மீண்டும் உயிரூட்டப்படும் ஆருஷி தல்வார் கொலை வழக்கு!

ஆருஷியின் பெற்றோர் தொடர்ந்து தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து வருகிறார்கள். ஆனால் சிபிஐ அவர்கள் மீதான ஐயத்தை விலக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
மீண்டும் உயிரூட்டப்படும் ஆருஷி தல்வார் கொலை வழக்கு!
Published on
Updated on
2 min read

இந்தியாவை உலுக்கிய ஆருஷி தல்வார் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த ஆருஷியின் பெற்றோர் இருவரையும் கடந்தாண்டு அக்டோபரில் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளித்து விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம். ஆருஷி கொலை வழக்கில் வெளிநபர்கள் யாரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. கொலை நிகழ்ந்த நேரத்தில் வீட்டினுள் இருந்தது நால்வர் மட்டுமே, ஆருஷியின் பெற்றோர், ஆருஷி மற்றும் அவர்களது வீட்டு சமையற்காரரான ஹேம்ராஜ். இவர்கள் மட்டுமே இருந்தனர். இதில் நடு இரவில் ஆருஷி கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்ட நேரத்தில் ஹேம்ராஜைக் காணாததால் அவர் தான் ஆருஷியைக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் அடுத்தநாளே அதே அபார்ட்மெண்ட்டின் மொட்டை மாடியில் கொலை செய்யப்பட்ட ஹேம்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆருஷி மற்றும் ஹேம்ராஜைக் கொன்றது தல்வார் தம்பதிகளே எனும் ரீதியில் சிபிஐ வழக்கின் போக்கை மாற்றியது. ஆருஷி கொலையைப் பொறுத்தவரை அவரது பெற்றோர்கள், தங்கள் மீதான குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஆனால் சிபிஐ அவர்கள் மீதான ஐயத்தை விலக்கிக் கொண்டபாடில்லை. 

அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோரை குற்றமற்றவர்கள் என விடுவித்த பின்னும் கொலை செய்யப்பட்ட வீட்டு வேலைக்காரரான நேபாளி ஹேம்ராஜின் மனைவி கும்கலா பஞ்சடே, தல்வார்கள் தான் குற்றவாளிகள். அவர்களே தங்களது மகளையும், சந்தேகத்தின் பேரில் என் கணவரையும் கொன்று விட்டு இப்போது நாடகமாடுகிறார்கள். எனது கணவரின் மரணத்துக்கு நீதி கிடைக்காமல் நான் ஓய மாட்டேன் என கடந்தாண்டு டிசம்பரில் பெட்டிஷன் சமர்பித்து உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தார்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் சிபிஐ சமர்பித்திருந்த சாட்சியங்களை ஏற்றுக் கொண்டாலும், கொலை வீட்டினுள்ளே நடந்திருக்கிறது என்பதால் அந்த நேரத்தில் கொலையுண்டவர்களை கடைசியாகப் பார்த்தவர்கள், பேசியவர்கள் எனும் அடிப்படையில் தல்வார்களை குற்றவாளிகளாகக் கருதமுடியாது. என அறிவித்து அவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து தற்போது ஹேம்ராஜின் மனைவியும், சிபிஐ தரப்பும் ஆருஷி வழக்கில் உண்மையான நீதி வேண்டி உச்சநீதிமன்றத்தை நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ வழக்கு விசாரணையின் போக்கு, ஆருஷிக்கும், ஹேம்ராஜுக்கும் இடையே தவறான உறவிருந்து அவர்களைப் பார்க்கக் கூடாத கோலத்தில் பெற்றோரான தல்வார் தம்பதிகள் கண்டதால் ஆத்திரமிகுதியில் இருவரையும் கொலை செய்து விட்டுத் தற்போது தண்டனையிலிருந்து தப்பிக்க நாடகமாடுகிறார்கள் என்பதாகவே இருந்தது. இதை முற்றிலும் அநீதியான விசாரணை என மறுத்த தல்வார்கள் சில காலம் சிறைத்தண்டனையையும் அனுபவித்து வந்தனர். தற்போது மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ள இந்த வழக்கில் உண்மையான கொலையாளிகள் கண்டறியப்பட்டால் ஒருவேளை ஆருஷி கொலைக்கும், ஹேம்ராஜ் கொலைக்கு நியாயம் கிடைக்கலாம்.

இந்தியாவின் புதிரான கொலை வழக்குகளில் ஒன்றான இவ்வழக்கில் உண்மையான கொலையாளிகள் பிடிபட்டால் அது சிபிஐயின் சாதனையே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com