்லி விடலாம். 10% அல்ல பத்துபேர் கூட தங்கள் பெயர் விடுபட்டதாகப் போராடவில்லை. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் மீது எஸ்ஐஆருக்கு எதிரான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் எஸ்ஐஆர் இல்லையென்றால் தவெக 160 இடங்களுக்கும் அதிகமாக வெற்றி பெற்றிருக்கும் என்று சொல்கிறார்கள்.
எஸ்ஐஆர் இல்லையென்றால், திமுக இந்த விடுபட்ட 73 லட்சம் வாக்குகளையும் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கும் என்று ஏன் சொல்லக் கூடாது? இரண்டுமே தவறான பரப்புரைகள். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் எஸ்ஐஆருக்குப் பிறகான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நடைபெற்றதுதான். எத்தனைப் பேர் எங்களது வாக்குகள் பட்டியலில் இல்லை என்று புகாரளித்தார்கள்? ஏன் புகாரளிக்க முன் வரவில்லை? நம் கண் முன்னாலேயே இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெற்று அதில் ஆளும் கட்சி வெற்றியும் பெற்றிருக்கிறது.
அதற்கு பிறகும், அவர்கள் எஸ்ஐஆரை எதிர்த்து போராடுவார்கள் என்றாலோ, எஸ்ஐஆரை எதிர்த்துப் போராடுபவர்களுடன் கைகோக்கிறார்கள் என்றாலோ, நாங்களும் பாஜகவை எதிர்க்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காகத்தானே தவிர, உண்மையான குற்றச்சாட்டாக இருக்க முடியாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றதை கேள்வி கேட்கிறார்; ஆனால், அதே தேர்தல் நடைமுறையில்தான் அதே ஐந்து சட்டப்பேரவைத் தேர்தலின்போதுதான் அவர்கள் கேரளத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்.
வாக்காளர் பதிவுகளை முறையாக ஆய்வு செய்வதற்கான நடைமுறையை எஸ்ஐஆர் வழங்குகிறது. துல்லியமான சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் காலாவதியான அல்லது இரட்டைப் பதிவுகளைச் சரிசெய்தல் ஆகியவற்றின் மூலம் அதன் நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும்.வழிகாட்டும் கொள்கை ஒன்றுதான்- வாக்குச்சீட்டின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது; தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையையும் உறுதிப்படுத்துவது.
இறந்தவர்கள், இடம் மாறிப் போனவர்கள், போலி வாக்காளர்கள் ஆகியோர் எஸ்ஐஆர் மூலம் அகற்றப்பட்டு, சரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதை எதிர்ப்பவர்கள், கள்ள வாக்குகள் மூலம் தங்களது அரசியல் வெற்றியைக் கட்டமைத்தவர்கள். அதனால்தான் எஸ்ஐஆர் என்றால் பதறுகிறார்கள். ஆடு நனைகிறதே என்று கண்ணீர் வடித்ததாம் ஓநாய்!
கட்டுரையாளர்: முன்னாள் ஆளுநர் மற்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

