துள்ளித் திரிந்த அந்தச் சிறுமி ஏன் ஒரேயடியாக அமைதியாகிவிட்டாள்? மனதை உருக்கும் உண்மை சம்பவம்!

கீதாவின் குடும்பத்தினர் அவளை வேலை செய்ய அனுப்பும் போது அவளுக்கு வயது வெறும் பன்னிரெண்டுதான்.
துள்ளித் திரிந்த அந்தச் சிறுமி ஏன் ஒரேயடியாக அமைதியாகிவிட்டாள்? மனதை உருக்கும் உண்மை சம்பவம்!

கீதாவின் குடும்பத்தினர் அவளை வேலை செய்ய அனுப்பும் போது அவளுக்கு வயது வெறும் பன்னிரெண்டுதான்.

விதி விளையாடிய அந்த நாளுக்கு முன்னதாக, அமைதியான அந்த கிராமத்தில் மகிழ்ச்சியாக, சுதந்திரமாக பறந்து செல்லும் ஒரு பறவையைப் போல எப்போதும் உற்சாகத்தோடு தனக்கு இருந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் பரப்புகிற இளம் சிறுமியாகத் தான் கீதாவும் இருந்தாள்.

அந்த கிராமத்தில் துறுதுறுப்பான, உற்சாகம் எப்போதும் பொங்கி வழியும் துடிப்பான பெண்ணாக அவள் இருந்தாள். பிறருக்கு தீங்கு விளைவிக்காத அவளது சேட்டைகளும், குறும்புத்தனமும் அவளது பெற்றோர்களையும் மற்றும் அவளது தோழிகளையும் வாய்விட்டு சிரித்து மகிழுமாறு செய்ய ஒரு போதும் தவறியதில்லை. அவளது கள்ளங்கபடமற்ற மனதிலிருந்து பொங்கி வழிகிற சிரிப்பு அருகில் இருப்பவர்களையும் தொற்றிக் கொள்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவளது அம்மாவுக்கோ பொறுப்பு இருந்தது. அம்மாவைப் பொறுத்தவரை அவர்களது சொந்த நலனுக்காக சிறுமிகளும், இளம் பெண்களும் அதிகமாக பார்க்கப்படவோ அல்லது கேட்கப்படவோ கூடாது; தனது சின்னஞ்சிறு பெண் குழந்தையை கீதாவின் அம்மா அதிகம் நேசித்ததோடு எச்சரிக்கை உணர்வோடு அவளை பாதுகாத்தார். சத்தம் போடாமல் அமைதியாக இருக்குமாறும் மற்றும் 'ஒரு பொண்ணு போல இருக்கணும்’ என்றும் அவளது அம்மா எப்போதும் கீதாவிடம் கண்டிப்பாக கூறுவதுண்டு. ஆனால், இதற்கு கீதாவிடமிருந்து பதிலாக வெளிப்படுவது ஒரு மனம்விட்ட சிரிப்பும் உடனடியாக வீட்டுக் கதவின் வழியாக வெளியே ஓடிவிடுவதும்தான். கீதாவின் பெற்றோர்களான அந்த இளம் தம்பதியர் தங்களால் முடிந்தவரை சம்பாதிக்கிற சொற்ப பணத்தைக் கொண்டு அதிலேயே மன நிறைவோடு வாழ்ந்து வந்தனர். அந்த கிராமத்திலுள்ள பள்ளியில் கூட கீதா சேர்க்கப்பட்டாள். அம்மாவின் மடிக்கு பிறகு இந்த பூமியில் அவளுக்கு அதிகம் பிடித்த இடம் என்றால், அது அந்த பள்ளி தான்.

குடும்பத்தில் வேலைக்குச் சென்று சம்பாதித்த ஒரே நபரான கீதாவின் தந்தை சதீஷ் கடும் நோய்வாய்ப்பட்ட போது அந்த குடும்பத்தை சோகமும், துரதிர்ஷ்டமும் ஒன்று சேர்ந்து தாக்கியது. சற்று தூரத்திலுள்ள நகரத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் அது அவரை காப்பாற்ற முடியும் என்றாலும் அதற்கு பணம் தேவைப்பட்டது. ஆனால் அவர்களுக்கு அதற்கான பணம் இல்லாதது தான் பிரச்னை. கிராமத்தில் தெரிந்தவர்களிடமெல்லாம் கீதாவின் அம்மா லட்சுமி உதவி செய்யுமாறு கேட்டுப் பார்த்தார். அப்போது அவளது கஷ்டநிலையை அனுதாபத்தோடு கேட்டு பரிதாபப்பட்ட குமார் என்ற ஒரு கனிவான மனிதர் அவளை அணுகினார். சிறிது நேரம் யோசித்ததற்குப் பிறகு ஒரு யோசனையை கீதாவின் அம்மாவிற்கு கூறினார். அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பூந்தோட்டத்தில் வேலை செய்வதற்கு கீதாவை அனுப்பி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் எளிதாக கடன் கிடைக்கும் என்று அவர் கூறினார். அவள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அதுமட்டுமன்றி சதீஷ் சுகமாகி மீண்டும் வேலைக்கு செல்லும் வரை அவள் வேலை செய்யும் காலம்வரை வாராவாரம் கூலியும் அவள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றும் கூறினார். புருசனுக்கு மருத்துவ செலவுக்கு பணம் அவசியமாக இருக்கிற நிலைக்கும் மற்றும் கடனாக வாங்கும் பணத்திற்கு பதிலாக தனது அன்புக்குரிய மகளை வேறிடத்திற்கு அனுப்புவது என்ற இந்த இரண்டில் ஏதாவதொன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் லட்சுமிக்கு மனக்கஷ்டத்தையும், குழப்பத்தையும் தந்தது. ரொம்ப நேரம் யோசித்த பிறகு, இறுதியில் மகளை வேலைக்கு அனுப்புவது என்று லட்சுமி முடிவு செய்தார். இந்த திட்டத்தைப் பற்றி கீதாவிடம் கூறிய போது அவளுக்கு அது பெரும் மனக்கஷ்டமாக இருந்தது. தந்தையை விட்டு வேறிடத்திற்கு செல்ல, அதுவும் குறிப்பாக அவர் சுகமில்லாமல் இருக்கும்போது, அவள் விரும்பவில்லை. தனது குடும்பத்தையும், தோழிகளையும் விட்டுச் செல்வதற்கு அவளுக்கு மனதே இல்லை. எனினும், அந்த இடைத்தரகர் விடுவதாக இல்லை. அந்த அழகான பூந்தோட்டத்தில் செய்ய வேண்டியதெல்லாம் வண்ண வண்ண பூக்களை சேகரித்து அதை கட்டி அனுப்பும் எளிதான வேலை மட்டுமே என்று திரும்ப திரும்ப கீதாவிடம் அவர் சொன்னார். அங்கு ஜாலியாக இருப்பது மட்டுமில்லாமல் அவளது அப்பா சுகமாகி மீண்டு வருவதற்கும் அவளால் உதவமுடியுமென்றும் அந்த நபர் பக்குவமாக வலியுறுத்தினார். திரும்ப திரும்ப கூறப்பட்ட இந்த பசப்பு வார்த்தைகளுக்கு பிறகு, அந்த இடைத்தரகரின் வார்த்தைகளுக்கும் மற்றும் அவளது அம்மாவின் வேண்டுகோளுக்கும் கீதா சம்மதிக்கும்படியாக ஆயிற்று. அவளது அப்பா குணமடைந்தவுடன் உடனடியாக அவளை அழைத்துவர தான் கட்டாயமாக வருவேன் என்று லட்சுமி சத்தியம் செய்தார். இந்த சின்னஞ்சிறு சிறுமியை வேலைக்கு அழைத்து செல்வதற்கு பதிலாக ரூ.20,000/- என்ற கடன் தொகை முன்பணமாக தரப்பட்டது. ஆறுதல் தரும் வகையில் கூறப்பட்ட இன்னும் பல வாக்குறுதிகளுக்கு பிறகு, கலங்கிய கண்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக பெற்றோரை கட்டித்தழுவிய கீதா, அந்த இடைத்தரகரோடு ஒரு பேருந்தில் தனது அழிவை நோக்கி புறப்பட்டாள்.

தனது புருஷனை மீண்டும் சுகமாக்கி நடமாட வைக்க வேண்டுமென்று லட்சுமி அர்ப்பணிப்பு உணர்வோடு, வேண்டியதெல்லாம் செய்ய நாட்கள் கடந்தன. கீதாவை அழைத்துச் சென்ற இடைத்தரகரான ரவி, உடனடியாக யாருக்கும் சந்தேகம் வராமல் தவிர்ப்பதற்காக கிராமத்துக்கு திரும்ப வந்து சில காலம் அங்கேயே சுற்றி திரிந்தார். லட்சுமிக்கு அவ்வப்போது, சிறு தொகையை தந்ததோடு கீதா மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உறுதி கூறினார். சதீஷ் முழுமையாக சுகமானவுடன் கீதாவைப் பார்க்க பெற்றோர்கள் இருவரையும் அழைத்துச் செல்வதாக அவன் வாக்குறுதி அளித்தான்.

சில நாட்கள் கழித்து, அந்த இடைத்தரகரான ரவியை எங்குமே பார்க்கமுடியவில்லை. அதைத் தொடர்ந்து சந்தேகம் வந்ததால் அச்சத்தோடும், பரிதவிப்போடும் பெற்றோர்கள் காவல்துறையை அணுகி புகாரளித்தனர். அருகிலுள்ள கிராமங்களிலெல்லாம் கீதாவை தேடி அவர்கள் கவலையோடு அலைந்தனர். ஆனால் எந்த தடயமுமில்லாமல் இருக்குமிடமே தெரியாமல் கீதா காணாமல் போய்விட்டாள்.

தங்களது பாசத்துக்குரிய குழந்தை எங்கிருக்கிறாள் என்ற எந்த செய்தியும் இல்லாமலே நாட்களும், மாதங்களும் அவர்களுக்கு கடந்துபோயின. இறுதியாக, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அநேகமாக கீதாவாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகிற ஒரு இளம்பெண், ஒரு செங்கற்சூளையில் வேலை செய்து வருவதை பார்த்ததாக லட்சுமியும், சதீஷும் கேள்விப்பட்டார்கள்.

தங்களது மகள் கீதா நன்றாக இருப்பாளென்ற எதிர்பார்ப்போடும், நம்பிக்கையோடும், அவள் இருக்கிறாள் என்று கூறப்பட்ட இடத்திற்கு பெற்றோர்கள் உடனே சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் பார்த்த காட்சி அவர்களது எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இருந்தது. 

மெலிந்து, எலும்பும்தோலுமாக இருந்த ஒரு இளம்பெண், செங்கல்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். கனமான, சொரசொரப்பான செங்கற்களை பிடிப்பதற்கு குச்சி போன்று மெலிந்த விரல்கள் விரிந்து பரந்திருந்தன. ஒவ்வொரு கையிலும் ஒரு செங்கலை பிடித்து, அதை முறையாக அடுக்கும் வேலையில் அவள் ஈடுபட்டிருந்தாள். அவள் அணிந்திருந்த தொளதொள குர்தா, அந்த கடும்வெயிலில் பணியாற்றுவதால் ஏற்படும் அதிக வியர்வையில் நனைந்து வியர்வை கறைபிடித்ததாக காணப்பட்டது. அவளது தலைமுடியில் எண்ணெயே வைக்கப்படவில்லை. கடுமையான வெயிலில் நீண்ட மணி நேரங்கள் வேலை செய்ததாலும், சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காததாலும் அவளது தலைமுடியானது வறண்டு, சிக்குப் பிடித்து ஒரு ரப்பர்பேண்டு சுற்றப்பட்டு படுமோசமாக இருந்தது. உற்சாகமும், ஆனந்தமும் நிறைந்த அதே மகளாக, சுற்றியிருப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கக் கூடிய அதே பெண்ணாக இவள் இருக்க முடியாதென்று தோன்றியது. அந்த பெண் கீதாவாக இருக்க வேண்டுமென்று அதிர்ச்சியில் உறைந்த அந்த தாயின் ஒரு பாதி மனது திரும்ப மற்றொரு பாதியோ அவளாக இது இருக்கக் கூடாதென்று நம்பச் சொன்னது. வற்றிப்போன உடலோடு, இருந்த அந்த பெண்ணை அச்சத்தோடே லட்சுமி அருகில் நெருங்கினார். கீதா திரும்பி பார்த்து அவர்களை நோக்கி வலியுடன் நொண்டி நொண்டி நடந்து வரும்போது அந்த அப்பாவித் தாயின் மோசமான அச்சங்கள் உறுதி செய்யப்பட்டன. அவர்களது ஆசை மகளின் நடையில் முன்பிருந்த துள்ளலோ, துடிப்போ இல்லை; அவளது உதடுகளில் எந்நேரமும் தவழ்கிற திரைப்பட பாடல்களின் இசை இல்லை.  

அவளது அம்மா சிறுவயதில் திரும்ப திரும்ப வலியுறுத்துகின்றவாறே கீதா இப்போது கண்டறியப்பட்டிருக்கிறாள்: அமைதியான பெண்ணாக! மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், வாழ்வின் வசந்த காலத்தையும், பேச வார்த்தைகள் எதுவுமில்லாமல் அவையனைத்தையும் தொலைத்துவிட்டு மௌனத்தில் ஆழ்ந்திருக்கிற ஒரு பெண்ணாக!!

- டிவைன் ஒலிவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com