பாலுமகேந்திரா டெலிபோன் செய்யவே இல்லை!

செல்போன் அடித்தது. எடுத்தேன். "வணக்கம். நான் பாலுமகேந்திரா பேசுகிறேன் . கந்தசாமி தானே?'' என்று கேட்டார். 
பாலுமகேந்திரா டெலிபோன் செய்யவே இல்லை!

செல்போன் அடித்தது. எடுத்தேன். "வணக்கம். நான் பாலுமகேந்திரா பேசுகிறேன் . கந்தசாமி தானே?'' என்று கேட்டார். 

"வணக்கம். கந்தசாமிதான். சொல்லுங்கள்'' என்றேன். "எங்களூர்' என்ற உங்கள் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் படித்தேன். பிடித்திருக்கிறது. அதனை முழு தொகுப்பில் காணவில்லை. எந்தத் தொகுப்பில் இருக்கிறது?'' என்று கேட்டார்.

"எங்களூர்' கதை எப்படியோ விட்டுப் போய்விட்டது. அது "கந்தசாமி கதைகள்' என்ற தொகுப்பில் இருக்கிறது. ஆனால், அந்தத் தொகுப்பும் என்னிடம் இல்லை'' என்றேன்.

"பரவாயில்லை. நம் உதவி இயக்குநர்களிடம் சொன்னால் கண்டு பிடித்து கொண்டு வருவார்கள்'' என்றார்.

பாலுமகேந்திரா அடிப்படையில் அழகியல் சார்ந்த ஒளிப்பதிவாளர். அதாவது ஒளிக்குள் கலையழகேற்றும் கலைஞர். அவர் "ரெம்பராண்ட்' எனும் ஓவிய பரம்பரையில் வந்த ஒளிப்பதிவாளர். அவர் அடிப்படையில் ஒவியர். ஆனால் சினிமா ஒளிப்பதிவாளராக ஜொலித்தார்.

"மூன்றாம்பிறை' அவர் கலைப்படைப்பின் உன்னதம். அவர் ஒளிப்பதிவாளராக இருந்து சினிமா இயக்குநர் ஆனவர். ஆனால், அவர் ஒளிப்பதிவுக்காகவே நினைவு கூறப்படுவார். 

பதினைந்து நாட்களுக்குப் பிறகு டெலிபோன் செய்து, "எங்களூர்' சிறுகதைப் புத்தகம் கிடைத்துவிட்டது. கதையையும் படித்துவிட்டேன். ஒரு குறும்படம் எடுக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். காபி ரைட் உரிமையை யாருக்காவது கொடுத்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

"பாலு மகேந்திராவிற்கே கொடுக்கிறேன்'' என்றேன். நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர் ஈழத்தமிழர். கிறிஸ்தவர். அவரிடம் பாஸ்போர்ட் கிடையாது. எனவே இந்தியாவை விட்டு வெளியில் சென்றவதில்லை.

1986-ஆம் ஆண்டு. க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக் கொண்டிருந்தார். பூதக் கண்ணாடி வைத்து கொண்டு புத்தகங்களைப் படித்து வந்தார். அவரால் எழுத முடியவில்லை. எனவே சொல்ல சொல்ல எழுதுவதற்கு லதா ராமகிருஷ்ணன் உட்பட சிலர் இருந்தார்கள்.

பாலுமகேந்திரா, க.நா.சுப்ரமணியத்தைப் பார்க்க என்னையும் அழைத்துக் கொண்டு போனார். இருவரும் இலக்கியம் பற்றியும், சினிமா பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே க.நா.சுப்ரமணியம் தான் எப்பொழுதுமே நிறைய சினிமா பார்த்தது இல்லை என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை தேசிய திரைப்பட விருது குழுவில் உறுப்பினராக இருந்த போது, தமிழுக்கு ஜான் ஆபிரஹாம் இயக்கித் தயாரித்த "அக்ரஹாரத்தில் கழுதை' என்ற படம் விருது பெற காரணமாக இருந்ததைக் குறிப்பிட்டார்.

தேசிய திரைப்பட விருது பெற்ற படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவது வழக்கமாக இருந்தது. அதனால் சென்னை தூர்தர்ஷன் நிலையத்தில் இருந்து "அக்ரஹாரத்தில் கழுதை' ஒளிபரப்பப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. "அக்ரஹாரத்து கழுதை' எங்களை அவதூறு செய்கிறது என்று சிலர் புகார் தெரிவித்தார்கள். அதனால் படம் ஒளிப்பரப்பப்படவில்லை. 

பாலு மகேந்திரா
பாலு மகேந்திரா

பாலுமகேந்திரா தான் "வீடு' என்றொரு படம் இயக்கப் போவதாகவும், அதில் சொக்கலிங்க பாகவதர் என்ற முதியவர் பாத்திரம் வருகிறது. அதில் பாகவதராக, நீங்கள் நடித்தால் சரியாக இருக்கும் என்று பட்டது. அதற்காகத் தான் தங்களைப் பார்க்க வந்தேன்'' என்றார்.

"நானா? சினிமாவில் நடிப்பதா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார். பிறகு, நமக்கு சினிமா எல்லாம் சரிபட்டு வராது. நான் சினிமா ஆசாமி இல்லை. எழுத்தாளன்'' என்றார் க.நா.சு.

நான் கேட்டு கொண்டிருந்தேன்.

"சொக்கலிங்க பாகவதர் ஓர் அற்புதமான பாத்திரம். நீங்கள் நடிக்கவே வேண்டாம். படத்தில் வந்து போனால் போதும். மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லாமல் படப்பிடிப்பு இருக்கும்'' என்று மேலும் கூறினார்.

"அதெல்லாம் சரி தான். உடம்புக்கு முடியுமா என்று பார்க்க வேண்டும்'' என்றார் க.நா.சு

"வீடு' படத்தில் ஒரு நாள் நடித்தால் உற்சாகம் வந்துவிடும். பிரமாதமாக நடிப்பீர்கள். ரொம்ப யோசித்து தான் உங்களையே பார்க்க வந்தேன்'' என்றார் பாலு மகேந்திரா.

"கந்தசாமியிடம் சொல்லிவிடுகிறேன்'' என்றார் க.நா.சுப்ரமணியம்.

பாலுமகேந்திரா விடைபெற்றுக் கொண்டார். க.நா.சுப்ரமணியம் தலையசைத்துக் கொண்ட பின்னால் இருந்து எழுந்து அவருக்கு எதிராக உட்கார்ந்து கொண்டேன்.
"படிக்க கண் தெரியவில்லை. எழுத கை வரவில்லை. நடப்பதே சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் சினிமாவில் நடிக்க அழைப்பு வருகிறது'' என்றார்.

நான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

"நீ என்ன சொல்லுற'' என்றார் க.நா.சு

"உங்கள் முடிவுதான் சரி''

"அவர் போன் பண்ணினால் நாசுக்காகச் சொல்லிவிடு'' என்றார்.

பாலுமகேந்திரா டெலிபோன் செய்யவே இல்லை.

- சா.கந்தசாமி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com