திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

ஏ.ஐ.யின் தாக்கமும் தேக்கமும்...

மெமரி சிப்களின் தேவை உயர்ந்த வேகத்துக்கு அவற்றின் உற்பத்தி அதிகரிக்காததால் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு மின்னணுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

பிரதிப் படம்

Updated On :

முனைவர் அ.ஜ. ஹாஜா முகைதீன்

இந்தியாவில் அறிதிறன்பேசிகள், கணினிகள், மடிக் கணினிகள், போன்ற மின்னணுப் பொருள்களின் விலை 3 முதல் 5% வரை உயர்ந்துள்ளன. இதற்கு இறக்குமதி வரிகள் அதிகரித்திருப்பது மட்டும் காரணம் அல்ல. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியிருக்கிற புதிய பொருளாதார சூழ்நிலையும் காரணம். இந்த விலையேற்றத்துக்கு 'சிப்ஃபிளேஷன்' என அமெரிக்க முதலீட்டு வங்கியான 'மோர்கன் ஸ்டான்லி' பெயரிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தரவு மையங்களை அமைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும், தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் உலகம் முழுவதும் அதிக அளவில் முதலீடுகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அதிக அளவிலான தகவல்களைச் சேமித்து செயலாக்குவதற்குத் தேவையான கிளவுட் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.

பிரம்மாண்டமான தரவு மையங்களை அமைப்பதற்கு, அதிவேகச் செயலிகள், தகவல் பரிமாற்றக் கருவிகள், மின்சாரம் மற்றும் குளிரூட்டும் வசதிகள் ஆகியவை அதிக அளவில் தேவைப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தரவு மையங்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட 'மெமரி சிப்கள்' (நினைவகச் சில்லுகள்), மற்றும் டிராம் எனப்படும் செமி கண்டக்டர் சிப்கள் (குறைகடத்திச் சில்லுகள்) அதிகமாக தேவைப்படுகின்றன.

டிராம் என்பது மின்னணுச் சாதனங்கள் இயங்கும்போது, அவற்றுக்குத் தேவையான தரவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் ஒரு வகையான நினைவகம் ஆகும். கணினி ஒரு வேலையைச் செய்யும்போது, அதற்குத் தேவையான தகவல்கள் தற்காலிகமாக இந்த நினைவகத்தில் வைக்கப்படுகின்றன. அதிக டிராம் நினைவகம் கொண்ட சாதனங்கள் ஒரே நேரத்தில் பல செயலிகளைச் சீராகக் கையாள உதவும்.

இத்தகைய செமி கண்டக்டர் சிப்களுக்கான தேவை அதிகரிப்பே அவற்றின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. சிப்புகளின் விலை உயர்ந்ததால், அவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்னணுப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ள சூழ்நிலையே 'சிப்ஃபிளேஷன்' என்று அழைக்கப்படுகிறது. தயாரிப்பு செலவுகள் உயர்வதால் ஏற்படுகின்ற செலவு பணவீக்கத்தின் ஒரு பகுதியாக 'சிப்ஃபிளேஷன்' அமைந்துள்ளது.

திறன்மிக்க செமி கண்டக்டர்களைத் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அதிக முதலீடு வேண்டும். சிறப்பு தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பப் பணியாளர்கள் வேண்டும். செமி கண்டக்டர்கள் தயாரிப்புக்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருள்கள் விநியோகம் குறைவாகவே உள்ளதுடன், புவிசார் அரசியல் பிரச்னைகளால் சரியான நேரத்தில் கிடைக்கும் வகையில் அதன் விநியோகச் சங்கிலி இல்லை.

சிப்புகளுக்கான தேவை திடீரென அதிகரித்தாலும் அவற்றை உடனடியாக தயாரிக்க முடியாத சூழ்நிலையில் செமி கண்டக்டர்களின் விநியோகத்தில் ஏற்படும் பற்றாக்குறையால், அவற்றின் விலை உயர்வதுடன் மட்டுமல்லாமல், அவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்னணுப் பொருள்களின் உற்பத்திச் செலவும் அதிகரிக்கிறது.

செயற்கை நுண்ணறிவுக்கான தரவு மையங்களுக்கு செமி கண்டக்டர் உள்ளிட்ட உயர் செயல்திறன் கொண்ட 'மெமரி சிப்புகள்' அதிகம் தேவைப்படுவதால், நிகழாண்டு உலகில் தயாரிக்கப்படும் டிராம் செமி கண்டக்டர்களில் 70 சதவீதத்தை செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களே பயன்படுத்தும் என 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' கணித்துள்ளது.

அதிகமாக கொள்முதல் செய்யும் தரவு மைய நிறுவனங்களின் 'ஆர்டர்'களுக்கு சிப் தயாரிப்பு நிறுவனங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. இதனால், 'மெமரி சிப்'களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டின் பெரும் பகுதியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தரவு மையங்களுக்கு தேவைப்படும் சிப்புகளை தயாரிப்பதில் பயன்படுத்துகின்றன.

இதன் காரணமாக, கணினிகள், மடிக்கணினிகள், அறிதிறன்பேசிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருள்களுக்குத் தேவையான சிப்களின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மேலும் தங்களின் இயந்திர தொழில்நுட்பத்தை வெவ்வேறு வகையான சிப்களை தயாரிப்பதற்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய நிலையில் உள்ளன. தரவு மையங்களுக்கான சிப்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மின்னணுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் சிப்கள் தேவைப்படுகின்றன. ஆனால், கைவசம் உள்ள தயாரிப்பு சாதனங்களைக் கொண்டு அதிகரித்துள்ள சிப்களின் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை. மெமரி சிப்களின் தேவை உயர்ந்த வேகத்துக்கு அவற்றின் உற்பத்தி அதிகரிக்காததால் சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டு மின்னணுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு விரிவாக்க வேகத்தைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்றாக செமி கண்டக்டர்களின் விலையும் விநியோகமும் அமையக்கூடும். செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிதாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள், லாபத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி முதலீடுகளின் வளர்ச்சியில் பாதிப்பை உருவாக்கலாம்.

இந்திய மின்னணுப் பொருள்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைப்பதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு தேவையான அடித்தளத்தை உருவாக்கும் வகையில் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் நிறுவனங்களுடன் தொழில்நுட்பக் கூட்டாண்மைகள் மற்றும் 'இந்தியா செமி கண்டக்டர்கள் மிஷன் 2.0' போன்ற நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

'மெமரி சிப்'கள் மின்னணுப் பொருள்களின் விலையை அதிகரித்ததுடன் மட்டுமல்லாமல், கல்வி மற்றும் தொழில் முறை பணிகளில் ஈடுபடுவோர் பயன்படுத்துவதற்கும் கூடுதல் செலவை ஏற்படுத்தி எண்மப் பொருளாதாரத்தில் பங்கேற்பதற்கான தடையை ஏற்படுத்தும் பொருளாதார நிகழ்வாக 'சிப்ஃபிளேஷன்' உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.