புலி வாலா? பூனையின் வாலா?
இந்தியா என்ற வீரப்புலியின் தலை காஷ்மீரம். வால் தமிழகம் என்று பெருமைப்படுகிறோம். இது உண்மையிலேயே நமக்கு பெருமை சேர்க்கிறதா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.


இந்தியா என்ற வீரப்புலியின் தலை காஷ்மீரம். வால் தமிழகம் என்று பெருமைப்படுகிறோம். இது உண்மையிலேயே நமக்கு பெருமை சேர்க்கிறதா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் பலியாகியிருக்கிறார். மற்றொருவர் காயமடைந்திருக்கிறார். என்னவோ திடீரென்று இலங்கை கடற்படை நமது மீனவர்களை தாக்கியுள்ளது என்பது போல் பேசினால் அது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல்.
இது நாள்வரை எவ்வளவு மீனவர்கள் கொல்லப்பட்டார்கள், எவ்வளவு தாக்குதல்கள் நடத்தப்பட்டன, எவ்வளவு படகுகளை இலங்கை அரசு கைப்பற்றியுள்ளது? எவ்வளவு படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது? எவ்வளவு வலைகளை அறுத்தெறிந்துள்ளது, போன்ற விவரங்களை பேசிப் பயனில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது கிட்டத்தட்ட அன்றாடம் நடக்கும் செயலாகிவிட்டது. இன்று ஒரு மீனவர் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னும் பலர் கொல்லப்படலாம். எந்த அரசியல்வாதிக்கும் இந்த பிரச்னையில் உண்மையான அக்கறையில்லை. கடும் எச்சரிக்கை, கடும் கண்டனங்கள் மற்றும் இதரபல வீர முழக்கங்களுடன் இந்த பிரச்னை முடிவுக்கும் வரும். அத்தோடு அவரவர் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள். கொல்லப்பட்ட மீனவனின் கதி? எவன் அடித்தாலும் வாங்கிக்கொள்ளவும், எவனோ உமிழ்ந்துவிட்டு போன எண்ணெய் படலத்தை அகற்றுவதற்குத்தான் தமிழன் இருக்கிறானா?
தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிகதையை படிப்போம்.
ஒரு புலி தூங்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தை ஒரு பூனை பயத்தோடு கடந்து சென்றது. சட்டென்று ஒரு குரல். பேசியது புலியின் வால். ஆச்சர்யத்தோடு கவனித்தது பூனை.
‘பூனையே! உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நீ சிறிய விலங்காக இருந்தாலும், எல்லா முடிவுகளையும் நீயாக எடுக்கிறாய். சுதந்திரமாக செயல்படுகிறாய். ஆனால், புலியைப் போன்ற பலசாலியான மிருகத்தின் வாலாக இருந்தாலும் என்னால் சுயமாக எந்த செயலையும் செய்ய முடியவில்லை. அதனால் புலிக்கு வாலாக இருப்பதைவிட பூனைக்கு தலையாக இருப்பதையே நான் பெருமையாக நினைக்கிறேன்', என்று வருத்தப்பட்டது புலியின் வால்.
மறுத்தது பூனை.
‘எல்லோரும் என்னை அபசகுணமாக பார்க்கிறார்கள். யாருமே எனக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஆனால், புலிக்கு மரியாதை கொடுப்பவர்கள் எல்லோரும் வாலாகிய உனக்கும் மரியாதை கொடுக்கிறார்கள். அதனால், பலமில்லாத பூனையாக இருப்பதைவிட, மரியாதைக்குறிய புலிக்கு வாலாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறேன்', என்றது பூனை.
அப்போது மூன்றாவதாக ஒரு குரல் கேட்டது. பேசியது புலியல்ல. பூனையின் வால்.
‘புலிக்கு கொடுக்கும் மரியாதை தானாக அதன் வாலுக்கும் வந்து சேர்கிறது. ஆனால், பூனையை யாருமே மதிப்பதில்லை. மதிப்பில்லாத ஒருவருக்கு வாலாக இருப்பதுதான் உலகத்திலேயே கேவலமானது', என்று சொல்லி அமைதியானது பூனையின் வால்.
அதிகாரமில்லாத, தனக்கிருக்கும் அதிகாரத்தை உபயோகிக்காத அதிகாரியிடம் பணிபுரியும் பணியாளரின் நிலை இதுதான். இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலையும்.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. நமது வீரர்கள் கொல்லப்பட்டார்கள், எல்லையில் வசிக்கும் இந்திய கிராமவாசிகள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை படிக்கும் நம் அனைவரும் பதறுகிறோம். ஆனால், நமது மீனவர்கள் தாக்கப்படும் போதும், கொல்லப்படும் போதும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நமது பிரச்னைகளுக்கு இதே முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அண்டை மாநிலங்களே நம்மை மதிப்பதில்லையே, எப்படி அடுத்த நாட்டுக்காரன் மதிப்பான்?
‘India deeply concerned over killing of TN fisherman' என்ற தலைப்பை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. தமிழக மீனவர்கள் என்று எழுதும் நீங்கள் இந்திய மீனவர்கள் என்று ஏன் எழுதுவதில்லை? இந்த பிரச்னையை தமிழகத்திற்கு மட்டுமே சொந்தமாக்க நினைக்காதீர்கள். இது இந்தியாவின் பிரச்னை. இந்த அவல நிலைகளையெல்லாம் தமிழர்களாகிய நாம் சகித்துக் கொள்வதற்கு காரணம் நம்மிடமிருக்கும் தேவைக்கு அதிகமான தேசியப் பற்று.
எதற்கெடுத்தாலும் நான் வீரத் தமிழன் என்று பேசிவரும் அரசியல் தலைவர்களும் சரி, நாமும் சரி, நம் வாழ்நாளில் இந்தப் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
தமிழகம் ஒரு பூனையின் வால் என்று நினைத்து வெட்கப்படுவோம். இல்லை நாங்கள் புலி என்று மத்திய அரசு நினைத்தால் அதை நிரூபியுங்கள். பிறகு நாங்கள் புலியின் வால்', என்று பெருமை கொள்கிறோம்.
- சாது ஸ்ரீராம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...