தமிழும் சிங்களமும்

உலக மொழிகளின் தாய், தமிழே என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே என்கிறார். எழுத்துகள் நெடுங்கணக்க

உலக மொழிகளின் தாய், தமிழே என்னும் செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் இந்திய மொழிகளின் வரி வடிவ எழுத்துக்களின் தாய் , தமிழ் நெடுங்கணக்கின் வரி வடிவமே என்கிறார். எழுத்துகள் நெடுங்கணக்கின் நிலையை அடைவதற்கு முந்தைய காலங்களில் பெற்றிருந்த உருவங்களைப் பற்றிய குறிப்புகள். தமிழைத் தவிர வேறு இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களில் காணப்படவில்லை என்கிறார் முனைவர்.சுப்பிரமணிய ஐயர். தமிழ் எழுத்து முறையே ஆரிய எழுத்தின் முன்னோடி என்கிறார் அறிஞர் இரைசு டேவிட்சு. அனைத்து மொழிகளையும் ஈன்ற அன்னையாய் அருந்தமிழ் விளங்குகையில் தமிழ் நிலத்தில் கலந்து தோன்றிய சிங்களவர்களின் மொழியாகிய சிங்களமும் தமிழில் இருந்துதான் தோன்றியது என்பதிலும் ஆதலின் அதன் வரி வடிவம் தமிழ் வரிவடிவத்தில் இருந்து தோன்றியது என்பதிலும் வியப்பு ஏதும் இல்லை.

மதுரையில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற பொழுது (1981) இலங்கையில் இருந்து வந்த பேராளர் ஒருவர் தமிழ் வரிவடிவங்களில் இருந்தே சிங்கள வரி வடிவங்கள் தோன்றின என்பதைப் படங்கள் மூலம் அருமையாய் விளக்கினார். (அவர் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர் என்பது மட்டும் நினைவில் உள்ளதே தவிர அவர் பெயர் நினைவில் இல்லை.) அவரிடம் இத்தகைய ஆராய்ச்சி எண்ணம் எவ்வாறு வந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் தற்செயலாகச் சில ஒற்றுமை அமைப்பைக் கண்டறிந்ததாகவும் சிங்களர் தமிழர் நாட்டில் குடியேறிய பின்பே தம் மொழியை வளர்த்து வரிவடிவத்தை உருவாக்கியிருக்க வேண்டும் என்றும் உணர்ந்து முழுமையாக ஆராயத் தொடங்கியதாகவும் அதன் பயனே இக்கட்டுரை என்றும் கூறினார். அவ்வாறாயின் சொற்பிறப்பு அடிப்படையில் தமிழில் இருந்து சிங்களம் தோன்றியது என்பதை நிறுவ முயலலாமே என்று கேட்டேன். இனி அவ்வாறு முயல்வதாகவும் ஆனால் இலங்கையில் தமிழுக்கு எதிரான வெறியைக் கிளப்பும் அரசியல்வாதிகளும் அரசும் உள்ளதால் தன்னால் இதை வெளிப்படையாகச் செய்ய இயலாது என்றும் கூறினார். மேலும் மூத்த தலைமுறையினரில் ஒரு சாராரேனும் சிங்கள வெறிக்கு எதிரான நடுநிலை மனப் போக்கில் இருந்தாலும் இளைய தலைமுறையினர் அனைவரும் நடுநிலை உணர்வு அற்றவர்களாக இருப்பதாகவும் வேதனைப்பட்டார். இருப்பினும் அவரைச் சந்தித்ததன் விளைவாக நான், தமிழ் - சிங்களம் குறித்துச் சிறிதேனும் அறிய முற்பட்டேன். அடிப்படைச் சொற்கள் பலவும் தமிழில் இருந்தே சிங்களத்திற்குச் சென்றுள்ளது எனவும் இலக்கண அமைப்பு முறை தமிழைச் சார்ந்தே உள்ளது எனவும் மேலோட்டமாகப் பார்தாலே நன்கு தெரிய வருகிறது. இரு மொழி அறிஞர்கள் ஆராய்ந்து தமிழில் இருந்து சிங்களம் தோன்றியது என்பதைத் தெளிவு படுத்தல் நன்று. எனினும் நான் அறிந்த வரையில் சுருக்கமாகச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.

  தமிழ்ச் சொற்கள் எவ்வகை வடிவ மாற்றமுமின்றி இடம் பெறுதல், முதற்குறை இடைக்குறை கடைக்குறை போன்று அமைதல், தமிழ்ப் பேச்சு வழக்கு திருந்தியசொல் வடிவாக இடம் பெறுதல், ‘யா’ என்னும் எழுத்தொலி சேர்ந்து சிங்களத்தில் இடம் பெறுதல், சிதைந்து மாறுதல் , யகரம் சகரமாக மாறுவது போன்று போலியாய் இடம் பெறுதல் எனத் தமிழ் இலக்கணத்திற்கு ஏற்றாற் போல் தமிழ்ச் சொற்கள் பல்வகை மாற்றமடைந்துசிங்கள மொழியில் இடம் பெற்றுள்ளன.

1.வடிவம் மாறாமல் இடம் பெற்றுள்ள சொற்கள்:

தமிழ் சிங்களம்

பொடி (சிறிய) - பொடி

பாலம் - பாலம்

அக்கா - அக்கா

குமாரன் - குமாரன்

சுதை (வெண்மை) – சுதை

2. கடைக்குறையான சொற்கள்

கணிகை - கணி

மலர் - மல

பாத்து ( உணவு) - பாத்

தூம(ம்) (புகை) - தூம

கரம் - கர (தோள்)

(பொருள் சுருங்கிக் கையின் ஒரு பகுதியைக் குறிக்கிறது)

விசாலம் - விசால

மனிதன் - மனி

உயரம் - உசரம் உச

3.கடைசியல் யா என்னும் ஒலி சேர்த்து மாற்றமடைந்த சொற்கள்

நாதம் - நாதய

வீரன் - வீரயா

நீதி - நீதியா

பூமி - பூமிய

தூது - தூதயா

சூரன் - சூரயா

பூதம் - பூதயா

இதயம் - இருதயம் இருதயா

நரி - நரியா

பெட்டி - பெட்டிய

ஆகாயம் - ஆகாசம் ஆகாசய

கோப்பை - கோப்ப (கோப்பைகள்) /கோப்பய (கோப்பை)

4. திருந்தாச் சொல்வழக்கால் ஏற்பட்ட மாற்றங்கள்

மேசை - மேசே

கரு(ப்பு) - களு

இரத்தம் (சிவப்பு) - ரத்து

(சிவப்பு என்னும பொருளும் உண்டு)

பாதை - பாற

கத்தி - கத்த

திசை - திசாவ

உருவம் - ரூபம்

மயில் - மயூர

பூசை - பூசாவ

கோ (எருது ) - கொனா

பொத்தகம் -பொத /பொதக் (ஒரு பொத்தகம்)

(தமிழில் பொத்தகம் என்பதுதான் புத்தகம் என மாறிற்று)

தேநீர் - தே

கன்னம் - கண

(தொளையுடையது என்னும் பொருளில் முதலில் காது என்றே பொருள் வழங்கியது)

அங்குலி - அங்கிலி

(அங்குல் என்றால் வளைதல் என்று பொருள் வளைத்து மடக்கக் கூடிய உறுப்பான விரல் அங்குலி எனப்பட்டது. அங்குலியால் அளக்கப்படும் அளவு அங்குலம் எனப்பட்டது)

இரவு / இரா - ரா / றா

நீலம் – நீல் > நில்

தமிழில் சுட்டெழுத்து அ, இ, உ என மூன்று ஆகும். எனவே, அது, இது, உது; அவை, இவை, உவை; அவன், இவன், உவன்; அவள், இவள், உவள்; அவர், இவர், உவர் என்று சொல்லும் மரபு பழந்தமிழில் இருந்துள்ளது. கேட்பவனுக்கு அருகே இருப்பின் ‘அ’, சொல்லுபவன் அருகே இருப்பின் ‘இ’, இருவருக்கும் பொதுவான தொலைவில் இருப்பின் ‘உ’ பயன்படுத்தப்பட்டது. தமிழில் இருந்து தோன்றிய சப்பான், சிங்களம் முதலான பழ மொழிகளிலும் இவ்வழக்கு இன்றும் உள்ளது. சிங்களத்தில்

அர - அவர் / அது

மே - இவர் / இது

ஒய - உவர் / உது

என முவ்வகைச் சுட்டும் இன்றும் பழக்கத்தில் உள்ளன.

சிங்களத்தில் சுட்டுப் பெயர்கள் மூலம் உயர்திணை, அஃறிணை குறிக்கப்படாமல் பயன்பாட்டு அடிப்படையில் புரிந்து கொள்ளப்படுகிறது.

தமிழில் உள்ள இலக்கண அமைப்பைச் சிங்களமும் பின்பற்றுகிறது

. ‘நான் கடைக்குச்சென்றேன்’ என்னும் தொடர் ஆங்கிலம் முதலான பிற மொழிகள் சிலவற்றில் நான் சென்றேன் கடைக்கு என்பது போல் வரும். சிங்களத்தில் தமிழில் உள்ள அதே அமைப்புதான் உள்ளது.

அர கவுத? - அவர்கள் யார்?

மே கவுத? - இவர்கள் யார்?

ஒய கவுத? - உவர்கள் யார்?

மே ஒபே பொதத? - இது உன்னுடைய புத்தகமா?

மம தொர அரிவனா. - நான் கதவைத் திறக்கிறேன்.

(திறப்பதற்குரிய கதவு திற > தொர எனப்பட்டது)

  இரு மொழியும் நன்கறிந்த அறிஞர்கள் இது குறித்து நன்கு முழுமையாக ஆராய்வது நன்று. தமிழ் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆண்டிற்கு ஒரு மொழி என்ற முறையில் வெவ்வேறு மொழிகளுடன் தமிழுக்குள்ள ஒப்புமையை ஆராய்வது உலக மொழிகளின் தாய் என இதுவரை அறிஞர்கள் பலரும் சொல்லி வரும் கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும். இவ்வாறு பிற நாட்டுப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த நாட்டு மொழிகளுடன் தமிழுக்குள்ள ஒப்புமையை ஆராய நடுவணரசு செம்மொழிஉயராய்வு மையம் மூலம் போதிய பொருளுதவியை அளிக்க முன் வரவேண்டும். தமிழக அரசும் தமிழக மக்களும் அதற்குத் தூண்டுதலாய் இருக்க வேண்டும். சிங்களர்கள் தம் இனமும் மொழியும் தமிழர் கூட்டுறவால் ஏற்பட்டதே என்பதைஉணர்ந்து நல்லுறவோடு பழக வேண்டும். தனித்தனி உரிமையுடைய (இலங்கை நாடு, ஈழ நாடு என்னும்) இரண்டு நாடுகளின் கூட்டமைப்பாக இலங்கை - ஈழக் கூட்டமைப்பு தோன்றி இத்தீவு யாருக்கும் அடிமையாக இராமல் யாரையும் அடிமைப்படுத்தாமல் வளம்பெற வேண்டும்!

(கட்டுரையாளர்: தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com