நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரியாணி அண்டாவை நோக்கி..

சிங்கம் ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஒரு ஆடு வழி தவறி காட்டிற்குள் நுழைந்தது. ஆட்டை கண்ட சிங்கம் சட்டென்று எழுந்து அதன் அருகில் வந்தது. சிங்கத்தை பார்த்த ஆடு பயந்துபோனது.

News image
Updated On :22 டிசம்பர் 2017, 9:11 am

சாது ஸ்ரீராம்


ஒரு காடு. சிங்கம் ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. ஒரு ஆடு வழி தவறி காட்டிற்குள் நுழைந்தது. ஆட்டை கண்ட சிங்கம் சட்டென்று எழுந்து அதன் அருகில் வந்தது. சிங்கத்தை பார்த்த ஆடு பயந்துபோனது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேசியது.

‘சிங்கமே! நலமா?', என்றது

‘நான் நலம். நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?', என்று கேட்டது சிங்கம்.

‘சிங்கமே! நான் பக்கத்து நாட்டைச் சேர்ந்தவன். எங்கள் நாட்டு பெருமையை உன்னிடம் சொல்லலாமென்று இங்கு வந்துள்ளேன்', என்றது ஆடு.

‘என்னது உங்கள் நாட்டில் பெருமைபடும்படியான விஷயங்களும் நடக்கின்றனவா?', என்று ஆச்சர்யத்தோடு கேட்டது சிங்கம்.

‘என்ன இப்படி கேட்டுவிட்டாய். எங்கள் நாடு சுவர்க்கம் போல் இருக்கும். புண்ணியம் செய்தால்தான் எங்கள் நாட்டில் பிறப்பெடுக்க முடியும்', என்றது ஆடு.

‘அப்படியா! ‘உங்கள் நாட்டு அரசியல்வாதிகள் மிகவும் மோசமானவர்கள். ஊழலில் ஊறிப்போனவர்கள்', என்றல்லவா நான் கேள்விப்பட்டேன்?' என்றது சிங்கம்.

“யார் சொன்னது. எங்கள் அரசியல்வாதிகள் மிகவும் நேர்மையானவர்கள். புத்திசாலிகள். தங்கள் புத்திசாலித்தனத்தை நேர்மையான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்”.

Story image

“திருட்டுத்தனம், ஊழல் என்பதெல்லாம் எங்கள் நாட்டில் கிடையாது”.

“யாராவது ஊழல் செய்தால் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் பதவிக்காலத்திற்கு முன்பு சம்பாதித்த சொத்தாக இருந்தாலும், அவை இடித்துத் தள்ளப்படும், அரசுடமையாக்கப்படும்”.

“ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சாட்டப்பட்டால், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் கடமையும், பொறுப்பும் (Burden of Proof) அவரையே சாரும்”.

“ஊழல் குற்றச்சாட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பதினைந்து நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்”.

“ஊழல் பணம் வெளி நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால், அந்தப் பணம் திரும்ப நாட்டிற்கு கொண்டு வரும் வரை சம்பந்தப்பட்ட நபர் சிறையிலேயே காலத்தை கழிக்க வேண்டியதுதான்”.

“ஊழலுக்கு உதவிய வக்கீல்களும், ஆடிட்டர்களுக்கும் சிறைவாசம் உண்டு”.

“நாட்டில் அரசியல் மாநாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை, கூட்டங்களை தொலைக்காட்சி வழியாகத்தான் பகிர்ந்துகொள்ள முடியும்”, என்று சொல்லியது ஆடு.

ஆச்சர்யப்பட்டது சிங்கம். பேசியது.

‘உங்கள் திரைப்படத்துறை மிகவும் மோசம் என்று கேள்விப்பட்டேனே?', என்று கேட்டது சிங்கம்.

“அப்படியெல்லாம் இல்லை. எங்கள் திரைத்துறை சுத்தமானது. நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதில்லை”.

“டிக்கெட் விலையாக இருபத்தி ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். கூடுதல் கட்டணமே கிடையாது”.

“நாட்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது, ‘நான் ஏன் நிதி கொடுக்க வேண்டும்? எங்கள் வரிப்பணத்தை அரசு என்ன செய்கிறது? என்று ஏட்டிக்குப்போட்டி கேள்விகளையெல்லாம் நடிகர்கள் கேட்கமாட்டார்கள்”.

“மேலும் அவர்கள் சொல்ல வரும் கருத்தை மிகத் தெளிவாக சொல்வார்கள். கேட்பவர்கள் சட்டென்று புரிந்துகொள்ளும் வகையில் அவர்களது பேச்சுக்கள் இருக்கும்”.

“திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றால், உடனடியாக அரசியலில் குதிக்க முடியாது. திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே அவர்கள் அரசியல் பிரவேசம் செய்ய முடியும். அப்படி ஒரு கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கிறது”, என்றது ஆடு.

ஆச்சர்யப்பட்ட சிங்கம் மீண்டும் பேசியது.

‘ஆட்சியை நிழல் அதிகார மையங்கள் ஆட்டிப்படைக்கிறது என்று கேள்விப்பட்டேனே?' என்று கேட்டது சிங்கம்.

‘ஆட்சியில் நிழல் அதிகார மையங்களாக யாரும் இருக்க முடியாது. அப்படி யாராவது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் நடுக் கடலில் இறக்கிவிடப்படுவார்கள்', என்றது ஆடு.

‘உங்கள் ஊர் தொலைக்காட்சியில் மெகா சீரியல்கள் குடும்ப பெண்களை பெரிய வில்லிகளாக மாற்றிவிட்டது என்று கேள்விப்பட்டேனே?

Story image

‘யார் சொன்னது! எங்கள் தொலைக்காட்சியில் மெகா சீரியல்களே கிடையாது. நியாயமான, ஒழுக்கமான கதைகள் மட்டுமே நாடகங்களாக திரையிடப்படுகின்றன', என்றது ஆடு.

‘தேர்தல்கள் எல்லாம் மகா கேவலமாக நடக்குமாமே? பணம் கொடுத்தால்தான் மக்கள் ஒட்டுப்போடவே வருவார்களாமே?' என்று கேட்டது சிங்கம்.

‘யாரோ உன்னிடம் தவறாக சொல்லியிருக்கிறார்கள் தேர்தலில் ஓட்டுக்காக யாரும் பணம் கொடுக்கவும் மாட்டார்கள், வாங்கவும் மாட்டார்கள்', என்றது ஆடு.

‘தேர்தலில் தோற்றுப் போனவர் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டாராமே?', என்று கேட்டது சிங்கம்.

“இல்லவே இல்லை. தேர்தலில் தோற்றுப் போனவர்கள் தோல்வியை அமைதியாக ஏற்றுக் கொள்வார்கள். ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது என்று கூக்குரலிடமாட்டார்கள்”.

‘ஜாதி சங்கங்கள் அரசியலில் ஈடுபடுகிறது', என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே?' என்று கேட்டது சிங்கம்.

‘யார் சொன்னது! அரசியலில் ஜாதி, மதம் என்ற பாகுபாடே கிடையாது. கட்சிகள் அனைவரும் தங்களது கொள்கைகளை சொல்லியே அரசியல் செய்கிறார்கள்', என்றது ஆடு.

‘ஏதாவது விஷேசம் என்றால், எல்லா திசைகளிலும் கட்அவுட் இருக்குமாமே?' என்று கேட்டது சிங்கம்.

Story image

நிச்சயமாக இல்லை. யாரோ உன்னிடம் நாட்டைப் பற்றி தவறான தகவல்களை தந்திருக்கிறார்கள். கட் அவுட் என்பதே கிடையாது.

‘டுபாக்கூர் நாத்திகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாமே? இந்து மதத்தை கேவலமாக பேசுவதுதான் அவர்களின் தலையாய பணி என்று கேள்விப்பட்டேனே', என்று கேட்டது சிங்கம்.

‘அதெல்லாம் இல்லை. நாத்திகர்களாக இருப்பதில் என்ன தவறு? எங்கள் ஊர் நாத்திகர்கள் தங்கள் கருத்துக்களை அடுத்தவர் மனம் புண்படாதவாறு தெரிவிப்பார்கள். முதலில் அவர்கள் குடும்பத்தில் நாத்திகத்தை விதைப்பார்கள். அவர்களின் மனைவியும், குழந்தைகளும் நாத்திகர்களாகவே இருப்பார்கள். யாரும் பார்க்கத போது நெற்றியில் விபூதி வைப்பதும், வெளியே வரும்போது அழித்துவிட்டு வரும் டுபாக்கூர் நாத்திகர்களே எங்கள் நாட்டில் கிடையாது', என்றது ஆடு.

‘அதெல்லாம் சரி. உங்கள் நாட்டில் நீதித்துறை எப்படி செயல்படுகிறது?' என்று கேட்டது சிங்கம்.

பதில் சொல்ல தொடங்கியது ஆடு. ஆனால், அந்த சமயத்தில் யாரோ ஒருவர் தூரத்தில் வந்து கொண்டிருப்பதை இருவரும் பார்த்தனர்.

‘சிங்கமே! அதோ வருகிறாரே அவர்தான் என்னை வளர்ப்பவர். என்னை நீண்ட நேரமாக காணவில்லை அல்லவா! அதனால் என்னைத் தேடி இங்கு வருகிறார். என் மீது மிகவும் அன்பு வைத்திருப்பார். நான் சாப்பிடாமல் அவர் சாப்பிடமாட்டார். தன் குழந்தைப்போல என்னை பார்த்துக்கொள்கிறார்', என்றது ஆடு.

Story image

ஆச்சர்யத்தில் அசந்து போனது சிங்கம்.

‘ஆடே! நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. நீ மிகவும் நல்ல சூழலில் வாழ்கிறாய். உன்னை வளர்ப்பவனும் மிகவும் நல்லவனாக இருக்கிறான். இப்போது ஒப்புக்கொள்கிறேன். நீ வாழ்வது சொர்க்கத்தில். நானும் உன்னுடன் வருவதற்கு ஆசைப்படுகிறேன். என்னையும் உடன் அழைத்துச் செல்கிறாயா?', என்றது சிங்கம்.

‘இதென்ன பிரமாதம்! என்னை வளர்ப்பவரிடம் சொல்கிறேன். அவர் நியாயமானவர். நேர்மையானவர். எந்த தருணத்திலும் அடுத்தவருக்கு தீங்கு இழைக்கமாட்டார். அவர் நிச்சயமாக உன்னையும் அழைத்துச் செல்வார்', என்றது ஆடு.

ஆட்டின் உரிமையாளர் வந்து கொண்டிருந்தார். ஆடு முன்னே செல்ல சிங்கம் புறப்பட்டது. சட்டென்று நின்றது சிங்கம்.

‘ஆடே . . . இவ்வளவு நேரம் நான் கவனிக்கவில்லை! இப்போதுதான் பார்த்தேன். உன்னுடைய இடது காதில் ஏதோ தொங்கிக்கொண்டிருக்கிறதே! அது என்ன?' என்று கேட்டது சிங்கம்.

‘ஓ . . . அதுவா! என்னை வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்றிருக்கிறார் என்னை வளர்ப்பவர். நான் கடனில் இருக்கும் ஆடு என்பதற்காக என் காதில் துளையிட்டு பிளாஸ்டிக்கினால் ஆன இந்த விவர அட்டையை மாட்டியிருக்கிறார்கள். பார்ப்பதற்கு தோடு போல எவ்வளவு அழகாக இருக்கிறது பார்', என்றது ஆடு.

சட்டென்று நின்றது சிங்கம். பேசியது.

‘அடப்பாவி! லோன் வாங்கியது அவன், அனுபவிப்பது அவன், ஓட்டை போடுவது உன் காதிலா? இதுதான் உன்னை வளர்ப்பவனின் நேர்மையா? இத்தகைய நேர்மையாளர்களுடன் என்னால் வசிக்க முடியாது. நீ கிளம்பு நான் வரலை. நல்லவேளை நான் காட்டில வசிக்கிறேன். இல்லைன்னா என் பெயரிலும் கடன் வாங்கி என் காதையும் ஓட்டை போட்டிருப்பானுங்க', என்று சொல்லி காட்டுக்குள் ஓடியது சிங்கம்.

ஆடு வளர்ப்பவனை நோக்கி நடக்கத் தொடங்கியது.

‘சரி, போனால் போகட்டும். நாட்டில் நடக்காத பொய்யான விஷயங்களை சொல்லி சிங்கத்தை ஏமாற்றிவிட்டேன். இதில் இரண்டு நல்லது நடந்துள்ளது. ஒன்று என் கதையை நம்பி என்னை கொல்லாமல் விட்டுவிட்டது. மற்றொன்று, நாட்டைப் பற்றி நல்லவிதமாக சிங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. நாறி நாற்றமெடுக்கும் நம்ம ஊர் கதைகளை அது தெரிந்து கொள்ளவில்லை', என்று நினைத்தவாறு பெருமையோடு நடக்கத்தொடங்கியது ஆடு. அதற்குள் ஆடு வளர்ப்பவன் வந்து சேர்ந்தான்.

‘கட்சி மாநாட்டிற்கு என் தலைவன் வர்றான். பிரியாணி சமைக்கறதுக்கு எல்லா ஏற்பாடு செய்திட்டு பார்த்தா நீ இங்கே வந்துட்டியா', என்று மனத்தில் நினைத்தாவறு ஆட்டை இழுத்துக் கொண்டு புறப்பட்டான். பிரியாணி அண்டாவை நோக்கி செல்கிறோம் என்பது தெரியாமல் மிடுக்கோடு நடக்கத் தொடங்கியது ஆடு.

நம்மில் பலர் இப்படித்தான் பிரியாணி ஆடுகளாய் மிடுக்கோடு நாட்களை நகர்த்தி வருகிறார்கள். சொந்த ஆதாயங்களுக்காக அவர்களோடு சேர்த்து நாட்டையே பிரியாணி அண்டாவை நோக்கி அழைத்துச் செல்கிறார்கள். பிரியாணி அண்டாவை ஆடுகள் வேண்டுமானால் உணராமல் போகலாம், நாம் ஆடுகள் அல்ல என்பதை உணர்ந்து கொள்வோம்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.