'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' - ரஜினி தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா?

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், சினிமாவில் கொடி கட்டிப் பறந்த போதே, அரசியல் அழைப்பு வந்தது. அதனை ஏற்க மறுத்த ரஜினி, 65 வயதிற்கு பின்னர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' - ரஜினி தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வரா?

'நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்' என்று அவரது சினிமா பாணியிலேயே கடந்த இரு ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வரும் நடிகர் ரஜினிகாந்த், கண்டிப்பாக இன்னும் 6 மாதங்களில் கட்சியைத் தொடங்கி விடுவார் என்று ரஜினிக்கு நெருங்கிய ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் கட்சி தொடங்குவதற்கு முன்பே, 'ரஜினி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்' என்று தேசியக்கட்சியில் உள்ள முக்கியப் பிரதிநிதிகள் அடித்துக் கூறுகின்றனர். 

ரஜினியின் அரசியல் அறிவிப்பு:

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், சினிமாவில் கொடி கட்டிப் பறந்த போதே, அரசியல் அழைப்பு வந்தது. அதனை ஏற்க மறுத்த ரஜினி, 65 வயதிற்கு பின்னர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அரசியலுக்கு வருவது குறித்த தனது முதல் அறிவிப்பை வெளியிட்டார். 

சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த ரசிகர்களுக்கு உண்மையில் ரஜினியின் அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அறிவிப்பு வெளியிட்ட ஒரு சில தினங்களிலேயே, 'எனது அடுத்த ஓட்டு ரஜினிக்குத் தான்' என்று சொல்லுமளவுக்கு தீவிர ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார் ரஜினி. 

ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம்: 

ஒன்றரை ஆண்டுகளாக கட்சித் தொடங்குவது குறித்து இழுத்தடித்து வருவது அவரது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது இலக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமே என்று அறிவித்துவிட்டார்.

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, கட்சித் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதே அவரது தொடர் பதிலாக இருந்து வருகிறது.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ரஜினி?

ரஜினி கட்சித் தொடங்குவது ஒருபக்கம் இருக்க, நாட்டிலோ அல்லது நம் மாநிலத்திலோ ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பிரச்னைகள் நடக்கும்போது, அதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் ரஜினிகாந்த், பெரும்பாலும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே தனது கருத்தைப் பதிவு செய்வதும் தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 

தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் தண்ணீர் பிரச்னையைப் போக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று ரஜினி மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவளித்திருந்தார். 'தண்ணீர் பிரச்னையைப் போக்க நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம்' என்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. அதைத்தொடர்ந்து, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செயப்பட்டது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்றும் அமித் ஷாவும், மோடியும், கிருஷ்ணர்- அர்ஜுனர் போன்றவர்கள் என்று கூறியிருந்தார். இவ்வாறான கருத்துகளின் மூலமாக தமிழகத்தின் ஒரு பகுதி மக்கள், பாஜகவின் ஒரு பிரதிநிதியாகவே ரஜினியைப் பார்க்கின்றனர். 

பாஜகவுடன் கூட்டணி வைக்கிறாரா ரஜினி?

இதேபோன்று பாஜகவின் கருத்துகளுக்கு ஆதரவாக ரஜினி பேசுவதும், ரஜினியின் பேச்சை தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் வழிமொழிவதும் வழக்கமாகி விட்டது. முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் ரஜினிக்கு ஆதரவாக பேசினர். பாஜகவின் தலைவர்களில் ஒருவரான எஸ்.வி.சேகர், 'ரஜினி வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தின் முதல்வராக வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. கருப்பு பலூன் விடுபவர்கள் ஒன்றாகச் சேரும் போது ஒத்த கருத்து கொண்ட ரஜினி மட்டும் பாஜகவில் இணையக் கூடாதா? பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் ரஜினிதான் முதல்வர். பாஜகவின் தயவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது' என்று கூறினார். 

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினிதான்!

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பலர் கூறியதை கேட்டிருப்போம்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், 'ரஜினிகாந்த் நிச்சயம் கட்சித் தொடங்குவார். இன்னும் 6 மாதங்களுக்குள் அவர் கட்சியைத் தொடங்கி விடுவார். 2021 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, அவர் தமிழகத்தின் முதல்வராவது காலத்தின் கட்டாயம். ரஜினியின் வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று கூறியது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கராத்தே தியாகராஜனின் இந்தப் பேச்சு குறித்து மற்றக் கட்சிகளிலும் ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்தி. முக்கியமாக, முதல்வர் ஆக வேண்டும் என்று நீண்ட காலமாக கனவு காணும் ஸ்டாலினுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ரஜினிகாந்த் - பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு: 

கராத்தே தியாகராஜன் கூறிய அதே நேரத்தில் ரஜினிகாந்த், பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரை மும்பையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. பிரசாந்த் கிஷோர், கடந்த 2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் போதும், 2014இல் நடைபெற்ற 16வது மக்களவைத் தேர்தலின் போதும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக ஆட்சி அமைவதற்காக பணியாற்றினார். 

குஜராத் கலவரத்தின் கறைகள் ஒட்டியிருந்த மோடியின் முகத்தை, சமூக ஊடகங்கள், விளம்பரங்கள் என்று ‘மோடியே இந்தியாவின் மீட்பர்’ என்ற உச்சத்திற்கு வியூகங்கள் வகுத்து அவரது முகத்தை வேறு விதமாக நாட்டு மக்களுக்கு காட்டியதுடன், 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பதற்கு பிரமாண்ட வெற்றிக்கு வித்திட்டவர் பிரசாந்த்.

இதனால் அரசியல் தலைவர்களின் தேவைப்படும் நபர்களில் முதலிடத்தில் இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தே பிரஷாந்திடம் ரஜினி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு ரீலிசாகவுள்ள அவரது 'தர்பார்' படத்திற்குப் பின்னர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கலாம். 

தனிக்கட்சியே குறிக்கோள்:

ரஜினிகாந்தை எப்படியாவது பாஜகவில் இணைத்து விட வேண்டும் என்று சில ஆண்டுகளாகவே தீவிர முயற்சி செய்து வரும் அதே வேளையில், தனிக்கட்சி தொடங்குவதில் எந்த மாற்றமும் இல்லை என்று ரஜினி திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். 

பாஜக தலைமை உத்தரவிட்டால் கூறினால், ரஜினிகாந்தின் தலைமையையும் ஏற்போம் என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் கூறியிருக்கிறார். இதுபோன்று பாஜகவினர் பலரும் ரஜினியை ஏற்றுகொண்டுள்ளனர். இதைவைத்து பார்க்கும்போது பாஜகவில் ரஜினி இணையாவிட்டாலும், தனித்து போட்டியிட்டு பின்னர் நட்பு ரீதியாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

பெரும்பாலாக விழாக்களில் கலந்துகொள்ளாத ரஜினி, பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்துகொண்டது, சமீபத்தில் சென்னையில்  மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்றுப் பேசிய சில நிகழ்வுகளும் இங்கு குறிப்பிடத்தக்கவை. 

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட போதும், தமிழகத்தின் அடுத்தத் தலைவராக ரஜினி நியமிக்கப்படுவார் என்ற தகவலும் பரப்பப்பட்டு வந்தது. இதுகுறித்து பாஜக தலைமை ரஜினியிடம் பேசியதாகவும், அதற்கு ரஜினி மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

பாஜகவின் தேர்தல் வியூகமும், ரஜினியின் முடிவும்:

மத்திய பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கருத்துகளின் மூலமாக ஆதரவளித்து வரும் ரஜினி ஏன் பாஜகவுடன் ஐக்கியமாக மறுக்கிறார் என்ற ஒரு கேள்வி இங்கு எழுகிறது. தமிழகத்தில் பாஜக எதிர்ப்பாளர்கள் அதிகமாக இருப்பதும் இதற்கு பதிலாக இருக்கலாம். 

தற்போது அதிகமாக தமிழ் ரசிகர்களைக் கொண்ட நடிகர் ரஜினி, பாஜகவில் இணைந்தால் தமிழ் மக்களின் ஆதரவு குறைய வாய்ப்பிருப்பதாலும் தனிக்கட்சி முடிவில் அவர் மாறாமல் இருக்கிறார் என்றும் தனிக்கட்சி தொடங்கினால் மட்டுமே தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் அவருக்கு ஆலோசனை கூறியுள்ளன. 

எனினும் கட்சி தொடங்கிய பிறகோ அல்லது தேர்தலில் போட்டியிட்ட பின்னரோ, ரஜினியின் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதும் அடிக்கடி அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் ஒரு தகவல். 

முதலில், திராவிடக் கட்சி மூலமாக (அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி) தமிழகத்தில் காலூன்ற முயற்சித்த பாஜக, இறுதி முயற்சியாக ரஜினியை வைத்து களமிறங்க முயற்சிக்கிறது. பாஜகவின் தேர்தல் வியூகம் மற்றும் ரஜினிக்கு தமிழக ரசிகப் பெருமக்களின் ஆதரவு இரண்டும் சேர்ந்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com