அக்னிவீரர்களுக்கு அங்கீகாரம்!
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட 'அக்னிவீர்' திட்டம், இந்தியாவின் ராணுவ ஆள்சேர்ப்பு கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியில் ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது.

அக்னிவீரர்கள் - கோப்புப்படம்
- அபய் கிருஷ்ணா
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட 'அக்னிவீர்' திட்டம், இந்தியாவின் ராணுவ ஆள்சேர்ப்பு கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சியில் ஒரு வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. இளமையான, துடிப்பான, தொழில்நுட்பத்துக்கேற்ப மாறக்கூடிய மற்றும் போருக்குத் தயாராக இருக்கும் பாதுகாப்புப் படையை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த முன்முயற்சி, இளம் தேசபக்தர்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையிலான உறவை அடிப்படையிலேயே நவீனமயமாக்கியது.
அக்னிவீரர்களின் முதல் தொகுப்பினர் தங்களது நான்காண்டு காலப் பணியை நிறைவு செய்யும் நிலையில், இரண்டாண்டு கால இரண்டாவது பணிக்காலம் என்ற உருமாற்றும் சீர்திருத்தத்தை இந்திய அரசு இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த விரிவாக்கப்பட்ட கட்டமைப்பு தேசிய பாதுகாப்புத் தேவைகள், இளைஞர்களின் விருப்பங்களின் இணக்கமான கலவையாக விளங்குகிறது. பணிக்கால விருப்பங்களை நீட்டிப்பதன் மூலமும், நிதித் தொகுப்புகளை உயர்த்துவதன் மூலமும், பணிமூப்பைப் பாதுகாப்பதன் மூலமும், நிரந்தரப் படையில் 100 சதவீதம் இணைவதற்கான தெளிவான பாதைகளைத் திறப்பதன் மூலமும், மேம்படுத்தப்பட்ட 'அக்னிவீர்' திட்டம் பதிலளிக்கக்கூடிய, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் இளைய தலைமுறைக்கு உகந்த கொள்கை வகுப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
2022-ஆம் ஆண்டின் அசல் கட்டமைப்பின் கீழ், ஆள்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் நான்காண்டு காலப் பணியில் சேர்ந்தனர். அதன் பிறகு தகுதியான அக்னிவீரர்களில் 25% பேர் நிரந்தரப் படையில் இணைவதற்கு தேர்ந்தெடுக்கப்பட இருந்தனர். அக்னிவீரர்களின் முழுமையான நான்காண்டு கால மதிப்பாய்வைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற வீரர்கள் தங்களது உச்சகட்ட செயல்பாட்டுத் திறனை எட்டும் நேரத்திலேயே அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளுமாறு ராணுவத் தலைமை பரிந்துரைத்தது.
இருப்பினும், 75% பேர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவர்களுக்கு இரண்டாண்டு காலப் பணி நீட்டிப்பு வழங்குவதன்மூலம் இந்தத் தொலைநோக்குப் பார்வையைச் செயல்படுத்த அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது. மேம்படுத்தப்பட்ட இந்த அமைப்பு தடையற்ற, கட்டமைக்கப்பட்ட மற்றும் இரண்டு அடுக்கு முன்னேற்றத்தை உருவாக்குகிறது.
அடிப்படையான நான்காண்டு காலப் பணி தடையின்றித் தொடர்கிறது. இந்தப் பணிக்காலத்தின் முடிவில், விருப்பமுள்ள மற்றும் தகுதியான அக்னிவீரர்களில் 25% பேர் இந்திய ஆயுதப் படைகளின் நிரந்தரப் படையில் நேரடியாக இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து பணியாற்ற விரும்பும் மீதமுள்ள 75% அக்னிவீரர்களுக்கு, புதிய இரண்டாண்டு காலப் பணி வாய்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது; பின்னர், இந்த இரண்டாவது பணிக்காலத்தை நிறைவு செய்தவுடன், புறநிலைத் தேர்வு அளவுகோல்களை நிறைவு செய்யும் விருப்பமுள்ள அனைத்து அக்னிவீரர்களுக்கும் நிரந்தரப் படையில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு, இந்தக் கட்டமைப்பு மேம்பாடு பயிற்சி பெற்ற ராணுவ திறமைகள் வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்து, அர்ப்பணிப்புள்ள ஒவ்வொரு அக்னிவீரருக்கும் நீண்டகால நிரந்தர ராணுவப் பணியை நோக்கிய முழுமையான, அடையக்கூடிய பாதையை வழங்குகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களை முன்கூட்டியே வெளியேற அனுமதித்து வீணாக்கும் செயல்பாட்டுச் சிக்கலுக்கு இது தீர்வு காண்கிறது.
மேம்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் இளம் வீரர்களுக்கு நிதி, தொழில் மற்றும் தனிப்பட்ட நன்மைகளையும் வழங்குகிறது. இதன்மூலம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்குச் சிறந்த வெகுமதி அளிக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இரண்டாவது பணிக்காலத்தின்போது, அக்னிவீரர்கள் பொருந்தக்கூடிய படிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட நிலையான மாதாந்திர ஊதியத் தொகுப்பைப் பெறுவார்கள். பணி நீட்டிப்பின் முதல் ஆண்டில் மாதத்துக்கு ரூ. 43,500 மற்றும் இரண்டாம் ஆண்டில் மாதத்துக்கு ரூ. 47,500 வழங்கப்படும்.
இரண்டாவது பணிக்காலத்தின் போது 'சேவா நிதி' தொகுப்புக்கான அரசின் பங்களிப்பு மாதாந்திர ஊதியத் தொகுப்பில் 70% என்ற ஈர்க்கக்கூடிய அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிவிலியன் வாழ்க்கைக்குத் திரும்பத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, திரட்டப்பட்ட வட்டி நீங்கலாக, வருமான வரி விலக்கு பெற்ற ரூ. 10.92 லட்சம் சேவா நிதித் தொகுப்பு கிடைக்கும்.
போர் நடவடிக்கைகள் அல்லது பணியின்போது உயிரிழக்கும் ஓர் அக்னிவீரரின் குடும்பம்/நெருங்கிய உறவினர்களுக்கு ஒருமுறை மொத்த இழப்பீட்டுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. பங்களிப்பு இல்லாத ஆயுள் காப்பீடு ரூ. 48 லட்சம், கருணைத் தொகை இழப்பீடு ரூ. 44 லட்சம், நான்காண்டு காலப் பணியில் மீதமுள்ள பணியாற்றாத காலத்துக்கான முழு ஊதியம் மற்றும் எதிர்பார்க்கப்படும் சேவா நிதிப் பங்களிப்பு உள்பட கூடுதல் மானியங்கள், ஆயுதப் படைகள் போர் உயிரிழப்பு நிதி போன்ற ஆதாரங்களில் இருந்து சுமார் ரூ. 8 லட்சம் மற்றும் நலச் சங்க மானியங்கள் மூலமாகக் கணிசமான உதவி வழங்கப்படும்.
இரண்டாவது பணிக் காலத்துக்குப் பிறகு நிரந்தரப் படையில் இணைத்துக் கொள்ளப்படும் அக்னிவீரர்கள், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரப் பணியில் சேர்ந்த தங்களது சக தொகுப்பினருக்கு அடுத்தபடியாக உடனடியாக நிலைநிறுத்தப்படுவார்கள். இது, அவர்களுக்குப் பின்னால் வரும் எந்தவொரு ஆள்சேர்ப்புத் தொகுப்பினருக்கும் அவர்கள் இளையவர்களாக ஆகாமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் பணி வளர்ச்சிப் பாதை, பதவி உயர்வு வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாக்கிறது.
அக்னிவீர் முன்முயற்சி நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆள்சேர்ப்பு எல்லையை விரிவுபடுத்தி, வெளிப்படையான மற்றும் தரப்படுத்தப்பட்ட தேர்வு முறையை உருவாக்கியுள்ளது. முக்கியமாக, ஆயுதப் படைகளின் பல்வேறு பிரிவுகளைப் பெண் அக்னிவீரர்களுக்குத் திறந்துவிட்டதன்மூலம் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் பெருமையுடன் சீருடை அணிய இந்தத் திட்டம் அதிகாரம் அளித்துள்ளது.
அக்னிவீர் திட்டத்தை நீட்டிப்பது என்பது ஆதார அடிப்படையிலான கொள்கை வகுப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பயிற்சி பெற்ற வீரர்களை ஆறு ஆண்டுகள் தக்கவைத்துக்கொள்வது போர் ஆயத்த நிலையையும் படைப் பிரிவின் வலிமையையும் கணிசமாக மேம்படுத்துகிறது என்று களத் தளபதிகளும் ராணுவ நிறுவனங்களும் தெரிவித்தபோது, நிர்வாகம் அதற்குச் செவிசாய்த்து நிறைவேற்றியுள்ளது.
அக்னிவீர் திட்டம் முதலில் தொடங்கப்பட்டபோது, குறுகிய காலத்தில் எட்டக்கூடிய பயிற்சித் தரங்கள் குறித்து ஆயுத படைகளுக்குள்ளேயே பலருக்குச் சந்தேகம் இருந்தது. எனவே, மொத்தமுள்ளவர்களில் சிறந்த பயிற்சி பெற்ற மற்றும் தகுதியான 25% பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ள அரசு சரியாக முடிவு செய்தது. இருப்பினும், இந்த அமைப்பில் நான்காண்டுகள் பயணித்த பிறகு, ஆயுதப் படைகளுக்குள் இருந்த அதே உயர்நிலை அதிகார வர்க்கம் அதிக அளவில் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பியது.
மீதமுள்ள 75% பேருக்குக் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் விருப்பப் பணிக்காலத்தை வழங்கியதன் மூலம், தனிநபர் திறன் மேம்பாட்டுக்கான கூடுதல் கால அவகாசத்தையும், நீண்டகாலப் பணியைத் தொடர்வதற்கான முழு விருப்பத்தையும் அளித்து, தொலைநோக்குப் பார்வையுடனும் புதுமையுடனும் செயல்பட்ட பெருமை இன்றைய அரசையே சேரும்.
ஓர் அமைப்பாக ஆயுதப் படைகளின் முழுத் தேவையையும் நிறைவு செய்யும் அதே வேளையில், பணியைத் தொடர்வதற்கோ அல்லது பிற தொழில் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கோ தனிப்பட்ட அக்னிவீரர்களுக்கு இது முழு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அக்னிவீர் என்பது வெறும் வாழ்க்கைத் தொழிலை உருவாக்குவது மட்டுமல்ல, அது இந்தியாவின் பாதுகாப்பையும் விதியையும் வடிவமைக்கிறது.
கூர்க்காக்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். 1815-1947 காலகட்டத்தில் அவர்கள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றினர். சுதந்திரத்துக்குப் பிறகு, காத்மாண்டுடனான நல்லுறவை உறுதி செய்வதற்காக நேபாள வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டது.
இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளாக, நேபாளத்திலிருந்து கூர்க்கா வீரர்கள் எவரும் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், அக்னிவீர் திட்டம் நான்காண்டுகள் மட்டுமே பணியை வழங்கியது. அதன் பிறகு பயிற்சி பெற்ற நேபாள வீரர்கள் எங்கே செல்வார்கள் என்பதால் அது அர்த்தமுள்ளதாக இல்லை. இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றத்தை, ஆட்சேர்ப்பு செயல்முறையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்பாக நேபாள அரசு எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறோம்.
'2047-ஆம் ஆண்டின் வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற எதிர்காலத்தை நோக்கி இந்தியா நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லும்போது, அதன் எல்லைகள் இளமையான, உடற்தகுதி வாய்ந்த, தொழில்நுட்ப அதிகாரம் பெற்ற மற்றும் ஆழமாகப் போற்றப்படும் ஒரு படையால் பாதுகாக்கப்படுகின்றன.
நமது இளம் அக்னிவீரர்களுக்குச் சொல்லப்படும் செய்தி தெளிவானது- 'நன்றியுள்ள ஒரு தேசம் உங்களுக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறது' என்பதை அறிந்து, தலைநிமிர்ந்து பெருமையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.
கட்டுரையாளர்:
இந்திய ராணுவ முன்னாள் தளபதி,
தென்மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

