கிலோமீட்டர் கற்களில் இந்தி: தமிழகத்துக்கு 'விதி'; கர்நாடகத்துக்கு விதிவிலக்கா?

தமிழகத்தில் உள்ள கிலோமீட்டர் கற்களில் ஊர் பெயர்களை இந்தியில் எழுதும் புது நடைமுறை செயல்படுத்தப்பட்டதால், மற்றொரு மொழிப்போருக்குத் தமிழகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.
கிலோமீட்டர் கற்களில் இந்தி: தமிழகத்துக்கு 'விதி'; கர்நாடகத்துக்கு விதிவிலக்கா?

தமிழகத்தில் உள்ள கிலோமீட்டர் கற்களில் ஊர் பெயர்களை இந்தியில் எழுதும் புது நடைமுறை செயல்படுத்தப்பட்டதால், மற்றொரு மொழிப்போருக்குத் தமிழகம் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

இன்றைய சூழலை முன்னிறுத்தி, தமிழக அரசியல் கட்சிகளின் குரல்கள் மட்டுமல்லாது, பொதுமக்களின் குரலும் இதனைத்தான் எதிரொலிக்கிறது.

மைல் கற்கள் என்று நாம் குறிப்பிடும் 'தொலைவிட வழிகாட்டிக்கற்கள்' (தொலைவு+இடம்+வழி+காட்டி+கல்), தற்பொழுது தன் தூர அளவை மைல் கணக்கில் இருந்து கிலோமீட்டர் அளவுக் கணக்குக்கு மாறி தலைமுறைகள் தாண்டிவிட்டது. இன்று மைல்கல் என்ற சொல் இறந்த காலத்தின் குறியீடே அன்றி தற்காலத்தின் முழு பொருளைத் தருவதன்று.

இனி “மைல்கல்” என்ற சொல்லை தொல்பொருளைக் குறிக்கவும், பழைய அளவீடு முறையை குறிக்க மட்டுமே கையாளலாம். கிலோமீட்டர் கல்லே தற்காலத்திய பொருள் தரும் சொல்லாகும். தமிழ் வழக்கில் “பெருவழிக்கல்” என்ற சொல்லாட்சி எக்காலத்துக்கும் பொருந்துவதாகும்.

தமிழகத்தில் கிலோமீட்டர் கற்களில் இந்தியில் எழுதும் புது நடைமுறை ஏன், எதற்கு, எதனால், செயல்படுத்தப்படுகிறது? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணம் என்ன? தேசிய அளவிலான இக்கொள்கை முடிவுக்கு யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்? ஆணையில் கையெழுத்திட்டது யார்? பழியை ஏற்றுக்கொள்ள வேண்டியது யார்? முகத்தில் கரியைப் பூசிக்கொள்வது யார்? பூச வேண்டியது யார்? என்ற கேள்விகள் அவசியமா இல்லையா என்று தெரியவில்லை.


ஆனால், பழிச்சாடல்களும், தன்னிலை விளக்கங்களும், விவாதங்களும் மிதமிஞ்சி புளித்து ஒதுக்கும் அளவுக்கு உலவும் நாட்களாக இன்றைய நாட்கள் உள்ளன. அயர்ச்சியுடன் வேதனையும் எஞ்சுகிறது.

இவை, தமிழ் மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரான செயலைச் செய்யாமல் விலக்கிக்கொள்வதற்குப் பதிலாக, தமிழக மக்கள் யாருடைய விருப்பமும், எதிர்ப்பும் மத்திய அரசுக்குப் பொருட்டல்ல என்பதுடன், எங்கள் செயலை நாங்கள் நடத்திக்காட்ட என்னவற்றையெல்லாம் பேசுவோம் என்பதற்குச் சாட்சியாக உள்ளன.

இந்தியாவுக்குப் பொதுவான “தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ஆணை”யின் முடிவை ஒட்டியே, தமிழகத்தில் கிலோமீட்டர் கற்களில் இந்தி இடம்பெறும் என்றால், தமிழகத்தில் வாழும் சாமானியனிடமிருந்து பிறக்கும் ஓரிரு எளிய கேள்விகள் இவை - “தேசிய நெடுஞ்சாலைத் துறையின் இந்த ஆணை”யின் முடிவு எல்லா மாநிலங்களிலும் சமமான கதியில் விருப்பு வெறுப்பின்றி, பாரபட்சமின்றி செயல்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது செயல்படுத்த முனைப்பாவது காட்டப்பட்டுள்ளதா? அல்லது சமச்சீரற்ற வகையில் தமிழகத்தின் மீது மட்டும் மேலாதிக்க வெளிப்பாடாக திணிக்கப்பட்டுள்ளதா? அல்லது நெடுஞ்சாலைத் துறை ஆணைக்குத் தமிழகம் ஒரு பரிசோதனை எலியா?

ஏன் என்று தெரியாது, எந்த மத்திய அரசுக்கும் தமிழ், தமிழ்நாடு என்றால் எட்டிக்காய் ஆகிவிட்டது. ஒவ்வொரு நிகழ்விலும் தமிழரும், தமிழ்நாடும் தங்கள் தேசப்பற்றையும், தேசநலனை உறுதிசெய்யும் கையுடனே தங்கள் சுயத்தைப் பாதுகாத்துக்கொள்ள கையை உயர்த்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசுகள் உருவாக்குகின்றன. இது சுதந்திரம் பெற்ற பிறகான நிலைதான் என்பது வரலாற்றுப்பிழையாக ஆகிப்போகும். இந்நிலையினை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து தமிழ்நாடு கண்டுவருகிறது.

மாநிலம் ஒன்றிலிருந்து தேசப்பற்றையும் தேசநலனையும் எதிர்நோக்கும் மத்திய அரசு, மாநில நலம், மாநிலப்பற்றுகளுக்குக் குந்தகம் விளைவிக்காத நடத்தைகளைக் கற்றுக்கொள்ளாதது நியாயமற்றது மட்டுமல்ல; எதேச்சதிகாரத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதானே தவிர வேறு ஒன்றுமில்லை. அரசியல் எதேச்சதிகாரம் மட்டுமே பிளவுக்கு அடிப்படை என்பதை வரலாறு காலம் காலமாகக் கற்றுத் தந்துள்ளதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க : மைல் கல்லில் எழுதுவது ஹிந்தித் திணிப்பு அல்ல

சுதந்திர இந்தியாவில் மாநிலங்களின் எல்லைகள் தவிர்க்க முடியாது மொழியால் வரையறுக்கப்பட்டுவிட்டது. மாநிலங்களுக்கிடையே இணைப்பு மொழி பற்றிய தெளிவற்ற சிந்தனையுடன் இந்த வரையறுப்பு தன் கொடூர முகத்தை இப்பொழுது மீண்டும் வெறுப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தி வருகிறது என சமூக அக்கறையுடன் சிந்திப்பதில் தவறொன்றும் இல்லை.

இந்தியாவில், தமிழும் வடமொழியும் மொழிகளாக மட்டுமல்லாது இரு வேறுபட்ட இனங்களின் அடையாளமாகிப்போனதில் குற்றம் ஒன்றும் இல்லை; தவிர்க்க முடியாததும்கூட. ஆனால், இன்று மொழிப் பற்றி பேசும்போது, மொழி உணர்வா? மொழி வெறியா? மொழி பயங்கரவாதமா? என்று பேதம் காணமுடியாது சிக்கலாக்கியுள்ளது. எளிமையான தாய்மொழி உணர்வுகூட மொழி வெறி; மொழி பயங்கரவாதம் என திரித்துக்கொள்ளவும் முடியும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை மொழி வெறியும், மொழி பயங்கரவாதத்தையும் நாட்டுப்பற்று என முன்னிறுத்த முடியும் என்பதிலும் உள்ளது. இணைப்பு மொழி பற்றிய தெளிவின்மை இதற்கான வாய்ப்புகளை மிக எளிதாக வழங்கிவிட்டது.
 

இந்த வாய்ப்புகளின் பின்புலத்தில்தான், தமிழகக் கிலோமீட்டர் கற்களில் இந்தி இடம் பெறுவதை விமர்சிப்பது, பேசுவது; தமிழ்நாட்டில் தமிழரிடையே உள்ள மொழிவெறி, மொழி பயங்கரவாதம் தமிழரின் தனிப்போக்கு எனக் கருதுவது மட்டுமல்லாது, மொழி வெறி தமிழரின் சொத்து என்பதாகிவிட்டது. தமிழகத்தின் எதிர்ப்புக் குரல் என்பது அரசுக்கு எதிரான குரலல்ல; அது உரிமைக்கான குரல்; சுயத்தை வெளிப்படுத்தும் குரல்; சுயமரியாதைக்கான குரல். அது மாநிலங்களுக்கிடையே சமச்சீரன நடத்தையை; பாகுபாடு காட்டாத நடத்தையை கேட்கும் குரல்.

எவ்வாறாகினும், நெடுஞ்சாலைத் துறை ஆணையைச் செயல்படுத்தும் திட்டம் தமிழத்துக்கு மட்டுமானதா என ஐயப்படவேண்டி உள்ளது.

நம் அண்டை மாநிலமான கர்நாடகத்தில், மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கிலோமீட்டர் கற்களில் முழுவதும் ஊர்ப்பெயர் கன்னடத்தில் மட்டுமே உள்ளது. எங்குமே இந்தியைக் காணோம். அரிதாக, முழுவதும் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்ட கிலோமீட்டர் கற்களை காணமுடிந்தது. அவற்றுள்ளும், பெரும்பான்மையான ஆங்கில எழுத்துகள் கொண்ட கற்களில், ஆங்கில எழுத்துகளை சிவப்பு பெயின்ட் பூசி மறைத்துள்ளனர். பல ஆங்கிலப் பெயர் தாங்கிய கற்கள் சாய்க்கப்பட்டுள்ளன; சில பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தேசிய நெடுஞ்சாலை மைல் கல் ஊர் பெயரில் ஹிந்தி மொழி ஏன்?

இவ்வாறே, வட இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும், பிரதேச மொழி பேசும் மாநிலங்களில் அந்தந்தப் பிரதேச மொழியே பெரும்பான்மையாக இடம் பெற்றிருக்கின்றன. இம்மொழிகள் நகரி எழுத்துகளையே பயன்படுத்துவதால், யாவும் நகரி எழுத்தைப் பயன்படுத்தும் இந்தி போலவே பார்ப்பவர்களுக்கு மயக்கத்தைத் தருகிறது.

எனில், கர்நாடகத்துக்கு அல்லது அதுபோன்ற பிற மாநிலங்களுக்குத் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் ஆணையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து மத்திய அரசு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய இடம் இது.

போலவே, இந்த மாநிலங்களில் பயணம் செய்யும் தென்னிந்திய வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில், இதே நெடுஞ்சாலைத் துறை என்ன ஆணையை அல்லது கொள்கையை வைத்துள்ளது என்பது தெளிவிக்கப்படவேண்டி உள்ளது. தென்னிந்திய வாகன ஓட்டிகளுக்கு அரசு எந்த உதவியும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசும், நெடுஞ்சாலைத் துறையும் கருதுகிறதா?

அண்டை மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து கொஞ்சம் அறிந்த ஒரு எளிய இந்தியக் குடிமகனிடமிருந்து பிறக்கும் எளிய கேள்விகள் இவை - மும்மொழிக் கொள்கையை தம் பாடத்திட்டத்தில் ஏற்றுக்கொண்டு இந்தியை ஒரு மொழியாக தம் மாநில மக்களுக்குப் போதிக்கும் கர்நாடகம், ஏன் தம் கிலோமீட்டர் கற்களில் இந்தியை எழுதிக்கொள்ளவில்லை. ஆங்கில மொழிக் கற்கள் சேதப்படுத்தப்பட்டது குறித்து எதற்காவது, எப்போதாவது தம் கவலைகளைப் பகிர்ந்துகொண்டதுடன், மத்திய அமைச்சர்கள் மூலம், அவ்வாறு இடம்பெறுவது தேசியக் கொள்கை என விளக்கம் அளிக்க முன்வருமா?
 

ஒரு உதாரணத்துக்காக, கர்நாடகத்துக்கு ஒருபோதும், இந்தி மொழி மட்டும் அறிந்த வாகன ஓட்டிகள் பயணிப்பதில்லை என்றும், அவ்வாறு பயணிக்கும் அனைவரும் கன்னடம் படிக்க முழுமையாக அறிந்தவர்களே என்றும் மத்திய அரசு உறுதிசெய்யுமா?

பெருந்தன்மைக்கு முன்னுதாரணமாக, தமிழும் ஆங்கிலமும் இடம்பெற்ற தமிழகப் பெருவழிக் கற்கள் சிறப்பாக உதவுகின்றவா? அல்லது கன்னடம் போன்று மாநில மொழி மட்டுமே இடம்பெற்ற பெருவழிக் கற்கள் உதவுகின்றனவா என்று தம்தம் தாய்மொழியுடன் மட்டும், அதுவும் சமயங்களில் பேச மட்டும் அறிந்த ஜம்முவின் மேல் எல்லையிலிருந்து கன்னியாகுமரிக்குப் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடம் கேட்டுப் பதிலைப் பெற்றுச் செயல்படுங்கள். தமிழகத்துக்கு வரும் வட இந்திய வாகன ஓட்டிகளுக்கு பெரும்பாலும் இந்தி பேசத் தெரியும் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவு உண்மை அவர்களில் பலருக்கு இந்தியை எழுதவோ படிக்கவோ தெரியாது என்பதிலும் உள்ளது. எல்லா வடமாநிலங்களும் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்கள் என்று குறிப்பிடுவது, அவர்களை அரசே அவமானப்படுத்துவதற்குச் சமம். ஆனால், தமிழகத்தில் மத்திய அரசு அப்படித்தான் சாதிக்கிறது.

இந்தி பேசும் அவர்களுக்குப் பெரும்பாலும் பிகாரியும், காஷ்மீரியும், மணிப்பூரியும், ஒரியாவும், ராஜஸ்தானமும், வங்கமும் மராத்தியும் தாய்மொழியாகப் படிக்கவும் எழுதவும் தெரியுமே ஒழிய, இந்தியை அல்ல. அவ்வளவு ஏன், அண்டை மாநிலமான கேரள, கர்நாடக, ஆந்திரப் பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு அடிக்கடி பயணப்படும் வாகன ஓட்டிகளுக்கும்கூட தமிழ் பேச வரும். ஆனால் எழுதப் படிக்க வராது.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்குப் பயணிக்கும் ஒரு வாகன ஓட்டியை கேட்டுப் பாருங்கள் அவர் சொல்வார், வாய் உள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும் என்ற முதுமொழி மீது நம்பிக்கை வைத்து தாம் பயணிப்பதை. ஓரிரு அடையாளப்படுத்தும் சொற்கள், அதன் மரூவு போன்று சிதைந்த வழக்கில் இருந்தாலும் போதும்; தான் தன் முகவரியை அடைந்துகொள்வதை அனுபவபூர்வமாகப் பகிர்வார். அவருக்குக் கிலோமீட்டர் கற்கள் உதவுவது மிகவும் குறைவே.

மொழி வளர்ச்சி எது என்பதில் சிந்தனைத் தடுமாற்றம் கொண்டுள்ள அரசியல், அதிகார வர்க்கம் மிகுந்துள்ள காலம் இது என்று தோன்றுகிறது. கிலோ மீட்டர் கற்களில் இடம்பெறுவது மொழி வளர்ச்சி அல்ல; மொழி வளர்ச்சி என்பது எழுதப்பட்ட இலக்கியத்தில் உள்ளது. மக்களின் பேச்சுவழக்கில் உள்ளது. மக்களின் புரிதல் புலத்தில் உள்ளது.

ஒரு தேசியக் கொள்கை எனில், சமச்சீராக மேற்கொள்ள வேண்டிய ஒன்றை மற்ற மாநிலங்களில் செய்ய முயற்சி செய்யாமல், ஏன் தமிழகத்தில் செய்துகாட்டத் துடிக்கின்றீர்கள்?

இந்த விஷயத்தில் தமிழகம் ஒரு பரிசோதனை எலியாகவே இருந்துகொள்ளட்டும். ஆனால் இந்த எலி, சோதிப்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவையான சாதகமான பரிசோதனை முடிவை, இன்றல்ல நேற்றல்ல காலம் காலமாக அளித்ததே இல்லை. ஏனெனில், சுயமரியாதையுடன் உயிர்வாழும் அத்துனை எதிர்ப்புச் சக்திகளையும் அது தன் மரபணுவில் தலைமுறைக்குத் தலைமுறை வீரியத்துடன் கடத்திவருகிறது. இது ஆட்சியில் அமரும் எந்த மத்திய அரசுக்கும் தெரியும்; அமைச்சர்களுக்கும் தெரியும்; அரசியல்வாதிகளுக்கும் தெரியும். தெரிந்தும், மாநிலங்களுக்கிடையே சமச்சீரற்ற செயல்களைச் செய்து, தூங்கும் புலியை தட்டியெழுப்புவது நலமா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com