பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல?!

எனதருமைச் சமூகமே! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை? இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம். இதற்கு தேவை விசாரணை அல்ல, தீர்ப்பு மட்டுமே!
பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல?!

அனிச்ச மலர் குழந்தைகளை அநியாயமாக உங்கள் சொந்தக் காரணங்களுக்காக புறக்கணிக்காதீர்கள் பெற்றோர்களே! பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறுவிதமான குற்றங்களுக்கு அதுவே மிகப்பெரிய காரணமாகி விடுகிறது.

பெற்றோர்களே! நாம் நமது குழந்தைகளுக்கு ஆத்மார்த்தமான பெற்றோர்களாகத்தான் இருக்கிறோமா? அல்லது இந்த சமூகத்தின் முன் அவர்களது பெற்றோர்களாக வெறும் கடமை மற்றும் ஆற்றிக் கொண்டிருக்கிறோமா? இந்தக் கேள்விக்கான பதிலை ஒவ்வொரு பெற்றோரும் மீண்டும், மீண்டும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது!

மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த காஷ்மீர் சிறுமியின் பாலியல் வன்கொலை சம்பவம் ஏற்படுத்திச் சென்ற ரணத்தின் வலி குறையுமுன் மேலும் அப்படியானதொரு இரக்கமற்ற சம்பவம் இன்று நம் தலைநகரில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. என்ன?.. இதில் அகப்பட்ட சிறுமி அவளைப் போல கொலை செய்யப்படவில்லை. மற்றபடி அவளுக்கு நேர்ந்த அதே மரணவலி இவளுக்கும் நேர்ந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நேற்று அச்சிறுமியின் அக்காவுக்கு விஷயம் தெரிந்து அவள் விழித்துக் கொண்டு எச்சரித்திருக்காவிடில் இந்தச் சிறுமியும் கொலைபாதகர்களால் பாலியல் வன்கொலை செய்யப்பட 99.9% வாய்ப்புகள் இருந்திருக்கின்றன என்கின்றன அக்குற்றச்சம்பவம் குறித்து மணிக்கொரு தரம் வெளிவரும் ஊடகச் செய்திகள். 

அவற்றைக் கேட்க நேரும் ஒவ்வொரு முறையும் நெஞ்சம் பதறுகிறது.

குற்றத்தில் ஈடுபட்ட 17 பேரும் தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணைகுட்படுத்தப் பட்டிருப்பதாக செய்தி. விசாரணை முடிந்ததும் இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்படலாம். நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 17 பேரும் வழக்கறிஞர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காரணம் அவர்களது செயலின் மீதான சமூக வெறுப்பு, பெற்ற குழந்தையாகக் கருத வேண்டிய சிறுமியின் மீது நடத்தப்பட்ட வெறிச்செயலை அறிந்து சாமான்ய சமூகத்துக்கு அவர்கள் மேல் இயல்பாக எழுந்த நரகலை கண்டாற் போலானதொரு அசூயை. இவர்களை இப்படியே அடித்தே கொன்றால் என்ன? என்பதான ஒரு உத்வேகம். அரசு செலவில் சிறையில் அடைத்து இவர்களுக்கு உணவிட்டு விசாரணை என்ற பெயரில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிப்பதின் அபத்தம் உண்டக்கிய வெறுப்புணர்வு எல்லாமும் கலந்து தான் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தை அறிந்ததில் இருந்து கொதித்துப் போயிருக்கும் பெண்கள் நிறைந்த கும்பலில் ஒருவேளை அவர்கள் 17 பேரும் இந்நேரம் சிக்கியிருந்தால் குற்றுயிரும், குலையுயிருமாகி சின்னாபின்னமாகி இருப்பார்கள்.

அதனால் தான் கேட்கிறேன் எனதருமைச் சமூகமே! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை? இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம். இதற்கு தேவை விசாரணை அல்ல, தீர்ப்பு மட்டுமே! பேனா முனை உடைத்து நீதிபதிகள் ஆணையிடலாம்.. பாகுபலி ஸ்டைலில்...

பெண்ணுடல் அல்ல, பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல, மர்மஸ்தானம் என.

அத்தனை கொடூரம் தேவையா?

என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பலாம். இது கொடூரமென்றால் அறியாப் பிஞ்சுகளின் எதிர்காலம் சிதைவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லையா என எதிர்கேள்வி எழுப்பத்தான்  வேண்டும். இந்தக் கதை தொடர்கதையாகி வருகையில் இத்தனை ஆத்திரம் எழுவதை எவரால் தான் கட்டுப்படுத்த முடியும்.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தியை குடியிருப்பு வளாகப் பணியாளர்களே கடந்த 7 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள இச்செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல. நம் சமூக அமைப்பின் மிக மிகக் கேவலமான அம்சமும் கூட. இதில் அந்தச் சிறுமியின் குற்றமென்ன? அவளுக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதாகத் தகவல். இப்படிப் பட்ட குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதைத் தவிர அவளைச் சார்ந்தவர்களுக்கு வேறென்ன முக்கியமான வேலைகள் இருந்திருக்கக் கூடும்?

குழந்தை கடந்த 7 மாதங்களாக இந்தக் கொடுமைகளை அனுபவித்து வந்திருப்பதாகச் செய்தி. கடந்த 7 மாதங்களும் ஒரு தாய் தன் 11 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடுமையை உணராதும், அது குறித்த எந்த விதமான சந்தேகமும் கொள்ளாமல் இருந்தது எப்படி? மிகுந்த மனசஞ்சலத்தைத் தருவதாக இருக்கிறது இக்கேள்வி. பெண் குழந்தைகள்... தங்களுக்கு நேரும் அச்சுறுத்தல்களை முதலில் சென்று சொல்லத்தக்க நபராக இருக்க வேண்டியது அம்மா எனும் பிம்பமே! ஆனால், அந்த அம்மாவுக்கே மகளுக்கு நேர்ந்த கொடுமை 7 மாதங்கள் கடந்த பிறகே தெரிய வந்திருக்கிறது என்றால்... என்ன மாதிரியான வாழ்க்கையை இந்தச் சமூகம் சிலருக்கு விதித்திருக்கிறது என்று யோசியுங்கள். அக்குழந்தையின் அம்மாவைக் குற்றம் சொல்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அவர் என்ன காரணத்தினால் தன் மகளுக்கு நேர்ந்திருக்கும் கொடூரத்தை அறியத் தாமதமானது? என்பதையும் நாம் சேர்த்தே யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ விதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் காலையும், இரவும் மட்டுமே குடும்பத்திற்குச் சொந்தமான நேரங்கள். மற்ற நேரங்களை எல்லாம் அவர்கள் தத்தமது அலுவல்களுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகள் வளர்வது என்பது அவர்களுக்கு அனிச்சைச் செயலாக நிகழ வேண்டியதாயிருக்கிறது. போகிறபோக்கில் குழந்தைகள் வளர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் இன்று ஒரு சாரரிடையே நிலவுகிறது. அப்படியானவர்கள், தங்கள் குழந்தைகள் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். மீறியும் குழந்தைகள் வாயிலாக பள்ளிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்தெல்லாம் ஏதாவது புகார்கள் வந்தால், உடனடியாக அவர்கள் சந்தேகிப்பது தங்களையும், தங்களது வாழ்வியல் முறையையும் அல்ல, தங்களது குழந்தைகளை என்பதாகவே இருக்கிறது. இதிலிருந்து தான் தொடங்குகிறது குழந்தைகளுக்குத் தங்களது பெற்றோர்கள் மீதான அவநம்பிக்கை.

கடந்த மாதம் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் பங்கேற்கச் சென்றிருக்கையில் ஒரு அப்பா, தன் மகனது வகுப்பாசிரியையிடம் சொன்ன சேதி, ‘மேம், அவன் படிக்கலைன்னா கூட பரவாயில்லை, ஆனா, தினமும் அவன் அம்மா காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து கஷ்டப்பட்டு சமைச்சுக் கொடுத்து விடறாங்க, அந்த சாப்பாட்டை மட்டும் வீணாக்க விடாதீங்க. அவன் சாப்பாட்டை குப்பையில் கொட்டினா, அவனை நீங்க எப்படி அடிச்சாலும் நான் கேட்க மாட்டேன். தோலை உறிச்சு எடுங்க’ என்கிறார். 

இங்கே பிரச்னை சாப்பாட்டில் அல்ல அவரது அணுகுமுறையில் என்பதை அவர் ஏன் உணரக்கூடாது! மகன் சாப்பாட்டை குப்பையில் கொட்டினால், அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பாமல் அவனது செயலுக்கான தண்டனை அளிப்பதில் தான் மும்முரமாக இருக்கிறார் இந்த தந்தை.

இன்னொரு அம்மா, எம்பொண்ணுக்கு சோஷியல் சயின்ஸ் பாடத்துல மட்டும் மார்க் குறையுது. ரெண்டு அடி போட்டாவது கொஞ்சம் படிக்க வைங்க மேம்.

இன்னொரு அம்மா, வகுப்பாசிரியையிடம் தொலைபேசியில் அழுது கொண்டே பகிர்ந்து கொண்ட விஷயம், மேம், எம்பொண்ணு இப்ப 9 வது தான் படிக்கிறா, ஆனா, சுத்தமா என்னை மதிக்கிறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசறா. அடிக்க கை ஓங்கினா, பதிலுக்கு அவளும் கை ஓங்கறா. நாங்கல்லாம் இப்படியா இருந்தோம். இப்படியெல்லாம் செய்திருந்தோம்னா, எங்க பேரண்ட்ஸ் எங்களை கொன்னே போட்ருப்பாங்க. வீட்ல வச்சு வளர்த்திருக்கவே மாட்டாங்க, கொஞ்சம் புத்தி சொல்லுங்க மேம். அவளுக்கு பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்கச் சொல்லி கத்துக் கொடுங்க ப்ளீஸ்... தினமும் அவளால என் நிம்மதியே போச்சு, எனக்கும், என் ஹஸ்பண்டுக்கும் இடையில் சண்டை வரதுக்கு காரணமே என் மகளாத்தான் இருக்கறா! என்ன செய்யறது, இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கறதுன்னே எனக்குப் புரியல’ 

தன் மகள் குறித்து இந்த அம்மா, அவளது வகுப்பாசிரியையிடம் புலம்பியதைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்கிறீர்களா? வேறென்ன இருக்க முடியும்? இந்த அம்மாவுக்குப் புரிந்திருக்க வேண்டும், வகுப்பாசிரியையைக் காட்டிலும் மகளே தனக்கு மிகவும் நெருக்கமானவள் என, அந்தச் சிறுமியை அழைத்து ஒரு அன்பான அம்மாவாக தனியே பேசி இருக்க வேண்டும். அவளது எடுத்தெரிந்து பேசும் குணத்துக்கான காரணம் எங்கிருந்து கிளைத்தது எனக் கண்டறிய முயன்றிருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யாமல் வகுப்பாசிரியையிடம் புகார் கூறுவதால் பலனுண்டாகும் என இந்த அம்மா எதிர்பார்த்தார் எனில் அதற்கான பலன் நிகழ்தகவாகிறது. ஒருவேளை வகுப்பாசிரியை பக்குவமானவர் எனில் தன் மாணவியின் எதிர்கால நலன் கருதி அவளிடம் இது குறித்துப் பேசி சமாதானம் செய்வார். இல்லையெனில் வகுப்பறையில் பிற மாணவ, மாணவிகள் முன்னிலையில் அந்த மாணவியை கண்டிக்க இதையே ஒரு காரணமாக வைத்துக் கொள்ளக் கூடும். இதைப் பற்றியெல்லாம் கூட பெற்றோர்கள் யோசிக்க வேண்டும் தானே?!

மேலே சொன்ன உதாரணங்கள் அனைத்தும் பெற்றோர் மனப்பான்மை எப்படிப் பட்டதாக இருக்கிறது? என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு அறியத் தந்தவை. 

இப்போது அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி மேலும் சில வார்த்தைகள்...

  • அச்சிறுமியை கடந்த 7 மாதங்களாக அவளது குடியிருப்பிலிருக்கும் லிஃப்ட் ஆப்பரேட்டர், பிளம்பர், வாட்ச்மேன், தோட்டக்காரன், எனப் பல கேவலமான ஜந்துக்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள். இதைப் பற்றி அச்சிறுமி ஒருமுறை கூடவா தன் தாயிடம் தெரிவிக்காது இருந்திருப்பாள்? அப்படித் தெரிவிக்கவில்லையெனில் அதற்கு என்ன காரணம்? 
  • சிறுமியை அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த அந்த படுபாதகர்களின் மீது அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் ஒரு ஈ காக்கைக்கு கூடவா இதுவரையிலும் சந்தேகம் வரவில்லை?!
  • குழந்தைகள் வளரும் காலத்தில், தனி வீடுகளைக் காட்டிலும் அபார்ட்மெண்டுகள் பாதுகாப்பனவை என்று தான் பெரும்பாலான பெற்றோர்கள்  தங்களுக்கான வசிப்பிடங்களாக அவற்றைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு ஒரு 11 வயதுச் சிறுமி கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டும், ஆபாச புகைப்படமெடுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டு தொடர்ச்சியாக சீரழிக்கப்பட்டிருப்பதை எப்படி கவனிக்கத் தவறினார்கள்.
  • 7 மாதங்களாக சிறுமிக்கு போதை மருந்து இஞ்ஜெக்ட் செய்தும், குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்தும் குடியிருப்பின் உள்ளே காலியாகக் கிடக்கும் வீடுகள், உடற்பயிற்சி கூடம், மாடியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என சீரழித்திருக்கின்றனர். அங்கே கிடந்த காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் காலி சிரிஞ்சுகள் வாயிலாக இப்போது அது கண்டறியப்பட்டுள்ளது. அப்படியெனில், அது எப்படி பிறர் கவனத்தில் இருந்து தப்பியது? ஒருவேளை யாரேனும் கவனித்திருந்தும் நமக்கென்ன என்று இருந்து விட்டார்களா? என்ற ஐயத்தை எழுப்புகிறது இந்த பாயிண்ட்.
  • அபார்ட்மெண்டுகள் நிறைந்த கான்கிரீட் வனமாகி விட்ட சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு குடியிருப்பு வளாகத்துக்கான பணியாளர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள்? அவர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள் எதையும் கவனத்தில் கொள்வதில்லையா குடியிருப்போருக்கான கூட்டமைப்புகள். வல்லூறுகள் வெளியில் இருந்தால் குழந்தைகளை வீட்டில் பாதுகாக்கலாம். குழந்தையும் வீட்டைப் பாதுகாப்பு என நம்பலாம். ஆனால், அயனாவரச் சிறுமி விஷயத்தில் அவளது வசிப்பிடத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழ்ந்திருக வேண்டியவர்களே அவளைச் சிறுமியென்றும் பாராமல் சீரழித்திருக்கிறார்கள். அப்படியானால் குற்றத்தில் குடியிருப்பின் கூட்டமைப்புக்கும் பங்கிருக்கிறது தானே?! சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியது யார் பொறுப்பு?
  • இப்போதும் கூட வெளிமாநிலத்தில் படித்து வரும் சிறுமியின் அக்கா விடுமுறையில் வீட்டில் இருந்த காரணத்தால் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அப்படியாகத்தான் இந்தக் கொடுமை வெளியில் தெரிய வந்துள்ளது. எங்கோ படித்து விட்டு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த அக்காவிடம் பகிர முடிந்த விஷயத்தை அந்தக் குழந்தையால் ஏன் தன் தாயாரிடம் பகிர முடிந்திருக்கவில்லை? என்பது யோசிக்க வேண்டிய கேள்வி.

இவ்விஷயம் பற்றி ஊடகத்தில் கருத்து தெரிவித்த மனநல மருத்துவர் ஷாலினி, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மேலும் அன்பாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது போன்ற சம்பவங்கள் மேலும், மேலும் வலுயுறுத்துகின்றன என்றதோடு குழந்தையின் அம்மாக்கள் தங்களது வாழ்வில் நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் சீரான வளர்ச்சியில் அவர்களால் நல்லமுறையில் கவனம் செலுத்த முடியும் என்றார். அயனாவரம் சிறுமி விவகாரத்தில் மட்டுமல்ல இது உலகச் சிறுமிகள் மற்றும் அவர்களது அம்மாக்கள் விஷயத்திலும் கூட மிக மிக கவனிக்கத்தக்க அம்சங்களில் இது ஒன்றெனக் கூறலாம்.

குழந்தைகள் தங்களுக்கு நேரும் சங்கடங்களை, பிரச்னைகளை, உடல்நலக் கோளாறுகளை, பாலியல் அச்சுறுத்தல்களை எந்த வித மறு யோசனைக்கும் இடமின்றி, அச்சமின்றி முழு நம்பிக்கையுடன் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போது தான் இம்மாதிரியான கொடூரச் செயல்களுக்கெல்லாம் வழியற்றுப் போகும். மாறாக, நம் குழந்தைகள் இப்படியான ஆபத்துக்களிலிருந்து தப்புவதற்கான  அத்தனை வாசல்களையும் பெற்றோரான நாமே அடைத்து இறுகப் பூட்டியதாக ஆகி விடக்கூடாது.

ஆதலால் பெற்றோர்களே! குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்...

  • தினமும் பள்ளி விட்டு வரும் குழந்தைகளிடத்தில் குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது உரையாடுங்கள். நேரில் வேலைப்பளு இருந்தால் அலுவலகத்தில் இருந்து லஞ்ச் பிரேக்கிலோ அல்லது மாலை ஸ்னாக்ஸ் நேரத்திலோ ஃபோனிலாவது குழந்தைகளிடத்தில் அன்றைக்கு நீங்கள் இல்லாத பொழுதுகளில் வீட்டிலும், பள்ளிகளிலும்ம் வெளியிலும் என்னென்ன நடந்திருக்கிறது என்று பேச்சுவாக்கில் கேட்டு வையுங்கள்.
  • வீட்டில் காப்பாளர்களை வைத்து அவர்கள் பொறுப்பில் குழந்தைகளை விட்டுச் செல்கிறீர்கள் என்றால் அவர்களைப் பற்றி தினமும் குழந்தைகளிடம் விசாரியுங்கள். உங்களை விட அந்தக் காப்பாளர்கள் எந்த விதத்திலும் உங்கள் குழந்தைகளின் சொந்த விஷயத்தில் அக்கறை கொள்ள முடியாது என்பதைப் புரிய வையுங்கள். அம்மா அடிப்பார், அப்பா மிரட்டுவார் என்பது மாதிரியான வீணான பயத்தை உருவாக்க வேண்டாம்.
  • அது பள்ளியோ, கடைகளோ, அல்லது நண்பர்களின் வீடுகளோ எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்களுக்கு பாரபட்சமாகவோ அல்லது கெடுதலாகவோ என்ன நிகழ்ந்தாலும் அல்லது நிகழப்போவதற்கான அறிகுறி தென்பட்டாலும் போதும் அதைக் குறித்து உறுதியாகவும், தைரியமாகவும் கேள்வியெழுப்ப குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். தங்களுக்கெதிரான வன்முறையை ஒருபோதும் தாங்கிக் கொள்ளச் சொல்லி குழந்தைகளைப் பழக்காதீர்கள். அது எப்படிப்பட்டதாயினும் சரி எதிர்த்துக் குரலெழுப்ப குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள்.
  • ஐயோ... அவர்களுடன் சேராதே, ஐயோ அந்த வீட்டுக்குப் போகாதே என குழந்தைகளை தனிமைப் படுத்தாதீர்கள். கும்பலாக விளையாடுவதில் இருக்கும் பாதுகாப்புணர்வைப் பற்றி சரியான முறையில் போதியுங்கள்.
  • பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளிடத்தில் எதிர்பாராமல் நிகழ்த்தப்படக் கூடிய ஆபாசமான பாலியல் சமிஞ்சைகளை எப்படி தைரியமாக எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்பது குறித்து ஒருதாயைக் காட்டிலும் எவராலும் சிறப்பாகக் கற்றுத்தர முடியாது. எனவே அது குறித்து அம்மாக்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள்.
  • குடும்பம் என்பது அப்பா, அம்மா, உடன்பிறந்தவரை உள்ளடக்கியது இது தவிர உறவினர்கள் என்போர் குடும்ப அமைப்பின் இரண்டாம் வளையத்திற்கு சென்று விடுகிறார்கள். ஆகவே, எவராக இருந்தாலும் சரி அது நெருங்கிய உறவினராகவே இருந்த போதும் அதைப் பற்றி தனது பெற்றோரிடம் புகார் அளித்து தனக்கான நீதியையும், பாதுகாப்பையும் பெறும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு. அதற்கான நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் உண்டாக்க வேண்டியது பெற்றோர் கடமை.

பெற்றோர்களிடம் ஒரு வார்த்தை...

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அற்ற நிலை நீடிக்க வேண்டும். பெற்றோர் சதா நேரமும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் அதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்குள் அவர்களே அறியாமல் ஒருவித அச்சம் படியும். இது அவர்களை பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி தங்களுக்கு நேரும் பாதிப்புகளை எதிர்த்து குரல் கொடுக்க விடாமல் செய்து விடும். எனவே குழந்தைகள் வளர்வதற்கான ஆரோக்யமான சூழலை வீட்டிலும், வெளியிலும் உருவாக்க வேண்டியதும், தொடர்ந்து அதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டியதும் கூட பெற்றோர் கடமையாகவே கருதுகிறேன்.

கடைசியாக இந்த சமூகத்துக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஒரு கேள்வி...

இந்தியாவில் மட்டுமல்ல தொடர்ந்து உலகம் முழுவதுமே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், ஏன் பல இடங்களில் ஆண்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் அப்படியான கொடூரங்களை அரங்கேற்றத் துணியும் அளவுக்கு மனச்சிதைவு கொண்டோருக்கு நீதி விசாரணை தேவை தானா? அவர்கள் திட்டம் போட்டு, விதம், விதமான பாலியல் சித்ரவதை முறைகளைத் தேர்ந்தெடுத்து, போதை வஸ்துக்களின் துணையுடனும், ஆயுதங்களின் துணையுடனும் ஒன்றுமறியாத பச்சைக் குழந்தைகளை காவு வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதை இந்தச் சமூகம் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சிற்சில சம்பவங்களில் பணமோ, அந்தஸ்தோ, அரசியல் பலமோ, ஜாதியோ முன்வந்து அப்படியான கொடூரர்களைக் காப்பாற்ற முயன்று அதில் வெற்றியும் பெறும். நீதி விசாரணையின் பெயரிலான இந்த அநியாயங்களை இந்தச் சமூகம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டுமா? 

கட்டுரையின் இடையில்  குறிப்பிட்டதைப் போல...

பெண்ணுடல் அல்ல, பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல, மர்மஸ்தானம் என்பதில் உங்களுக்கேதும் ஆட்சேபணை உண்டா?

Image courtesy: Naukri Nama

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com