
வேலைவாய்ப்பு கல்வி கட்டாயம்
கல்வியில் தொழில் வழிகாட்டுதலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

வேலைவாய்ப்பு கல்வி கட்டாயம்... - பிரதிப் படம்
அனந்தபத்மநாபன்
பல தலைமுறைகளாகப் பல்கலைக்கழகப் பட்டம் என்பது எதிர்காலத்துக்கான நுழைவுச்சீட்டாகக் கருதப்பட்டது. கலை, அறிவியல் அல்லது வணிகவியல் பட்டம் என்பது கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் நிலையான வேலைக்கான நம்பிக்கையை அளித்தது. ஆனால், இந்தியப் பொருளாதாரம் மாறிவரும் நிலையில், வேலைகளின் தன்மையும் வேகமாக மாறுகிறது. இதனால், பட்டம் மட்டும் வேலைவாய்ப்புக்கான போதுமான பாதையா? என்ற கேள்வியை புறந்தள்ள முடியாது.
நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 'வளர்ந்த இந்தியா 2047-க்கான திறன் மேம்பாட்டை மறுபரிசீலனை செய்தல்' என்ற அறிக்கை, உயர் கல்வியில் கற்பிக்கப்படுவதற்கும் வேலைவாய்ப்புச் சந்தை எதிர்பார்ப்பதற்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியைச் சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார ஆய்வு 2024-25 தரவுகளை மேற்கோள் காட்டும் அறிக்கையின்படி, பட்டதாரிகளில் வெறும் 8.25 சதவீதம் பேர் மட்டுமே தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ற பணிகளில் உள்ளனர். பட்டதாரிகள் இடையேயான வேலையின்மை 13 சதவீதமாகவும், பட்டதாரிப் பெண்களிடையே 20.4 சதவீதமாகவும் உள்ளது. நாட்டின் மொத்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்த வேறுபாடு கவலைக்குரியது.
இந்தியாவில் படித்த இளைஞர்கள் அதிகமாக இருப்பது பிரச்னை அல்ல. அவர்களில் பலர் வேலைவாய்ப்பு, மேல்படிப்பு அல்லது தொழில் முன்னேற்றத்துக்கான தெளிவான பாதையின்றி கல்வியை முடிப்பதே உண்மையான சவால்.
நாட்டில் இளநிலைப் படிப்புகளில் சேர்ந்துள்ள 3.4 கோடி மாணவர்களில் 1.13 கோடி பேர் கலைப் பட்டப்படிப்பில் உள்ளனர். கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்தால் மாணவர் எண்ணிக்கை இரண்டு கோடியைத் தாண்டுகிறது என நீதி ஆயோக் கூறுகிறது.
கூடுதல் திறன் பயிற்சி இல்லாத பொதுவான இளநிலைப் பட்டதாரியின் தொடக்க மாத ஊதியம் சராசரியாக ரூ.22,000-ஆக உள்ளது. திறன் பயிற்சி பெற்றவருக்கு அது சுமார் ரூ.29,000. ஆண்டுக்கு 3.2 சதவீத ஊதிய உயர்வு தொடர்ந்தால், தொடக்கத்தில் உள்ள ரூ.7,000 மாத வித்தியாசம் பத்து ஆண்டுகளில் மொத்தமாக சுமார் ரூ.9.7 லட்சமாக மாறக்கூடும் என்று பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் தரவுகளை நீதி ஆயோக் மேற்கோள் காட்டுகிறது.
ஓர் இளைஞர் தனது பணிவாழ்க்கையைத் தொடங்கும்போது இது சிறிய வித்தியாசம் அல்ல. பொருளாதார சுதந்திரம், குடும்பப் பொறுப்புகள், சேமிப்பு மற்றும் மேல்படிப்பில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றை இது பாதிக்கக்கூடும்.
பொதுவான பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புடன் தொடர்பில்லாத பரந்த கல்வியாக மட்டும் வைத்திருப்பதற்குப் பதிலாக, தொழில் நிறுவனங்களின் தேவைக்கும் அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார வாய்ப்புகளுக்கும் ஏற்ப சிறப்புப் படிப்புகளை உருவாக்கலாம்.
கலைப் படிப்பில் விருந்தோம்பல் அல்லது சுற்றுலா போன்ற துறைகளுக்கான வாய்ப்புகளையும், அறிவியல் படிப்பில் பயன்பாட்டு தொழில்நுட்பத்தையும், வணிகவியல் படிப்பில் தரவுப் பகுப்பாய்வு மற்றும் எண்ம வணிகத்தையும் இணைக்கலாம்.
இதனால் பல்கலைக்கழகங்கள் வேலைப் பயிற்சி மையங்களாக மாற வேண்டியதில்லை. கல்வி அறிவுக்கும் அதன் நடைமுறைப் பயன்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை மட்டும் வலுப்படுத்த வேண்டும்.
கல்வியின் நோக்கம் முதல் வேலைக்குத் தயார்படுத்துவது மட்டுமல்ல. சிந்திக்கும் திறன், படைப்பாற்றல், அறிவார்ந்த ஆர்வம், சமூகப் புரிதல் ஆகியவற்றையும் பல்கலைக்கழகக் கல்வி வளர்க்க வேண்டும். பயிற்சியுடன் இணைந்த பட்டப்படிப்புகள் மற்றும் வேலை சார்ந்த பட்டப்படிப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று நீதி ஆயோக் வலியுறுத்துகிறது.
ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளின் அனுபவம் இங்கு ஒரு வரையறுக்கப்பட்ட பாடத்தை வழங்குகிறது. கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு இணைந்து செயல்படும்போது பணியிடப் பயிற்சி கல்வியின் மதிப்புமிக்க பகுதியாக மாற முடியும் என்பதை அவை காட்டியுள்ளன.
இந்தியா அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை. ஆனால், கல்வியும் தொழில் நிறுவனங்களும் தனித்தனியாக இயங்கக்கூடாது என்ற அடிப்படைக் கொள்கை இந்தியாவுக்கும் பொருந்தும்.
எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு உள்ளது, நிறுவனங்கள் எத்தகைய திறன்களை எதிர்பார்க்கின்றன, ஊதியம் எவ்வளவு, எந்த கூடுதல் திறன்கள் வாய்ப்புகளை மேம்படுத்தும் என்பன போன்ற தகவல்கள் பல மாணவர்களுக்குத் தெளிவாகக் கிடைப்பதில்லை. எனவே, கல்வியில் தொழில் வழிகாட்டுதலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
மின்னணுத் திறன் அடையாளப் பதிவு, பயிற்சி, சான்றிதழ்கள், பயிற்சிப் பணிகள் மற்றும் பணியிட அனுபவத்தை ஒரே இடத்தில் பதிவு செய்ய உதவும். மேலும், ஆறாம் வகுப்பு முதலே வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் திறன்களை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் நீதி ஆயோக் பரிந்துரைக்கிறது.
இதில் மின்னணு அறிவு, நிதி அறிவு, தகவல் தொடர்பு, குழுப் பணி, தொழில்முனைவு போன்றவை அடங்கும். இதன் நோக்கம் சிறுவயதிலேயே தொழிலைத் தேர்வு செய்ய வற்புறுத்துவது அல்ல; வேலை உலகத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் தங்களது ஆர்வங்களையும் திறன்களையும் அடையாளம் காண உதவுவதாகும்.
பெண்களுக்கு இதில் சிறப்பு கவனம் தேவை. பயிற்சியும் வேலைவாய்ப்பும் பெண்களுக்கு நடைமுறையில் எளிதாகக் கிடைக்கும் வகையில் ஆதரவு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இந்த இடைவெளியை நிரப்புவது கல்விச் சீர்திருத்தம் மட்டுமல்ல; இந்தியாவின் எதிர்கால மனிதவளத்தில் செய்யப்படும் முதலீடாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





