பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைவது எப்போது?

அரியலூர் : அரியலூர் நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 30,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அர
பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைவது எப்போது?
Updated on
2 min read

அரியலூர் : அரியலூர் நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

30,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அரியலூர் நகராட்சிப் பகுதியில் தற்போது 18 வார்டுகள் உள்ளன. அரியலூர் நகரில் 2009, அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

இதற்காக, தமிழக அரசு ரூ. 16.09 கோடியையும், வட்டியில்லாக் கடனாக ரூ. 6.89 கோடியையும் வழங்கியது. அரியலூர் நகராட்சி நிர்வாகம் தன்னுடைய பங்காக ரூ. 4.50 கோடி செலுத்தி, மொத்தம் ரூ. 27.50 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அரியலூர் நகரில் மொத்தம் 10,400 குடியிருப்புகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டு, அதில் வரிவிதிப்புள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை 9,942 எனவும் கண்டறியப்பட்டன.

இந்தப் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், குடியிருப்புப் பகுதிகளில் இணைப்பு பெற வேண்டுமெனில் ரூ. 2000-ம், குடியிருப்பு அல்லாத மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.10,000-ம் வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு, அதோடு அந்தப் பகுதிகளுக்கான வரி விதிப்புத் தொகையும் நகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது.

ஆமை வேகத்தில் பணிகள் : நகராட்சி மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் விடப்பட்டு, தனியார் நிறுவனம் ஒன்று பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திட்ட அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், நகராட்சியின் பல பகுதிகளில் இன்னும் குழிகள் தோண்டப்படாமலேயே உள்ளதாகவும், பல இடங்களில் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சில இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டாலும் சாலைகளில் உள்ள மண் குவியல்கள் அகற்றப்படாமல் இருப்பதால், அவை மழைக்காலங்களில் இறுக்கமடைந்து விடுகின்றன. இதனால், இந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் பலர் கீழே விழுந்து காயமடைகின்றனராம்.

புதை சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தும் பணியிலும் ஒப்பந்ததாரர்கள் சில இடங்களில் அவசர, அவசரமாகப் பணிகளை மேற்கொள்ளவதால், அங்கு குழாய்கள் சரியான முறையில் இணைக்கப்பட்டுவிட்டனவா என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் கூறியது: புதை சாக்கடைக்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் பதிக்கப்படும் குழாய்கள் தரமானதாகவும், நீண்ட காலத்துக்கு உழைக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அந்த வகையில், தற்போது அரியலூரில் பல இடங்களில் பதிக்கப்படும் குழாய்களும் தரத்துடன் இருக்கும் வகையில் ஒப்பந்ததாரர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தெருவில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக குழிகள் தோண்டப்பட்டால் உடனடியாகப் பணிகள் நடப்பதில்லை. பணிகளை விரைந்து செய்வதுடன், பணிகளில் தரத்தையும் மேலும் அதிகரிக்க வேண்டும்.

அரியலூரில் நகரில் ராஜாஜிநகர், பெரியார்நகர், அழகப்பாநகரின் பல்வேறு குறுக்குத் தெருக்களில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் பாதி முடிந்தும், பாதி முடியாமலும் உள்ளன. சில இடங்களில் பணிகள் முடிந்தும் இன்னும் சாலை சீரமைக்கப்படாமலேயே உள்ளன. இந்த நிலைதான் அரியலூரின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலவி வருகிறது. மேலும், புதை சாக்கடைத் திட்டப் பணிகள் எப்படி நடைபெற்று வருகின்றன என்பதை சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் என்றார் அவர்.

மழைக்காலம் தொடங்கும் முன்பே முடிக்க வலியுறுத்தல்: இந்த மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கிவிடும். பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டால், அதன்பிறகு புதை சாக்கடைத் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாது. எனவே, அரியலூர் நகரில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

அரியலூருக்குப் பிறகு புதை சாக்கடைத் திட்டப் பணிகளைத் தொடங்கிய பல நகராட்சிகள் பணியை முடித்து, பொதுமக்களுக்கு இணைப்புகளை வழங்கிவிட்ட நிலையில், அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் இன்னமும் மந்த நிலையில் நடைபெற்று வருகின்றன. இதற்குரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com