தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

அதிகாரத்தின் மனித முகம்

அலுவலகத்துக்கு வரும்போது அதிகாரிகள் கடுமை என்ற மேல்கோட்டை கழற்றி வைத்துவிட்டு மலர்ந்த வதனத்துடன் நுழைந்தால் நன்றாக இருக்கும் என்பதைப் பற்றி...

அதிகாரத்தின் மனித முகம்! - Photo | Express Illustration

Published On :7 செப்டம்பர் 2026, 3:14 am IST

அதிகாரி என்பவர் அதிகாரத்தை சட்டபூர்வமாக செயல்படுத்துபவர். அதிகாரம் என்பது ஆதிக்கமல்ல; அது சேவையை செய்வதற்கான உரிமம். அதிகாரத்தில் உள்ளவர் விதிமுறைகளைக் காப்பவர் மட்டுமல்ல, விவேகத்துடன் முடிவெடுப்பவர். ’கனிவான அதிகாரி' என்பது நிர்வாகவியலில் மிக உன்னதமான ஓர் ஆளுமையைக் குறிக்கிறது.

சட்டம் மற்றும் விதிமுறைகளின் வறண்ட எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் மனித முகத்தை, குறிப்பாக இதயத்தை இவர்களால் பார்க்க முடியும். தங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களை இயந்திரங்களாகப் பார்க்காமல், அவர்களுடைய குடும்பச் சூழலையும், அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு மனிதர்களாக நடத்துவார்கள். தன் கீழ் வேலை செய்பவர்களும் தங்கள் நிறுவனத்துக்கு அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய விதத்தில் அவர்களிடம் இருக்கும் ஆற்றலையும், திறமையும் வெளிக்கொண்டு வருவார்கள்.

ஊழியர்கள், அதிகாரிகளை வியந்து நோக்க வேண்டும். அதிகாரிகள் எத்தகைய மனப் போக்குகளையும் விழுமியங்களையும் அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துகிறார்களோ, அவற்றைத்தான் சக அலுவலர்களும் பின்பற்றுவார்கள். நம் வாழ்வில் குறுக்கிடும் எல்லோருக்குமே நமக்குத் தெரியாத ஏதோ ஒரு பிரச்னை நிச்சயம் இருக்கும். ஆகவே, தேவையற்ற கடுமையைக் குறைத்துக் கொள்ளலாம்; அவர்களைக் கனிவுடன் நடத்தினால், அவர்கள் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பார்கள்.

ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் ஒரே குடும்பம்போல் உணர்வார்கள்; அங்கே இனிமையான சூழல் நிலவும். ஒருவர் தன் 25 வயதில் பணியில் சேர்ந்தால், 60 வயதில் ஓய்வு பெறுகிறார். 35 நீண்ட நெடிய ஆண்டுகள் பணிபுரிகிறார். அவர்களின் வாழ்நாளின் முக்கிய கட்டம் அலுவலகத்தில் கழிகிறது. அவர்கள் வீட்டுக்குப் போவது, உண்டு உறங்க மட்டுமே.

ஆகவே, அலுவலகம் மன அமைதி தரும் இடமாக இருக்க வேண்டும். பணிச் சுமை காரணமாக சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நவீன சமூகத்தில் மிகவும் கவலைக்குரிய, ஆழமான ஆய்வுக்குரிய ஒரு மனிதவியல் சிக்கல் என்று இதைக் கூறலாம். தொடர்ந்து நீடிக்கும் அதிக வேலைப்பளு, ஓய்வின்மை மற்றும் இலக்குகளை எட்ட வேண்டிய கட்டாயம் ஆகியவை ஒருவரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் முற்றிலும் சோர்வடையச் செய்கின்றன.

வேலையை இழந்து விடுவோமோ என்ற பயம் சட்டென வாழ்க்கையை முடித்துக் கொள்ள வைக்கிறது. தலைமை என்பது அரவணைப்பில் இருக்கிறது. சின்னச் சின்ன பாராட்டுதல்களும், ஒரு கனிவான சொல்லும் ஓர் ஊழியரின் அன்றைய நாளை மட்டுமல்ல, அவரது வாழ்வின் மீதான நம்பிக்கையையே மீட்டுத் தரும் வல்லமை கொண்டவை. அதிகாரத்தின் அடிப்படையில் பெறப்படும் உழைப்பு தற்காலிகமானது.

அதில் நம்பகத்தன்மை இருக்காது. பரிவின் மூலம் பெறப்படும் ஈடுபாடு நிரந்தரமானது. கனிவு என்பது பலவீனத்தின் அடையாளமல்ல, அது தன்னம்பிக்கையின் உச்சகட்ட வெளிப்பாடு. தன் அதிகாரத்தின் மீது தெளிவும், ஊழியர்களின் மீது அன்பும் கொண்ட ஒரு தலைமையால் மட்டுமே கனிவாக இருக்க முடியும். ஆண்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்; பெண் அதிகாரிகள் மென்மையாக இருப்பார்கள் என்று நம்மிடையே நிலவும் எண்ணம் தவறானது.

பெண்களும் கடுமை காட்டுவார்கள். இது தனிப்பட்ட குணம்; பாலினம் சார்ந்தது அல்ல. பலசமயம் ஆண் அதிகாரிகளிடம் வேலை செய்வது எளிது என்று எண்ண வைத்து விடுகிறார்கள் சில பெண் அதிகாரிகள். இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்னையாகக்கூட இருக்கலாம். தான் பெண் என்பதால், அனைவரையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வாகக்கூட இருக்கலாம்.

ஒரு நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக ஒரு பெண் பணிபுரிகிறார். அவருடைய அதிகாரி ஒரு பெண். அந்தப் பெண் அதிகாரி மிகவும் கடுமை காட்டுவதாக புலம்புகிறார். அத்தனைக்கும் அந்தப் பெண் வேலைகளை நேர்த்தியாக செய்யக் கூடியவர். அவருடைய வேலையில் ஓர் ஒழுங்கும் இசைவும் இருக்கும். தான் அங்கு தற்காலிகம்தான் என்று தெரிந்தும் அவர் தன் முழு உழைப்பையும் போடுகிறார்.

போட்டித் தேர்வுகளுக்கும் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேலை நேரம் முடிந்த பின்னும் அந்தப் பெண்ணை அனுப்புவதில்லை; மிகவும் தாமதமாக அனுப்புகிறார்.

அந்தப் பெண் வெகு தொலைவு செல்ல வேண்டும். அனுமதியோ, விடுப்போ எளிதில் கொடுக்க மாட்டார். விடுப்பில் இருந்தாலும் வேலை உள்ளது என்று வரவழைப்பார். அது மட்டும் இல்லாமல் அந்த அதிகாரி எல்லோர் மீதும் கோபப்படுவார். ஒருவரை பலர் முன்னிலையில் சாடுவார். குற்றம் சாட்டப்பட்டவர் வாய் திறந்து தன் பக்க நியாயத்தைக் கூற விட மாட்டார். ஆகவே, அவரை அணுகவே அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள். அவர் கொஞ்சம் தன்னை மாற்றிக்கொண்டால், அங்கு பணிச்சூழல் வண்ணம் பூசிக் கொள்ளும். ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் என்பதுபோல இதிலும் பல கோணங்கள் உள்ளன.

பெண் அதிகாரி என்றால் சிலருக்கு அலட்சிய மனநிலை உண்டு. அவரை விமர்சிப்பார்கள். ஆகவே, பெண்கள் கூடுதல் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டியுள்ளது. பெண் அதிகாரிகளின் முடிவெடுக்கும் திறன், கடினமான சூழல்களைக் கையாளுதல், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வல்லமை குறித்து தொடக்கத்திலேயே விமர்சனம் வரும். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தோற்றம், உடை ஆகியவை அலசப்படும். எனவே, சிலர் அளவுக்கு அதிகமாகக் கடுமை காட்டுகிறார்கள்.

ஒவ்வொருவரும் ஒரு ரகம். அண்மையில் படித்தது- ஒரு மூத்த பெண் அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், உதவியாளர் அவரது இடதுபுறத்தில் நின்றுகொண்டு மேஜையின் வலதுபுறத்தில் தேநீர் கோப்பையை வைக்க, அதை கவனித்து அதிகாரி கடும் கோபத்துடன் பலர் முன்னிலையில் 'டேபிள் மேனர்ஸ் இருக்கா?', ‘அறிவிருக்கா' என்று பொரிந்து தள்ளினார். அந்த உதவியாளர் முகம் சிவக்க, கண்கள் கலங்க அங்கிருந்து நகர்ந்தார். மற்றொரு நிகழ்வில் ஒரு பெண் அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓர் உதவியாளர் தேநீர் கோப்பையை வைத்தபோது, தேநீர் கொஞ்சம் சிதறி அந்த அதிகாரியின் துப்பட்டாவில் பட்டுவிட்டது.

அவர் சிறிதுகூட கோபப்படாமல் ’பரவாயில்லை' என்று கூறி விட்டார். அவரின் கனிவும் மனிதமும் அங்கே கோலோச்சி நின்றது. ஊழியர்களைப் பொருத்தவரை நிரந்தர ஊழியர்கள், தற்கால ஊழியர்கள், புற ஒப்படைப்பு ஊழியர்கள் என மூன்று பிரிவுகளில் உள்ளனர். நிரந்தர ஊழியர்களை அதிகம் விரட்ட முடியாது; புற ஒப்படைப்பு ஊழியர்களின் தலைமை வேறு; அவர்களைத் தட்டிக் கேட்க முடியாது; ஆக, தற்காலிக ஊழியர்களின் நிலைதான் திண்டாட்டம்.

பல ஆண்டுகளாக நிரந்தரமாக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு கடிந்து கொண்டாலும் அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. ஓர் அதிகாரியிடம் இவர்கள் குறித்துக் கேட்டபோது, அவர் தந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிரந்தரமாக்கி விட்டால் அவர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள்; கணக்குப் பார்ப்பார்கள்; ஊதியமும் அதிகம் தரவேண்டும்; ஆகவே, இப்படியே வைத்திருப்பதுதான் லாபம் என்றார்.

அலுவலர்களும் ஒரு துறைக்குப் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டவுடனேயே அவர் குறித்த அனைத்துத் தகவல்களையும் சேகரித்து விடுவார்கள். அவர் பின்புலம், அவர் குணம், பணம், குடும்பம், குலம், பலம், பலவீனம் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றபடி நடந்துகொள்வார்கள்.

சில அதிகாரிகள் பலாப்பழத்தை நிகர்த்தவர்கள்; பார்ப்பதற்குக் கடுமையானவராகத் தெரிவார்; ஆனால், அவர் மனம் இளகியதாக இருக்கும்; அலுவலர்களைத் திட்டுவார்; ஆனால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வாய்ப்பு தருவார். ’பொறுப்பு' எப்போதும் புன்னகையுடன் வளைய வர முடியுமா?. குதிரை வண்டி ஓட்டுபவர்கள் அவ்வப்போது சாட்டையை குதிரையின்மீது சொடுக்கினால் தானே அது வேகத்தைக் கூட்டும்?. தலைசிறந்த அதிகாரிகள் ஊழியர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் எல்லை மீறி பழக மாட்டார்கள்.

விதிகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்: பணிக்கு துல்லியமான நேரத்தில் வர வேண்டும்; கோப்புகள் நகர்வு மற்றும் திட்டங்களை முடிக்கும் காலக்கெடுவை கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள்; நிர்வாகத்தில் எந்தவித பாரபட்சமும் பரிந்துரைகளும் முறைகேடுகளும் நுழைவதை அனுமதிக்க மாட்டார்கள். இத்தகைய அதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெற வேண்டி அலுவலர்கள் உண்மையாக உழைப்பார்கள்.

அந்த அலுவலகத்தில் ஒழுங்கும் கண்டிப்பும் கட்டுப்பாடும் கனிவும் சம அளவில் இருக்கும். அலுவலக ஊழியர்களில் சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் மீது புகார் கூறிக்கொண்டே இருப்பார்கள். தலைமை துலாக்கோல்போல் எவர் பக்கமும் சாயாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

சிறந்த அதிகாரிகளிடம் பணிபுரிபவர்கள் வாழ்வின் விழுமியங்களை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறார்கள். அந்த அதிகாரி பணியிட மாற்றம் பெற்றுச் சென்றுவிட்டாலும், அவர் காட்டிய நிலையில் இருந்து பிறழாமல் பணிபுரிவார்கள்.

அலுவலகத்துக்கு வரும்போது அதிகாரிகள் கடுமை என்ற மேல்கோட்டை கழற்றி வைத்துவிட்டு மலர்ந்த வதனத்துடன் நுழைந்தால் மகிழ்ச்சிப் பூக்களின் சுகந்த மணம் அன்று முழுவதும் அங்கு வீசிக் கொண்டே இருக்கும்.

கட்டுரையாளர்: பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.