நாடு தூய்மையா இருக்கணுன்னா, அதுக்கான மாற்றம் நம்மகிட்ட இருந்து வரணும்..!

நாடு தூய்மையா இருக்கணுன்னா, அதுக்கான மாற்றம் நம்மகிட்ட இருந்து வரணும்..!

பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், குப்பைகளைப் போடுதல் உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மக்கள் இன்னமும் தூய்மை குறித்து அறிந்திருக்கவில்லை

சட்டங்கள் இயற்றப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலும் மக்களில் பெரும்பாலானோர் அதனைக் கடைப்பிடிப்பது இல்லை. இதற்கு பல உதாரணங்கள் உள்ள போதிலும், பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல், குப்பைகளைப் போடுதல் உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டங்கள் இயற்றப்பட்டாலும் மக்கள் இன்னமும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து அறிந்திருக்கவில்லை என்று தான் கூற வேண்டும். 

தூய்மையின் அவசியம் குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி 'ஸ்வச் பாரத்' எனும் தூய்மை இந்தியா திட்டத்தைக் கொண்டு வந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், பிரபலங்கள் பொது இடங்களை சுத்தம் செய்து மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் தூய்மையின் அவசியத்தை எடுத்துரைத்து வருகின்றனர். இதுதவிர தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாக பொது இடங்களில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு  இதுகுறித்து எடுத்துரைப்பதுடன் வகுப்பறையை சுத்தம் செய்வது, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்வது என இளம் வயதில் இருந்தே பழக்கப்படுகிறது. 

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசு அறிவுறுத்துவதோடு, ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் மூலமாக  கிராமப்புறப் பகுதிகளில் இலவச கழிப்பிடம் அமைத்துத் தரப்படுகிறது.  இதன்மூலமாக நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்தியா முழுவதுமே பல்வேறு மாநிலங்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்தால் தண்டனை அல்லது அபராதம் விதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ, சிறுநீர் கழித்தாலோ ரூ.500 முதல் ரூ.1,000 அபராதம் அல்லது ஒரு நாள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 'புகைப்பிடித்தல் மற்றும் துப்புதல் தடைச் சட்டம்' கடந்த 2002ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன்படி, பொது இடங்களில் அசுத்தம் செய்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை அபாராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டால் ரூ.1000 வரையில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் அமலில் உள்ளது. 

இரு தினங்களுக்கு முன்னதாகக் கூட தூய்மை இந்தியா தொடங்கப்பட்ட அக்டோபர் 2ம் நாளான அன்று, இந்தியாவை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அனைத்து இடங்களிலும் கழிப்பறைகள் உள்ளதா? என்ற கேள்விக்கு நாம் போவது இருக்கட்டும். முதலில் இருக்கும் கழிப்பறைகளை உபயோகிக்கிறோமோ என்றால் இல்லை என்று தான் கூற முடியும்.

தூய்மை இந்தியா என்ற இலக்கை நோக்கி அரசு சென்று கொண்டிருக்க, மக்களாகிய நாம் பொது இடங்களில் அசுத்தம் செய்கிறோம். கிராமப்புறப் பகுதிகளில் பொதுக் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டும் அதனை உபயோகிக்காத மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 'இங்கு எச்சில் துப்பாதே' என்று எழுதப்பட்டதின் மேலேயே நாம் துப்புகிறோம். 'குப்பைகளைக் கொட்டாதே ' என்பதை படித்துவிட்டு அங்கே குப்பையை கொட்டிவிட்டு வருகிறோம். 

பொது இடங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருப்பர். நீங்கள் அங்கு எச்சில் துப்பும் போது, எளிதாக அவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் எளிதாக தொற்று பரவும். மேலும், வைரஸ் தொற்று ஏற்பட்டு பல வகை நோய்களுக்கு வழிவகுக்கும். அதேபோன்று பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கழிப்பறைகள் இருந்தும் மக்கள் அதனை உபயோகிப்பது இல்லை. முறையாக கழிப்பறைகளை உபயோகிக்க வேண்டும். 

இதற்காக 'கிரீன் டாய்லெட்' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பொது இடங்களில் உள்ள கழிப்பறைகள் சுத்தம் இல்லாமல் பராமரிக்கப்படாமல் இருக்கிறது என்று  பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. நீங்கள் பராமரிக்கப்படாத கழிப்பறைகளை பார்த்தால் உங்களது பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அல்லது பொதுப்பணித்துறை சம்மந்தப்பட்ட அரசு அலுவலங்கங்களிடம் தெரிவியுங்கள். இணையதளம் மூலமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள். 

நம்மைப் பார்த்து தான் நமது எதிர்கால சந்ததியினர் பின்பற்றுகின்றனர் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சில இடங்களில் படித்தவர்களே பொது இடங்களில் அசுத்தம் செய்வது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுவது அறுவருக்கத்தக்கதாகவே உள்ளது. எனவே பொது இடங்களில் அசுத்தம் செய்வதனால் ஏற்படும் விளைவுகளை நாமே உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இந்த நிலையை மாற்ற முடியும். 

உதாரணமாக, இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல் கலாமின் கருத்துகளை மட்டும் பரப்பினால் மட்டும் போதாது; நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களாகிய நம்முடைய வளமான வாழ்வுக்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக நாட்டுக்காக நீங்கள் எதாவது செய்ய வேண்டும் என்றால் நினைத்தால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாதவாறு, பொது இடங்களில் இதுபோன்று அசுத்தம் செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் உங்களுக்கும், உங்களைச் சுற்றியிருக்கும் மக்களுக்கும், இந்த நாட்டிற்கும் செய்யும் பெரும் சேவையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com