96 வயசுல படிச்சு 98/100 மார்க் வாங்கற பாட்டிகளும் இந்தியால இருக்காங்க!

கேரளாவில் முதியோர் கல்விக்கான எழுத்துத் தேர்வில் 96 வயதுப் பாட்டி ஒருவர் 98/100 மதிப்பெண்கள் பெற்று ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகியிருக்கிறார். கேரளாவில் முதியோர்கள் கல்வி பெற ’அட்சர லட்சம்’
96 வயசுல படிச்சு 98/100 மார்க் வாங்கற பாட்டிகளும் இந்தியால இருக்காங்க!

செப்டம்பர் 5, இன்று ஆசிரியர் தினம். இந்த நன்னாளில் இந்த விடியோவைப் பகிர்வது அர்த்தமுள்ளதாக இருக்கலாம்.

இது ஒரு ஆஃப்ரிக்கப் பெண்ணின் பட்டமளிப்பு தின மகிழ்ச்சியைப் பறைசாற்றும் விடியோ.

தன் ஆசிரியையின் கரங்களில் இருந்து தான் தேர்ச்சியடைந்ததற்கான சான்றிதழை அவர் பெற்றுக் கொள்ளும் அழகே அழகு! அத்தனை மகிழ்ச்சி, அத்தனை நிறைவு, அத்தனை சந்தோஷக் குதியாட்டம்!

மார்கரேட்டை இப்படிக் காண அவரைக் காட்டிலும் அவருக்கு கற்பித்த ஆசிரியை தான் அதிகமும் விரும்பியிருப்பார் என்று தோன்றுகிறது.

மார்கரேட் சப்வெட்டேகா. பார்ப்பதற்கு 60 வயதைக் கடந்தவராகவே தோற்றமளிக்கிறார். விடியோவில் அந்தப் பெண்மணி தனது பட்டமளிப்பு விழாவுக்குக் கிளம்பிக் கொண்டே தான் பட்டம் பெற்ற கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். 

தன் கதையை இப்படித் தொடங்குகிறார் மார்கரேட்...

என் பெற்றோர் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு என்னைப் படிக்க வைக்கும் அளவுக்கு வசதி இல்லை. நான் வளர்ந்தேன், திருமணம் செய்து கொடுத்தார்கள். சில வருடங்களில் என் பெற்றோர் இறந்தனர். அவர்களைத் தொடர்ந்து கணவரும் இறந்து விட்டார். பிறகு நான் மட்டும் இரவுகளில் தூக்கமின்றி யோசித்துக் கொண்டிருப்பேன். இத்தனை வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும், நான் படிப்பறிவற்றவளாகவே இருக்கிறேனே? இனியும் கூட சாகும் வரை நான் படிப்பறிவற்றவளாகவே தான் இருக்கப் போகிறேனா? என்று யோசித்துக் கொண்டிருப்பேன். என்றாவது ஒருநாள் என்னால் என் பெயரை எழுத முடியுமா? பெயரெழுதி வாசிக்க முடியுமா? என்று யோசித்துக் கொண்டே படுத்திருப்பேன். அந்த தவிப்புக்கு ஒரு முடிவு வந்தது. ஹங்கர் புரஜெக்ட்டின் வயது வந்தோர் கல்வித் திட்டம் (அடல்ட் லிட்ரஸி) என் ஊருக்கும் வந்தது. அதைப் பற்றித் தெரிந்து கொண்டதுமே உடனடியாக நான் என் பெயரை அதில் பதிவு செய்து கொண்டேன். தினமும் தவறாமல் வகுப்புகளுக்குச் சென்றேன். இதோ இரண்டு நாட்களுக்கு முன் நான் தேர்ச்சியடைந்து விட்டேன் என்று தகவல் வந்தது. ஆமாம், இப்போது நான் எழுதப் படிக்கத் தெரிந்தவள் என்று சான்றிதழ் பெற்று விட்டேன். சான்றிதழைக் கையில் வாங்கியதும் நான் ஏதோ வேற்று வேற்று நாட்டில் இருப்பவளைப் போல உணர்ந்தேன். அந்த அழகான வேற்று நாட்டில் முழுக்க முழுக்க சந்தோஷமும், கோலகலமும் மட்டுமே நிறைந்திருந்தது. அதனால் தான் என்னுடைய பழைய ஷூக்கள் கூட இன்று டான்ஸிங் ஷூக்கள் போல வேகம் பெற்று ஜொலிக்கின்றன. இன்று நான் எங்கிருந்தாலும் பிரகாசமாக ஒளிர்கிறேன். இது நான் கொண்டாடித் தீர்க்க வேண்டிய நேரம். இன்று நானும் கூட படித்தவர்களில் ஒருத்தியாகி விட்டேன். அதனால் தான் இப்படிச் சந்தோஷமாக நடனமாடத் தோன்றுகிறது 

- என்று புன்னைகை மாறாமல் தன் கதையை முடிக்கிறார் மார்கரேட்.

இந்த மார்கரேட், மாலவியில் ஆஃப்ரிக்க அரசு மேற்கொண்ட வயது வந்தோருக்கான கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 11,000 முதியவர்களில் ஒருவராகவும் தன் கதையைத் தானே உலகுக்குச் சொல்ல முயலும் ஆசிரியர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.

நிற்க. இந்த விடியோவைப் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

ஆனால், நம் தமிழகத்திலும் முதியோர் கல்வித் திட்டம் என்ற பெயரில் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம் செயல்பாட்டில் இருந்ததே, அதன் தற்போதைய நிலை என்ன என்று அறிந்து கொள்ளத் தேடினால் அத்திட்டம் தற்போது ஆக்டிவ்வாக இல்லை என்றே சொல்லலாம். தமிழகத்தில் கல்லாத முதியோர்களே இல்லையா எனத்தெரியவில்லை. ஆனால், வயது வந்தோருக்கான கல்வித் திட்டத்தை தமிழக அரசின் கல்வித்துறை உள்ளாட்சி அமைப்புகளின் மேல் திணித்திருப்பதால் தற்போது அதைப் பற்றி தகவலறிய கூகுளில் தேடினால் தமிழக அரசின் முதியோர் கல்வித் திட்ட தகவல்களுக்குப் பதிலாக கேரள அரசின் ‘அட்சர லட்சம்’ எனும் முதியோர் கல்வித் திட்டத்தைப் பற்றிய செய்திகள் தான் காணக்கிடைக்கின்றன.

அங்கு கடந்த ஆண்டில் கூட முதியோர் கல்விக்கான எழுத்துத் தேர்வில் 96 வயதுப் பாட்டி ஒருவர் 98/100 மதிப்பெண்கள் பெற்று ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகியிருக்கிறார். கேரளாவில் முதியோர்கள் கல்வி பெற ’அட்சர லட்சம்’ எனும் திட்டத்தை அம்மாநில அரசு நடத்தி வருகிறது. இளமைக் காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்காக இந்த திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்தாண்டு நடைபெற்ற இறுதித் தேர்வில் 42, 932 பேர் தேர்ச்சியடைந்திருந்தனர். தேர்வு எழுதியவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவரான கார்த்தியாயினி பாட்டி 98/100 மதிப்பெண்கள் எடுத்து அசத்தினார். ஆலப்புழாவைச் சேர்ந்த இந்தப் பாட்டி வயதும் முதுமையும் உடலுக்குத்தானே தவிர உள்ளத்துக்கும் ஊக்கத்துக்கும் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.

சரி கேரளாவில் சிறப்புற செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு திட்டம் தமிழகத்தில் ஏன் நிறுத்தப்பட்டது என்பதற்கு காரணங்களைத் தேடினால் வருத்தமே மிஞ்சுகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை தற்போதைய முழு எழுத்தறிவு இயக்கம், தொடர் கல்வி திட்ட இயக்கம் இதர கல்வியறிவு திட்டங்களுக்காக போதுமான நிதி அளிக்கப்பட்டிருந்தாலும் வட்டார நிலையில் இத்திட்டத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டசமூக அமைப்புகளின் ஒத்துழைப்பு இல்லாததாலும் முழுநேர முதியோர் கல்வி அமைப்பு இல்லாததாலும்  எதிர்பார்த்த அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குழுக்கள் இத்திட்டங்களின் உண்மையான பயனை போதுமான அளவில் அடையவில்லை என்பதே நிஜம்.

ஏன் வரவேற்பு இல்லாமல் போனது என்றால்? முதியோர் கல்வித்திட்டங்களை நமது சமூக அமைப்புகள் எப்படி அணுகின என்றால், அதற்கு சில திரைப்பட உதாரணங்களைச் சொல்லலாம்.

பாக்யராஜின் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தீபாவை முதியோர் கல்வி கற்பிக்கும் டீச்சராக்கி முதியோர்களுக்கு பாடங்களில் ஆர்வமில்லை டீச்சரின் மீது தான் ஆர்வம் என்று காட்சியமைத்திருப்பார்கள். இதே கதை தான் நாட்டாமை திரைப்படத்திலும் இதிலெல்லாம் டீச்சர்களை எப்படி சித்தரிக்கக் கூடாதோ அப்படியெல்லாம் சித்தரித்ததோடு கிராம மக்களுக்கு முதியோர் கல்வி வீண் என்பது போன்ற பரப்புரையையும் அறிந்தோ அறியாமலோ அந்தந்தப் படங்கள் செய்திருக்கின்றன.

வீட்டில் சும்மா கிடக்கும் முதியவர்களைப் படிப்பித்து என்ன செய்யப் போகிறோம்? குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லாத நேரத்தில் இவர்களுக்குப் படிப்பும், பள்ளிக்கூடமும் எதற்கு? என்ற பொதுஜன மெத்தன மனப்போக்கு தான் இத்தனைக்கும் காரணம்.

ஆனால், மேற்கண்ட இரண்டு விடியோக்களைப் பார்க்கும் போது சொல்லத் தோன்றுகிறது... உங்கள் வீட்டு முதியவர்களுக்கு கல்வியின் மீது ஆசையிருந்தால் தயவு செய்து அவர்களைப் படிக்க வைத்து கனவை நிறைவேற்றுங்கள். வாழ்நாள் முழுதும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவே வாழ்ந்து மடிவதென்பது சாபக்கேடு. அதிலும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டு வீட்டிலேயே உள்ளங்கை மொபைல் ஃபோனில் சொல்லித்தர டீச்சர்கள் உலகம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் போது முதியவரகளுக்கு விருப்பமிருப்பின் அவர்களது கல்வி ஆசையைப் பகடி செய்து புறக்கணிக்காமல் அவர்கள் வாழ்வில் கல்வி எனும் சுடரொளி ஏற்றுங்கள்.

அப்படி ஏற்ற வேண்டும் எனும் விழிப்புணர்வைப் ஏற்கனவே பெற்றிருப்பவர்களும், இனிமேல்  பெறக்கூடியவர்களும் கூட  ஆசிரியர்கள் தான்.

அவர்களுக்கு எங்களது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com