41 ஆண்டுகளாக மலரும் கையெழுத்து இதழ்! தனி மனிதரின் தவம்

முற்றிலும் இலக்கிய உள்ளடக்கத்துடன் ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது மலை உச்சியில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வதற்குச் சமம்.
'தாழம்பூ' கோவிந்தராஜன்
'தாழம்பூ' கோவிந்தராஜன்
Published on
Updated on
2 min read

முற்றிலும் இலக்கிய உள்ளடக்கத்துடன் ஒரு சிற்றிதழை நடத்துவது என்பது மலை உச்சியில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்வதற்குச் சமம். அதிலும் எல்லாவிதமான தொழில்நுட்பங்களும் வந்துவிட்ட இந்தக் காலத்தில்கூட, எவ்வித சமரசமும் இன்றி, இன்னமும் கையாலேயே எழுதி, நகலெடுத்து அவற்றை சந்தா கட்டிய வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பது என்பது பிரம்ம பிரயத்தனம். அதைத்தான் சோர்வின்றி செய்து வருகிறார் இந்த இலக்கிய ஆர்வலர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே சுப்பிரமணியபுரம் பக்கத்திலுள்ள விஜயபுரம் என்ற கிராமத்திலிருந்து ஒருவர் இப்படியொரு கையெழுத்துப் பத்திரிகையை நாற்பத்து ஓராவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அந்த இதழின் பெயர் "தாழம்பூ'.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் அந்தக் காலத்தில் பியுசி வரை படித்து முடித்த எம்.எஸ். கோவிந்தராஜன்தான் தாழம்பூ இலக்கிய இதழின் ஆசிரியர். "தாழம்பூ' தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சுவாரஸ்யமான தகவல்களுடன் வெளிவரத் தொடங்கியது. 1977-ல் பேராவூரணியில் "தென்றல்' என்றொரு கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்திருக்கிறார் கோவிந்தராஜன். அதுதான் அவருக்கு தாழம்பூவைத் தொடங்குவதற்கான தூண்டுகோலானது. அந்த சமயத்தில், எம்ஜிஆர் நடித்த படம் "தாழம்பூ' ஓடிக் கொண்டிருந்ததாம். அந்தப் படத்தில் வரும் "தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும்' என்ற பாடல் இன்றைக்கும் மணம் வீசிக் கொண்டிருக்கும் "தாழம்பூ'வுக்கான மையக் கரு. நம்ப முடிகிறதா?

தன் பயணம் குறித்து "தாழம்பூ' கோவிந்தராஜன் கூறுகையில், ‘வைராக்கியமாகத்தான் "தாழம்பூ' வெளிவருகிறது. 1977-இல் முதல் இதழ், இரண்டுப் பிரதியாக நானே எழுதினேன். ஒன்றை நான் வைத்துக் கொண்டேன். இன்னொன்றை பிலிப்பைன்ஸ் வானொலிக்கு அனுப்பி வைத்தேன். முதல் இதழ் எட்டுப் பக்கம். நிறைய நண்பர்கள் பேசினார்கள், என் வீட்டுக்கு வாசகர் கடிதங்கள் வந்தன. அடுத்த இதழை, கார்பன் தாள் வைத்து எழுதினேன். மொத்தமே 10 பிரதிகள்தான். அஞ்சல் செலவு 10 பைசா. ஆண்டுச் சந்தா ரூ. 20.

தொடர்ந்து மாதந்தோறும் "தாழம்பூ' மணக்கத் தொடங்கியது. நானே அட்டைப் படம் வரைவேன். முதல் பக்கத்தில் "வாட்டர்' கலர் கொண்டு வண்ணம் தீட்டுவேன். உள்பக்கங்கள் கார்பன் தாளில் பிரதி எடுக்கப்பட்டிருக்கும். 2010ஆம் ஆண்டில் உடல் ஒத்துழைக்கவில்லை. இரு மாத இதழாக மாற்றிவிட்டேன். இப்போதைய ஆண்டு சந்தா ரூ. 150. எழுதி திருச்சிக்கு எடுத்துச் சென்று ஜெராக்ஸ் எடுக்கிறேன். கடந்த ஆண்டு சென்னையிலிருந்து ஒருவர் பேசினார். "என்ன உதவி வேண்டும்?' எனக் கேட்ட அவர், எனக்கொரு ஜெராக்ஸ் எடுக்கும் சிறிய இயந்திரத்தை வாங்கி அனுப்பினார்.

இடையிடையே தீபாவளி சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ், மகளிர் தினச் சிறப்பிதழ், நகைச்சுவைச் சிறப்பிதழ் என களை கட்டுகிறது தாழம்பூவின் மணம். 40 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் கடந்த நவம்பர்- டிசம்பர் இதழில் என்னால் முடியவில்லை- நிதிச் சிக்கல்- உடல் ஒத்துழைக்கவில்லை- தாழம்பூவை நிறுத்திக் கொள்கிறேன் என அறிவிப்பை வெளியிட்டேன். வாங்கி வாசித்தவர்கள் அத்தனைப் பேரும் தொலைபேசியில் வந்துவிட்டனர். என்ன ஆனாலும் பரவாயில்லை, பத்திரிகை தொடர்ந்து வெளிவர வேண்டும் என அன்புக் கட்டளையிட்டனர். தாழம்பூ மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறது என்கிறார் கோவிந்தராஜன்.

அறிவுப் பசிக்கு இலக்கிய சேவை ஆனால் வயிற்றுப் பிழைப்புக்கு? கோவிந்தராஜன் அவரது ஊரில் சிறந்த சித்த வைத்தியர். தந்தையின் வழியில் பரம்பரைத் தொழிலை திறம்பட செய்து வருகிறார். நேரம் கிடைக்கும்போது விவசாயம் செய்கிறார். இரண்டு மகன்கள், ஒரு மகள் என குடும்பத்தினர் நல்ல நிலையில் உள்ளனர். கிராமத்து எளிய வாழ்க்கை இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது என்கிறார் கோவிந்தராஜன். 

தாழம்பூ போன்ற பத்திரிகைகள் இன்றைய தொழில்நுட்ப வசதிகளுடன் வாழும் இளம் இதழாளர்களுக்கு ஆச்சரியமானதுதான். அதை மிக எளிமையுடனும் சிரத்தையுடனும் கோவிந்தராஜன் செய்து வருகிறார். ஒவ்வொரு இதழுக்கும் ஒரு பிரமுகரிடம் நேர்காணல். வாசகர் கடிதங்கள். சிறப்பிதழ்களுக்கு பிரமுகர்களிடம் வாழ்த்துகளும். நூல் விமரிசனங்கள், கவிதைகள், இலக்கியச் செய்திகள் என உரிய படங்களுடன் களம் இறங்கும் தாழம்பூ. 

தமிழ்நாட்டின் சிற்றிதழ்  ஆசிரியர்களும், தீவிர வாசகர்களுக்கும் தாழம்பூ ஒரு வரப்பிரசாதம். ஒவ்வோரு இதழிலும் வாசகர் கடிதங்களும் மணக்கின்றன. தற்போது 110 பிரதிகள்தான் எடுக்கிறார் கோவிந்தராஜன். ஆனால் அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி அவரது முகத்தில் பிரகாசிக்கிறது! இவர் போன்று தன்னலமில்லாமல் சேவை செய்பவர்களால்தான் இலக்கியம் காலம் காலமாக தழைத்து வளர்ந்தோங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com