இன்னும் சில நாட்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கப் போகிற ஒரு விஷயம் குடியரசு தலைவர் தேர்தல். பாஜக சார்பில் யார் நிறுத்தப்படுவார்? காங்கிரஸ் சார்பில் யார் நிறுத்தப்படுவார்? என்பதெல்லாம் தெளிவாகத் தெரிய இன்னும் சில வாரங்கள் ஆகும்.
‘பாஜகவின் தேர்வு இவர்தான்', என்று பலரின் பெயர்களை ஊடகங்கள் வெளியிடுகிறது. ‘மகாத்மா காந்தியின் ரத்த வாரிசுதான் காங்கிரஸின் தேர்வு', என்றெல்லாம் கூட யூகங்கள் கை, கால் முளைத்து உலவுகிறது. ‘காங்கிரஸுக்கு மெஜாரட்டி இல்லை. அவர்களால் முன்னிறுத்தப்படுபவர்கள் ஜெயிக்க முடியாது. அதனால் காந்தியின் ரத்த சொந்தத்தின் நினைவு காங்கிரஸுக்கு வந்துவிட்டது', என்ற நையாண்டி பேச்சும் நம் காதில் விழுகிறது. ஒரு வேளை, காங்கிரஸ் தரப்பிலிருந்து காந்தியின் ரத்த சொந்தம் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அது ஆத்ம சுத்தியோடு எடுக்கப்பட்ட முடிவாக இருக்காது.
காரணம், இதுவரை பதிமூன்று முறை காங்கிரஸ் ஆதரவுடன் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அப்போதெல்லம் நினைவுக்கு வராத மகாத்மா காந்தியின் ரத்த சொந்தம் தற்போது மட்டும் காங்கிரஸின் நினைவிற்கு வந்தது எப்படி?' இந்த கேள்விக்கு மக்கள் மன்றத்தில் பதில் சொல்லும் நிலை ஏற்படும்.
குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் பாஜக இருப்பது தற்போது இரண்டாவது முறை. வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, பாஜகவிற்கு வெற்றிக்கு தேவையான ஓட்டுகள் இல்லை. அதனால் எல்லா தரப்பும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அப்துல் கலாம் என்ற மாமனிதரை குடியரசு தலைவராக நிறுத்தியது பாஜக. காங்கிரஸ் வேறுவழியின்றி அவரை ஆதரித்தது. இந்தியாவின் மிகச் சிறந்த குடியரசு தலைவர்களில் முதன்மையானவர் என்ற உயரிய இடத்தையும் அவர் பிடித்தார். அப்துல் கலாமின் செயல்பாடுகள், அவரை முன்னிறுத்திய பாஜகவிற்கு பெருமை தேடித்தந்தது. ஆனால், 2007ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலின் போது, மீண்டும் அப்துல் கலாமை முன்னிறுத்த ஒரு தரப்பு முயன்ற போது, காங்கிரஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பதிலாக பிரதீபா பாடீலை முன்னிறுத்தியது
அப்துல் கலாமின் ஆளுமை, மேலாண்மை ஞானம், நிர்வாகத் திறமை, தேசபக்தி ஆகியவை நம் எல்லோருக்கும் தெரியும். இவை எல்லாவற்றையும் விட அவர் ஒரு நல்ல மனிதர். இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் பதவியில் அமர்த்தி அவரின் சேவையை நாம் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். இது நமது தேசத்துக்கு பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராவது வேண்டுமென்றே ஏற்படுத்தியிருந்தால், அவர்கள் நம் தேசத்துக்கு அநீதி இழைத்தவர்கள்.
அப்துல் கலாமிற்கு பிறகு குடியரசு தலைவராக காங்கிரஸால் முன்னிறுத்தப்பட்டவர் பிரதீபா பாடீல். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்.