

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது பழமொழி. அதனை பாலாறு விவகாரத்தில் மெய்யாகவே மெய்ப்பித்துள்ளது ஆந்திர மாநில அரசு.
கர்நாடக மாநிலம் நந்திதுர்க்கம் மலையில் உருவாகும் பாலாறு 93 கி.மீ. தூரம் பாய்ந்து, அங்கிருந்து நேராக ஆந்திராவுக்கு வருகிறது. ஆந்திராவில் வெறும் 33 கிலோமீட்டர் தூரம் பயணித்து அப்பகுதிகளை பசுமையாக்கிவிட்டு திருவள்ளூர் அருகே தமிழக எல்லையை அடைகிறது. தமிழகத்துக்கு இயற்கை எந்த வகையிலும் குறை வைக்கவில்லை என்பதை காட்டும் வகையில் கர்நாடகாவில் தோன்றி, ஆந்திராவைக் கடக்கும் பாலாறு தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் பயணித்து பின்பு வயலூர் அருகே வங்கக் கடலை அடைகிறது. இந்த பாலாறுக்கு 7 துணையாறுகள் உள்ளன.
தமிழகத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், மேல்பட்டி, குடியாத்தம், பள்ளிக்கொண்டா, வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல பகுதிகளை அரவணைத்துச் செல்கிறது.
தமிழகத்தின் டெல்டா பகுதிகளை காவிரி நதி பாய்ந்து பசுமையாக்குவது போல் வட தமிழகத்தின் பல பகுதிகள் பாலாறின் குழந்தைகளாக உள்ளன. வட தமிழகத்தின் குடிநீர் தேவையைப் போக்கும் முக்கிய ஆறாக பாலாறு விளங்குகிறது.
பாலாறு தோன்றும் கர்நாடகாவில், அந்த நதியின் மீது பேத்தமங்களா, விஷ்ணுசாகர், ராம்சாகர் ஆகிய அணைக்கட்டுகளும், தடுப்பணைகளும் உள்ளன. இந்த அணைகளைத் தாண்டி ஆந்திராவுக்குள் நுழையும் பாலாறில் ஆந்திர அரசு ஒன்றல்ல இரண்டல்ல 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது.
ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் ஓடும் வற்றாத ஆறாக இருந்த பாலாறு தற்போது வறண்டுபோன ஆறுகளின் பட்டியலில் மெல்ல மெல்ல சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் மிகவும் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆந்திராவில் மிகக் குறைந்த தூரமே பயணிக்கும் பாலாறு நதியின் குறுக்கே, ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. அதாவது, பாலாற்றின் மீது வெறும் 2 கிலோ மீட்டருக்குள் ஒன்றல்ல இரண்டல்ல 10 தடுப்பணைகளை கட்டி வருகிறது ஆந்திர மாநில அரசு. தங்கள் மாநில விவசாயத்துக்குக் கிடைத்த ஒரு சிறிய வாய்ப்பைக் கூட விடாமல் பயன்படுத்திக் கொள்ளும் ஆந்திர அரசு பாலாறின் குறுக்கே பாசன அணை அமைக்கவும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
தமிழகத்தின் எல்லையைத் தொடும் வரை ஒரு இடத்தைக் கூட விட்டு வைக்காமல் தடுப்பணை கட்டுவதன் மூலம் ஆந்திர மாநிலத்தின் நிலத்தடி நீரை உயர்த்திக் கொள்ள முடியும். அதோடு நிற்காமல், ஏற்கனவே இருக்கும் தடுப்பணைகளின் உயரத்தையும் அதிகரித்து வருகிறது.
இது குறித்து தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டால், ஆந்திர மாநில அரசு ஏற்கனவே இருக்கும் தடுப்பணைகளை சீரமைக்க தமிழக அரசிடம் அனுமதி பெற்றே பணிகளை மேற்கொள்வதாகவும், புதிய தடுப்பணைகள் எதுவும் கட்டமைக்கப்படவில்லை என்றும் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறார்கள். தமிழக விவசாயிகளின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிய அரசு அதிகாரிகளின் அலட்சியமான பதில் இது என குற்றஞ்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.
பல்வேறு மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் மீது தடுப்பணையோ அல்லது அணையோ கட்ட வேண்டும் என்றால், கீழ் மாநில அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதியை ஆந்திர அரசு பின்பற்றவில்லை.
சட்டத்துக்கு விரோதமாக அவர்களே கட்டுகிறார்கள், தமிழகத்தில் 222 கிலோ மீட்டர் பாயும் பாலாற்றில் தமிழகம் ஏன் போதிய அளவுக்கு தடுப்பணைகளைக் கட்டவில்லை. தடுப்பணைகளால் பெரிய அளவில் தண்ணீரை சேமிக்க முடியாவிட்டாலும், அந்தந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த இது பெரிதும் உதவும்.
அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல சட்ட சிக்கல்கள் இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிராக குரல் கொடுக்காதது மட்டுமின்றி, எந்த மாநிலத்தின் அனுமதியையும் பெற வேண்டாம், தடுப்பணை கட்ட எந்த தடையும் இல்லாத நிலையில் கூட, ஒரு தடுப்பணையை கூட இதுவரை புதிதாக பாலாறு மீது ஏற்படுத்த முடியாமல் தமிழக அரசின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பது என்ன?
சுமார் 75 கிராமங்கள் பாலாறின் இரு கரைகளிலும் அமைந்தள்ளது. நாம் நினைத்தால் பாலாறின் குறுக்கே 100 முதல் 150 மீட்டருக்கு ஒரு தடுப்பணையைக் கட்டி பாலாறைக் கட்டிக்காக்க முடியும். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழக மக்களுக்கு இயற்கை அளித்த கொடையை பாதுகாக்கும் முழு உரிமையும், கடமையும் மாநில அரசுக்கு உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.
அநீதி செய்வதைப் போலவே, நியாயத்தை செய்யாமல் விடுவதும் அநீதிக்கு சமமே. தமிழகத்துக்கு இயற்கை எந்த குறையும் வைக்கவில்லை. ஆனால் நமக்கு நாமே தான் எல்லா தீமைகளையும் செய்து கொள்கிறோம்.
இதுவரை எந்த காரணத்தினாலேயோ தடுப்பணைகளைக் கட்ட முடியாமல் இருந்த தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு பாலாறுக்கு குறுக்கே தடுப்பணைகளைக் கட்ட முன் வர வேண்டும். நீர் வராத நேரத்தில் கவலைப்படலாம். ஆனால் நீர் வரும் போது அது கடலில் கலக்கிறதே என்று கவலைப்படக் கூடாது. வரும் முன் காக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு இனியாவது தடுப்பணைகளைக் கட்டிக் குவிக்கலாம். கேட்பதற்கு யாரும் இல்லை. வாழ்த்துவதற்கு ஏராளமான விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
நாம் இங்கே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் மேட்டூர் அணையைத் தாண்டி வரும் காவிரிக்கும் பொருந்தும். ஆறுகளை இணைப்பதை விடவும், தமிழகத்தில் பாயும் ஆறுகளுக்குக் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவது நிச்சயம் உடனடிப் பலனைக் கொடுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.