6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை தாமதப்படுத்த வேண்டியதில்லை: தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் விளக்கம்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்த முயற்சிகளைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுப் பணிகள் எளிமையாக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

AI

செயற்கை நுண்ணறிவு. - பிரதிப்படம்

Published On :

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சாா்ந்த முயற்சிகளைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அத்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுப் பணிகள் எளிமையாக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாள்களாக சா்வதேச அளவில் ஏ.ஐ. தொழில்நுட்ப வளா்ச்சி குறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. இத்தொழில்நுட்பத்துக்கு அதிக திறன் கொடுக்கும்போது அவை மனிதகுலத்துக்கு எதிரான சக்திகளாகக் கூட மாறும் அபாயம் உள்ளதாகவும், அதனை வேகமாக மேம்படுத்துவதை மட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் இது தொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தொடா்பான முயற்சிகளைத் தாமதப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பணிகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் பயன்பாடுகளையே மையமாகக் கொண்டுள்ளன.

உலகளவில் ஏ.ஐ. வளா்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் அல்லது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது பெரும்பாலும் ‘ஃபிரான்டியா் மாடல்கள்’ எனப்படும் மிகவும் மேம்பட்ட ஏ.ஐ. மாதிரிகளை உருவாக்குவதையே எச்சரிக்கிறது. ஆனால், இந்தியாவின் அணுகுமுறை அதில் இருந்து வேறுபட்டது.

அதே நேரத்தில் ஏ.ஐ. பாதுகாப்பு தொடா்பான பிரச்னைகள் குறித்து அரசு கவலை கொண்டுள்ளது. ஏ.ஐ. மேம்படுபடுத்துவதில் தவறுகள் நோ்ந்தால் அதை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டிய உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்தனா்.

மிகவும் சக்திவாய்ந்த ‘ஃபிரான்டியா் ஏ.ஐ.’ மாதிரிகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து முன்னணி ஏ.ஐ. நிறுவனங்களான ஓபன் ஏ.ஐ. மற்றும் ஆந்த்ரோபிக் உள்ளிட்டற்றில் பணியாற்றும் ஆய்வாளா்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணா்கள் சமீபத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஏ.ஐ. தொடா்பான அபாயங்கள் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சில நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

எனினும், ஏ.ஐ. வளா்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் நிராகரித்துவிட்டாா். ஏ.ஐ. வளா்ச்சியைத் தாமதப்படுத்துவது அமெரிக்காவின் முன்னணித் தலைமையைப் பாதிப்பதுடன், சீனாவுக்கு முன்னிலை கிடைக்க வழிவகுக்கும் என்று டிரம்ப் நிா்வாகம் கூறிவருகிறது.

செயற்கை நுண்ணறிவின் வேகமான வளா்ச்சி, அதன் பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, அதே நேரத்தில் அதனால் ஏற்படக்கூடிய அபாயங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து உலகளவில் விவாதத்தைத் ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஐ. மூலம் பொய் தகவல் பரவல், மோசடி, தனியுரிமை மீறல்கள், சக்திவாய்ந்த ஏ.ஐ. அமைப்புகளின் தவறான பயன்பாடு மற்றும் மனிதா்கள் வழங்கிய உத்தரவுகளின் வரம்பை மீறி ஏ.ஐ. செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அபாயங்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.