ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

எச்சரிக்கிறது நுண்ணறிவு!

இந்தியாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

AI

செயற்கை நுண்ணறிவு. - பிரதிப்படம்

Published On :

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சார்ந்த முயற்சிகளைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும், அந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டு மக்களுக்கான சேவைகள் எளிமையாக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டியது அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு மிகப் பெரிய தொழில்நுட்பப் புரட்சி என்று கொண்டாடிய உலகம், இப்போது அதன் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்து வருகிறது. ஏ.ஐ.யின் எதிர்கால அபாயம் குறித்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஏ.ஐ. மனிதகுலத்துக்கு எதிரான சக்தியாக மாறும் அபாயம் உள்ளது என்பதால், அந்த தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மட்டுப்படுத்த வேண்டும் அல்லது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கை.

மிகவும் சக்திவாய்ந்த "ஃபிரான்டியர் ஏ.ஐ.' மாதிரிகளால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களான ஓபன் ஏ.ஐ. மற்றும் ஆந்த்ரோபிக் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஆய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் இந்தப் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தீதையும், நன்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் ஏ.ஐ. தவிர்க்க முடியாது என்றாலும், அதற்குக் கட்டுப்பாடு அவசியம் என்பதை மறுக்க முடியாது.

இந்தியாவில் ஏ.ஐ. தொடர்பான முயற்சிகளைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான ஏ.ஐ. பணிகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் பயன்பாடுகளையே மையமாகக் கொண்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஏ.ஐ.க்கு கட்டுப்பாடு தேவை என்று வாதிடுவோர், பெரும்பாலும் 'ஃபிரான்டியர் மாடல்கள்' எனப்படும் மிகவும் மேம்பட்ட ஏ.ஐ. மாதிரிகளை உருவாக்குவதையே எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் சக்திவாய்ந்த 'பிராண்டியர் ஏ.ஐ.' மாதிரிகள் இல்லை. மாறாக, சிறிய மற்றும் பெரிய அளவில் மொழி அடிப்படையிலான ஏ.ஐ. மாதிரியே அதிகமாக பயன்பாட்டில் உள்ளது.

அரசு சேவைகள், மருத்துவம், பொழுதுபோக்கு மற்றும் சேவைத் துறைகள் உள்ளிட்டவற்றில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உருவாக்கப்பட்ட ஏ.ஐ.க்களின் கலப்பு மாதிரியே.

ஏ.ஐ. மூலம் பொய் தகவல் பரவல், மோசடி, தனியுரிமை மீறல்கள், சக்திவாய்ந்த ஏ.ஐ. அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் மனிதர்கள் வழங்கிய உத்தரவுகளின் வரம்பை மீறி ஏ.ஐ. செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகள் குறித்து கவலைகள் அதிகரித்து வருவதையும் அரசு உணர்ந்துள்ளது.

ஏ.ஐ.-யை மேம்படுத்துவதில் தவறுகள் நேர்ந்தால் அதை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என அமைச்சகம் தெரிவித்தாலும் இந்தப் புதிய 'தொழில்நுட்ப அரக்கன்' குறித்த அச்சத்தை முற்றிலும் புறந்தள்ள முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

ஏ.ஐ.யால் நீரும், மின்சாரமும், நிலமும் ஆக்கிரமிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் ஏ.ஐ.யைப் பயன்படுத்தும்போது அந்தச் செயல்பாடு நமது கணினியுடன் மட்டும் அடங்கிவிடுவதில்லை.

மாறாக, நமது கேட்புகள் அனைத்தும் நீண்ட தொலைவில் உள்ள தரவு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவற்றைப் பகுப்பாய்வு செய்து அங்கு சேமிக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளுடன் இணைத்து முடிவுகள் உருவாக்கப்பட்டு நமக்கு தீர்வுகள் அனுப்பப்படுகின்றன.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யும்போது தரவு மையங்கள் பெருகும். விரைவில் உலகம் முழுவதும் அதற்கு சுமார் 15,000 ச.கி.மீ. நிலம் தேவையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள் குவிந்துவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தற்போது வரையில் முக்கியமான மூன்று திட்டங்களுக்கு சுமார் 3,500 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; நிலத் தேவை இன்னும் அதிகரிக்கலாம்.

அதேபோல், பெரிய தரவு மையங்களில் இணைந்து செயல்படும் பல ஆயிரம் கணினிகளிலிருந்து வெளியேறும் வெப்பத்தைத் தணித்து அவற்றை குளிர்விக்க மின்சாரமும், நன்னீரும் தேவை. இந்தியாவில் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் தரவு மையங்களுக்கு மட்டும் சுமார் 26.3 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் என்பது 1000 மெகாவாட்) மின்சாரம் தேவையாக இருக்கும்; இது நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 6.7 சதவீதம் ஆகும்.

தரவு மையங்களை குளிர்விக்க உலகம் முழுவதும் அடுத்த சில ஆண்டுகளிலேயே நன்னீர் தேவை சுமார் 130 கோடி மக்களின் நீர்த்தேவைக்கு இணையாக அதிகரிக்கும் என்ற கணிப்பு அதிர்ச்சி அடைய வைக்கிறது.

விசாகப்பட்டினத்தில் அமைய உள்ள மையங்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் சுமார் 2 முதல் 3 டி.எம்.சி. நன்னீர் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. மேல்மட்ட நீர் இருப்பு இல்லாத இடங்களில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும். இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் அவசியம். இனிமேல் ஏ.ஐ.யைத் தவிர்க்கவும் முடியாது. ஆனால், நாம் ஒன்றைப் பெறும்போது, எதை இழக்கிறோம் என்பதை ஆராய வேண்டும்.

மீட்டெடுக்க முடியாதவற்றை இழக்க வேண்டிய நிலை வரும்போது, ஒரு முறைக்கு இரு முறை அல்ல - பலமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

படுபயனும் பார்த்துச் செயல்.

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

திருக்குறள் (எண் 676) அதிகாரம்: வினைசெயல்வகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.