‘வெள்ளை நகரம்’ புதுச்சேரி ஆரவிந்தர் ஆசிரமம்!

‘வெள்ளை நகரம்’ புதுச்சேரி ஆரவிந்தர் ஆசிரமம்!

அவ்வில்லத்தின் உள்ளே ஒரு மரத்தாலான நிழல் முற்றத்தில், மலர் மூடப்பட்ட "சமாதி" உள்ளது. இந்த வெள்ளை பளிங்கு சன்னதியின் இரண்டு தனி அறைகளில், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்

புதுச்சேரியில் இருக்கும் அரவிந்தர் ஆசிரமம் சர்வதேச புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து, இங்கு தங்கியிருந்து தியானம் செய்து மனதை அமைதிப்படுத்திச் செல்கின்றனர். அரவிந்தர் ஆசிரமம் உருவான வரலாறு இது தான்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிருஷ்ண தனகோஷ்-ஸ்வர்ணலதா தம்பதியினருக்கு மகனாக 15.8.1872-இல் பிறந்தவர்  ஸ்ரீ அரவிந்தர். 

தனது  ஐந்து வயதில் மூத்த சகோதரர்கள் விநய பூஷன்,  மன்மோகன் ஆகியோரோடு டார்ஜிலிங்கில் லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார்.  1879 இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு இங்கிலாந்து சென்றார்.  கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார்.  தாமரையும், குத்து வாளும் என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார்.

1893- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுக்கு அரவிந்தர் திரும்பியபோது அவர் பயணித்த கப்பல் விபத்துக்குள்ளானது. அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ச்சி அடைந்த அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தனகோஷ் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.

பின்னர் பரோடாவில் இருந்து திரும்பிய அவர், கொல்கத்தாவில்  வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். பரோடவில் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டு உணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. 1907, 1908 ஆகிய இரு  ஆண்டுகளில் இருமுறை ஆங்கிலேய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.

1904- ல் பிரணாயாமம் பயிலத் தொடங்கிய போது சிறை வாழ்க்கை யோக நெறியில் அதிகம் அக்கறை கொள்ள வைத்தது. விடுதலைப் போராட்டம் என்பதை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன்மிகக் கண்ணோட்டத்திலும் அரவிந்தர் பார்க்கத் தொடங்கினார். 

1909- ல் சிறையிலிருந்து விடுதலை பெற்றதை அடு்த்து அரசியல் இயக்கங்களைத் தவிர்த்துக் கொண்டு யோக நெறியில் முழுக் கவனத்தையும் செலுத்தினார். 1910- ல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மேல் குற்றம் சாட்டப்பட்டது. கைதாவதில் இருந்து தப்பிக்க அரவிந்தர், அப்போது பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவையின் ஒரு பகுதியான சந்திர நாகூருக்கு (மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளது) தப்பிச் சென்றார். அங்கிருந்து ஏப்ரலில் மாறுவேடத்தில் புதுச்சேரிக்கு வந்தார்.

ஆங்கிலேய அரசுக்கு எதிரான கொந்தளிப்பில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து யோகநெறியிலே தன்னைப் பக்குவப்படுத்துவதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டார். பாரதியாரோடு நட்புக் கொண்டார். சாவித்திரி காவியத்தைப் படைத்தார்.

அரவிந்தர் தனது சிந்தனைகளை ஆர்யா என்ற தனது ஆன்மிக இதழில் (1914 - 1921) எழுதினார். 

அரவிந்தர் சனாதன தர்மத்தினை ஆழமாக நோக்கியவர். வேதம், உபநிடதம், கீதை பற்றியும் இந்தியப் பண்பாடு பற்றியும் தமது கருத்துக்களை முன் வைத்தார்.

1910- ல் அரசியலில் இருந்து விலகிய பின்னர்,  புதுச்சேரியில் குடியேறிய அரவிந்தரும், அவரைச் சார்ந்த குழுவாலும் அரவிந்தர் ஆசிரமம் உருவாக்கப்பட்டது.  24.11.1926- ல் அரவிந்தர் ஒரு பெரிய ஆன்மிக உணர்தலுக்குப் பின்னர், ஆன்மிக வேலைகளில் ஈடுபட்டார். இந்த நேரத்தில் அவர் தனது ஆன்மீக ஒத்துழைப்பாளரான "அன்னை" க்கு ஆசிரம நிர்வாகத்திற்கான முழுப்பொறுப்புகளையும் வழங்கினார். அவர் முன்பு மிரா அல்ஃபாஸா என அழைக்கப்பட்டார். ஆகையால் இந்த நாள் பொதுவாக ஆசிரமத்தை நிறுவும் தினமாக அறியப்படுகிறது. 

அரவிந்தர் ஆசிரமம் புதுச்சேரியில் மட்டுமே உள்ளது.  இதற்கு எந்த கிளைகளும் இல்லை. (ஸ்ரீ அரவிந்த் ஆசிரமம் - தில்லி கிளை ஒரு தனி அமைப்பு ஆகும். அது வேறு ஒரு நிர்வாகத்தால் இயக்கப்படுகிறது.) 

ஸ்ரீ அரவிந்தரால் நிறுவப்பட்ட மிக முக்கியமான அமைப்பு ‘ஆரோவில்’ என்பதாகும். இது அன்னை நிறுவிய ஒரு சர்வதேச நகரமாகும். இது மனித ஒற்றுமைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

ஸ்ரீ அரவிந்தர் தனது பெரும்பாலான நேரங்களை எழுத்து மற்றும் தியானத்தில் கழித்தார். 1910 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரிக்கு வந்திருந்த மூன்று அல்லது நான்கு இளைஞர்கள் அவருடன் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் விரும்பியபடி செய்ய அவர்கள் சுதந்திரமாக இருந்தனர். அன்னை மற்றும் பிரஞ்சு எழுத்தாளர் பால் ரிச்சர்ட் 1914-இல் ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்து ஒரு மாதாந்திர ஆய்வுகளை வெளியிட்டனர். 

ஆனால், முதல் உலகப் போர் வெடித்த பிறகு, அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்தரே இந்த ஆய்வு முழுவதிலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. அவருடன் வசிக்கும் இளைஞர்களிடமிருந்து சிறிது உதவியைப் பெற்றார்.  1920- ஆம் ஆண்டு ஏப்ரலில் அன்னை புதுச்சேரிக்கு திரும்பினார். அன்னை தன் வாழ்நாள் முழுமையையும் ஆசிரமத்திற்காகவும், ஸ்ரீஅரவிந்தருக்காகவும் ஒப்படைத்தார்.

1926-இல்  ஆசிரமத்துக்கு முறையான வடிவம் கொடுக்கப்பட்ட பின்னர், அது விரைவான வளர்ச்சியைக் கண்டது. 1934- ல் கூட தேவையான வசதிகள் இன்றியே ஆசிரமம் இருந்தது.  இந்த ஆண்டுகளில் அன்னைக்கு ஒரு வழக்கமான பழக்கம் இருந்தது. அவர் தினமும் காலை 6 மணியளவில், பால்கனியில் நின்று தனது ஆசீர்வாதத்தை பக்தர்களுக்கு வழங்கி தினமும் தனது நாளை தொடங்குவார்.

ஆசிரமத்திலுள்ள பக்தர்கள் காலையில் அன்னையின் ஆசி பெற்று, பின் தியானம் உள்பட பல யோகாசனங்களைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள்.  பல துறைகளுடன்  ஆசிரமம் பெருவளர்ச்சி பெற்றது. பல துறைகள் அவற்றில் செயல்படுகின்றன. சாப்பாட்டு அறையிலிருந்து தொடங்கி ‘ரொட்டி சுடும் இடம், லாண்டரி, அச்சகம், விளையாடுமிடம், கலை நிலையம் (Art gallery), நெற்பயிர் விளையும் பூமி, பால் பண்ணை, கோழிப்பண்ணை, தச்சுப் பட்டறை, நர்ஸிங் ஹோம், விடுதிகள், எம்ராய்டரி, பைண்டிங், சிமெண்ட் கான்க்கிரீட் தொழிலகம், பூந்தோட்டம், சாவி செய்யும் இடம், பர்னிசர் செய்யும் இடம், மோட்டார் ஒர்க் ஷாப், பட்டறை, காகித நிறுவனம், பல் வைத்தியசாலை, கண் வைத்தியசாலை, கராத்தே பயிற்சி நிலையம், நூல் நிலையம், போட்டோகிராப், புத்தக விற்பனை நிலையம், சிற்றுண்டிச் சாலை உள்பட 52 துறைகளை கொண்டது ஆசிரமம்.

துறையின் தலைவர்கள் காலை அன்னையை சந்தித்து அவருடைய ஆசீர்வாதங்களையும் உத்தரவுகளையும் பெற்றுக்கொண்டு பணியைச் செய்வது வழக்கம். காலை 10 மணியளவில் அன்னை மீண்டும் அனைவரையும் சந்திப்பார். மாலை 5.30 மணியளவில் அவர் தியானம் மேற்கொள்வார். மேலும், ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் ஆண்டுதோறும் நான்கு முறை பக்தர்களை சந்தித்து ஆசி வழங்குவர். ஆசிபெற வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகை புரிந்தனர்..
  
ஸ்ரீ அரவிந்தருடைய அமைதி நிலவும் ஆத்மீக சூட்சும உடலின் சக்தி புதுச்சேரியை சுற்றி ஏழுமைல் வரை பரவியுள்ளது என்று புதுச்சேரிக்கு வருகை புரிந்து அப்போதைய பிரதமர்  ஜவஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆசிரமத்தில் காலையில் 3 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பது சட்டம்.  ஒருவரது பிறந்த நாளை அன்னை விசேஷமாகக் கருதுகிறார். ‘‘ஒவ்வொரு பயிரும் குறிப்பிட்ட காலத்தில் பலன் தருவதைப் போல் தங்கள் பிறந்த நாளன்று மனிதனுடைய ஆத்மா ஜீவனின் ஆழத்திலிருந்து லேசாக மேலே வந்து மலர்ந்து பிரிந்து தெய்விக உணர்வைப் பெரிதும் பெற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இருக்கிறது’’ என்று அன்னை கருதுகிறார். பிறந்த நாள் கொண்டாடுபவரை தனியே சந்தித்து சிறப்பாக வாழ்த்தி ஆசீர்வாதம் செய்வது அன்னையின் வழக்கம்.

ஆசிரமம் என்று இப்போது நாம் சொல்வது ஒரே கட்டடமாகத் தெரிகிறது. 4 கட்டங்களை ஒருங்கிணைத்து, அதை ஒரே இடமாக மாற்றியிருக்கிறார்கள். இந்தக் கட்டடத்துக்கு ஸ்ரீ அரவிந்தர் வந்தவுடன் தற்சமயம் ஜனவரி முதல் தேதி காலண்டர் கொடுக்கும் அறையில் ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்தார். கொஞ்ச நாள் கழித்து கிழக்குப் பகுதியில் ‘ஸ்ரீஅரவிந்தர் அறை’ என பக்தர்கள் இப்போது தரிசிக்கும் இடத்துக்குச் சென்றார்.  இது இப்போது பிரதான கட்டடம் என அழைக்கப்படுகிறது. 

இதன் கிழக்குப் பகுதியில் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் தங்கியிருந்த அறைகளும், தியான மண்டபமும் உள்ளன. மேற்குப் பகுதியில் வாசக சாலை, செய்திப் பத்திரிகை அறை, பழ அறை, பொருள் வைப்பு அறை, நூல் வெளியீட்டுத் துறை, வரவேற்பு அறை, பிரதான வாயில் ஆகியவையுள்ளன. வடக்குப் பகுதியில் அன்னையின் கார் நிற்குமிடமும், பல ஆண்டுகளாக அன்னை தினமும் காலையில் தரிசனம் கொடுத்த பால்கனியும் உள்ளன. 

ஆசிரமக் கட்டடத்தின் நடுவில் ஸ்ரீ அரவிந்தர் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இருக்கிறது. அதே சமாதியில் அன்னையும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சமாதியின் பக்கத்தில் கொன்றை மரம் ஒன்று 60 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துவிட்டு நிழல் தருகிறது. அன்னை அதை ‘Service Tree’ என்று அழைப்பார். சமாதி கட்டடத்தின் நடுவேயிருப்பதால் அன்னை தன் அறையில் தன் நாற்காலியை மேற்கு முகமாகப் போட்டு உட்கார்ந்திருந்தார். சமாதியை நோக்கியிருக்க வேண்டுமென்பதற்காக அப்படிச் செய்தார் அவர்.

வரவேற்புப் பகுதிக்கு அடுத்தாற்போல் ஒரு பெரிய அறையும், அதில் ஸ்ரீ அரவிந்தருடைய 3 படங்களும் உள்ளன. நடுவிலுள்ள ஸ்ரீ அரவிந்தருடைய படம், அன்னை முக்கியமாகக் கருதுவது. ‘‘அதற்கு சக்தி அதிகம்’’ என்று சொல்வார் அன்னை. இருபுறங்களிலுமுள்ள படங்கள் ஸ்ரீ அரவிந்தர் சமாதியானபின் எடுக்கப்பட்டவை. ஒரு சாதகர் ஆசிரமத்தின் உள் செல்வதற்கு முன் இப்படத்தை வணங்கி எழுந்த பொழுது ஸ்ரீ அரவிந்தர் அந்தப் படத்திலிருந்து உயிரோடு வெளியே வந்ததைக் கண்டு அன்னையிடம் சொன்னார். ‘‘அந்தப் படம் சக்தி வாய்ந்தது’’ என அன்னை விளக்கினார்.

ஆசிரமத்திலுள்ள அமைதி சிறப்பானது. ஆசிரமத்துக்கு வெளியே சாலையில் செல்லும்போது கூட அந்த அமைதி தெரியும். ஆசிரமத்தை நன்கு அறிந்தவர் ஒருவருடைய கண்ணைக் கட்டிப் போட்டுப் பல இடங்களுக்கும் அழைத்துச்சென்று ஆசிரமத்திற்குத் திரும்பி அழைத்துக் கொண்டு வந்தால், நேரில் காண்பது போல் அங்குள்ள அமைதி அது ஆசிரமம் என்பதைக் காட்டிவிடும்.

புதுச்சேரிக்குள் நுழையும்போது ஒவ்வொரு கட்டடங்களும் ஆசிரமத்தின் வளர்ச்சி, பெருமைகள் குறித்து எடுத்துக்கூறும். இப்போது ஆசிரமத்திற்கு சொந்தமான 400-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் பக்தர்கள் வாழ்கின்றனர். ஆனால் மக்கள் அதிகம் தேடி வருவது ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் வாழ்ந்து கொண்டிருக்கும் மையமே ஆகும். அவர்கள் வாழ்ந்த இல்லமே - "ஆசிரம பிரதான கட்டடம்" அல்லது பொதுவாக "ஆசிரமம்" என்று அழைக்கப்படுகிறது.

அவ்வில்லத்தின் உள்ளே ஒரு மரத்தாலான நிழல் முற்றத்தில், மலர் மூடப்பட்ட "சமாதி" உள்ளது. இந்த வெள்ளை பளிங்கு சன்னதியின் இரண்டு தனி அறைகளில், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னையின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இப்போது, ஆன்மிக தேடல்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் புதுச்சேரி முக்கிய இடமாக மாறியுள்ளது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். பார்வையாளர்கள் பார்வையிடும் நேரம் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரையும்,  மீண்டும் பிற்பகல் 2  முதல் மாலை 6 மணி வரையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தை சுற்றியுள்ள பகுதி ‘வெள்ளை நகரம்’ என அழைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com