கிலோமீட்டர் கற்களில் தமிழ் Vs ஹிந்தி: ஓர் அலசல்

தமிழகத்தில் உள்ள கிலோமீட்டர் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதப்படுவதை ஒரு பெரிய விஷயமாக செயல்படுத்திவரும் மத்திய அரசு, அதுகுறித்து தமிழ் மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைப்பது ஒரு வேடிக்கை.

ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு தொடக்கத்தில் இதை விவாதிப்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.

தமிழ் மொழி, தமிழர்களுக்கும், தமிழ் பேசும் பலரின் தாய்மொழியாகவும் இருக்கிறது. தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றானதும், செம்மொழியாக இருப்பதும் ஆகும்.

உலகில், எட்டு கோடிக்கும் அதிகமாக தமிழர்கள் உள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மையாகவும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழர்கள் பெருவாரியாக உள்ளனர். (அட்டவணை)

1997-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது

தமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துகள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகிறது. தொடக்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துகளை, ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்க காலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சம்ஸ்கிருதத்தில் இல்லாத, தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சம்ஸ்கிருதத்தில் உள்ள, தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை.

2-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன்பின்னர், தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டவையாக வளர்ச்சி அடைந்தன. கி.பி. 5 மற்றும் 6-ம் நூற்றாண்டுகளில், இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன.

தற்காலத் தமிழ் எழுத்துகள், வட்டெழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7-ம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்து முறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள், சம்ஸ்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8-ம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்து முறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழகத்தின் தென்பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை, 11-ம் நூற்றாண்டில் சோழர்களால் பாண்டிய நாடு கைப்பற்றப்படும் வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில், சோழ - பல்லவ தமிழ் எழுத்து முறை, நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சிபெற்றது.

தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறிஸ்துவுக்கு முன் 400-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டவையாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000-க்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ 95 விழுக்காடு தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. மிகப் பழைய ஆக்கங்கள், கி.மு. 4-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம், தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி.மு. 400-ம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கி.மு. 600-ம் ஆண்டுக்கும் முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.மு. 200 முதல் கி.பி. 200 காலப் பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

ஜம்பை தமிழ் பிராமி கல்வெட்டு. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூருக்கு அருகே உள்ளது. இது தமிழ்ச் சங்க காலத்தை (400 BCE) சேர்ந்தது.

மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, தமிழ்ச் சங்க காலத்தை (400 BCE - 200 CE) சேர்ந்தது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 1715-ல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் பக்கம்.

தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டு. இது வட்டெழுத்தில் உள்ளது. 1000 CE-ல் கட்டப்பட்டது.

தமிழின் சிறப்புக்கு திருக்குறள்

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தை திருக்குறள் வகிக்கிறது. ஆங்கிலேயர்களின் புனித நூலான பைபிளும், இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. மூன்றாவதாக உள்ள திருக்குறள், உலகில் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழுக்கு சங்கம் வைத்து வளர்த்த பெருமையைப் பெற்றவர்கள் தமிழர்கள். அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் கல்வி கற்றிருந்தனர் என்பதும், புலவர்களுக்கு ஈடாக முடிமன்னர்கள் புலமை பெற்றிருந்தனர் என்பதும் அறியத்தக்கது.

நூற்றுக்கணக்கான மேலை நாட்டினரும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்றால் மிகையாகாது. (அட்டவணை)

இன்று, தமிழுக்கும் தமிழர்களுக்கும், பலவகைகளிலும் இன்னல்கள் பலவிதங்களில் அனைத்துத் தரப்புகளாலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இன்றும் உலக நாடுகளில் பலவற்றில் தமிழுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வது, தமிழர்களாகிய நம் அனைவரின் கடமை என்றே சொல்வது சரியாக இருக்கும்.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மட்டும் தமிழில் 16 செய்தித்தாள்கள் வருகின்றன. மேலும், தமிழ் இன்றி சிங்கப்பூரில் நாணயங்கள் கிடையாது.

தென் ஆப்பிரிக்கா

இந் நாட்டு அரசியல் அமைப்புச் சட்டம் அத்தியாயம் 1, ஷரத்து 5 (b)-ல், தமிழ் போன்ற சிறுபான்மை மொழியை போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

மலேஷியா

தமிழை சிறுபான்மை மொழியாக அக்கீகரித்துள்ளதுடன், சிறுபான்மை மொழிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனவும் சட்டம் இயற்றியுள்ளது.

மொரீஷியஸ்

மொரீஷியஸ் அரசு, தன் நாட்டு ரூபாய் நாணயத்தில் தமிழ் மொழியைப் பொறித்து அழகு செய்துள்ளது.

இலங்கை

இலங்கை அரசும் தன் ரூபாய் நாணயத்தில் தமிழ் மொழியைப் பொறித்து அழகு செய்துள்ளது.

தொலைவுக் கல் (கிலோமீட்டர் கல்)

தொலைவுக்கல் என்பது போக்குவரத்துப் பாதையில், அடுத்துள்ள முக்கிய ஊருக்கான தொலைவைக் காண்பிப்பதற்காக நடப்படும் ஒரு கல்லாகும். இந்தக் கல்லில் அடுத்துள்ள முக்கிய ஊரின் பெயரும், அதன் கீழ் அந்தக் கல்லில் இருந்து குறிப்பிடப்பட்ட முக்கிய ஊருக்கான தொலைவும் கிலோமீட்டர் அளவில் தரப்பட்டிருக்கும்.

ஆங்கிலேய ஆட்சியில் 1750-1800-க்கு இடைப்பட்ட 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், புதுக்கோட்டையிலிருந்து ஆதனக்கோட்டை செல்லும் மார்க்கத்தில் கூழியான்விடுதி என்னும் ஊரில், தமிழ்நாடு அறிவியல் இயக்கக் குழுவினரால் கண்டறியப்பட்ட மைல்கல்.

*

தமிழகத்தில் உள்ள கிலோமீட்டர் கற்களில் ஹிந்தியில் பெயர் எழுதப்படுவதை ஒரு பெரிய விஷயமாக செயல்படுத்திவரும் மத்திய அரசு, அதுகுறித்து தமிழ் மக்களுக்கு ஏதும் தெரியாது என நினைப்பது ஒரு வேடிக்கை.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக டி.ஆர். பாலு இருந்தபோதுதான் கிலோமீட்டர் கற்களில் ஹிந்தி மொழியை பயன்படுத்த உத்தரவிட்டதாக ஒரு தவறான தகவல் பரவுகிறது. அது உண்மை அல்ல.

1981-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சக அறிவிப்பு IRC 8/1980-படி, இரண்டு கற்களில் ஆங்கிலம், இரண்டில் ஹிந்தி, ஒன்றில் உள்ளூர் மொழி என்று இருக்கிறது. அதுவும்கூட, 1960-ம் ஆண்டு அறிவிப்பின் தொடர்ச்சிதான். ஆக, 45 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை கிலோமீட்டர் கற்களில் ஹிந்தி மொழி இருந்துதான் வருகிறது. டி.ஆர். பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது, ஒரு கல்லில் மட்டும் இருந்த உள்ளூர் மொழி என்பதை மாற்றி, அனைத்துக் கற்களிலும் இடம்பெறச் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, மாநில மொழிகளுக்கான முக்கியத்துவத்தை அவர் அதிகரிக்கவே செய்தார்.

ஆயினும், தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம்தான் பிரதானமாக இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்க முயற்சி செய்வதோடு மட்டுமல்லாமல், பிற கட்சிகள் மீது அவதூறு செய்வது நல்லதல்ல. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 மற்றும் தேசிய நெடுஞ்சாலை விதிகள் 1964, 1988, 1997-ல் இல்லாதவகையில் நடைமுறைப்படுத்த எத்தனிப்பது என்பது சட்டத்துக்கு எதிரானது.

தமிழுக்கு ஏராளமான வெளிநாட்டினர் தொண்டாற்றி, பல நாடுகளின் ஆட்சிகளிலும் பெற்ற இடத்தை தமிழ் போராடிப் பெறவில்லை. தன் வளத்தால் பெற்றது. எந்த அரசு வந்தாலும், தமிழறிஞர்கள், பண்டைய தமிழ் வேந்தர்கள்,    ஆங்கிலேயர், தற்போதுள்ள தமிழறிஞர்கள் வளர்த்த தமிழை, கிலோமீட்டர் கொண்டு அழிக்க நினைப்பது, சூரியனை கைகளால் மறைக்க நினைப்பதற்கே சமம்.

பார்வை

- C.P. சரவணன், வழக்கறிஞர் (தொடர்புக்கு - 9840052475; மின்னஞ்சல் - sharavanan.cp@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com