உலகிற்கே வழிகாட்டும் பண்டை தமிழகத்தின் மைல்கற்கள் -  ஒரு சுவாரஸ்ய பயணம்!  

தமிழகத்தில் பொதுவாக இரண்டுவகைப் போக்குவரத்துச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
உலகிற்கே வழிகாட்டும் பண்டை தமிழகத்தின் மைல்கற்கள் -  ஒரு சுவாரஸ்ய பயணம்!  

தமிழகத்தில் பொதுவாக இரண்டுவகைப் போக்குவரத்துச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. “வதி” என்பது குறுகிய சாலையையும், “பெருவழி” என்பது அகன்ற சாலையையும் குறித்தன.

தமிழகத்தின் பண்டையப் பெருவழிகள்

பண்டைய தமிழகப் பெருவழிகள் வடஇந்தியாவையும், தென்னிந்தியாவின் மேற்கு கிழக்கு துறைமுகங்களையும் தமிழகத்தின் முக்கிய நகரங்களையும், பட்டிணங்களையும் இணைத்தன. “வீரநாராயணன் பெருவழி”, “ஆதன் பெருவழி”, “சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி”, “சோழமாதேவிப் பெருவழி”, “இராசமகேந்திரன் பெருவழி”, “இராசகோசரிப் பெருவழி”, “மகதேசன் பெருவழி”,  “அதியமான் பெருவழி” எனப் பல பெருவழிகள் குறித்து கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

மேலும், “வடுகப் பெருவழி”, “கொங்கப்பெருவழி”, “தஞ்சாவூர்ப் பெருவழி” என்ற பெருவழிகளைப் பற்றியும் அறியமுடிகிறது. இவை மட்டுமின்றி “தட்சிணப் பெருவழி” - கன்னியாக்குமரியையும் காஷ்மீரையும் இணைத்தப் பெருவழி (இப் பெருவழியானது கன்னியாகுமரியையும் மகதத்தையும் இணைத்ததென்பர்), காஞ்சிபுரத்தில் இருந்து பூனா வரை ஒன்றும், கள்ளிக்கோட்டையில் இருந்து இராமேசுவரம் ஒன்றும், கோவாவிலிருந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் வரை சென்ற ஒன்று என மூன்று பண்டையப் பெருவழிகள் பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.

பண்டையப் பெருவழிகளின் காலத்தை கணிப்பதில் நிறைய இடர்கள் உண்டு. விலங்கினங்களின் வலசைப் பாதையை ஒட்டி மனிதன் பாதுகாப்பாகப் போய் வந்த பாதைகளே பண்டையப் பெருவழிகளுக்கு அடிப்படையாக அமைந்தது என கருத இடமுண்டு. வரலாற்றுக் காலச் சான்றுகள் கணவாய்கள் வழியாக பெருவழித்தடங்கள் அமைந்திருந்ததைக் காட்டுகின்றன. வலசைப்பாதைகளும் கணவாய்களும் இணை பிரியாதவை என்பது இன்றளவும் கண்கூடானது என்பதால் மேற்கண்ட கருதுகோள் ஏற்கத்தக்கதே. போலவே, பண்டைய மேய்தல் தடங்களும் பெருவழிகளைச் சமைத்துள்ளன. வலசைப்பாதைகளும், மேய்த்தல் தடங்களும் நாடு, கண்டங்களின் மனித வரையறைகளைக் கடந்தவை. நாடுவிட்டு நாடும், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பெருவழிகளின் தோற்றத்திற்கான விதை இப்படித்தான் முளைவிட்டுப் பின்னர் படர்ந்தது இன்றைய நிலையை அடைந்துள்ளது.

சங்ககாலத்தில் வழக்கத்தில் இருந்த பெருவழிகளைப் பிறகு வந்தவர்கள் புதுப்பித்திருக்கலாம். அந்தவகையில் பழமையான பெருவழிகளில் ஒன்றாக அதியமான் பெருவழி இருந்துப் புதிப்பிக்கப்பட்டிருக்கலாம்.       

      (அதியமான் பெருவழி 29 காதகம் கல்)

“அதியமான் பெருவழி”யில் இன்று போலவே அன்றும் வழிப்போக்கர்களுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட முக்கிய நகரம் அல்லது ஊர் எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது என்பதைக் குறிப்பிடும் பெருவழிக் கற்கள் (இன்றைய கிலோமீட்டர் கற்களைப் போல்) நடப்பட்டன. இவ்வழக்கத்திற்குச் சான்றாக இரண்டு கற்கள் கிடைத்துள்ளன. எழுத்தமைதி கொண்டு இக்கற்களின் காலம் பொதுவாக 13-ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையையுடையவை இக்கற்கள்.

அதியமான் பெருவழிக் கற்கள்  

அதியமான் பெருவழிக்கற்களில் இரண்டு கற்கள் இந்நாள்வரை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவ்விரு கற்களிலும், அதியமான் பெருவழி எந்த ஊர் செல்கிறது; அவ்வூர் தகடூரில் இருந்து எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற குறிப்பைத் தருவதுடன், தனிச்சிறப்பாக எவ்வளவு தொலைவு என்பதை எண்ணால் மட்டுமின்றி கல்லாரும் அறியும் வகையில் குறியீடுகளாகவும் வெட்டப்பட்டுள்ளது.

நாவல்தாவளம்

இக்கற்கள் நாவல் தாவளம் என்ற ஊர் அமைவிடத் தூரத்தைத் தெரிவிக்கின்றன. இந்த நாவல் தாவளம் எது? எங்கு அமைந்துள்ளது என்பதை அடையாளம் காண்பதில் கருத்து முரண்கள் உண்டு. தமிழ் வழக்கில் தாவளம் என்பது தங்குமிடத்தை குறிப்பதாகும். வணிகர்களும், பிறரும் நெடுந்தொலைவு செல்லும் போது இடையிடையே தங்கி தம் பயணத்தைத் தொடர்ந்தனர். இவ்வாறு தங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டத் தாவளங்களைக் குறித்த பல சான்றுகள் இன்று ஊர்ப்பெயர்களாக நிற்கின்றன. சான்றாக வேம்படித்தாளம் (சேலம் மாவட்டம்), மஞ்சிபுலத்தாவளம் (கோவை மாவட்டம்), இன்றைய கேரளப்பகுதியில் அமைந்துள்ள வேலந்தாவளம், வண்டித்தாவளம் ஆகிய ஊர்களைக் காட்டலாம். இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை பேருந்துச் சாலையில் தாவளம் என்ற பெயரில் ஓர் சிற்றூர் அமைந்துள்ளது. அது, இது போன்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட ஊராகலாம்.   

அதியமான் பெருவழிக் கற்களின் சிறப்பு:

கிடைக்கப்பெற்ற பெருவழிகற்களில் ஒன்று நாவல்தாவளம் 29 காதம் தொலைவில் உள்ளது என்பதையும் மற்றொன்று நாவல்தாவளம் 27 காதம் தொலைவில் உள்ளது என்ற தகவலைக் காண்பிக்கின்றன. தூரத்தை தமிழ் எண் எழுத்துகளும், அதே தூர அளவைக் குறிக்க பெரிய மற்றும் சிறிய குழிகள் குழித்துக் குறியீடுகளாக்கப் பட்டுள்ளன. பெரிய குழிகள் ஒவ்வொன்றும் பத்து என்ற அளவையும், சிறிய குழி ஒவ்வொன்றும் ஒன்று என்ற அளவையும் குறிக்கும்.

(அதியமான் பெருவழி 27 காதகம் கல்)

அதாவது 29 என்ற தொலைவைக் குறிக்க இரண்டு பெரிய குழிகளையும், ஒன்பது சிறு குழிகளையும்  செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. போலவே 27 என்பதைக் குறிக்க இரண்டு பெரிய குழிகளையும், ஏழு சிறு குழிகளையும்  செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. பெரிய குழிகள் மேல்பக்கமும் சிறிய குழிகள் அதற்குக் கீழும் செதுக்காப்பட்டுள்ளன.

29 காதம் கல்லில் இரு பெரிய குழிகளுக்குக்கீழ் வரிசைக்கு மூன்று என்று மூன்று வரிசையில் ஒன்பது சிறுகுழிகள் வெட்டப்படுள்ளன. 27 காதம் கல்லில் இருபெரிய குழிகளுக்குக்கீழ் முதல் வரிசையில் நான்கு, இரண்டாம் வரிசையில் மூன்று என ஏழு சிறிய குழிகள் வெட்டப்பட்டுள்ளன.

இந்தவகையில் கல்லாதவர்களும் பயன்படும் வகையில் இக்கற்கள் அமைக்கப்பட்டன. ஏன் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளும் இக்கற்களின் குழிகளைத் தடவி துரத்தை அறிந்துகொள்ள வாய்ப்பளித்திருக்கும். இந்தவகையில் பாதையில் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் உதவும் வகையிலும், சிக்கலற்ற சிரமற்ற பயணத்தினை உறுதிசெய்யும் விதமாகவும் நம் முன்னோர்களால் அமைக்கப்பட்ட இப்பெருவழிக்கற்கள் இன்றைய உலகிற்கும் ஏன்? எதற்கு? எவ்வாறு அமைக்க வேண்டும்? என்பதற்கு வழிகாட்டும்படியாக அமைந்துள்ளன. ஒருவகையில் இது எழுத்துருக்கள் பொருளற்றுப் போகும் இடங்களை உணர்ந்த தெளிந்த தொலைநோக்குப் பார்வையில் பிறந்த அறிவின் பாற்பட்டதாகும்.   

(வரைபடம் நன்றி. கா.ராஜன்)

- த. பார்த்திபன் (தொடர்புக்கு  - thagadoorparthiban@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com