தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எனக்கு மூக்கு இருக்கிறது . . . உங்களுக்கு இருக்கிறதா?

ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும், ஆறு அறிவுள்ள மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது எனக்குத்தெரியும்.

News image
Updated On :12 நவம்பர் 2016, 6:41 am

சாது ஸ்ரீராம்

ஒரு காடு. அங்கு குரங்கும், சாதுவும் நண்பர்கள். அவ்வப்போது தத்தம் கருத்துக்களை பறிமாறிக்கொள்வார்கள்.

அன்று, வேடன் ஒருவன் விரித்த வலையில் பல பறவைகள் ஒரே நேரத்தில் சிக்கிக்கொண்டன. இதை இருவரும் பார்த்தனர்.

‘இது போன்ற சூழ்நிலை மனிதனுக்கு நேர்ந்திருந்தால் அவன் அதை கையாளும் விதமே வேறுவிதமாக இருக்கும். பிரச்சனையான காலகட்டத்தில் மனிதன் தன்னையும் காத்துக்கொண்டு பிறரையும் காப்பாற்றுகிறான். ஆனால் விலங்குகள் அப்படிச்செய்வதில்லை', என்றார் சாது.

குரங்கு இந்தக் கருத்தை மறுத்தது. சாதுவுக்கு கோபம் வந்தது.

‘ஐந்து அறிவுள்ள விலங்குகளுக்கும், ஆறு அறிவுள்ள மனிதர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது எனக்குத்தெரியும். உனக்கு அது தெரியாது. தெரியாத விஷயத்தை பற்றி பேசுவது முட்டாள்தனம்', என்று பொறிந்து தள்ளினார்.

குரங்கு அமைதியானது.

அந்த காட்டிற்கு அருகில் ஒரு கோவில் இருந்தது. அன்று அந்த கோவிலில் ஒரே பரபரப்பு. காரணம், அந்த கோவிலில் உள்ள சுவாவி சிலை கண் திறந்து பார்க்கிறதாம்! மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த அதிசயத்தை காண ஓடிக் கொண்டிருந்தார்கள்.

இவர்களும் கோவிலை நோக்கி புறப்பட்டனர்.

அது ஒரு பாழடைந்த கோவில். அதன் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. கோவிலின் சுவற்றில் பெர்¢ய ஓட்டை ஒன்று இருந்தது. மக்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த ஓட்டை வழியாக தலையை நுழைத்து உள்ளிருக்கும் சாமி சிலையை பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஆவல் மிகுதியில் குரங்கு சுவற்றின் மீது ஏறிக்குதித்து கோவிலுக்குள் சென்றது. அங்கு தேங்காய் உடைக்கும் கத்தி ஒன்று இருந்தது. அதை கையில் எடுத்தது. ஓட்டை வழியாக எட்டிப்பார்த்த மனிதனின் மூக்கை வெட்டியது. ‘ஐயோ, அம்மா' என்று கத்தி ஊரைக்கூட்டுவான் என்று எதிர்பார்த்தது. ஆனால் அவனோ கொஞ்சம் கூட சத்தமிடாமல் கைகளை கூப்பியவாறு மூக்கை மறைத்துக் கொண்டு நகர்ந்தான். அவன் மிகுந்த பக்தியோடு கைகளை கூப்பிச் செல்கிறான் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர். பின்னர் அடுத்த மனிதன் எட்டிப்பார்த்தான். அவன் மூக்கையும் வெட்டியது குரங்கு. அவனும் கும்பிட்டவாரு மூக்கை மூடிக்கொண்டு சென்றான். இப்படியே எல்லோருடைய மூக்கும் அறுபட்டது தான் மிச்சம். ஒருவன் கூட அடுத்து வருபவர்களை எச்சரிக்கவில்லை.

Story image

அடுத்த நாள் சாதுவை பார்க்க குரங்கு சென்றது. சாது அவருடைய இடத்தில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். குரங்கு அவரிடம் பேசியது.

‘ஐயா! மனிதன் தனக்கு ஒரு பிரச்னை என்றால், அடுத்தவரை எச்சரித்து அவர்களை காப்பாற்றுவான் என்று சொன்னீர்கள். நீங்கள் சொன்னது உண்மையல்ல என்பதை கோவிலில் நடந்த சம்பவம் நிரூபித்துவிட்டது', என்றது குரங்கு.

‘நீ சொல்வது உண்மைதான்', என்றவாறு குரங்கு நோக்கி திரும்பினார் சாது.

அதிர்ந்து போனது குரங்கு. காரணம் . . . . . . . சாதுவிற்கு மூக்கு இருந்த இடத்தில் ரத்தம் உறைந்து போயிருந்தது. மூக்கை காணவில்லை. குரங்கு வெட்டிய மூக்கில் சாதுவினுடையதும் ஒன்று.

பவ்யமாக பேசியது குரங்கு.

‘ஐயா! நேற்று கோவிலில் கடவுளின் சிலை கண்ணை திறந்ததோ இல்லையோ என் அறிவுக் கண்ணை திறந்து விட்டது. இப்போது எனக்கு ஐந்து அறிவுக்கும், ஆறறிவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்துவிட்டது. அந்த வித்தியாசம் . . . . . . “மூக்கு” என்று சொல்லிவிட்டு ஓடியது.

கருப்புபண விவகாரம் பூதாகரமாகி ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டிவிட்டது. ஊர் நியாயம் பேசும் பலர் மடியில் கணத்துடன் அலைவதை பார்க்க முடிகிறது. இத்தகைய மனிதர்களுக்கு, ஆறாவது அறிவு கருப்பு பணத்தை பதுக்குவதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிகிறது. கதையில் வரும் மக்களைப் போல மூக்கறுபட்டவர்கள் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நெளிவதையும் பார்க்க முடிகிறது.

நேற்று வங்கியில் ஒரே கூட்டம். பெரிய க்யூ கேஷியரின் கூண்டை நோக்கி வளர்ந்து கொண்டேயிருந்தது. சினிமாவிற்காகவும், ரேஷன் கடைகளில் நிற்கும் கூட்டம் முதன் முதலாக தேசத்திற்காக நிற்பதை பார்க்கும் போது மனத்திற்கு இதமாக இருந்தது. மிஸ்டர் வேம்பு அந்தக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் சிரித்தார். பிறகு என்னிடம் மெதுவான குரலில் பேசினார்.

‘பல வருடங்களாக உங்களுடைய வங்கி கணக்கில் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லையாமே! நான் ரெண்டு லட்ச ரூபாய் தற்றேன். கொஞ்சம் மாத்தி கொடுங்க. போன வாரம்தான் வீடு ஒண்ணு வாங்கணும்னு பணம் எடுத்து வைச்சிருந்தேன்', என்று பரிதாபமாக கேட்டார் மிஸ்டர் வேம்பு.

பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே நகர்ந்தேன்.

பத்து, பதினைந்து வீடுகளுக்கு சொந்தக்காரர் அவர். யார் வீடு விற்றாலும் உள்ளே புகுந்து பேரம் பேசி வாங்குவார். ஊரையே விலைக்கு வாங்குவது அவருடைய பிறப்பின் லட்சியம். அவருக்கு உதவுவதும் ஒன்று, அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு பணம் அனுப்புவதும் ஒன்று. இரண்டுமே தேச துரோகம். கடந்த இரண்டு நாட்களாக இதுபோன்ற ஆசாமிகள் வங்கிகளை சுற்றிச் சுற்றி வருவதை பார்க்க முடிகிறது. இந்தியா சுதந்திரம் வாங்கும் போது நாமெல்லாம் பிறக்கவில்லை. நாட்டிற்காக போராடும் வாய்ப்பும் நமக்கு கிடைக்கவில்லை. இந்த ஏக்கத்தை போக்கும் விதமாக மத்திய அரசு நமக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது. நாம் வீதியில் இறங்கி போராட வேண்டியதில்லை. கருப்பு பணத்தை எதிர்த்து அரசு போராடட்டும். நாம் அதற்கு துணை நின்றாலே போதும்.

‘உனக்கு விஷயம் தெரியுமா! வண்டு முருகன் 42 கோடிக்கு நிலம் வாங்கியிருக்கானாம். பத்து வருடங்களுக்கு முன் எப்படியிருந்தான்? இப்ப எப்படியிருக்கான்? எல்லாம் அந்த வி.ஐ.பியின் பினாமி பணம்'. இப்படிப்பட்ட அங்காலாய்ப்புகள் நம் காதுகளை பல வருடங்களாக துளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பாரத பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன்.

Story image

பாரத பிரதமர் மோடி அவர்களே! கருப்பு பணத்தை ஒழிக்க நீங்கள் எடுத்த முயற்சியை கொஞ்சம் பினாமி விஷயங்களிலும் காட்டுங்கள். பல வருடங்களாக கருப்பு பணங்கள், கருப்பு நிலங்களாகவும், ரியல் எஸ்டேட் மனைகளாகவும் உருமாறியிருக்கிறது. கருப்பு நிலங்களை அடையாளம் காணுங்கள். அவற்றை அரசுடைமையாக்குங்கள். அரசு நிலங்கள் என்றாலே தரிசாகத்தான் இருக்கும் என்ற நிலையை மாற்றுங்கள். அவற்றில் நீர் நிலைகளை ஏற்படுத்துங்கள். அவற்றை நேரடியாக விவசாயிகளிடம் குத்தகைக்கு விடும் ஏற்பாட்டை செய்யுங்கள். இல்லையென்றால், கருப்பு நிலங்கள் மீண்டும் கருப்பு பணமாக மாறும். இது பொருளாதார ரீதியாக நாட்டை ஸ்தம்பிக்க வைக்கும். இந்த பிரச்னைக்கு சரியான தீர்வு வேண்டுமென்றால், பினாமி நிலங்களை பற்றிய புகார்களை மத்திய அரசே நேரடியாக பெற்றுக்கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நிலத்தை கையகப்படுத்துங்கள். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் (Burden of proof) பொறுப்பை நில உரிமையாளரே ஏற்றுக் கொள்ளும் வகையில் சட்ட திருத்தங்கள் கொண்டுவாருங்கள். உங்கள் அரசு மீது மக்களுக்கு அதீத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதைப் போலவே அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கருப்பு பண விவகாரத்தில், யார் இந்த பூனைக்கு மணியை கட்டுவது என்று எல்லோரும் ஏங்கித் தவித்த நேரத்தில் மணியை கட்டினார் பாரத பிரதமர். அதுவும் எப்படி? ஆறடி உயர மணியை, அரையடி உயர பூனையின் கழுத்தில் கட்டியிருக்கிறார்.

பூனைக்கு மணியைக் கட்டிய பிரதமர் அவர்களே, ரியல் எஸ்டேட், விளைநில ஆக்கிரமிப்பு போன்ற தவறுகளை செய்யும் பல புலிகள் புதருக்குள் பதுங்கியிருக்கிறது. அந்த புலிகளுக்கும் மணியை கட்டுங்கள். புலியை நாங்கள் காட்டுகிறோம், மணியை நீங்கள் கட்டுங்கள்.

“என்னிடம் எந்த கருப்பு பணமும் இல்லை. என் மூக்கு என்றுமே என்னுடன்” என்ற பெருமையோடு . . . . . .

சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.