குருவி சிங்கமாகாது!
ஒரு குருவி. அதற்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. பருந்துகளைப் போல தானும் பாம்பை சாப்பிடவேண்டும் என்பது தான் அதன் ஆசை.


ஒரு குருவி. அதற்கு நீண்ட நாளாக ஒரு ஆசை. பருந்துகளைப் போல தானும் பாம்பை சாப்பிடவேண்டும் என்பது தான் அதன் ஆசை. விருப்பத்தை தன் நண்பனாகிய பருந்திடம் சொல்லியது. குருவியின் ஆசையை நிறைவேற்றுவது என்று முடிவெடுத்தது பருந்து.
அடுத்த நாள். பருந்து ஒரு பாம்பை கொன்று குருவியிடம் கொடுத்தது. குருவிக்கு மகிழ்ச்சி. பாம்பை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பியது. இறந்த பாம்பை தூக்கிக் கொண்டு குருவியால் பறக்க முடியவில்லை. தரையோடு இழுத்துச் சென்றது. இதைப் பார்த்துக் கொண்டிருந்தன காக்கைகள். குருவியிடம் சண்டையிட்டன. குருவி தோற்று ஓடியது. பாம்பைப் பிடுங்கிக் கொண்டு பறந்தன.
குருவிக்கு வருத்தம். நேராக பருந்திடம் சென்றது. நடந்ததைக் கூறியது.
‘காக்கைகளை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கவலைப்படாதே! இன்னொரு பாம்பை பிடித்து தருகிறேன்', என்றவாறு இன்னொரு பாம்பை பிடித்து கொடுத்தது.
குருவிக்கு மகிழ்ச்சி. தன் இருப்பிடத்துக்கு செல்லத் தொடங்கியது. வழியில் மீண்டும் காகங்கள் வந்தன. பாம்பைப் பிடுங்கிக் கொண்டு சென்றன.
மீண்டும் பருந்திடம் சென்று முறையிட்டது குருவி.
இப்படியே பல முறை நடந்ததே தவிர ஒரு முறை கூட குருவியால் பாம்பை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்று சாப்பிட முடியவில்லை. மனம் வெறுத்துப் போனது குருவி. அருகில் இருந்த சாதுவிடம் முறையிட்டது.
சாது பேசினார்.
‘குருவியே! பாம்பை பிடித்து சாப்பிடும் சக்தி உனக்கில்லை. அப்படியே பிறர் உனக்காக பாம்பை பிடித்து கொடுத்தாலும், அதை உன்னால் தூக்கிச் செல்லவும் முடியவில்லை. பிறர் அதை அபகரித்துச் செல்லும் போது அதை தடுக்கவும் உனக்கு சக்தியில்லை. பலனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உன்னிடம் இருக்கிறது. அதற்கான தகுதி உனக்கில்லை. முதலில் அதை வளர்த்துக் கொள். பிறகு முயற்சி செய். அப்படியில்லை என்றால் ஆசையை அடக்கிக் கொள்', என்று சொல்லிவிட்டு தன் வழியே போனார் சாது.
குருவி தன்னை ஒரு குருவி என்று மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும். பதிலாக தன்னை ஒரு சிங்கம் என்று நினைத்துக் கொண்டால், தோல்வி குருவிகளுக்கே தவிர, சிங்கங்களுக்கு அல்ல.
இந்தக் கதையில் வரும் குருவியைப் போலத்தான் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் என்று சொல்லப்படும் மரியாதைக்குறிய திருமதி வி.கே. சசிகலா.
திருமதி சசிகலாவின் அரசியல் பிரவேசம் இப்படி ஒரு காமெடியாக மாறும் என்று எல்லோரும் மிகச் சரியாக கணித்திருந்தார்கள். சரித்திரத்தில் இடம் பிடித்த மிகப் பெரிய வில்லன்களுக்குகூட இப்படி ஒரு வெறுப்பு மக்களிடம் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி. அவரின் ஒவ்வொரு செயலையும் சுயநலமாகவே உலகம் பார்க்கிறது.
தனக்கு எதிரான வெறுப்பை அவர் உணரத் தவறினாரா? அல்லது வெறுப்பைப் பற்றி கவலையில்லை எம்.எல்.ஏ க்களே போதும் என்று நினைத்தாரா? என்பது புரியவில்லை. அத்தகைய வெறுப்புக்கான சில காரணங்களையும், எல்லோர் மனத்திலும் எழும்பும் சில கேள்விகளைப் பார்ப்போம்.
* செல்வி ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின் போது வெகுவாக விமர்சிக்கப்பட்ட பல பிரச்னைகளுக்கு இவர் தான் காரணம் என்று மக்கள் நம்புகிறார்கள்.
* செல்வி ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக இருந்த போது அவரின் குடும்பத்தினருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மாறாக பலன்கள் அனைத்தும் திருமதி சசிகலா குடும்பத்தை சென்றடைந்திருக்கிறது', என்று மக்கள் நினைக்கின்றார்கள்
* ‘குடும்ப ஆட்சி தான் செய்வோம்', என்று திருமதி சசிகலாவின் கணவர் திரு. நடராஜன் சொன்னபோது, சசிகலா அதை மறுக்கவில்லை. செல்வி ஜெயலலிதாவிற்கு உதவியதால் அவரை தலைமையாக ஏற்றுக் கொண்டவர்கள் வேண்டுமானால் திருமதி சசிகலா குடும்பத்தை ஏற்றுக் கொள்ளலாம், தமிழ்நாட்டு மக்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்?
* செல்வி ஜெயலலிதா யாரையெல்லாம் ஒதுக்கி வைத்திருந்தாரோ, அவர்கள் எல்லோரும் இப்போது அவர் இல்லத்தை சுற்றிச்சுற்றி வருகிறார்கள்.
* செல்வி ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அவரின் தாய் சந்தியாவிற்கும், அவருக்கும் சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. அந்த இல்லத்தை இன்னமும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க திருமதி சசிகலாவிற்கு என்ன உரிமையிருக்கிறது?
* செல்வி ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எத்தனை அதிமுக கூட்டங்களில் திருமதி சசிகலா பேசியிருக்கிறார்? அதிமுக பற்றி ஏதாவது ஒரு கருத்தாவது அவரின் முன் தெரிவித்திருக்கிறாரா? அப்படியில்லாத நிலையில், திடீரென்று தலமைப் பொறுப்பில் மட்டுமே அமர்வேன் என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியுமா?
* செல்வி ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, ஒரு முறையாவது மக்களையோ, செய்தியாளர்களையோ சந்தித்து உடல் நிலை பற்றி பேசியிருக்கிறாரா? யாரையாவது பார்க்க அனுமதித்தாரா?
* செல்வி ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களைகூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காத அதிகாரத்தை யார் உங்களுக்கு கொடுத்தது? அவரின் உடல் நிலையின் உண்மை நிலையை வெளியே தெரியாமல் மறைத்ததன் விளைவு திருமதி சசிகலா மீது பெரிய வெறுப்பையும், வதந்தியையும் பரவவிட்டிருக்கிறது.
இந்த கேள்விகளையும், சர்ச்சைகளையும் திருமதி சசிகலா திறம்பட கையாண்டிருந்தால் இப்படி ஊருக்கு வெளியே ரிசார்ட்டில் எம்.எல்.ஏ களுடன் கண்ணாமூச்சி ஆட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. நல்ல தலைமைக்கு வேண்டிய பண்புகள் அவரிடம் இல்லை என்பதையே நிகழ்வுகள் காட்டுகிறது.
திருமதி சசிகலா அவர்களே! ஒருவேளை ஆளுநர் உங்களை ஆட்சி அமைக்க அழைக்கலாம். ஆனால், மக்களின் வெறுப்பை சமாளிக்க என்ன செய்யப் போகிறீர்கள்? ஆட்சியில் அமர்ந்ததும் நலத் திட்டங்களை அறிவித்து மக்களை கவரலாம் என்று நினைப்பது நிச்சயமாக நடக்காது. அது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஆட்சியில் அமர்வதற்கு மக்கள் பிரதிநிதிகளின் செல்வாக்கு மட்டும் போதாது. மக்களின் செல்வாக்கும் மிக அவசியம். அப்படியில்லையென்றால், இன்றைய இண்டர்நெட் யுகத்தில் சமூக வலைத் தளங்களில் சிக்கி, காமெடி பீஸாக நாட்களை நகர்த்த வேண்டியதுதான்.
இன்னும் இரண்டு நாட்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்துவிடும். அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் என்ற யாரும் கணக்கு போட வேண்டாம். தீர்ப்பு எப்படி வந்தாலும், மக்களின் மனம் மாறப்போவதில்லை. அளிக்கப்படும் தீர்ப்பு சட்டத்தை திருப்தி செய்வதற்குத்தானே தவிர மக்களை திருப்தி செய்வதற்காக அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு விஷயம். எம்.எல்.ஏ க் களின் எண்ணிக்கையே யார் முதல்வர் என்பதை முடிவு செய்யும். அதற்கு முன் ஒரு சிறிய விஷயத்தை தெரிந்து கொள்வது அவசியம். முதல்வர் திரு பன்னீர் செல்வம் அவர்கள் அளித்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற ஆளுநர் சம்மதித்துவிட்டால், முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என்று அர்த்தம். காலியாக இல்லாத இடத்துக்கு யாரும் போட்டியிட முடியாது. பிறகு எத்தனை எம்.எல்.ஏ க்கள் ஆதரவளித்தால் என்ன?
அன்புடன் சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...