மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறதா?

தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதாவது 60 நாட்களுக்கு ஒரு முறை மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கிறதா?
Updated on
2 min read

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், தமிழகத்தில் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதே. அதவாது ஒவ்வொரு குடும்பமும் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்தும் மொத்த யூனிட்டில் 100 யூனிட் மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்திவிடும்.

100 யூனிட் மின்சாரத்துக்குள் பயன்படுத்தும் குடும்பங்கள் மின் கட்டணமே செலுத்தத் தேவையில்லை. அதே போல 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் வெறும் 50 யூனிட் மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மின் கட்டண அளவீடு என்பது மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு குறைவானதாகவும், அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு சற்று அல்ல சற்று அதிகப்படியான கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது.

அதாவது இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரத்துக்குள் பயன்படுத்தினால் அவர்களுக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கான தமிழக அரசின் மானியம் கிடைத்துவிடும். இதனால் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் மொத்தக் கட்டணத்தில் 100 யூனிட் மானியம் போக மிச்ச யூனிட்டுக்குத்தான் கட்டணம் செலுத்த வேண்டியது வரும். அவ்வாறு 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் மொத்தக் கட்டணம் ரூ.1400 ஆக இருக்கும். அதில் தமிழக அரசின் மானியம் ரூ.300 போக, மாதந்தோறும் செலுத்தும் நிரந்தர தொகை ரூ.30ஐ சேர்த்தால் ரூ.1130 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆனால், 500 யூனிட்டுக்கு மேல் உதாரணத்துக்கு 510 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கூட 100 யூனிட் மின்சாரத்துக்கான மானியம்போக, ரூ.1846 ஐ கட்டணமாக வசூலிப்பார்கள். வெறும் 10 யூனிட் மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதால் நீங்கள் கூடுதலாக செலுத்தும் மின்கட்டணம் கிட்டத்தட்ட 700 ரூபாய். 

ஒருவேளை கூடுதலாக 100 யூனிட் அதாவது 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் ரூ.2440 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழக அரசின் மின் கட்டண அளவீடு என்பது முதல் 100 யூனிட், முதல் 200 யூனிட், முதல் 500 யூனிட் என ஒவ்வொரு யூனிட்டுக்கும் ஒவ்வொரு விலை வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் யூனிட் அதிகரிக்க அதிகரிக்க கட்டணமும் அதிகரிக்கிறது. 

இதில் ஏழைகளுக்கும் கஷ்டமில்லை, பணக்காரர்களுக்கும் கஷ்டமில்லை. ஏன் என்றால் ஏழைகளுக்கு 500 யூனிட்டுக்கு மேல் ஆகப்போவதில்லை. பணக்காரர்களுக்கோ 500 யூனிட்டுக்குள் மின்சாரத் தேவையை அடக்க முடியாது. ஆனால் இந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு மட்டும் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது. 60 நாட்களுக்கு 500 யூனிட் மின்சாரம் என்பது போதுமானதுதான். ஆனால் சில சமயம் ஒரு சில யூனிட்டுகளை நாம் அதிகமாக பயன்படுத்தினாலோ, ஒரு சில நாட்கள் தாமதமாக மின்சாரக் கட்டணத்தை அளவிடும் ஊழியர் வந்தாலே போதும், அந்த 500 என்பது 525 அல்லது 530 என்று ஆகிவிடும். இதனால் மின்சாரக் கட்டணமும் கிட்டத்தட்ட ரூ.2000ஐ தொட்டுவிடும்.

எனவே, தேவையின்றி ஓடும் ஃபேனை ஆஃப் செய்வதால் என்ன ஆகிவிடப் போகிறது, ஆள் இல்லாத அறையில் ஒளிரும் விளக்கை அணைப்பதால் என்ன என்ற கேள்வி கேட்காமல், ஒரே ஒரு யூனிட் மின்சாரத்தை மிச்சம்பிடித்தால் கூட அது ரூ.500 அளவுக்கு மின் கட்டணத்தை மிச்சம் பிடிக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.

ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காலதாமதமாக மின்சாரக் கட்டணம் அளவிடப்பட்டால் கூட அந்த மாதம் நமக்கு மின்சாரக் கட்டணம் ஷாக் அடிக்கலாம். எனவே மாதத்தின் ஆரம்பத்திலேயே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் கட்டண ஷாக்கில் இருந்து தப்பிக்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com