பொள்ளாச்சி: பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் ஆனைமலையாறு திட்டத்தை நிறைவேற்றவிடாமலும், நீராற்றில் உரிமையான நீர் எடுக்கவிடாமலும் கேரளம் தந்திரம் செய்வதால், தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டம் எனப்படும் பிஏபி திட்டம், மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் தடுத்து, சமவெளியில் பாயும் இரு ஆறுகளுடன் இணைத்து, கிழக்கு நோக்கித் திருப்பி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் பாசன வசதி பெற உதவுகிறது. இத்திட்டம், கேரள அரசின் ஒப்புதல், ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதாகும். தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள், கேரளத்தில் சித்தூர் பகுதி ஆகியவை இந்தத் திட்டத்தால் பாசன வசதி பெறுகிறது.
பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம் 1958-இல் தொடங்கப்பட்டு, 1962-இல் நிறைவடைந்தது. இத்திட்ட ஒப்பந்தப்படி கிடைக்கும் 50.5 டிஎம்சி நீரில் 30.5 டிஎம்சி தமிழகத்துக்கும், 19.55 டிஎம்சி கேரளத்துக்கும் பகிர்மானம் செய்து கொள்ள வேண்டும்.
இதனால் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கரும், கேரளத்தில் 25 ஆயிரம் ஏக்கரும் நேரடியாகப் பயன்பெறுகின்றன. தவிர தமிழகத்தின் 3 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்தத் திட்டம் உள்ளது.
பிஏபி திட்டத்தில் 10 அணைகள் கட்ட திட்டமிடப்பட்டு, மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி என 9 அணைகள் கட்டி முடிக்கப்பட்டன.
நிறைவேறாத ஆனைமலையாறு திட்டம்:
பிஏபி திட்டத்தில் ஆனைமலையாறு அணைத் திட்டமும் ஓர் அங்கமாகும். இத்திட்டம், ஆனைமலையாறு, இட்லியாறு ஆகியவை மூலமாக கிடைக்கும் நீரில் 2.5 டிஎம்சி தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்வதாகும். ஆனைமலையாற்றின் குறுக்கே அணை கட்டி, தண்ணீரை சேகரித்து 2.5 டிஎம்சி தண்ணீரை கீழ்நீராறு அணைக்குக் கொண்டுவந்து சோலையாறு, பரம்பிக்குளம் அணை மூலமாக தமிழகம் எடுத்துக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின்படி, சுமார் 25 மீட்டர் உயரமுள்ள சிறிய அணை கட்டி, அங்கிருந்து 6 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைத்தால் தண்ணீர் கீழ்நீராறு அணைக்கு சென்று சேரும். கீழ்நீராறில் இருந்து சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளுக்குக் கொண்டுசெல்லமுடியும்.
இதற்காக, பொதுப் பணித் துறை 2001-2002-ஆம் ஆண்டு ரூ.200 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்தது. 2014-15-ஆம் ஆண்டுக்கான திட்ட மதிப்பீடாக ரூ. 450 கோடி என தயாரித்து, காவிரி தொழில்நுட்ப ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனைமலையாறு, நல்லாறு ஆகிய இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 1,500 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என மக்களவையில் ஓராண்டுக்கு முன்னர் பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளம்:

ஆனைமலையாறு அணைத் திட்டத்தை தமிழகம் நிறைவேற்ற வேண்டும் என்றால் ஆனைமலையாறும், நீராறும் ஒன்றுசேரும் இடத்தில், கேரளம் இடைமலையாறு என்ற அணையைக் கட்ட வேண்டும். இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்டப் பிறகே தமிழகம் ஆனைமலையாறு அணையைக் கட்டி, 2.5 டிஎம்சி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பே இடைமலையாறு அணையைக் கட்டி முடித்துவிட்டது. ஆனால், இன்றுவரை இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்படவில்லை என்று கூறி, தமிழகம் ஆனைமலையாறு அணையைக் கட்ட விடாமல் தடுத்து வருகிறது.
தமிழகத் தரப்பில் போதிய நடவடிக்கை எடுக்காததால், ஒவ்வோர் ஆண்டும் ஆனைமலையாற்றில் 2.5 டிஎம்சி தண்ணீரை இழந்து வருகிறோம். இதன்மூலமாக தண்ணீர் கிடைத்தால் தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு ஒரு சுற்றுத் தண்ணீர் வழங்க முடியும்.
நீராற்றில் இழக்கும் 1.75 டிஎம்சி:
பிஏபி திட்ட ஒப்பந்தத்தின்படி, நீராற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் தண்ணீரில், அக்டோபர் முதல் ஜனவரி வரை 1.75 டிஎம்சி தண்ணீரை தமிழகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதையும் கேரள அரசு இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகே எடுக்க முடியும்.
இந்நிலையில், கேரள அரசு, இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்படவில்லை என 35 ஆண்டுகளுக்கும் மேலாகக் கூறி, தமிழகத்தை வஞ்சித்து வருவதால், ஆனைமலையாறு மற்றும் நீராற்றில் மொத்தமாக 4.25 டிஎம்சி தண்ணீரை தமிழகம் இழந்து வருகிறது.
இந்த 4.25 டிஎம்சி தண்ணீர் கிடைத்தால் தமிழகத்துக்கு 2 லட்சம் ஏக்கருக்கு ஒரு சுற்றுத் தண்ணீர் வழங்க முடியும்.
கேரளத்தின் இந்தத் தந்திரத்தை முறியடித்து, ஆனைமலையாறு அணைத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றுவதுடன், நீராறில் உள்ள உரிமையில் 1.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாகப் பெற்று மொத்தம் 4.25 டிஎம்சி தண்ணீரைத் திருப்பி, பிஏபி விவசாயிகளுக்கு வழங்கினால் வறட்சியின் பிடியில் இருந்து விவசாயிகள் தப்ப முடியும்.
இந்த ஆண்டு மழைப் பொழிவு இல்லாததால் பிஏபி அணைகளில் நீர் இருப்பு 80 சதவீதம் குறைவாக உள்ளது. இதுபோன்று மழைப் பொழிவு குறையும் காலங்களில் ஆனைமலையாறு அணை நீர், விவசாயத்துக்கு உயிர்நீராக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதற்கு தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து பிஏபி விவசாயிகள் கூறுகையில், கேரளத்தில் இடைமலையாறு அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் கூட, தற்போது வரை கட்டி முடிக்கவில்லை என அந்த மாநில அரசு கூறிவருகிறது. ஒப்பந்தத்தில், ஆனைமலையாறு அணை கட்ட நமக்கு உரிமை இருந்தும் முயற்சி எடுக்கப்படவில்லை. அதேசமயம், கேரள அரசு, பவானி ஆறு, மறையூர் போன்ற இடங்களில் அணைகளைக் கட்டி வருகிறது. தமிழக அரசு, உடனடியாக ஆனைமலையாறு அணையைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


